Srirangam Sri Ranganatha Swamy Temple sorgavasal thirappu 2020 date: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வியாழக்கிழமை (டிசம்பர் 26) தொடங்குகிறது. ஜனவரி 6-ம் தேதி முக்கிய நிகழ்வாக சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
வைகுண்ட ஏகாதசி, இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்று. இதன் முக்கிய நிகழ்வாக பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு இருக்கும். மார்கழி மாதத்தில் வளர்பிறை பதினோராம் நாளில் இந்த நிகழ்வு நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது. எனினும் வைகுண்ட ஏகாதசி கொண்டாட்டம் டிசம்பர் 26-ம் தேதியே தொடங்குகிறது.
Srirangam Vaikuntha Ekadashi Events: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா
ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்புக்கு முந்தைய பத்து நாட்களை ‘பகல்பத்து’ என்றும், பிந்தைய பத்து நாட்களை ‘இராப்பத்து’ என்றும் விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி அங்கு ராஜகோபுரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. வியாழக்கிழமை (டிசம்பர் 26) திருநெடுந்தாண்டகத்துடன் விழா தொடங்குகிறது. அன்று இரவு 7 மணிக்கு கோவில் கர்ப்ப கிரகத்தில் திருநெடுந்தாண்டகம் ஆரம்பமாகும்.
இரவு 7.45 மணி முதல் 9 மணி வரை சந்தனு மண்டபத்தில் திருநெடுந்தாண்டகமும், அபிநயமும், வியாக்யானமும் நடைபெறும். இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை திருப்பணியாரம் அமுது செய்தல் நடைபெறும். இரவு 10 மணி முதல் 10.30 மணி வரை திருவாராதனம் நடைபெறும்.
திருக்கொட்டாரத்தில் இருந்து சிறப்பலங்காரம் இரவு 10.30 மணி முதல் இரவு 11 மணி வரையும், இரவு 11 மணி முதல் 11.30 மணி வரை தீர்த்த கோஷ்டியும் நடைபெறும்.
சூரிய கிரகணத்தை முன்னிட்டு முதல் நாள் பகல் 1.15 மணி வரை மூலஸ்தான சேவை இல்லை. பகல் 1.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை சேவை உண்டு. மாலை 4.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது. பகல் பத்து 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 7 மணிக்கு பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு காலை 7.45 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைவார். காலை 8.15 மணி முதல் பகல் 1 மணி வரை அரையர் சேவையுடன் பொதுஜன சேவை நடைபெறும்.
பகல் 1 மணி முதல் 2 மணி வரை அலங்காரம் அமுது செய்ய திரையிடப்படும். மதியம் 2 மணி முதல் மாலை 3 மணி வரை திருப்பாவாடை கோஷ்டியும், மாலை 3 மணி முதல் மாலை 4 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரையிடப்படும். மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை உபயக்காரர் மரியாதை பொது ஜன சேவையுடன் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
இதேபோல பகல் பத்தில் ஒவ்வொரு நாளும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பகல் பத்து ஜனவரி மாதம் 5-ந் தேதி முடிவடைகிறது. அன்றைய தினம் மோகினி அலங்காரத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு ஜனவரி 6-ந் தேதி நடைபெறும். வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். அதிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்த வாசல், இன்று மட்டுமே திறக்கும். அதுவே, ‘சொர்க்க வாசல்’ என அழைக்கப்படும். அந்த வாசல் வழியே சென்று இறைவனை பக்தர்கள் வழிபடுவர்.
அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுவார். அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். பெருமாள் சொர்க்கவாசலை கடந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து ராப்பத்து நிகழ்ச்சி நடைபெறும்.
விழாவில் திருக்கைத்தல சேவை வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது. மற்றொரு முக்கிய நிகழ்வான திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ளது. வருகிற 15-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறும். நம்மாழ்வார் மோட்சத்துடன் வருகிற 16-ந் தேதி விழா முடிவடைகிறது.
வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருக்கிறார்கள். இன்றைய செய்திகள் தமிழில் உடனுக்குடன் படிக்க...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.