நகங்கள் `கெரட்டின்’ என்று சொல்லக்கூடிய ஒருவகை கடினமான புரோட்டின் பொருளால் ஆனது. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக அமைகின்றது. இந்த நகத்தின் வளர்ச்சி மற்றும் தோற்றம் உங்கள் உடல் நலத்தின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
உங்கள் நகங்கள் சில பிரச்சனைகளால் அவதிப்படலாம். அது உங்கள் உடல்நலத்தில் ஏற்பட்டுள்ள பெரிய பிரச்சனைக்கான அறிகுறியாக கூட இருக்கும். சிலர் அழகுக்காகவும் நகங்களை வளர்க்கிறார்கள். அதனால் உங்கள் நகங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நேரம் இது!
ஒரு மாதத்துக்கு சராசரியாக 3 மில்லி மீட்டர் நீளத்திற்கு நகங்கள் வளரும். கைவிரல் நகங்கள் விழுந்து புதிதாக முழுவதும் வளர வேண்டுமென்றால், சுமார் மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை ஆகும். நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்படுவதற்காக அறிகுறிகள் இதோ..
1. நீல நிறத்தில் கைவிரல் நகம் இருந்தால், “சயனோஸி” என்று சொல்லப்படும் நோயின் அறிகுறி இருக்கிறதென்று அர்த்தம். அதாவது ரத்தத்தில் சரியாக இருக்க வேண்டிய ஆக்ஸிஜன் அளவு மிக குறைவாக இருக்கிறது.
2. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
3. நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம்.
4. இருதய நோய், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு கைவிரல் நகங்கள் குவிந்து, பருத்து, பளபளவென்று முருங்கைக்காய் போன்று இருக்கும், இதை `க்ளப்பிங்’ என்று கூறுவதுண்டு.
5. நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்.
6. . இரத்த சோகை ஏற்படுவதாலும் கூட வெளிரிய மற்றும் மெல்லிய நகங்களை காணலாம். இந்த அறிகுறியோடு சோர்வும் சேர்ந்து வந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.
7. மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி உள்ளதாக காட்டும்.
8. உங்கள் நகங்களில் கருமையான பழுப்பு நிற கோடுகள் காணப்பட்டால், அது மெலனோமாவிற்கான (சரும புற்று நோய்) அறிகுறியாகும்