விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘தெய்வம் தந்த வீடு’ சீரியல் உங்களில் பலருக்கும் நினைவிருக்கலாம். காரணம் எப்போதும் அழுதுக் கொண்டிருக்கும் மருமகளாக சீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து, மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கண்டெண்ட் கொடுத்தவர், மேக்னா வின்சென்ட்.
கேரளாவில் பிறந்து வளர்ந்த மேக்னா, தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பொன் மகள் வந்தாள்’ சீரியலில் ரோகிணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் புதுவிதமாக, வயதான பாட்டி தோற்றத்திலும் மேக்னா நடித்துள்ளார். இந்த தோற்றத்தைப் பார்த்து பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்கள். மலையாளத்தில் ’பரங்கிமலா’ என்ற படத்திலும், தமிழில் ஒரு சில படத்திலும் நடித்துள்ள மேக்னாவுக்கு வெள்ளித்திரை கைக்கொடுக்கவில்லை. அதன் பின்னர் சின்னத்திரையை தேர்வு செய்து, அதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
அதன் படி முன்னணி மலையாள சேனல்களில் பல முக்கியத் தொடர்களில் நடித்து பிரபலமடைந்துள்ளார் மேக்னா. அப்படியே தமிழுக்கு வந்தவருக்கு, தெய்வம் தந்த வீடு சீரியல் பெரும் வரவேற்பைக் கொடுத்தது. 2017-ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் டோனி என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேக்னா. நடிப்பைத் தவிர, மேக்னாவுக்கு கை வேலைப்பாடுகளில் ஆர்வம் அதிகமாம். படபிடிப்பு இல்லாத நாட்களில் கிராஃப்ட்ஸ் செய்வதும், சாப்பிடுவதும் மேக்னாவுக்கு பிடித்தமானவைகளாம். உணவு என்றதுமே தென்னிந்திய உணவுகளும், ரஜஸ்தானி உணவுகளும் இவருக்குப் பிடித்தமானவைகளாம். அதோடு அழுவதை அடியோடு விட்டு விட்டாராம்.