/indian-express-tamil/media/media_files/2025/05/09/0WsMwQAaGwhDYkpLvEjo.jpg)
தேள் கடித்தால் என்ன செய்யணும்? யாருக்கு அதிக ஆபத்து? டாக்டர் வேணி விளக்கம்
தேள் என்பது வேட்டையாடி உணவு உட்கொள்ளும் ஒரு சிலந்தி இனம் ஆகும். அவ்வாறு வேட்டையாடும்போது, அது தனது கொடுக்கிலிருந்து ஒருவித விஷத்தை பாய்ச்சுகிறது. இந்நிகழ்வு சிறிய விலங்குகளில் மரணத்தையும், மனிதர்களுக்கு பெரும் வலியையும் தர வல்லது. தேள் கடியால் உணர்வின்மை, மற்றும் வாந்தியுடன் இணைந்து வரும் வலி, சராசரியாக மனதினிடம் 48 மணிநேரம் வரை நீடிக்கும் என்கிறார் மருத்துவர் வேணி.
தேள் வேட்டையாடுவதற்கு மற்றும் பாதுகாப்பிற்காக மட்டுமே கடிக்கிறது. மனிதர்களை வேண்டுமென்றே கடிப்பதில்லை தேள்கள் காலணிகளுக்கு அடியிலோ அல்லது படுக்கையறைக்கு அடியிலோ மாட்டிக்கொள்கின்றன. எனவே அந்த நேரங்களில் நம் காலை நுழைக்கும்போது வேறு வழியில்லாமல் பாதுகாப்பிற்காக கடிக்கின்றன
உங்களுக்கு தெரிந்த ஒரு நபரை தேள் கடித்திருந்தால், நீங்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் சிறிதளவு கவனக்குறைவு ஏற்பட்டாலும் அந்த தேள் உங்களையும் கடிக்க வாய்ப்புள்ளது. எனவே சுற்றும் முற்றும் பார்த்து அந்த தேள் இல்லை என்பதை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும். பின்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பாதுகாப்பு கையுறைகள் மற்றும் ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். தேள் அருகில் எங்காவது இருந்தால் அதை வெறும் கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
தேள் கடியினால் ஒருவருக்கு திடீரென்று அதிர்ச்சி ஏற்படும். இதனால் ஒருவருக்கு மூச்சுத்திணறல், தலைச்சுற்றல், மார்பு வலி, அல்லது சுவாசத்தில் சிரமம் ஏற்படுமேயானால், உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். தேள் கடியால் குழந்தைகளுக்கு பொதுவாக தசை பிடிப்பு, சீரற்ற உடல் இயக்கங்கள், கழுத்து அல்லது கண்களில் நடுக்கம், அமைதியின்மை, பதட்டம், ஆர்ப்பாட்டம், மற்றும் வியர்த்து கொட்டல் போன்றவை ஏற்படும். உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் மருத்துவர் வேணி.
தேள் கடிக்கு என்ன செய்ய வேண்டும்?
தேள் கடித்தால் கடித்த பகுதியை இதயத்திற்கு மேலே தூக்கியவாறு இருக்க வேண்டும். வலியின் வீரியத்தை பொறுத்து தேள் கடித்த பகுதியில் உடனடியாக ஐஸ் வைத்து ஒத்தடம் கொடுக்கவும். பின்னர் ஒரு துணியை வைத்து கட்டுப்போடவும். பயப்பட வேண்டாம். உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவும். தேள்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள கையுறை மற்றும் காலணிகள் அணிய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் மருத்துவர் வேணி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.