/indian-express-tamil/media/media_files/2025/04/14/kvSUJsa1SVSFk8kBmzbn.jpg)
எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் நேர்காணல்
தமிழின் மிக முக்கியமான சிந்தனையாளரும் ஆய்வாளருமான எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், தமிழ் மொழி, பண்பாடு, தலித் இலக்கியம், தலித் அரசியல், தமிழ் பௌத்தம் குறித்து மிகவும் நுட்பமான ஆய்வுகளை நிகழ்த்தி எழுதி வருகிறார். அவரிடம் தலித் இலக்கியம், தலித் அரசியல், திரவிடம், தமிழ்த் தேசியம் ஆகியவை குறித்து ஒரு விரிவான உரையாடலை தொலைபேசி வழியாக தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்காக நடத்தினோம். அவற்றை இங்கே 3 பகுதிகளாக தொகுத்து வெளியிடுகிறோம். இரண்டாம் பகுதி இங்கே தருகிறோம்.
எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் நேர்காணல் முதல் பகுதியைப் படிக்க:
கேள்வி: திராவிட அரசியல் ஆரம்ப கட்டத்தில் எப்படி இருந்தது0, நடுக் கட்டத்தில் எப்படி இருந்தது? இன்றைக்கு எப்படி இருக்கிறது?
ஸ்டாலின் ராஜாங்கம்: திராவிட அரசியல் பிராமண எதிர்ப்பு அரசியலை பேசிய இயக்கம், சாதி எதிர்ப்பு வரலாற்றில் பிராமண எதிர்ப்புக்கு மிக மிக முக்கியமான இடம் உண்டு என்கிற விதத்தில் பிராமண எதிர்ப்பு விஷயம் முக்கியமானது. அது மதிக்கத்தக்கது, வரலாற்று ரீதியானது. அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை. பெரியார் கிட்டத்தட்ட நவீனமான சிந்தனையின் தாக்கத்தில் இருந்தவர். அவர் கிட்டத்தட்ட எதையும் கன்ஸ்ட்ரக்டிவ்வாக கட்ட வேண்டும் என யோசிக்கவில்லை என்பதை அவர் மீது விமர்சனமாக வைத்தாலும், இன்னொரு விதத்தில், எல்லாமே ரொம்ப கன்ஸ்ட்ரக்டிவாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல் இருப்பதுகூட ஒரு பாசிட்டிவ்வான விஷயம். ஒரு நிறுவன வாதமாக ஒன்று சுருங்கிப் போகாமல் இருப்பதற்கு அது உதவும். ஆனால், ஒரு சமூகத்தைப் பற்றி ஒன்றை கற்பனை பண்ணுகிறபோது, ஒரு சமூகத்தைப் பற்றி ஒரு கற்பிதம் தேவைப்படுகிறது. அந்த கற்பிதம் அந்த மாதிரியான ஒரு உலகம் அதை நோக்கிய எல்லை, அதைப் பற்றியான யோசனை பெரியாரிடம் இருந்தது இல்லை. அதை நான் அவருடைய பிழையாக பார்க்கவில்லை. அவருடைய அளவு அதுதான்.
ஆனால், பெரியாரிடம் இருந்து அடுத்துக் கட்டத்தில் வருகிற அண்ணா, பெரியாரைவிடவும் வாசிப்பு, உலக அளவில் நடந்து வந்த மாற்றங்கள் இவற்றைக் கவனித்து, அவற்றைக் கணக்கிலெடுத்துக்கொண்டவர். குறிப்பாக ஒரு சமூகக் குழுவை ஒருங்கிணைப்பதில், கலாச்சாரம், பண்பாடு, இது மாதிரியான இலக்கியம் போன்றவற்றுக்கான இடத்தை அவர் புரிந்துகொண்டிருந்தார். இதுதான் அண்ணாவுக்கும் பெரியாருக்குமான முக்கியமான வேறுபாடு. அண்ணாவுடைய இந்த இடம் ரொம்ப சரியானது என்பதனால், பெரியார் கொண்டிருந்த இடத்தை நான் எதிர்மறையாக சொல்லவில்லை. பெரியாருடைய இடம் அதுதான்.
அண்ணா இன்னொரு விதமாக யோசித்தார். ஒரு சமூகத்தை வழி நடத்த ஒரு கற்பிதம் அவருக்கு இருந்தது. தமிழ்நாடு, தமிழ்த்தேசிய என்கிற ஒரு கற்பிதத்தை அவர் முன்வைத்தார். அதில், இலக்கியம், பண்பாடு எல்லாமே இருந்தது. அதில், அண்ணாவிடம் என்ன பிரச்னை என்றால், அந்த கற்பிதத்தில் அவர் மொழியைத்தான் பிரதானமாகக் கொண்டார். ஒரு மொழி பேசக்கூடிய சமூகமாகத்தான் ஒன்ற்றுக்குள் ஒன்றை யோசித்தார். கிட்டத்தட்ட இன்றைக்கு இருக்கக்கூடிய இனவாத தமிழ்த்தேசியத்தினுடைய பிரச்னைகள் அண்ணாவுடைய இந்த கற்பிதத்திற்குள்ளும் இருந்தது. அவர் ஒரு தமிழனாக கற்பனை பண்ணுவதன் மூலமாக, உள்ளார்ந்த முரண்பாடுகள் இருக்கிறது இல்லையா, அந்த உள்ளார்ந்த முரண்பாடுகள் அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது, பல நேரங்களில் அதை எழுதவும் பேசவும் தெரிந்திருந்தால்கூட அது என்னவாக பிரதிபலிக்கவில்லை என்றால் அவர்களுடைய அரசியல் கொள்கைகளிலோ, திட்டங்களிலோ பிரதிபலிக்கவில்லை. அதனால், திரும்ப எங்கே போய்விட்டது என்று சொன்னால் அடித்தளமாக சமூகத்தில் இருக்கக்கூடிய பிரச்னைகளை மையப்படுத்தக் கூடிய ஒரு அரசியலை அது செய்யாமல் போய்விட்டது. கொஞ்சம் கல்ச்சுரலான விஷயங்களை இனம் கண்டு அதில் பல குறைபாடுகள் இருந்தாலும், அப்படி ஒரு கற்பிதத்தை முன்வைக்க கூடிய ஒன்றை அவர் பண்ணார். கிட்டத்தட்ட இந்த காலகட்டத்தில் இடதுசாரி இயக்கங்கள் இவர்களை விடவும் பல விஷயங்களில் ரொம்ப ஆழமாகவும் கூடுதல் புரிதலோடு இருந்தும்கூட வெற்றி அடைய முடியவில்லை. காரணம் திராவிட இயக்கத்தைவிட அவர்கள் அவர்கள் பிரச்னையை பொலிட்டிகளாக புரிந்துகொண்ட அளவுக்கு ஜனங்களோட கல்ச்சுரல் இந்த மத ரீதியான விஷயங்கள், ஒரு உள்ளூர் அளவிலான தமிழ் வட்டார தன்மை கொண்ட ஒரு பகுதியின் தனித்துவங்களோடு அவர்கள் இணையவில்லை. ஆனால், அண்ணாவின் குழு இணைந்தது. இதில் திரும்பவும் தவறுவது அடித்தளமான விஷயங்கள்தான் தவறிவிடுகிறது.
பெரியாரே ஒரு கட்டத்துக்கு மேல் என்னவாக ஆகவில்லை என்றால், தன்னுடைய பழைய, அவர் சுயமரியாதை ஆரம்பித்து 1940-கள் வரைக்குமான அவரிடம் இருந்த விரிவான பார்வை, ரொம்ப சுதந்திரமான சிந்தனை இதெல்லாம் 40-க்குப் பிறகு குறைகிறது. ஏனென்றால், அவர் கட்சி என்கிற ஒரு நிறுவனத்துக்குள் போகிறார். அவருக்கு ஒரு எல்லைகள் வருகிறது. வேறு சில சிக்கல்கள் வருகிறது. அதற்கு ஏற்ற மாதிரி தன்னுடைய இடத்தை சுருக்கிக்கொள்கிறார். அண்ணா பிரிந்த பிறகு, பெரியாருக்கு இன்னும் என்னவாகிவிடுகிறது என்றால், அண்ணா போன்ற இயக்கங்களை கவுண்ட்டர் பண்ணுவது போன்ற இடத்துக்கு அவருடைய இடம் போய்விட்டது.
பெரியார்கிட்டயே ரொம்ப பிரமாதமான இடம் இருந்து, அப்புறம், அவர்கிட்டயே சிக்கல்கள், அவர் தன்னை சுருக்கிக்கொண்ட காலம் அவர் உயிரோடு இருந்தபோதே நடந்துவிட்டது இது என்னுடைய கருத்து.
அண்ணாவிடம் அவர் வெளிவந்த பின்னாடி, நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி அடித்தளமான பிரச்னைகள் பற்றியான ஒரு இனங்காணல் இல்லை. அதற்கு அப்புறம், அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னாடி என்ன நடந்தது என்றால், அது தி.மு.க-வுக்கு மட்டும் நேர்ந்த பிரச்னை அல்ல, அது இந்திய தேர்தல் முறையின் பிரச்னையாக இருக்கிறது. இந்திய தேர்தல் முறை எண்ணிக்கை பெரும்பான்மையாக யார் இருக்கிறார்களோ, அவர்களை நத்தினால்தான் வெற்றி பெற முடியும் என்கிற ஒரு அரசியல் இருக்கும்போது, அதற்கு தன்னை ஈடுபடுத்திய திராவிட இயக்கம் இன்றைக்கு என்னவாக மாறியிருக்கிறது என்றால், எண்ணிக்கை பெரும்பான்மை சாதிகளை திருப்தி படுத்தக்கூடிய ஒரு அரசியலாக மாறியிருக்கிறது. சாதி ஒழிப்பு, சமூகநீதி இதையெல்லாம் தன்னை பிறவற்றிலிருந்து தனித்துவமாகக் காட்டிக் கொள்வதற்கும் அதற்கு கடந்த காலத்தில் இப்படி ஒரு கொள்கைகளைப் பேசிய இயக்கம் என்பதற்காகவும்தான் இன்றைக்கு சொல்லப்படுகிறதே ஒழிய, பெருசா என்ன பண்ணமுடியாது என்றால், அதுதான் அவர்களுடைய அடையாளம் என்பதெல்லாம் இன்றைக்கு கிடையாது. அது ஒரு கட்சியாக இன்றைக்கு இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதுதான் என்னுடைய கருத்து.
அவைகளுக்கு இந்த சமூகத்தினுடைய அடித்தளமான பிரச்னைகள் பற்றிய ஒரு விரிவான ஆய்வோ, பார்வையோ திட்டங்களோ கிடையாது. அது ஒரு அரசியல் இயக்கமாக சஸ்டைன் பண்ணுவதற்கு மட்டும்தான் அவைகள் இருக்கிறது. அந்த இடத்தில்தான், ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தின் அடித்தளமான பிரச்னைகள் பற்றி பேசுபவர்கள் தி.மு.க-வை ஒரு மாற்றாக பார்க்கும் வாய்ப்பு இருக்காது, இருக்க முடியாது. இதுதான் திராவிட இயக்கத்தின் இன்றைய நிலை. அதனால், அது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நம்பிக்கை தரத்தக்க கட்சி அல்ல.
இன்றைக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களிலும், அங்கங்கே இருக்கக்கூடிய ஒவ்வொரு சாதியை திருப்திபடுத்துகிற ஒரு அரசியலை எல்லா கட்சிகளும் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். எந்த ஊரிலும் ஒடுக்கப்பட்ட மக்களை விட்டுவிட முடியாது. ஏனென்றால், அவர்கள் எண்ணிக்கை அளவில் மெஜாரிட்டியாக இருக்கிற வரைக்கும் இங்கே அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படத்தான் செய்வார்கள். அது பிற மாநிலத்தில் எப்படி பண்ணப்படுகிறதோ அதே, எல்லைக்குட்பட்டுதான் இங்கேயும் பண்ணப்படுகிறது.
திராவிட இயக்கத்திற்கு இருக்கிற ஒரு சுவாரசியமான வாய்ப்பு என்னவென்றால், மற்ற கட்சிகளெல்லாம் தான் செய்வதை கொள்கையாக சொல்லிக்கொள்ள முடியாது. ஒரு நலத்திட்டமாகத்தான் சொல்லிக்கொள்ளலாம். தலித்துகளுக்கு இதைப் பண்ணோம், இந்த திட்டத்தைக் கொடுத்தோம் என்று சொல்வார்கள். மற்றவர்கள் பண்ணுவதை கொள்கையாக சொல்லிக் கொள்ள முடியாது, ஒரு நலத்திட்டமாகத்தான் சொல்லிக் கொள்வார்கள். தலிதலுக்கு இதை செய்தோம், இந்த திட்டத்தை கொடுத்தோம் என்று சொல்வார்கள். ஆனால், திராவிட இயக்கம் என்ன பண்ணுகிறது என்றால், இது ஒரு பிராமணர் அல்லாத சாதிகளை மேம்படுத்துவதற்கான ஒரு உத்தியாக சொல்லிக் கொள்கிறது. அதை கொள்கையாகவும் சொல்லிக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வெளியே , இது இல்லாவிட்டால் அவை திட்டங்கள் தான்.
கேள்வி: நீங்கள் குறிப்பாக திராவிட இயக்கம் என்று சொல்லும்போது தி.மு.க-வை மட்டும் தான் குறிப்பிடுகிறீர்கள் அதனுடைய நீட்சியாக அ.தி.மு.க-வை திராவிட இயக்கமாக பரிசீலிக்க முடியுமா?
ஸ்டாலின் ராஜாங்க: “அ.தி.மு.க-வும் திராவிட இயக்கம் தான். அ.தி.மு.க-வில் இருப்பவர்களுக்கும் தி.மு.க-வில் இருப்பவர்களுக்கும் பெரிய வித்தியாசம் எல்லாம் கிடையாது. அ.தி.மு.க-வில் இருப்பவர்கள் சாமி கும்பிடுவதை நேரடியாக சொல்வார்கள். தி.மு.க-வில் இருப்பவர்கள் சொல்ல மாட்டார்கள் அவ்வளவுதானே ஒழிய், மற்றபடி வேறுபாடுகள் உள்ளூர் அளவில் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் அளவில் அவர்களுக்கு இடையில் அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் நெருக்கமான உறவு இருக்கிறது என்பது எல்லாருக்குமே தெரியும். ஒரே சமூகமாக இருப்பது பல பகுதிகளில் வேறு வேறு கட்சிகளில் இருந்தாலும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள். ஆனால், தி.மு.க-வில் இருப்பதால், வெளியில் சில விஷயங்களை பேச முடிகிறது, அ.தி.மு.க-வில் பேச முடியவில்லை. அவ்வளவுதானே ஒழிய, அவர்களுடைய கள எதார்த்தத்தை பொறுத்தவரை அவர்களுக்கு இடையே பெரிய வேறுபாடு இல்லை என்பதே என்னுடைய கருத்து. அ.தி.மு.க ஒரு கொள்கை அடிப்படையிலான கட்சி இல்லை என்பது உண்மை. ஆனால், தி.மு.க என்பது அதே மாதிரி கொள்கையில் இருக்கக்கூடிய கட்சி இல்லை என்பதும் உண்மை.
தி.மு.க எப்போதும் தனக்கு தேவையாக இருக்கும்போது மட்டுமே பழைய விஷயங்களை தூசி தட்டி. ஒரு விஷயமாக மாநில சுயாட்சி, இந்தி எதிர்ப்பு போன்ற விஷயங்களை கைக்கொண்டு இருக்கிறதே ஒழிய, அந்த விஷயங்களில் அதற்கு ஒரு பிந்தொடர்ந்தல் கிடையாது. அதற்கு ஒரு பெரிய பார்வை கிடையாது. அதனால், தி.மு.க ஆட்சியில் நலத் திட்டங்கள் என்கிற முறையில் முக்கியமான நலத்திட்டங்கள் வந்திருக்கிறது என்பது ஒரு உண்மை. அதேவேளையில், அ.தி.மு.க ஆட்சியிலும் நலத்திட்டங்கள் நடந்திருக்கின்றன. அதை நீங்கள் இல்லை என்று சொல்ல முடியாது. எனவே திராவிட கட்சிகள், திராவிட ஆட்சிகள் என்று சொல்லும் போது இவை இரண்டையும் சேர்த்து தான் நான் குறிப்பிடுகிறேன். இரண்டுக்கும் திட்டங்கள் அடிப்படையில் சில வித்தியாசங்கள் இருக்கிறது என்பது உண்மை. ஆனால், ஒடுக்கப்பட்டவர்களுடைய விஷயத்தில் பிரச்னைகளை அணுகுவதில் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள்.
கருணாநிதியால் சில விஷயங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. நான் அதை இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால், என்ன முன்னேற்றம் என்றால், அதை நீங்கள் உற்று கவனித்தீர்கள் என்றால், தேர்தல் ரீதியாக தனக்கு வாக்களிக்கக் கூடிய பெரிய பிரிவினரை பாதிக்காத வகையிலான திட்டங்களாகத்தான் அது இருக்கும். அது முற்போக்காகவும் தெரிய வேண்டும் அதே வேளையில் தன்னுடைய வாக்குவங்கியை உருவாக்குவதற்காகவும் அல்லது வாக்குவங்கியை பாதிக்காத அளவிலும் இருக்க வேண்டும். அவர் பல நல வாரியங்கள் உருவாக்கினார். நிறைய நல வாரியங்கள் கருணாநிதி ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டது. ஆனால், என்ன விஷயம் என்றால் அரசியல் ரீதியாக இனம் காணப்படாத அரசியல் குழுக்கள் இருக்கிறது இல்லையா, அந்த சின்ன சின்ன குழுக்களை திருப்திபடுத்துவதற்காக அவைகளைத் தன்னுடைய வாக்கு வங்கியாக மாற்றுவதற்காக கொண்டுவரப்பட்டது. ஏன் நான் அப்படி சொல்கிறேன் என்றால், அந்த நல வாரியங்களின் அடிப்படையில் அவர்களுக்கு ஒன்றும் பெரியதாக நடந்து விடவில்லை.
அரவாணிகளுக்கு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் முக்கியமான விஷயங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அது பெரும்பான்மை வாதத்தை பெரும்பான்மை எண்ணிக்கையில் இருக்கிறவர்களையோ அல்லது பெரும்பான்மைவாத மெயின் செட்டையோ பாதிக்கிற விஷயம் கிடையாது. அது பெரும்பான்மையை பாதிக்காத விதமாகவும் இருக்கிறது, முற்போக்காவும் சொல்லிக் கொள்ள முடிகிறது, எது ஆதிக்க சாதியினரை பாதிக்குமோ அது நீதியாக இருந்தாலும் இவர்கள் இரண்டு பேராலும் நிறைவேற்ற முடிந்தது கிடையாது. அதுதான் உண்மை. அதனால், திராவிட இயக்கம், திராவிட கட்சிகள் என்பதில் இது பெரியதா? அது பெரியதா என்பதைவிட, அதில் சில வித்தியாசங்கள் இருப்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம், ஆனால், அது எனக்கு முக்கியமில்லை என்கிறேன் நான்.
கேள்வி: திராவிட அரசியல், தமிழ்த்தேசிய அரசியல், தலித் அரசியல் இந்த மூன்றுக்கும் இடையேயான உறவுகள், முரண்கள் பற்றி கூற முடியுமா?
ஸ்டாலின் ராஜாங்கம்: திராவிட அரசியலும் தமிழ் தேசிய அரசியலும் தலித் அரசியலுக்கு உதவுவதாக இருக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுடைய பிரச்னைகளைத் தீர்ப்பது அவற்றைப் பற்றி வெளிப்படையாக பேசி சரி பண்ணுவது அப்படி என்பதை அவர்கள் தங்களுடைய உள்ளீடாக கொண்டிருக்க வேண்டும். பெருமளவுக்கு உள்ளீடாக இருப்பதில்லை இதுதான் பிரச்னை. எனவே, திராவிட அரசியல், தமிழ்த்தேசிய அரசியல் தலித் அரசியலுக்கு உதவுமா என்றால் தேர்தலில் ஈடுபடக்கூடிய தலித் கட்சிகளுக்கு கள யதார்த்தத்தில் மற்றவற்றில் திராவிட அரசியலும் தமிழ்த்தேசிய அரசியலும் பெரியதாக உதவுவதில்லை. இன்னும் கேட்டால், மனித உரிமை செயல்பாட்டாளர்களும் இடதுசாரி குழுக்களும்தான் தலித் குழுக்களுக்கும் தலித் மக்களுக்கும் களத்தில் நெருக்கமாக இருக்கிறார்கள் இவர்களைவிட என்பதுதான் எதார்த்த உண்மை. தமிழ் தேசிய அரசியலும் திராவிட அரசியலும் இதைப் பற்றி பேசுகிறார்கள் என்றால், அவர்களுக்கு வேறு ஏதோ ஒரு அரசியல் கணக்கு இருக்கிறது, அதற்காகத்தான் பேசுகிறார்கள் என்று இருக்கிறதே ஒழிய, அவர்கள் அரசியல் கணக்கு இல்லாமல் இதைப் பற்றி பேசுவதில்லை. அதனால், அவைகளுக்கு இடையேயான ஒற்றுமையைப் பற்றி பேசுவது யோசிக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.
அவர்களுக்கு என்ன ஒரு நிர்பந்தம் இருக்கிறது என்றால், எதிர் தரப்பு என்று உருவாகும்போது அந்த எதிர் தரப்பை கவுண்ட்டர் பண்ணுவதற்காக தங்களை காட்டும் போது ஒரு பெரிய வகையினமாக தங்களை காட்டும்போது தலித்துகளை உள்ளடக்கி பேசுவார்கள், தலித்துகளை உள்ளடக்கி பேசுவதனால் தலித்துகள் மேல் இருக்கிற தீவிர வன்மம் சமூகத்தில் கொஞ்சம் தனியும் அதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அந்த வகையில் இந்த தமிழன், திராவிடன் என்கிற பொது அடையாளங்கள் எல்லாம் பயன்படுகிறது. ஆனால், இது எப்போதுமே நிரந்தரமாக இருப்பதில்லை. இது திடீரென தனிகிறது, திடீரென திரும்ப எழுகிறது. இந்த விஷயம் மாறாதவரை அவை தனிவதையும் திரும்ப எழுவதையும் நீங்கள் தடுக்க முடியாது. அதனால், தலித் அரசியல் ஒரு மொழியை அடிப்படையாக வைத்து இயங்க முடியாது. அது மொழியை என்னவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், அதை மொழியாக மட்டும் தான் வைத்துக் கொள்ள வேண்டும். அதை நாம் பேசக்கூடிய மொழியாகவும் அதில் இருக்கக்கூடிய ஒரு விஷயத்தை பார்ப்பதாகத்தான் இருக்க முடியும். அதுவே நம்முடைய பிரதான முதன்மையான ஒரு அடையாளம் என்று தமிழ் தலித் அரசியல் வைத்துக் கொள்வது அதற்கு ரொம்ப உதவி புரியாது என்பது என்னுடைய கருத்து. அது தன்னுடைய எண்ணிக்கையை எப்படி வலுப்படுத்த யோசிக்க வேண்டும். இரண்டாவது தனக்குரிய அடையங்களாக தனக்குரிய கலாச்சாரம் பண்பாட்டில் இருந்து எப்படி வடிவமைக்க வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். அதில் மொழியும் ஒன்றாக இருக்க வேண்டுமே ஒழிய மொழியே ஒரு பிரதான அடையாளமாக ஒரு சமூகம் கொள்ள முடியாது, கொள்ளக்கூடாது.
கேள்வி: கடந்த சில பத்தாண்டுகளாக, கல்விப் புலம் சாராதவர்கள் நிறைய சமூக வரலாற்று புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள். அதே போல, தமிழர் அடையாளம், பெருமைகள் குறித்தும் புத்தகங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை வரலாற்றியல் ரீதியான சான்றுகள் இல்லாதவை. இத்தகைய நூல்களுக்கு கல்விப்புலம் சார்ந்த வரலாற்று ஆசிரியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் பெரிய அளவில் எதிர்வினை ஆற்றுவதில்லையே ஏன்?
ஸ்டாலின் ராஜாங்கம்: நான் என்ன நினைக்கிறேன் என்றால் ஏன் போதுமான சான்று இல்லாதது ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்றால், நமக்கு தொந்தரவு இல்லாத நாம் ஏற்றுக் கொள்ளத் தக்க ஒரு கருத்து சொல்லப்படுமானால் அது சான்றுகளே இல்லாவிட்டாலும்கூட சான்று இல்லை என்று சொல்ல மாட்டார்கள். அப்போது அதற்கு நாம் முன்னாடியே டியூன் பண்ணப்பட்டிருக்கிறோம். இளையராஜா சொல்கிறார் இல்லையா, என் பாட்டை கேட்பதற்கு சமூகம் ஏற்கெனவே டியூன் செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார். அந்த மாதிரி ஒரு விஷயத்தை கேள்வி இல்லாமல் ஒத்துக் கொள்வது அது ஏற்கனவே உங்களிடம் (சமூகத்தில்) இருக்கிறது என்று கூறுகிறேன். அந்த முடிவு உங்களுக்கு பிரச்னையாக இல்லாவிட்டால் அதற்கு சான்றே இல்லாவிட்டாலும் கூட நீங்கள் அதில் சான்று இல்லை என்று சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். ஆனால், நீங்கள் ஒத்துக் கொள்ள முடியாத ஒன்றை உங்களுடைய நலனுக்கு எதிரான ஒன்று நிறைய சான்றுகளோடு இருந்தாலும் கூட நீங்கள் சான்றுகள் இல்லை என்று கூறுகிறீர்கள், இல்லையென்றால் கொடுக்கப்பட்ட சான்றுகளை கேள்வி கேட்கிறீர்கள் அல்லது அதனுடைய வரிசையை கேள்வி கேட்கிறீர்கள். பிரச்னையை புத்தகத்திலோ சான்றுகளிலோ இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து.
வாசிப்பு எங்கே இருக்கிறது என்றால், உங்களிடம் ஏற்கனவே இருக்கிற முடிவுகளில் இருக்கிறது அல்லது அந்த நூலை யார் எழுதுகிறார்கள் என்கிற பெயரில் இருக்கிறது. அந்த பெயர் சார்ந்தவர் பற்றி ஏற்கனவே உங்களுக்கு ஒரு கருத்து தரப்பட்டு இருக்குமானால் அல்லது அதை பற்றி ஒரு முன் முடிவு இருக்கும். ஆனால், அந்த புத்தகத்தை வாசிக்காமலேயே நீங்கள் ஒரு முடிவு எடுத்து விடுகிறீர்கள் இன்றைக்கு என்னுடைய புத்தகத்தை படிக்கிற ஒருவர் நான் மறுக்கிற கருத்து கொண்ட புத்தகத்தை படிப்பதில்லை அல்லது நான் மறுக்கிற கருத்தைப் படிக்கிற ஒருவர் என் புத்தகத்தை படிப்பதில்லை. அப்போது யாருடைய பெயர், என்ன லேபிள், என்ன தலைப்பு என்பது வாசிப்பை முடிவு செய்கிறது. இந்த சமூக வலைதள யுகம் இந்த வாசிப்பை இது மாதிரியான ஒரு குறுகிய பார்வையை தகர்த்திருக்க வேண்டும், ஆனால், அதற்கு மாறாக இந்த சமூக வலைதள யுகம் இதை மேலும் சுருக்கி இருக்கிறது, குறுக்கிருக்கிறது ஒரு புலப்படாத குழுக்களை உருவாக்கி இருக்கிறது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு விரிவாக தொடர்பு கொள்வதற்கு மாறாக ஒவ்வொருத்தரையும் கண்ணுக்கு புலப்படாத ஒரு கும்பலாக, ஒரு குழுவாக மாற்றி இருக்கிறது. எனவே, வரலாற்றில் ஒரு பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒரு நூல் வாசிப்பில் புத்தக கண்காட்சியில் நான் இன்றைக்கு இந்த புத்தகங்களை எல்லாம் வாங்கிச் சென்றிருக்கிறேன் என்று ஒருவர் பட்டியல் போடுகிறார்கள் என்றால் அவர் ஒரு திராவிட இயக்க வரலாற்று ஆசிரியருடைய புத்தகத்தை வாங்கி இருக்கிறார் என்று பார்த்தோமானால் அதில் ஒரு தலித் இயக்க வரலாற்று ஆசிரியரின் நூல் இருக்காது அப்போது அவருக்கு அதுதான் வரலாறு; தலித் அரசியல் இயக்க வரலாறு என்பதை வரலாறாக கருதுவது கிடையாது. அப்போது இப்படிப்பட்ட ஒரு வாசிப்பு சூழ்நிலை தான் இன்றைக்கு உருவாகி இருக்கிறது. என்னை படிப்பவர் ஒருவர் சலபதியை படிப்பதில்லை சலபதியை படிப்பவர் ஒருவர் என்னை படிப்பதில்லை. இரண்டாவது நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்றால் இன்றைக்கு வரலாற்றில் இந்த காலகட்டத்தில் மிகவும் எதை எதிர்பார்க்கிறோம் என்றால், பெருமைகள் தான் எதிர்பார்க்கப்படுகிறது. நாம் பெருமையாக கொள்ள முடியாத விஷயங்கள் இங்கு பெரும்பான்மையாக இருக்கிறது. நாம் பெருமையாக கொள்கிற விஷயங்கள் இங்கு ரொம்ப ரொம்ப சிறுபான்மையாக இருக்கிறது.
நாம் பெருமையாக கொள்ள முடியாத விஷயங்கள் தான் சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கிறது. அதனால், சிறுபான்மையாக இருந்தாலும் பெருமையாக கொள்ளக்கூடிய விஷயங்களை நாம் சொல்லத்தான் வேண்டும், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் அந்த பெருமையான சிறுபான்மையை பெரும்பான்மையாக மாற்றிக் காட்டுகிறார்கள், இதுதான் தமிழ்ச் சமூகம் என்று இன்றைய வரலாற்று நூல்கள் செய்கின்றன. அது மட்டுமல்ல சிறுபான்மையான பெருமையை பெரும்பான்மையான பெருமையாக இந்த வரலாற்று நூல்கள் மாற்றி காட்டுகின்றன. பெரும்பான்மை பெருமையை பேசுவது மட்டும் தான் இன்றைக்கு வேலையாக இருக்கிறது. அது எதார்த்தத்தில் எந்த அளவுக்கு இருக்கிறது, எந்த அளவுக்கு இல்லை, ஒரு பிரதியில் இருப்பதைப் பற்றி பேசுவது பிரதி கிடையாது, இல்லாததைப் பற்றியும் பேச வேண்டும், எது பேசப்பட்டு இருக்கிறது என்பதை பற்றி பேசுவது மட்டுமல்ல எதைப் பேச முடியவில்லை என்பதையும் பேச வேண்டும். இன்றைய வரலாற்று நூல்கள், ஆவணங்களை சேகரித்து, அவற்றை வரிசைக்கிரமமாக தரவு வரலாறு என்று சொல்லப்படுகிறது ஒழிய, அந்த வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் கேள்விகளை எழுப்பி அந்த கேள்விகளுக்கான விடைகளை காண்பது அல்லது விடையே இல்லாவிட்டாலும் கூட கேள்விகளை எழுப்புகிற வேலையை இந்த வரலாற்று நூல்கள் செய்வதில்லை.
இன்றைக்கு கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எழுதப்பட்டிருக்கிற மிக முக்கியமான வரலாற்று நூல்களை எடுத்துக் கொள்ளுங்கள், நான் சொல்கிறேன் அவற்றில் சமகாலம் என்ற ஒன்று கிடையாது. சமகாலப் பிரச்னைகள் என்ற ஒன்றை அவர்கள் கோடிட்டு காட்ட மாட்டார்கள். அவர்கள் வைக்கம் போராட்டத்தை பற்றி எழுதிக் கொண்டிருக்கிறபோது விழுப்புரத்துக்கு பக்கத்தில் மேல் பாதி என்கிற கிராமத்தில் கோயிலில் நுழைய முடியாத பிரச்னை போய்க்கொண்டிருக்கும்போது, அந்த புத்தகம் 100 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட வைக்கம் போராட்டத்தை பற்றி சொல்வதோடு அது முடிந்துவிடும். ஆனால், அது எங்கே தொடங்கி எங்கே முடிந்து இருக்க வேண்டும் என்றால், வைக்கம் போராட்டத்தில் தொடங்கி மேல் பகுதியில் முடிந்திருக்க வேண்டும். ஏனென்றால், மேல்பாதி தான் எதார்த்தம், களம் இன்றைக்கு நிஜம். ஆனால், இவர்கள் பேசுவது எல்லாமே அன்று நடந்ததை மட்டுமே சொல்வது. எனவே, இதுதான் இன்றைய வரலாறாக மாறி இருக்கிறது. இதில் தொடர்ந்து கல்வீசக்கூடிய வேலையை தலித் வரலாற்று நூல்கள் செய்கின்றன. அதனால்தான், தலித் வரலாற்று நூல்கள் பற்றி ஒரு மௌனம் நிலவுகிறது அல்லது அதைப் பற்றிய ஒரு ப்ரொமோஷன் இருப்பதில்லை அல்லது அதைப் பற்றி நிறைய கேள்விகள் எழுப்பப்படுவது நடந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பின்னணியில் நீங்கள் பார்க்கும் போது நான் திரும்ப என்ன சொல்கிறேன் என்றால், நாம் இவற்றையெல்லாம் பெருமையாக கொள்ள முடியாது என்ற நிலையில் இருக்கிறோம் என்பதைப் பற்றி தான் பேசப்பட வேண்டும், எழுதப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.
நான் கீழடி மியூசியத்துக்கு உள்ளே போய்விட்டு வெளியே வரும்போது அந்த காம்பவுண்டுக்கு வெளியே எதிரில் நான் இன்ன சாதிதான் என்று அரிவாள் போட்ட போஸ்டர் ஒட்டி இருக்கிறது இல்லையா, அந்த மியூசியம் சுவருக்கு உள்ளே போகும்போது சாதி பேதமற்ற ஒரு சமூகம் என்று ஒன்று இருக்கிறது என்று ஒரு சின்னத்தை நீங்கள் நிறுவி இருக்கிறீர்கள். அதைப் பார்த்துவிட்டு நான் அந்த சுவற்றைத் தாண்டி வெளியே வரும் போது நான் இந்த சாதி என்று சொல்லக்கூடிய ஒரு எதார்த்த சமுதாயம் இருக்கிறது இல்லையா இந்த இரண்டுக்கும் ஒரு முரண் இருக்கிறது இல்லையா. இந்த முரணைத் தானே பேச வேண்டும். அந்த மியூசியம் இந்த மாதிரி பெருமை கொள்வதில் எந்த தாக்கத்தையும் செலுத்தவில்லை என்றால் நான் அந்த மியூசியத்தை என்னவாக கருதுவது?
நாம் 2000 வருடத்திற்கு முன்பு சாதி பேதமற்ற சமூகமாக இருந்தோம் என்று ஒரு கருத்தை சொல்லக்கூடிய அந்த சின்னங்கள் அதற்கு நேர் எதிரில் அதில் இருந்து ஒரு 10 அடி தூரத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் ஒரு போஸ்டரில் கூட ஒரு மாற்றத்தை உண்டு பண்ண வில்லை என்றால் இந்த பெருமையை நான் எப்படி பார்க்க வேண்டும். எனக்கு ஏன் இந்த பெருமை என்று நான் கேட்கிறேன். இந்த வரலாற்று ஆசிரியர்கள், இதை பேசுபவர்கள் இந்த எதார்த்தத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாமா, இதை திரும்பத் திரும்ப சொல்வதனால் ஒரு சமூகம் மாறிவிடுமா?
இங்கு எல்லாமே கணக்கின் அடிப்படையில் தான் நடத்தப்படுகிறது என்பதற்கு நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். வரலாற்றில் குயிலி என்கிற ஒரு பாத்திரத்தை பற்றி ஒரு மோதல் வருகிறது.குயிலி வந்து ஒரு தலித் பாத்திரம் அவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முதல் தற்கொலை போராளி என்கிற கருத்தை தலித்துகள் எழுதவில்லை. அதை ஒரு இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த ஜீவபாரதி தான் முதலில் தொடங்கி வைத்தார். அது பின்னாடி அரசியல் குழுக்கள் மதச்சார்பின்மை பேசும்போது ஒவ்வொரு மதத்திலிருந்தும் ஒரு ஆளை அவர்கள் சின்ன வேலையை செய்திருந்தாலும் கூட அவர்களுக்கு ஒரு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக பெரிய வேலை செய்த ஆட்களுக்கு இணையாக கொண்டு வந்து நிறுத்துவார்கள். அந்த மாதிரி ஒவ்வொரு ஜாதியிலிருந்தும் ஒருத்தர் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்று காட்டுவதற்கு தேவைப்படுவதற்கு, இப்போது விஜய் அஞ்சலை அம்மாளை கொண்டு வந்து அம்பேத்கருக்கு நிகராக நிறுத்தி இருக்கிறார் இல்லையா, அந்த சமூகத்தில் இருந்து ஒரு ஆளுமை வேண்டும் என்பதற்காகவே கண்டுபிடித்து கொண்டு வந்து நிறுத்துகிறார். ஆனால், இந்த ஆளுமையின் வேலையும் அவர்கள் செய்த வேலையும் ஒன்று இல்லை இல்லையா, இது விஜயோட வேலை இல்லை. இது எல்லா அரசியல் கட்சிகளும் எப்போதும் பண்ணிக் கொண்டிருக்கிற வேலைகள். பக்தி இயக்கங்கள் கடந்த காலத்தில் செய்த வேலை இது சரியா. அதே மாதிரி குயிலியை கண்டுபிடித்து, ஒரு தலித் இந்த பிரச்சனைகளுக்காக போராடினார், பேசினார் என்று காட்டுவதற்காக பாத்திரம். இப்போது அதில் போதிய வரலாற்று ஆதாரம் இல்லை என்று சில பேர் கண்டுபிடிக்கிறார்கள். அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கலாம், அதில் நான் வாதிட விரும்பவில்லை. ஆனால், எனக்கு என்ன கேள்வி என்றால் வரலாற்றில் எல்லா போலிகளையும், எல்லா போலி பாத்திரங்களையும் நீங்கள் கேள்வி கேட்டு விட்டீர்களா, எல்லாவற்றையும் கேள்வி கேட்க முடியுமா, அப்போது நீங்கள் எந்த பொய்யை மட்டும் பொய் என்று சொல்ல முடிகிறது என்பதுதான் இங்கே விஷயம் என்கிறேன் நான்.
குயிலி வரலாறு உண்மை இல்லை என்று வைக்கக்கூடிய ஒரு குழு உருவாகி இருக்கிறார்கள், குயிலி உண்மை இல்லாமல் கூட இருக்கட்டும் அந்த மாதிரி வரலாற்றில் இருக்கக்கூடிய எல்லா பாத்திரங்களையும் பற்றியும் நீங்கள் சொல்லுங்கள். இப்போது மருது பாண்டியர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்பதை நாம் ஏற்றுக் கொள்வதிலோ மதிப்பதிலோ எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், நான் என்ன கேட்கிறேன் என்றால் இது இடதுசாரி குழுக்கள் உட்பட இதை முன்வைப்பவர்கள் இருக்கிறார்கள் இல்லையா, மருது பாண்டியர்களை நீங்கள் விடுதலை வீரர்கள் என்று கண்டுபிடிப்பதன் மூலமாக சமூகத்தில் ஜாதி அடையாளங்களைக் கடந்து ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு போராடியவர்கள் என்று நேசிக்க வைத்துவிட முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் இல்லையா, உங்களிடம் என்ன டேட்டா இருக்கிறது, சமூகத்தில் மருது பாண்டியர் படத்தை போடுபவர்கள் எல்லாம் போஸ்டர் அடிப்பவர்கள் எல்லாம், வண்டியில் அவர்கள் படத்தை ஒட்டிக் கொள்பவர்கள் எல்லாம் அவர்கள் விடுதலை வீரர்கள் என்பதால் ஒட்டிக் கொள்கிறார்களா அல்லது நம்முடைய ஜாதியில் பிறந்த விடுதலை வீரர்கள் என்பதற்காக ஓட்டுகிறார்களா என்றால் ஜாதியில் பிறந்தவர்கள் என்பதற்காகவே ஓட்டுகிறார்கள் அப்போது நீங்கள் ஒரு பக்கம் ஒரு ஐகானை ஜாதி அடையாளத்தில் இருந்து விளக்குவதற்கு அவர்களுக்கு இருக்கிற விடுதலைப் போராட்ட அடையாளத்தை அழுத்தப்படுத்துகிறீர்கள் இன்னொரு பக்கம் ஒருத்தர் ஜாதியாக இருப்பதனாலேயே விடுதலை போராட்டத்தில் சேர்த்து விட்டார்கள் என்று தேவையில்லை நீக்குங்கள் என்று அழுத்தம் கொடுக்கிறீர்கள். இந்த இரண்டிலுமே எனக்கு பிரச்னை இல்லை. ஒருத்தரை ஒத்துக் கொள்வதிலும் இன்னொருத்தரை பொய்யென்று சொல்லும்போது அதை ஏற்றுக் கொள்வதிலும் எனக்கு பிரச்னை இல்லை. நான் என்ன கேட்கிறேன், ஒரு வரலாற்றின் உடைய பொருத்தம் சமூகத்தில் இருந்து தான் உருவாகிறது ஒழிய, சமூகத்தில் மக்கள் எப்படி தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள் அல்லது மக்களிடம் நாம் எப்படி சொல்கிறோம் என்பதும் மக்கள் அதை எப்படி தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து ஆய்வு செய்து அதற்கு ஏற்ப திரும்ப நாம் பேசுவது என்பதே வரலாறே ஒழிய மருது பாண்டியர்களை இப்படி சொன்னதன் மூலம் சமூகத்தில் என்ன மாற்றத்தை, அவர் சமூகத்தின் மத்தியில் என்ன நீங்கள் மாற்றத்தை உண்டு பண்ணி இருக்கிறீர்கள். அதனால், இன்றைக்கு வரலாறு எழுதுகிற முறை இருக்கிறது இல்லையா, அதில் சாதிதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. இதுதான் எனக்கு விஷயம். இதைத்தான் நான் சொல்ல வருகிறேன்.
அப்புறம், கல்வித்துறையில் இருப்பவர்கள் எல்லாவற்றுக்கும் எதிர்வினையாற்ற வேண்டும் என்று நினைப்பது என்பது கல்வித்துறையே அப்படித்தான் இருக்கிறது. அதனால், இப்படி எழுதுபவர்களுக்கு அவர்கள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்கள். ரொம்ப அரிதாகத்தான் ஒரு ஆய்வு கண்ணோட்டத்தோடு எழுதுகிறார்கள், மாறுபட்ட கருத்து கொண்டவர்கள் கூட எழுதுகிறார்கள். அது மாதிரி கல்வித்துறைக்கு வெளியே தான் நடக்கிறது. கல்வித்துறைக்கு வெளியே இருந்தாலும்கூட கல்வித்துறையின் ஆய்வு முறைமிக்கு உட்பட்டு செயல்படுபவர்கள் வெளியே தான் இருக்கிறார்கள்.
எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் நேர்காணல் முதல் பகுதியைப் படிக்க:
நேர்காணல்: எ.பாலாஜி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.