By: WebDesk
Updated: January 23, 2021, 12:04:11 PM
Tamil Recipe News, Rice Kanji Tamil Video: அவசரமாக காலை உணவு தயார் செய்ய வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவாக, உடலுக்கு நன்மை தரக்கூடிய உணவாக இருக்க வேண்டும். எளிமையான உணவாகவும் இருக்க வேண்டும் என்றால், நீங்கள் விரும்பும் அந்த உணவு அரிசி கஞ்சிதான்!
வயிறு உபாதைகள், காய்ச்சல் பாதிப்புகளில் இருப்பவர்களுக்கு உகந்த உணவு இது. இல்லாவிட்டாலும்கூட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடத்தக்க உணவு இது. அரிசி கஞ்சி தயார் செய்வது எப்படி? எனப் பார்க்கலாம்.
Rice Kanji Tamil Video: அரிசி கஞ்சி
முக்கால் டம்ளர் அளவுக்கு சீரக சம்பா அரிசி எடுத்துக் கொள்ளுங்கள். சாதாரண பச்சை அரிசி எடுத்துக் கொண்டால், அதை சிறு துண்டுகளாக்கும் வகையில் மிக்சியில் லேசாக பொடித்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு பாசிப் பருப்பு சேருங்கள். அரிசி, பாசிப் பருப்பு கலவையை ஒரு வாணலியில் போட்டு மணம் வரும் வகையில் வறுக்கவும். மிக அதிகமாக வறுத்துவிட வேண்டாம்.
பிறகு அரிசி – பாசிப் பருப்பு கலவையை எடுத்து, சூடு தணிய வைக்கவும். தொடர்ந்து இரண்டு அல்லது 3 முறை தண்ணீரில் கழுவி எடுக்கவும். இப்படி சுத்தம் செய்யப்பட்ட அரிசி- பருப்பு கலவையை ஒரு குக்கரில் போட்டு அதனுடன் தேவையான அளவு தேங்காய் துருவல், நான்கைந்து பல் பூண்டு ஆகியன சேருங்கள். அரை டீ ஸ்பூன் அளவு சீரகம், கொஞ்சம் வெந்தயம், தேவையான அளவு உப்பு சேருங்கள். இதனுடன் 3 கிளாஸ் அளவு தண்ணீர் சேர்க்கவும்.
இதன்பிறகு குக்கரை மூடி, 7 விசில் வரும் வரை வேக விடுங்கள். இப்போது கஞ்சி மணம் தூக்கலாக இருக்கும். நன்றாக வெந்திருப்பதையும் காணலாம். இதனுடன் நமக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கி விடுங்கள். தேவை என நினைத்தால், மிளகு தூள் ஒரு ஸ்பூன் இறுதியாக சேருங்கள். கஞ்சியின் மணத்தை இது இன்னும் அதிகரிக்கும். உடலுக்கும் நல்லது.