குழந்தையின் தொண்டையில் சிக்கிய ஊக்கு; அரை மணி நேரத்தில் சாமார்த்தியமாக மீட்ட திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்
திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவரின் சாமார்த்தியத்தால் குழந்தையின் தொண்டைப்பகுதியில் சிக்கிய ஊக்கினை மீட்டு குழந்தையை ஆபத்திலிருந்து மீட்டனர்.
Advertisment
திருச்சி விமானநிலையம் அருகேயுள்ள குண்டூா் காலனியைச் சோந்த 2 வயது ஆண் குழந்தை, நேற்று காலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஆடைகளில் பயன்படுத்தும் ஊக்கு கீழே விழுந்துள்ளதை எடுத்து குழந்தை விழுங்கிவிட்டது.
பின்னா், குழந்தையின் பெற்றோர் காலை உணவு கொடுத்தபோது, குழந்தையால் அதை விழுங்க முடியாமல் வலியால் அழுதது. பயந்துபோன பெற்றோர், உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு எக்ஸ்ரே பரிசோதனையில் குழந்தையின் தொண்டை குழிக்குள் திறந்த நிலையில் ஊக்கு இருப்பது தெரியவந்தது. மூச்சுக் குழலை குத்திய வண்ணம் அந்த ஊக்கு இருந்ததால், குழந்தையை உடனடியாக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவா்கள் பரிந்துரைத்தனா்.
Advertisment
Advertisements
இதனையடுத்து திருச்சி தலைமை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு மீண்டும் ஒரு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதனையடுத்து காது-மூக்கு-தொண்டை மருத்துவ சிகிச்சை மருத்துவா் அண்ணாமலை, குழந்தையையும், எக்ஸ்ரே பரிசோதனை முடிவுகளையும் ஆய்வு செய்து, ஸ்கோப்பி முறையில் ஊக்கை அகற்றுவதற்கான பணிகளை தொடங்கினார்.
குழந்தையின் வாயில் ஸ்கோப்பி குழாய் பதித்து, அதனுள்ளே இடுக்கி போன்ற மருத்துவ உபகரணத்தை உள்செலுத்தி குழந்தையின் தொண்டையிலிருந்த ஊக்கு ஸ்கோப்பி குழாய் வழியாகவே பத்திரமாக வெளியே எடுத்து அகற்றப்பட்டது.
குழந்தையின் கழுத்துப் பகுதியில் குத்தியிருந்த ஊக்கினை சிகிச்சைக்கு சென்ற அரை மணி நேரத்தில் அகற்றிய மருத்துவர்களை குழந்தையின் பெற்றோரும், சக பொதுமக்களும் கைக்கூப்பி நன்றி தெரிவித்து பாராட்டினர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil