/indian-express-tamil/media/media_files/2025/05/07/xDI7lAE5p2Akq8dUDKT1.jpg)
உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்று பலரும் சிந்தித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல யூடியூபராக வலம் வரும் ஆர்.ஜே ஷா, தன்னுடைய உடல் எடை குறைப்பு பயணம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதன்படி, உடல் எடை குறைப்பை பொறுத்தவரை சுமார் 90 சதவீதத்திற்கு உணவு முறை மட்டுமே பலன் அளிக்கும் என்று அவர் அறிவுறுத்துகிறார். மீதமிருக்கும் 10 சதவீதம் மட்டும் தான் ஜிம் உடற்பயிற்சி பலன் அளிக்கும் என்று ஆர்.ஜே. ஷா கூறுகிறார்.
இது தவிர ஒட்டுமொத்தமாக உடல் எடையை குறைக்கும் போது தான் தொப்பையை குறைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்று மாதங்களில் 6 கிலோ வரை உடல் எடையை குறைக்க முடிந்தாலும் கூட அதுவும் ஆரோக்கியமான முறை தான் என்று ஆர்.ஜே. ஷா தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், புரதம் மற்றும் நார்ச்சத்து என சரிவிகித அளவில் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது தான் உடல் எடையை குறைக்க முடியும். மேலும், புடலங்காய், சுரைக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் தொப்பையை குறைக்க உதவும் என்று ஆர்.ஜே ஷா அறிவுறுத்துகிறார்.
சாப்பிடும் போது முடிந்த அளவிற்கு முதலில் நார்ச்சத்து கொடுக்கும் காய்கறிகள், அடுத்தபடியாக புரதம், இறுதியாக மாவுச் சத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும், சாப்பிட்டு முடித்து 15 நிமிடங்களுக்கு பின்னர் சுமார் 10 நிமிடங்களுக்கு வீட்டிலேயே நடைபயிற்சி மேற்கொள்ளலாம் என்று ஆர்.ஜே. ஷா அறிவுறுத்துகிறார்.
இது தவிர கூடுமானவரை சர்க்கரை, வெல்லம் மற்றும் தேன் போன்ற இனிப்பு வகைகளை குறைத்துக் கொள்ளலாம். இதுவும் உடல் எடை குறைப்பில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த எடை குறைப்பு பயணத்தில் தன்னுடைய காலை உணவாக இரண்டு முட்டைகள், ஒரு பேரிச்சம் பழம், சக்கரைவல்லி கிழங்கு ஆகியவற்றை எடுத்துக் கொள்வதாக ஆர்.ஜே. ஷா தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த வகையில் நம்முடைய உணவு முறையை மாற்றி அமைப்பதன் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும் என்று ஆர்.ஜே. ஷா தெரிவித்துள்ளார். மேலும், சரியான ஊட்டச்சத்து நிபுணர் ஆலோசனையுடன் டயட் இருக்கும் போது உடல் எடை குறைப்பு எளிதாகும் என்று அவர் அறிவுறுத்துகிறார். அதனடிப்படையில், ஒரே நாளில் 5 கிலோ குறைக்கலாம், 10 நாட்களில் பத்து கிலோ எடையை குறைக்கலாம் என்பது சாத்தியம் இல்லை என்று அவர் கூறுகிறார்.
நன்றி - Sha Boo Three Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.