Vendhaya Kuzhambu Recipe in tamil: நம்முடை உணவு கலாச்சாரத்தில் குழம்பு வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. ஏனென்றால் இவை சுவை தருவதோடு அருமருந்தாகவும் நமக்கு உதவுகின்றன. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவுள்ள வெந்தய குழம்பும் ஏகப்பட்ட மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.
நம்முடைய அன்றாட உணவுகளில் வெந்தயம் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது ஆகும். இவற்றில் உள்ள பொட்டாசியம் இரத்தத்தையும் இருதய துடிப்பையும் கட்டுக்குள் வைக்கிறது. மேலும், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை இரத்தில் இருந்து குறைக்கிறது.
வெந்தயம் நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை போக்குகின்றன. இரத்த சோகை உள்ளவர்கள் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் அதிலிருந்து விடுபடலாம். மேலும் இவற்றை வெறும் வயிற்றில் உட்கொண்டால் வயிறு குளிர்ச்சி அடையும்.
வெந்தய புளிக் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:-
வெந்தயம் – 100 கிராம் (முளைகட்டியது)
வதக்கி அரைக்க
சீரகம் – 1 டீ ஸ்பூன்
சோம்பு – 1 டீ ஸ்பூன்
மிளகு – 1 டீ ஸ்பூன்
லவங்கம் – சிறிதளவு
பட்டை – சிறிதளவு
பூண்டு – 10 பல்
வெங்காயம் – 2
தக்காளி – 3
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
தேங்காய் – 1/4 மூடி
இஞ்சி – சிறிதளவு
தாளிக்க
எண்ணெய் – 4 ஸ்பூன்
கடுகு – 1 டீ ஸ்பூன்
கருவேப்பிலை
வெங்காயம் – 1
புளி – 2 நெல்லிக்காய் அளவு (கரைத்து கொள்ளவும்)
பெருங்காயம்
கொத்தமல்லி தழை
வெந்தய புளிக் குழம்பு செய்முறை
ஒரு காடாய் எடுத்து அதில் வதக்கி அரைக்க வழங்கப்பட்டுள்ள ஒவ்வொன்றையும் வரிசை மாறாமல் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கி ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.
இப்போது ஒரு மண்சட்டி அல்லது பாத்திரம் எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து முளைகட்டிய வெந்தயத்தை வதக்கி கொள்ளவும். இப்படி வதக்குவதால் அதில் உள்ள கசப்பு தன்மை நீங்கும்.
இதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும். அவை பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தை அவற்றில் இட்டு வதக்கி கொள்ளவும். தொடர்ந்து முன்பு வறுத்து வைத்துள்ள வெந்தயத்தை அதில் சேர்த்து கிளறவும்.
அதன் பிறகு முன்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இவை நன்றாக கொதித்து வரும் போது முன்னர் கரைத்து வைத்துள்ள புளியை சேர்த்து கொதிக்கவிடவும்.
இந்த கொதிக்கும் குழம்புடன் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து குழம்பை சுண்ட விடவும். குழம்பு ஓரளவு சுண்டிய பிறகு கொத்தமல்லி தழை சேர்த்து கீழே இறக்கவும்,
இப்போது சூடாக தயார் செய்து வைத்துள்ள சாதத்துடன் சேர்த்து ருசிக்கவும்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“