Vanitha Krishnachandran, Tamil Serial News, Sun TV Kalyana Parisu 2
Vanitha Krishnachandran: தமிழ் சினிமாவில் 1980 காலகட்டத்தில் சிறந்த குணசித்ர நடிகையாக வலம் வந்தவர் நடிகை வனிதா கிருஷ்ணசந்திரன். 1965-ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். இவரது அப்பா கேரளாவில் வசித்த, திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர். அம்மாவும் திருச்சி தமிழ் பெண் தான். திருச்சிராப்பள்ளியில் பள்ளிப்படிப்பை மேற்கொண்டிருந்த வனிதா, 13 வயதில் சினிமாவிலும் நடிக்கத் தொடங்கினார். இவருக்கும் 2 அக்கா, 1 அண்ணன்.
1979-ஆம் ஆண்டு வெளியான ‘பாதை மாறினால்’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான வனிதா, பின்னர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கமல் தொடங்கி தற்போதுள்ள விஜய், அஜித் வரை அணைத்து முன்னணி ஹீரோக்களின் படத்திலும் குணச்சித்திர நடிகையாக நடித்துள்ளார். குணச்சித்திரம், ஹீரோ / ஹீரோயின்களுக்கு அம்மா கதாபாத்திரம் என்று நடித்துக் கொண்டிருக்கும் வனிதா சீரியலையும் விட்டு வைக்கவில்லை. சன் டிவியில் ஒளிபரப்பான ‘கோலங்கள், அழகி, மாதவி’ போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும் ‘ என்ற சீரியலில் நடித்த அவர், சமீபத்தில் நிறைவடைந்த, சன் டிவி-யின் கல்யாண பரிசு 2, சீரியலிலும் நடித்திருந்தார்.
1986-ஆம் ஆண்டு மலையாள நடிகர் கிருஷ்ணசந்திரன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் வனிதா. இவர்களுக்கு 1990-ல் அமிர்தவர்ஷினி என்ற மகளும் பிறந்தார். தற்போது 30 வயதாகும் இவர் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டில் ஆகிவிட்டார். திருவனந்தபுரத்தில் வசிக்கும் வனிதா, படப்பிடிப்புக்காக சென்னை வந்து செல்கிறார். கை வேலைப்பாடுகள் செய்வது, தோட்டத்தைப் பராமரிப்பது ஆகியவைகள் தான் வனிதாவுக்கு பிடித்தமான பொழுது போக்குகளாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”