Tamil Health Update : உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா தொற்று பாதிப்பு நம் வாழ்வின் உணவுமுறையை மாற்ற வேண்டியதன் அவசியத்தை சொல்லிக்கொடுத்துள்ளது என்று கூறலாம். அதிலும் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. ஏனென்றால் இயற்கை பொருட்கள் மட்டுமே தொற்று நோயில் இருந்து நம்மை முழுமையாக காப்பாற்றும் திறன் கொண்டது.
இயற்கை நமக்கு ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லும் அளவுக்கு அதன் முக்கியத்தும் வானளவு உயர்ந்துள்ளது. இதனால் கீரைகள் மற்றும் வைட்டமின்களை ஏற்றும் உணவுகள் மட்டுமல்லாது உங்கள் உணவில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பல பொருட்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கோவிட்-ஐ எதிர்த்துப் போராட உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம். தேன், இஞ்சி மற்றும் சில பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சூடான பானம் உடலில் பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்று காஜியாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் நீரிழிவு நிபுணரான டாக்டர் இஜென் பட்டாச்சார்யா கூறியுள்ளார்.
தேன் இஞ்சி கடா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
தேன் - 1 தேக்கரண்டி
இஞ்சி, - ஒரு சிறிய துண்டு (துருவியது)
இலவங்கப்பட்டை - 1 சிறிய குச்சி
கருப்பு மிளகு
துளசி இலைகள்
எலுமிச்சை சாறு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில், சுமார் இரண்டு கப் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில், இஞ்சி, துளசி இலைகள், இலவங்கப்பட்டை, கருப்பு மிளகு மற்றும் தேன் சேர்க்கவும். இந்த கலவையை சுமார் 5-7 நிமிடங்கள் கொதிக்க விடவும். கொதித்தவுடன் ஒரு கிளாஸில் வடிகட்டி பரிமாறவும். இதில் வைட்டமின் சி நிறைந்து இருப்பதால், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம். "இந்த பானம் உங்கள் தொண்டை புண் இருமல் மற்றும் சளிக்கு எதிராக போராட உதவும்.
தேன் இஞ்சி கடா குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
பெரும்பாலான இந்திய சமையலறைகளில் பிரதானமான மசாலா பொருளாக உள்ள இஞ்சி, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு தன்மை கொண்டதால் நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தது. தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது, அதே சமயம் துளசி உடலை பல்வேறு தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
இலவங்கப்பட்டை வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, மேலும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “