திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் பணி மாறுதல் பெற்றுச் சென்றதை ஏற்றுக் கொள்ள முடியாத மாணவ - மாணவியர்கள் அவரை கட்டியணைத்து அழுத சம்பவம் காண்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.
Advertisment
’பள்ளி பருவம்’ என்றுமே நமது மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருக்கும். நண்பர்கள் தொடங்கி கணக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் வரை எவரையும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட மாட்டோம். அப்படி நம் அனைவரையும் மீண்டும் பள்ளி பருவத்திற்கு அழைத்து செல்லும் நிகழ்வாக சமீபத்தில் ஒரு உண்மை சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆங்கில ஆசிரியர் பகவான் என்பவர் அங்கிருக்கும் மாணவ மாணவிகளிடம் ஆசிரியர் போல் நடந்துக் கொள்ளலாமல் நண்பனாகவும், அப்பாவாகவும், அண்ணாவாகவும், சக மனிதனாகவும் நடந்து வந்துள்ளார். பாடம் சொல்லி தருவதில் தொடங்கி விளையாட்டு தோழமை, ஆசான் என அங்கிருந்த மாணவர்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று ஆசிரியர் பகவானை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்துள்ளனர்.
இதை கேள்விப்பட்ட மாணவர்கள் பகவானை பணியிடை மாற்றம் செய்ய வேண்டாம் என்று பள்ளியில் திடீரென்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும், இதற்கான உத்தரவு நகலை வாங்கி கொண்டு பள்ளியில் இருந்து செல்ல முயன்ற ஆசிரியர் பகவானின் காலை பற்றிக் கொண்டு மாணவர்கள் கதற ஆரம்பித்தனர். இதைப் பார்த்த ஆசிரியரும் அவர்களுடன் சேர்ந்து அழ ஆரம்பித்து விட்டார். காண்போரை நெகிழ வைத்த இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இதில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த சம்பவம் என்னவென்றால் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் அவர்களுடன் இணைந்து ஆசிரியர் பகவானை பணியிடை மாற்றம் செய்ய வேண்டாம் என்று கோரிக்கை வைத்தனர். ”நீங்கள் பாடம் நடத்தினால் தான் எங்கள் பிள்ளைகள் தேர்ச்சி பெறுவார்கள்” என்று பெற்றோர்கள் அழுதுக் கொண்டே கூறிய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.
கடைசியில் மாணவர்களின் கண்ணீர் போராட்டம் வெற்றி பெற்று, அவரின் இடமாற்ற உத்தரவை மாவட்ட கல்வி அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.
இப்படி உங்கள் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஆசிரியர் கட்டாயம் இருப்பார்கள். அவர்களை பற்றி 30 விநாடியில் ஒரு வீடியோவாக பதிவு செய்து எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்..