Karthik Dial Seytha Yenn: இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு த்ரிஷா இணைந்து நடித்திருந்த திரைப்படம் 'விண்ணைத் தாண்டி வருவாயா'. இந்தப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. கார்த்திக் - ஜெஸ்ஸி என்ற இரண்டு கேரக்டர்களாகவே சிம்புவும், த்ரிஷாவும் வாழ்ந்திருந்தனர். குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவும் ஒரு கவிதை போல மனதை மயக்கின. படத்தில் இடம்பெற்றிருத்த அத்தனை பாடல்களும் தெறி ஹிட்!
’விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்னும் அந்த மயக்கத்தில் இருந்து ரசிகர்கள் மீளவில்லை. அந்தளவுக்கு ரசிகர்கள் மனதை விண்ணைத் தாண்டி வருவாயா படம் ஆக்கிரமித்திருக்கிறது. இதன் இரண்டாம் பாகத்திற்கு மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில் விண்ணைத் தாண்டி வருவாயா கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாகியிருக்கிறது. ’கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற பெயரில் வெளியாகியிருக்கும் ஷார்ட் ஃபிலிம் தான் அது. கௌதம் மேனன் எழுதி இயக்கியுள்ள இந்த படம் கார்த்திக் - ஜெஸ்ஸியின் வாழ்க்கையில் 10 வருடங்களுக்கு பின்பான நிகழ்வுகளை பேசுகிறது.
Advertisment
Advertisements
இயக்குநராக இருக்கும் கார்த்திக், கொரோனா தொற்று, தியேட்டர்களின் நிலைமை ஆகியவற்றை நினைத்து மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார். அவருக்கு எதுவுமே எழுத வரவில்லை. அப்படியே எழுதினாலும், அதை அடுத்த நாள் படித்துப் பார்க்கையில் அவ்வளவு மோசமாக இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக, நியூயார்க்கில் இருந்து ஜெஸ்ஸி கேரளா வந்திருக்கும் செய்தியை முகநூல் மூலமாக அறிந்துக் கொண்ட கார்த்திக், ஜெஸ்ஸிக்கு ஃபோன் செய்கிறான்.
பரஸ்பரம் நலம் விசாரித்து விட்டு, தனது ஆற்றாமையை ஜெஸ்ஸியிடம் கூறி, ‘ஐ நீட் யூ’ என்கிறான். ட்வின் குழந்தைகளுக்கு தாயாகியிருக்கும் ஜெஸ்ஸி, ”நீ எனக்கு மூன்றாவது குழந்தை என்கிறாள். எதுவும் தவறாக நடக்காது. பழையபடி திரையரங்குகள் இயங்கும். எல்லாவற்றிற்கும் மேலே, அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு நல்ல கதைகள் தேவைப்படும். ஆக, நிச்சயம் அவர்கள் உன்னை தேடி வருவார்கள். உன் எழுத்தில் அவ்வளவு உயிர் இருக்கு. அதை விட்டு விடாதே. நிறைய எழுது” என கார்த்திக்கை ஊக்கமடைய செய்கிறாள்.
இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் முழுக்க ஐ ஃபோனால் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐசரி கே. கணேஷ் மற்றும் கௌதம் மேனன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். கொரோனா மன அழுத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு லைட்டான ஃபீலை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
"அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”