Tirunelveli sodhi samayal tamil video: திருநெல்வேலின்னா அல்வா மட்டும்தான்னு நிறைய பேரு நினைக்கிறாங்க... சொதி குழம்பு கேள்விப்பட்டிருக்கீங்களா? அதுவும் திருநெல்வேலி ஸ்பெஷல்தான்! சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், அவ்வளவு சூப்பராக இருக்கும். தவிர, இடியாப்பத்திற்கு இந்த சொதி காம்பினேஷனை அடித்துக் கொள்ள வேற ‘டிஷ்’ கிடையாது.
Advertisment
திருநெல்வேலிக்காரங்க மட்டுமில்லை. யாரு வேணும்னாலும் இந்த சொதியை தயார் செய்து ஒரு கை பார்க்கலாமுங்க! சொதி செய்யும் முறையை இங்கே பார்க்கலாம்.
முதலில் தேங்காய் துருவலை மிக்சியில் அரைத்து இரண்டு தடவையாக பால் எடுத்துக்கொள்ளவும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, காய்கறிகள், முருங்கைக்காய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாசிப் பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை கொட்டி வதக்கவும். அதனுடன் இரண்டாவதாக எடுத்த தேங்காய் பாலை ஊற்றவும். அதில் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் ஆகிய காய்கறிகளையும் சேர்த்து வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும் பாசிப்பருப்பை கொட்டி கொதிக்கவிடவும்.
பிறகு முதலில் எடுத்த தேங்காய் பாலை சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்து நுரை பொங்கி வந்து இறக்கியதும் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் தனியாக வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் சீரகம், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பரிமாறவும்.
பொதுவாக திருநெல்வேலிக்காரர்கள் புதிதாக திருமணமான மாப்பிள்ளைக்கு விருந்துடன் சேர்த்து இதைப் பரிமாறுவார்கள். சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இடியாப்பத்திற்கும் செம காம்பினேஷன்! நீங்களும் இந்த சத்தான ரெசிபியை முயற்சித்துப் பார்க்கலாமே!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"