பொதுவாக கிச்சனில் சமையல் செய்யும்போது அந்த உணவில் உப்பு அல்லது காரம் அதிகமாகிவிட்டால், அதை சாப்பிடுவது அவ்வளவு எளிதாக இருக்காது. அதே சமயம், இதை சரி செய்ய என்ன செய்வது என்று யோசிப்பார்கள். அதேபோல்,உடனடியாக சாப்பிடுவதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து பலருக்கும் பல ஐடியாக்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக, உடனடியாக தோசை செய்வதற்கு பல டிப்ஸ்கள் உள்ளன. அந்த வகையில் கிச்சனில் நேரத்தை மிச்சப்படுத்த இந்த புது ஐடியாக்களை ட்ரை பண்ணுங்க.
இட்லிக்கு மாவு அரைக்கவில்லை என்றால் கவலை வேண்டாம். அரை டம்ளர் உளுத்தம் பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து, அரைத்து அதனுடன், 3 டம்ளர் கோதுமை மாவு சேர்த்துக் கரைத்து தோசை சுடலாம். சுவையாக இருக்கும். பஜ்ஜி செய்வதற்கு, தற்போது கடைகளில் அதற்கென்று தனியாக மாவு இருக்கிறது. ஆனால், வீட்டில் இருக்கும் கோதுமை மாவு மற்றும் அரிசி மாவை சமள அளவில் எடுத்து தேவையாள அளவு மிளகுத்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அந்த மாவில் பஜ்ஜி சுடலாம்.
சமையலுக்கு பயன்படுத்தும் கேரட்டை தோல் சீவி உடனடியாக துருவினால் சரியாக வராது என்று நீங்கள் கஷ்டப்பட்டால் அதற்கும் ஒரு ஐடியா இருக்கிறது.கேரட்டைத் தோல் சீவி தண்ணீரில் 5 நிமிடங்கள் வைத்துவிட்டு,. பிறகு எடுத்துத் துருவினால் கேரட் மிருதுவாகி எளிதாக துருவ வரும். அதேபோல் சமையலில் குருமா, மற்றும் கிரேவி வகைகளில், உப்பு அல்லது காரம் அதிகமாவிட்டால், ஒரு டம்ளர் காய்ச்சின பாலை கிளறிவிட்டால் காரம் வெகுவாக குறைந்துவிடும்
சீசன்களில் முருங்கைக்காய் நமது வீட்டு மரத்திலேயே கிடைக்கும். இந்த முருங்கைக்காய் சாம்பார் செய்யும்போது அதனை துண்டுகளாக நறுக்காமல், இரண்டாக கீறிவிட்டு சேர்த்தால், சாம்பார் சுவை அதிகரிக்கும். காய் சீக்கிரம் வெந்துவிடும். காய்கறிகளில், பீன்ஸ், அவரைக்காய் போன்றவை சீக்கிரம் முற்றிவிடாமல் இருக்க,அதில் இருக்கும் நாரை நீக்கிவிட்டு பைகளில் வைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் அப்படியே இருக்கும். இந்த கிச்சன் டிப்ஸ்களை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.