Rasam Recipes in Tamil: ரசம் நமது உணவு கலாச்சாரத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இவற்றில் சேர்க்கப்படும் பொருட்களை குறிப்பிட்டு கூறலாம். ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, மல்லித்தூள், பெருங்காயம் மற்றும் புளிக்கரைசல் போன்றவை மருத்துவ குணம் வாய்ந்தவையாக உள்ளன. இதில் சேர்க்கப்படும் புளிக்கரைசல் நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியப்பங்கு வகிக்கிறது.
ரசம் காய்ச்சல், இருமல், தும்மல், உடல் சோர்வு, உடல் களைப்பு, செரிமானப் பிரச்சனை, சத்துகுறைபாடு, தொண்டை கமறல், வயிற்று புண் என அனைத்து நோய்களுக்கும் மருந்தாக உள்ளது.
ரசத்தில் பல வகைகள் உள்ள நிலையில் அந்த ரசங்களில் புளிப்பு சுவை கூட்ட நாம் பெரும்பாலும் புளி அல்லது தக்காளியைத் தான் தேர்வு செய்வோம். ஆனால் ஒரு சில பகுதிகளில் இவற்றுக்கு பதிலாக மாங்காயை பயன்படுகிறார்கள். அதிலும் நன்கு புளிக்க கூடிய சில மாங்காயை சேர்க்கையில் ரசத்திற்கு நல்ல மணமும் சுவையும் கூடுகிறது.
இப்படி கூடுதல் மணமும் சுவையும் தரும் மாங்காயில் எப்படி ரசம் தயார் செய்வது என்று இங்கு பார்க்கலாம்.
மாங்காய் ரசம் செய்யத் தேவையான பொருட்கள்:-
மாங்காய் – 1 (சிறிய அளவு)
துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை
சிவப்பு அல்லது காய்ந்த மிளகாய் – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிதளவு
தக்காளி – 1
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
வெல்லம் – சிறிய துண்டு
மிளகு சீராக பொடி – 1 டீஸ்பூன்
கொத்துமல்லி தழை
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை
ஒரு பாத்திரம் அல்லது குக்கர் எடுத்து அதில் மாங்காய், துவரம் பருப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து வேக விட்டு கீழே இறக்கவும். சூடு ஆறிய பிறகு பருப்பு மற்றும் மாங்காயை நன்கு கிளறி மிக்ஸ் செய்து கொள்ளவும்.
இப்போது ஒரு ரசம் வைக்கும் பாத்திரம் எடுத்து அதில் நெய் விட்டு சூடானதும் கடுகு தூவி பொரிய விடவும். பின்னர் சீரகம், சிவப்பு அல்லது காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை ஆகியவை சேர்த்து கிளறவும். பிறகு, தக்காளி மற்றும் பெருங்காயம் பொடி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
இவை ஓரளவு வதங்கிய பிறகு முன்பு தயார் செய்து வைத்துள்ள பருப்பு மற்றும் மாங்காய் கலவையை இவற்றோடு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்துகொள்ளவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்த பிறகு வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். தொடர்ந்து மிளகு சீராக பொடி சேர்த்து நுரை வரும் வரை கொதிக்க விடவும். நுரை வரும் போது கொத்தமல்லி தழை தூவி கீழே இறக்கவும்.
இப்போது சூடாக தயார் செய்துள்ள சாதத்தோடு ஓர் டீஸ்பூன் நெய் மற்றும் நாம் தயார் செய்துள்ள மாங்காய் ரசத்தை சேர்த்து ருசித்து மகிழவும்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“