நம்மில் பலர் தூக்கத்தைத் தவிர்ப்பதை விரும்புகிறோம், அதே நேரத்தில் நம்மில் பலர் ஆழ்ந்த உறக்கத்திற்காக போராடுகிறோம். இதன் விளைவாக, எட்டு மணிநேரம் தூங்க வேண்டும் என்ற பரிந்துரைக்கப்பட்ட அளவை பல தனிநபர்கள் பூர்த்தி செய்யத் தவறிவிடுகிறார்கள். பப்மெட்-ல் (PubMed) வெளியிடப்பட்டவை உட்பட சமீபத்திய ஆராய்ச்சி ஆய்வுகள், ஏழு முதல் ஒன்பது மணிநேரத்திற்கு மேல் தூங்க வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றன. அப்படியானால், 7 மணிநேரம் தூங்குவது நல்லதா அல்லது 9 மணிநேரம் தூங்குவது நல்லதா? நிபுணர்களிடமிருந்து தெரிந்துகொள்வோம்.
ஆங்கிலத்தில் படிக்க:
“பெரும்பாலான பெரியவர்களுக்கு ஏற்ற தூக்க நேரம், இரவுக்கு 7 முதல் 9 மணிநேரம் என்ற சிறந்த வரம்பிற்குள் தான் அமைகிறது. இந்த வரம்பு, முழுமையான ஓய்வை உறுதிப்படுத்தவும், நினைவாற்றலை ஒருங்கிணைக்கவும், மற்றும் உடல் சார்ந்த மீட்சியை மேம்படுத்தவும் உதவுகிறது. 7 அல்லது 9 மணிநேரத்தைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, இந்த வரம்பிற்குள் உங்கள் உடலுக்கு எது சிறந்தது என்பதைக் கண்டறிவதில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொருவரின் தூக்கத் தேவைகளும் சற்றே வேறுபடும், எனவே புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் உணர, உங்கள் அன்றாட வழக்கத்தை தனிப்பயனாக்குவது முக்கியம்” என்று டெல்லியில் உள்ள சி.கே பிர்லா மருத்துவமனையின் உள் மருத்துவத் துறையின் முன்னணி ஆலோசகர் டாக்டர் நரேந்தர் சிங்லா கூறினார்.
உங்களுக்குத் தேவைப்படும் தூக்கத்தின் அளவை பல காரணிகள் பாதிக்கின்றன. இதில் வயது ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது என்று டாக்டர் சிங்லா விளக்கினார். வயதானவர்களுக்கு (65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) சற்று குறைவான தூக்கம், அதாவது தோராயமாக 7-8 மணிநேரம் தேவைப்படலாம். அதே சமயம், இளம் வயதினருக்கு 7-9 மணிநேரம் தூக்கம் தேவைப்படுகிறது. “கூடுதலாக, தனிப்பட்ட வேறுபாடுகளும் முக்கியம்: சிலர் 7 மணிநேர ஓய்வுடன் சிறப்பாகச் செயல்பட முடியும், மற்றவர்கள் சிறந்த உணர்வைப் பெற 9 மணிநேரம் முழுமையாகத் தூங்க வேண்டும். தூக்கத்தின் அளவு எவ்வளவு முக்கியமோ அதே அளவு அதன் தரமும் முக்கியம் என்பதை நினைவில் கொள்வது அவசியம். இரவு நேர இடையூறுகள், அதிக மன அழுத்தம் அல்லது வசதியற்ற தூக்க சூழல் ஆகியவை, பரிந்துரைக்கப்பட்ட நேரத்திற்கு நீங்கள் தூங்கினாலும், மறுநாள் நீங்கள் எவ்வளவு புத்துணர்ச்சியுடன் உணர்கிறீர்கள் என்பதை எதிர்மறையாகப் பாதிக்கலாம்” என்று டாக்டர் சிங்லா கூறினார்.
அப்படியானால், 7 முதல் 9 மணிநேரம் தூக்கம் ஏன் சிறந்ததாகக் கருதப்படுகிறது?
முதலாவதாக, இது நோய் திர்ப்புச் செயல்பாடு மற்றும் எடை மேலாண்மை உள்ளிட்ட உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. “இது மன நலத்தையும் மேம்படுத்துகிறது. அறிவாற்றல் திறன், கவனம், நினைவாற்றல் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு உதவுகிறது. நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருந்தாலும், மாணவராக இருந்தாலும் அல்லது வேலை பளு அதிகம் உள்ள வேலையில் இருந்தாலும், போதுமான தூக்கம் உங்கள் அன்றாட செயல்திறன் மற்றும் ஆற்றல் அளவை கணிசமாக மேம்படுத்தும்,” என்று டாக்டர் சிங்லா கூறினார்.
எப்போதாவது 6 முதல் 7 மணிநேரம் மட்டுமே தூங்குவது உங்களுக்குத் தீங்கு விளைவிக்காது, ஆனால், அதைத் தொடர்ந்து செய்வது உங்கள் கவனம், மனநிலை மற்றும் நோயெதிர்ப்புச் சக்தியைப் பாதிக்கலாம். “மறுபுறம், தொடர்ந்து 9 மணிநேரத்திற்கு மேல் அதிக நேரம் தூங்குவது மனச்சோர்வு அல்லது தைராய்டு பிரச்சினைகள் போன்ற அடிப்படை உடல்நலப் பிரச்சினையின் அறிகுறியாகவும் இருக்கலாம்” என்று மும்பையில் உள்ள கிளீனீகிள்ஸ் மருத்துவமனை, பரேல்-இன் மூத்த ஆலோசகர் டாக்டர் மஞ்சுஷா அகர்வால் கூறினார்.
இறுதியில், 7-9 மணிநேர வரம்பிற்குள் உங்கள் தனிப்பட்ட தூக்க நேரத்தைக் கண்டறிந்து, உயர்தர, தடையற்ற ஓய்வை நோக்கமாகக் கொள்வதே குறிக்கோளாகும்.
“உங்கள் தூக்கத்தின் கால அளவு மற்றும் தரம் ஆகிய இரண்டிற்கும் முன்னுரிமை அளிப்பதன் மூலம், நீங்கள் அதிக புத்துணர்ச்சி, கவனம் மற்றும் அன்றைய நாளை எதிர்கொள்ளும் தயார்நிலையுடன் எழுந்திருப்பீர்கள்,” என்று டாக்டர் சிங்லா கூறினார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது களத்தில் உள்ள தகவல்கள் மற்றும்/அல்லது நாங்கள் பேசிய நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. எந்தவொரு வழக்கத்தையும் தொடங்குவதற்கு முன், எப்போதும் உங்கள் சுகாதார நிபுணரை அணுகவும்.