Tamil Health Update Betel Leaves Benefits :பழங்காலத்தில் சாப்பிட்டபின் வெற்றிலை பாக்கு மெல்லுவது அனைவருக்கும் பொதுவான பழக்கமாக இருந்தது. நாளடைவில், இந்த பழக்கம் கெட்டது என்று சொல்லி பலரும் கைவிட்டனர். ஆனால் இன்றளவும் வயதானவர்கள் பலரும் வெற்றிலை பாக்கு மெல்லுவதை தனது வாழ்நாள் பழக்கமாக வைத்துள்ளனர். வெற்றிலை உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது
ஆனாலும் இதனை அறியாத சில வெற்றிலை பாக்கு நல்ல பழக்கம் அல்ல என்று சொல்லி தடுத்துவிடுகின்றனர். ஆனால் வெற்றிலை உடலுக்கு மட்டுமல்லாமல் சருமத்திற்கும் அழகு சேர்க்கும் என்பது பலரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு தகவலாக உள்ளது. வெற்றிலையில் சில அற்புதமான குணங்கள் சருமத்திற்கு அழகு மற்றும் ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.
உங்கள் சருமத்திற்கு அழகு சேர்க்க இயற்கை பொருட்களை நீங்கள் உபயோகப்படுத்த வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக வெற்றிலையை நீங்கள் பயன்படுத்தலாம். வெற்றிலை எவ்வாறு சரும அழகிற்கு உதவுகிறது இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போமா?
முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது
முடி உதிர்தல் தொடர்பான பிரச்சனைகளுக்கு வெற்றிலையை பயன்படுத்த ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. எள் அல்லது தேங்காய் எண்ணெயுடன் வெற்றிலையை அரைத்து, அந்த விழுதை உச்சந்தலையின் அனைத்துப் பகுதிகளிலும் தடவவும். ஷாம்பூவைக் பயன்படுத்துவதற்கு அரைமணிநேரத்திற்கு முன்பு இந்த கலவையை பயன்படுத்த வேண்டும்.
வாய் சுகாதாரத்திற்கு சிறந்தது
வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? சாப்பிட்ட பிறகு வெற்றிலையை மென்று சாப்பிடத் தொடங்குங்கள். இது உங்கள் சுவாசத்தை புதுப்பித்து, கிருமிகளைக் கொல்லும். பல் சொத்தையைத் தடுக்கவும், ஈறுகளை வலுப்படுத்தவும் பழங்காலத்திலிருந்தே வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது. வெற்றிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதன் கஷாயத்தைப் பயன்படுத்தி வாயைக் கொப்பளிக்கவும்.
முகப்பரு போக்குதல்
வெற்றிலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிறந்தது. வெற்றிலை நீரின் கஷாயத்தைக் கொண்டு உங்கள் முகத்தைக் கழுவவும் அல்லது வெற்றிலை மற்றும் மஞ்சள் கலவையை உங்கள் முகத்தில் தடவி கழுவவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இதைச் செய்யுங்கள்.
அரிப்பு நிவாரணி
நீங்கள் சொறி மற்றும் ஒவ்வாமைக்கு ஆளாக நேரிட்டால் வெற்றிலையின் இனிமையான பண்பு மிகுந்த நிவாரணம் அளிக்கிறது. 10 வெற்றிலைகளை வேகவைத்து, இந்த தண்ணீரை உங்கள் குளியல் நீரில் அல்லது அரிப்பு அரிப்பு உள்ள இடங்களில் தடவி ஊறவைக்கலாம். வெற்றிலையில், உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்.
உடல் துர்நாற்றத்தை தடுக்கிறது
வெற்றிலையின் சாறு அல்லது வெற்றிலை எண்ணெய் உங்கள் குளியல் நீரில் சேர்க்கப்படும்போது உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் மற்றும் உங்கள் உடலில் உள்ள துர்நாற்றத்தை உருவாக்கும் கிருமிகளை அழித்துவிடும். ஒரு சில வெற்றிலைகளைக் கொதிக்கவைத்த தண்ணீரில் ஊறவைத்த பானத்தை தொடர்ந்து உட்கொள்வது, உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது மற்றும் அனைத்து வகையான விரும்பத்தகாத உடல் நாற்றங்களையும் அழிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.