இந்தியாவில் இருபது லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இது குறித்த சரியான புள்ளிவிவரங்களோ, விழிப்புணர்வோ இல்லை. மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலை இந்த விஷயத்தில் மிக மோசமாக உள்ளது.
ஆட்டிசம் என்றால் என்ன?
ஆட்டிசம் என்பது மூளை தகவல்களைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளும் திறனைத் தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை சரியாகப் பயன்படுத்த முடியாமல் மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப் போவதுதான் ஆட்டிசம். இது ஒரு குறைபாடுதான் நோயல்ல.
அறிகுறிகள்:
ஒதுங்கி இருப்பது, கண்களைப் பார்த்து பேசாமல் இருத்தல், ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டாமல் இருத்தல், சமூகப் புரிதல்கள் இல்லாமல் இருப்பது, பயம், ஆபத்து ஆகியவற்றை உணராமல் இருப்பது, பாவனை, விளையாட்டுகள் இல்லாமல் இருப்பது, வித்தியாசமான நடவடிக்கைகளை ஒரே மாதிரியாகத் திரும்பத் திரும்ப செய்வது, காரணம் இல்லாமல் அழுகை, சோகம் ஆகியவற்றை வெளிப்படுத்துவது, வலியை உணராமல் இருப்பது, மாற்றங்களை அசவுகரியமாக உணர்வது, பொருளற்ற சொற்களைத் திரும்பத் திரும்ப சொல்வது முதலானவை இதன் அறிகுறிகளாகும்.
இவர்கள் மேதைகளா?
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பில் கேட்ஸ், மைக்கேல் ஜாச்சன் போன்றவர்கள், தவிர உலகின் பல அரிய மேதைகளும் இந்த ஆட்டிச குறைபாடு உள்ளவர்கள்தான். ஆனால், அறிவுக்கூர்மைக்கும், இந்தக் குறைபாட்டுக்கும் தொடர்பில்லை. ஆட்டிச பாதிப்புள்ள ஒரு சிலரால் பேச முடியாமலும், சைகை மூலமாக மட்டுமே தொடர்புகொள்ள முடிவதாகவும் இருப்பதும் உண்டு.
வகைகள்:
"அஸ்பெர்ஜர் சிண்ட்ரோம்", இவ்வகைக் குழந்தைகள் முதலில் சாதாரணமாகவே இருப்பார்கள். பருவ வயதில்தான் இந்தக் குறைபாடு வெளிப்படும். நாம் மேலே கண்ட மேதைகள் இவ்வகைக் குறைபாடு உள்ளவர்கள்தாம். இதை "கீக் சிண்ட்ரோம், லிட்டில் புரொபசர் சிண்ட்ரோம்" எனவும் குறிப்பிடுவதுண்டு.
'ரெட் சிண்ட்ரோம்' இது பெண்குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படும். தலைவளர்ச்சி மிகவும் மெதுவாக இருக்கும், கைகால்களை முழுமையாகப் பயன்படுத்த முடியாது போன்றவை இதன் அறிகுறிகள். "சைல்ட்ஹுட் டிஸ்இன்டர்கிரேடிவ் டிஸ்ஆர்டர்" இந்த வகையினர் முதலில் சாதாரணமாக இருந்து பின்னர், பேச்சுத் திறன், பழகும் திறன் ஆகியவற்றை இழக்கிறார்கள்.
குணப்படுத்த முடியுமா?
தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளது எனக் கண்டறிந்த உடனே பீதியும், திகைப்பும், விரக்தியும் ஆட்கொள்வது இயல்புதான், ஆனால், உடனடியாக அவற்றிலிருந்து வெளியே வந்து அடுத்த செய்ய வேண்டியது என்ன என்பதை அறிந்துகொண்டு காரியத்தில் இறங்கிவிட வேண்டும்.
எவ்வளவு விரைவில் அடையாளம் காண்கிறோமோ அவ்வளவு நல்லது. இதை100 சதவீதம் குணப்படுத்த முடியாது, ஆனால், நடத்தை சீராக்கல் பயிற்சிகள், வளர்ச்சிக்கான பயிற்சிகள், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி ஆகிய தொடர் பயிற்சியின் மூலம் ஓரளவு சீரான நிலைக்குக் கொண்டு வரமுடியும்.
ஆட்டிசம் கண்ட குழந்தைகளின் பெற்றோர்கள் உடனடி நடவடிக்கையில் இறங்கிவிட வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்தல், பொது இடங்களில் குழந்தையால் அவமானம் என்று நினைப்பதை அறவே தவிர்க்க வேண்டும், குறிப்பாக குழந்தைக்கு இத்தனை வயது ஆகிவிட்டதே எனக் கவலைப்படக்கூடாது, குற்ற உணர்வு அறவே கூடாது, வித்தியாசமாக இருப்பதற்கான துணிச்சலை வரவழைத்துக்கொள்தல், குழந்தையை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள், தொடர்ந்து முயற்சி செய்து வந்தால் நிச்சயம் பலன் உண்டு.