திருச்சி விமான நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களின் கல்லீரல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில்,
நமது உடலில் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் தான். உடலில் உள்ள நச்சுப் பொருள்களை அகற்றுவது, செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாப்பது என மிக முக்கியமான பணிகளை செய்யும் உறுப்பாக கல்லீரல் உள்ளது. ஆனால் சமீபகாலமாக கல்லீரல் நோய்கள் அதிகரித்து வருவது உடனடி கவனம் மற்றும் சிகிச்சைக்கான அவசியத்தை வலியுறுத்துவதாக உள்ளது.
கல்லீரல் நோய் பாதிப்புகளை தீவிர பாதிப்பு, நாள்பட்ட பாதிப்பு என இரண்டு முக்கிய வகைகளாக பிரிக்கலாம். இதில் தீவிர கல்லீரல் பாதிப்புகள் திடீரென ஏற்படக் கூடியவை. அதேவேளையில் நாள்பட்ட பாதிப்புகள் உடல்பருமன், மதுப் பழக்கம், வைரஸ் தொற்றுகளால் ஏற்படக் கூடியவை. இவை ஏற்படுவதற்கு சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட பிடிக்கலாம். நாள்பட்ட கல்லீரல் பாதிப்புகள் வெளிப்பட காலம் பிடித்தாலும், பாதிப்பு ஏற்பட்ட பின்பு அவற்றின் தாக்கம் வெளிப்படையாகவும், அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடியதாகவும் அமைகிறது.
இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சோர்வு, உடல், கண்களில் மஞ்சள் பூத்திருப்பது, சரும அரிப்பு, கால்கள் மற்றும் அடிவயிற்றில் வீக்கம், காரணமில்லாமல் எடை குறைதல், எளிதில் காயமடைவது, சிறுநீர் கருப்பாக செல்வது, மலம் வெளிறிய நிலையில் இருத்தல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும். ரத்தத்தில் நச்சுப் பொருள்களை அகற்றுவதில் கல்லீரலுக்கு சிரமம் ஏற்படுவதால் இந்த அறிகுறிகள் தென்படுகின்றன. இத்தகைய அறிகுறிகள் கல்லீரல் ஏற்பட்டுள்ள பாதிப்பையும், செயல்பட முடியாத நிலையையும் வெளிப்படுத்துபவை என்பதால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது மிக மிக அவசியம் என்று திருச்சி அப்போலோ மருத்துவமனையின் கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் குமரகுருபரன் தெரிவித்தார்.
அப்போலோ மருத்துவமனை கல்லீரல் மாற்று சிகிச்சை தமிழ்நாடு தலைவர் இளங்குமரன் கூறுகையில்; ''கல்லீரல் நோய் பாதிப்பின் இறுதி நிலையில் உள்ளவர்களுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. உறுப்பு தானம் செய்வோரைப் பொருத்து இரண்டு வகைகளில் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. உயிரிழந்வரின் உறுப்பு (கடாவரிக்) அல்லது உயிருடன் இருப்பவரிடம் இருந்து பெறப்படுவது என இரண்டு வகைகளில் கல்லீரல் பெறப்படுகிறது. மாற்று சிகிச்சைக்கு எந்த அளவுக்கு உடனடி தேவை உள்ளது, தானம் அளிப்பவர் தயாராக உள்ளாரா? மற்றும் நோயாளியின் இதர சூழல்கள் ஆகியவற்றைப் பொருத்து எந்த சிகிச்சை முறையை பின்பற்றுவது என தேர்வு செய்யலாம்'' என்றார்.
''கல்லீரல், கணைய, பித்தநாள விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒன்றரை வருடத்திற்கு முன்பு துவங்கப்பட்டது. தற்போது வரை 2 குழந்தைகள் உள்பட 10 பேருக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டு அவர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர் என்று அப்போலோ மருத்துவமனையின் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் விஜய் கணேசன் தெரிவித்தார்.
முன்னதாக, திருச்சி அப்போலோ மருத்துவமனை கூடுதல் துணை தலைவர், பிரிவு தலைவர் ஜெயராமன் அனைவரையும் வரவேற்றார். மருத்துவ நிர்வாக அதிகாரி சிவம் நன்றி தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.