scorecardresearch

அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 6

இளையராஜா தமிழரின் பெருமிதம். இசையின் அடையாளம். அவர் நமது பீத்தோவன். அவரின் எண்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், தமிழ்ச் சமூகமும், அவர்தம் அரசும் அவருக்கு பெரும் விழா ஒன்றை எடுத்து தன்னையே பெருமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழருக்கு தன்னிடமுள்ள மேதைகளைப் போற்றத் தெரியவில்லை என்ற கறையையும் அவ்வாறே துடைத்துக் கொள்ள வேண்டும்.

Tamil News, Tamil News Today Latest Updates
Tamil News Headlines LIVE

அழகிய பெரியவன்

இளையராஜா-உயிரில் ஊறும் இசையமுதம்

“இசையின் விளக்கில் இருண்ட மனதில்
ஒளியை நிரப்பலாம்”
– இசைஞானி இளையராஜா.

இளையராஜா அவர்கள் எண்பதை நெருங்கிவிட்டார் என்ற செய்தியை ஒரு ரசிகனாக மெல்லியப் புன்னகையோடு கடக்கிறேன். வயதென்பது சிலருக்கு மூப்பு. வயதென்பது சிலருக்கு எண்ணிக்கை. தமிழர் இசைக்கு இலக்கமிட்ட அவருக்கோ இது வெறும் இரண்டிலக்க எண் மட்டுமே. மேலும் இலக்கம் குறித்து அகரமுதலிகள் சொல்வதைக் கருத்தில் கொண்டால் அவர் தமிழரின் இசைப்பேரொளி, தமிழர்தம் பண்பாட்டின் குறிப்புத் துலக்கம்.

தமிழரின் அசலான இசை வடிவம் எது? அது இன்று கர்நாடக இசை என்று அழைக்கப் படுகின்ற செவ்வியல் இசைவடிவம் தான். 72-ராகங்கள் (பண்கள்), 7-தாளங்கள், 7-ஸ்வரங்கள் என்று அனைத்துக்குமே தமிழ் மூலங்கள் இருக்கின்றன (ஸ, ரி, க, ம, ப, த, நி-குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்). ஆபிரகாம் பண்டிதர் தொடங்கி மம்மது வரை பல இசை ஆய்வாளர்கள் இதை உறுதிபடுத்தியுள்ளனர். இந்தச் செவ்வியல் இசையோடு, நாட்டார் இசையையும் குழைத்து உலகளாவிய நவீனத் தன்மையுடன் வழங்கியவர் இளையராஜா.

நமது மொழியே ஓர் இசைமொழி. தமிழ்ப்பா (கவிதை) க்களில் இசையென்பது உடனுறையும் அம்சம். இலக்கணங்கள் சொல்லும் குறிலும் நெடிலும், தளையும் சீரும், எதுகையும் மோனையும், பா-வகைகளும் இசைதான். பாடும் வகையிலேயே புலவர் எழுதினர். சொல்லின் ஒலிப்பை அளப்பதற்கே மாத்திரை என்ற அலகை வைத்தனர் நம் மொழியிலக்கணத் தந்தையர். இசையைத் தன் வாழ்க்கையாகக் கொண்டிலங்கிய பாணர் மரபு நமக்குண்டு. பண்-ணிலிருந்து பாணர் வருகின்றனர். தேவாரம், திருவாசகம், பிரபந்தம் உள்ளிட்ட பக்தியிலக்கியங்கள் பாடப்படுபவை.

அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, தியாகராசர், சியாமா சாத்திரி, முத்துசாமி தீட்சிதர் தொடங்கிப் பல இசைஞர்களின் பாடல்களும் தொகுப்புகளும் தமிழகத்தில் ஏராளம் உண்டு. ஆனால் துறையறிவு மிக்கோரைத் தவிர்த்து இவையெதுவும் பெரும்பாலான மக்களைப்போய்ச் சேர்வதில்லை. இங்கு இசையென்றால் அது திரையிசை தான். மக்களுக்கு நன்கு அறிமுகமானது திரையிசை மட்டுமே. அதுவும் ஒரு நாயகனுக்கும், ஒரு படத்துக்கும் என்ன தேவைப்படுகிறதோ அதை மட்டுமே வழங்கிய திரையிசை. யாருக்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே இசையாக வழங்கிக் கொண்டிருந்த திரையிசை. இளையராஜா அவர்களே இந்தச் சட்டகங்களை முதன் முதலில் மீறியவர்.


இசைப்பேரறிஞர்கள் வரிசையில் நவீனத்தமிழ் இசையின் முதல்வராக வைக்கப்பட வேண்டிய அவர்தான் அந்தச் சட்டகத்துள் இருந்துகொண்டே சுதந்திரமான இசையை வழங்கினார். தமிழ்ச் செவ்வியலிசையையும், நாட்டார் மரபிசையையும், உலகளாவிய நவீன இசைப்போக்குகளையும் தன்னுடைய கற்பனை வளம்மிக்க பாடல்களினூடே மக்களுக்குக் கொடுத்தார். தென்னகத்தின் நுண்கிராமங்களுக் குள்ளெல்லாம் இசைப் பேரலையாய் நுழைந்தார். அவர் வருகைக்குப் பின்னரே மக்கள் இசையை முழுமையாகவும் கொண்டாட்டத்துடனும் துய்க்கத் தொடங்கினர். தமிழர்தம் வாழ்வில் இளையராஜா அவர்கள் துணிக்க முடியாததோர் அங்கமாகிய மாயம் இந்தப் புள்ளியிலிருந்தே தொடங்கியது.

இந்த இடத்தில் அவருடைய தொடக்கக்காலப் பாடல்களில் ஒன்றான, ஓர் இசைஞனின் தன்னிலை மதிப்பீட்டை சொல்கின்ற வகையில் உருவாக்கப்பட்ட ‘மடைதிறந்து தாவும் நதியலை நான்’ பாடலை நினைவுபடுத்திக் கொள்ளலாம். அப்பாடலின் ஒவ்வொரு வரியும் அப்பட்டமான உண்மை.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1


இளையராஜா அவர்கள் அறிமுகமாகிய எழுபதுகளின் இடைக்காலம் மிகவும் முக்கியமானது. கருப்பு வெள்ளையிலிருந்து திரை வண்ணத்துக்கு மாறுகிறது. ஸ்டுடியோக்களிலிருந்த காமிராக்கள் வெளியிலிருக்கும் அகன்ற நிலப்பரப்புகளை நோக்கி நகர்கின்றன. பழைய நடிகர்களின் முகங்களின்மேல் துடிப்புமிக்க இளைஞர்களின் முகங்களைக் கொண்ட போஸ்டர்கள் படிகின்றன. புதுப்புது இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் வருகிறார்கள். இரண்டாயிரம் வரைக்குமே கூட இந்தப் புதுக்காலம் தான். தொழில்நுட்ப மலர்ச்சியின் காலம். இந்தச்சூழல் இளையராஜா அவர்களின் இசைமேதமைக்குச் சுதந்திரத்தையும் நல்வாய்ப்பையும் வழங்கியது. சிறகுகளைப் பூட்டியது என்றே சொல்லலாம். மரபையும், மரபை மீறிய நவீனத்தையும் ஒருசேரக் கற்றிருந்த இளையராஜா அவர்களின் பெருந்திறன் அந்த மாகலைஞனை காலத்தோடு உறையச் செய்துவிட்டது.

எனக்குள் ராஜா</strong>

நான் பாடும் பாடல்-திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சீர் கொண்டு வா வெண்மேகமே’ பாடலை நாள்முழுக்க திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்ததாக கவிதைத்தோழி ஒருவர் ஒருமுறை என்னிடம் சொன்னார். நம்பாமல் அவரை நோக்கினேன். உற்சாகமும் பரிமளமும் மின்னிய அந்த நேரத்து அவரின் கண்கள் அவர் இயம்பியது பொய்யில்லை என்றன. அறைக்குள் இருந்த ஹோம்-தியேட்டரில், வாகனத்தில் இருந்த டால்பி-செட்டில், நடக்கும்போது கையடக்க சோனி டேப்-ரெக்கார்டரில் இப்படித் தொடர்ந்து அவர் அந்தப்பாடலைக் கேட்டுக்கொண்டே யிருந்திருக்கிறார்.

இளையராஜா அவர்களை வியந்தும் விரும்பியும் கேட்கின்ற ஒவ்வொருவருக்கும் அவர் இசையுடன் தன்னைத் தொடர்புப்படுத்திக் கொள்ளும் அந்தரங்கத் தருணமொன்று இப்படி இருக்கும். அப்படி எனக்கும் ஒன்றுண்டு. எனக்குள் இளையராஜா அவர்கள் பதிந்தது பத்து வயதில் இருக்கலாம். இன்னும் கூட ஒன்றிரண்டு வயது குறைவாகவும் இருக்கக்கூடும். அது எழுபதுகளின் இறுதியாண்டுகள்.
ஊரில் அரிதாகச் சில கல்யாணங்களிலும், திருவிழாக்களிலும் மரத்தில் கட்டப்பட்ட புனல் ரேடியோக்களிலிருந்து அவருடைய பாடல்கள் கேட்கும். எங்கே புனல் கட்டினாலும் மச்சானைப் பாத்தீங்களா தான் முதல் பாட்டு. அதுவும் அந்த லலி லாலி லலோ…….தொடக்கம் இருக்கிறதே அது பரவசமூட்டுகிற மிருது! உணர்வெழுச்சி மிக்க ஆரோசையோடு அன்னக்கிளி உன்னத்தேடுதே. மனதைப் பிழியும், சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை. பிறகு, வாராயோ தோழி வாராயோவை நகர்த்தி வைத்த, சுத்தச் சம்பா பச்சரிச்சி குத்தத்தான் வேணும்!

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

வாகனச் சத்தங்களோ, தொழிற்சாலை இறைச்சல்களோ, மனிதநெருக்கமோ இல்லாத அந்தக் காலங்களில் எங்கள் கிராமங்களைப் போர்த்தியிருக்கும் மௌனத் துப்பட்டியை விலக்கிக் கொண்டு அலையலையாக அவரின் பாடல்கள் வந்து காதுகளில் விழும். அதுவும், காற்றின் வீசலுக்கு ஏற்ப. பாடலின் குரலும், கருவிகளின் இசையலைகளும் நெருக்கமாகவோ, நெகிழ்ந்தோ. சில சமயங்களில் எங்கள் கிழக்குத் தொடர்ச்சி மலைக்குன்றுகள் அவரின் பாடல்களைப் பின்பாட்டுப்பாடி எதிரொலிக்கும். இசைக்குள்ளேயே வாழ்ந்திருப்பதைப் போன்றதொரு உணர்வு அது.

அப்போதெல்லாம் சமையலுக்கு விறகு சேகரிப்பது பெரிய வேலை. வீட்டு வேலைகளைப் பார்த்தவாறே பீடியிலைகளை வெட்டிக் கொண்டிருக்கும் அம்மாவால் விறகுக்கெல்லாம் போக முடியாது. எப்போதாவது அப்பா காட்டுக்குப் போய் கொண்டு வருவார். காசிருந்தால் விறகுச்சுமை வாங்குவார்கள். இல்லையென்றால் நிலங்களுக்குப் போய் காய்ந்தத் தேங்காய்கூடுகள், சிரட்டைகள், மட்டைகள், சுள்ளிகள், கரும்பு வேர்கள் என தேடிக் கொண்டு வரவேண்டும்.

என்னுடைய அத்தையின் குடும்பம் ஒரு நிலத்தை குத்தகைக்கு உழுது கொண்டிருந்தது. தென்னந்தோப்பும், மாந்தோப்பும், நெல்வயலும், கரும்புத் தோட்டமுமாய் இருக்கும் பெரிய நிலம். அந்த நிலத்தின் மேற்புற வேலியருகில் விண்கல் விழுந்ததற்கு ஒப்ப பெரும் பள்ளம் ஒன்றுண்டு. ஒரு நாள் மாலையில் அந்தப் பள்ளத்தில் இறங்கி காய்ந்தத் தேங்காய்ப் புருடைகளை தேடிக்கொண்டிருக்கிறேன். மாலையின் பொன்னிறக் கதிர்கள் அந்தப் பள்ளத்தை நிரப்புகின்றன. எங்கிருந்தோ காற்று, ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை…’ என்ற பாடலுடன் வந்து அருகில் வீசுகிறது. இது எங்கிருந்து கேட்கிறது என்று நிமிர்ந்த நான் பாடல் முடியும் வரையில் அப்படியே நின்றிருக்கிறேன். தெள்ளிய நீல வானம். எதிரே கங்காசர மலைக்குன்று. அதன் அடிவாரத்தில் பாயும் காட்டாற்றைக் கடந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பறவைகள். உடன் இளையராஜா!

அது எந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல், யார் பாடியது, யார் இசையமைத்தது எதுவும் அந்தத் தருணத்தில் தெரியாது. அப்போது எனக்கது அடையாளங்களற்ற ஒரு பாடல். ஒருசில நாட்களுக்குப் பிறகு வீட்டில் பீடியிலைகளைச் சீவிக் கொண்டே வானொலிப் பெட்டியில் அப்பாடலைக் கேட்கையில் விவரங்களைத் தெரிந்துக் கொண்டேன். திரைப்படம் பத்ரகாளி. இசை இளையராஜா. பாடல் வாலி. குரல்கள் சுசிலாவும், கே.ஜே.ஜேசுதாசும். அம்மா, கூடுதலாக ஒரு தகவலைச் சொன்னார். அப்படத்தின் எதிர்நாயகன் பச்சையப்பன் கல்லூரியில் என் மாமாவுக்கு வகுப்புத் தோழன் என்று. அந்தப் பாடலைக் கேட்கிறபோது, இப்போதும் அந்த முதல் செவிமடுப்புச் சூழலின் காட்சி எனக்குள் வந்து பெரும் சிலாகிப்பை உண்டுபண்ணுகிறது. இளையராஜா அவர்கள் இப்படித்தான் முதன்முதலில் என்னுள்ளே பதிந்தார். அவரின் பெரும்பாலான பாடல்களுக்கும் இப்படியொரு செவிமடுப்புச் சூழலை சொல்ல முடியும்.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

ராஜபித்து

ஊரில் பீடி வேலை செய்கின்றவர்கள் அதிகம். ஒரே இடத்தில் நிறையபேர் அமர்ந்து பீடி சுற்றுகிற இடங்களிலெல்லாம் (பீடி மண்டிகள்) ஒலிப்பெட்டியை வைத்து ஏராளமான பாடல்களையும், ஒலிச்சித்திரங்களையும் ஒலிக்க விடுவார்கள். எங்கள் கிராமத்துக்கு பக்கத்து ஊரான சாத்கரிலும், பேரணாம்பட்டு டவுனிலும் இந்திப்பாடல்களும் சேர்ந்து ஒலிக்கும். இவற்றுடன், தமிழ்த் திரைப்படங்கள் பாடத்தொடங்கிய காலத்துப் பாடல்களிலிருந்து பலவற்றையும் வானொலிப் பெட்டியின் உதவியால் கேட்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பாட்டி வீட்டில் படித்தபோது மாமாக்களின் குரல் வழியாக சி. எஸ். ஜெயராமன் தொடங்கி மலேசியா வாசுதேவன் வரை நிறைய பாடல்கள்.

பாபநாசம் சிவன், ஜி. ராமநாதன், எஸ். எம். சுப்பையா (நாயுடு), ஏ. எம். ராஜா, கே. வி. மகாதேவன், எம். எஸ். விஸ்வநாதன், சலீல் சௌத்திரி, நௌஷாத், ஆர்.டி. பர்மன், ஜி.கே. வெங்கடேஷ் என்று தேர்ந்தெடுத்த இசையமைப்பாளர்களின் பாடல்களை நான் தவறவிட்டதேயில்லை. தேர்ந்தெடுத்த சில பாடல்களுக்காக சங்கர்-கணேஷ், டி. ராஜேந்தர், தேவேந்திரன், தேவா, அம்சலேகா, வித்யாசாகர், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என்று இன்னொரு தனிப்பட்டியலும் உண்டு! இவர்களில் எனக்கு எப்போதுமே இளையராஜா அவர்கள் விசேஷம்.

இதற்கு ஒரு காரணம் நான் அவருடைய இசையுடனேயே வளர்ந்தேன் என்பது. எழுபதுகளின் இடையில் தொடங்கி, எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில் உச்சம் தொட்டு, இரண்டாயிரத்தில் நிலைபெற்றுவிட்ட இளையராஜா அவர்களின் இசையுடனேயே என் பால்யகாலமும், இளமைப்பருவமும் கடந்தது. அவர் என்னுடனேயே வந்து கொண்டிருந்தார். இசையென்றால் இளையராஜா என்ற ஆழ்ந்த எண்ணப்பதிவு அப்போது உருவாகியது. இந்த எண்ணம் மெல்ல மெல்ல தீவிரப்பற்றாக என்னுள் உருமாறியதற்கு மற்றொரு காரணம், நுணுக்கங்களும் அழகியலும் நிறைந்த அவருடைய புத்திசை!

அவருடையப் பாடல்களைக் கேட்பதற்கென்று சில எளிய வாய்ப்புகள் எனக்கு அப்போது கிட்டின. ஊரில் ஒரு தியேட்டரும் (மெத்த கொட்டாய்!), நான்கு டெண்டு கொட்டாய்களும் இருக்கும். எப்படியும் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களைப் பார்ப்பதுண்டு. போஸ்டரில் அவர் பெயரைப் பார்த்தாலேயே யார் நடித்தப் படமாக இருந்தாலும் போய்விடுவேன். சில படங்களை அவரின் இசைக்காகவே பலதடவை பார்த்திருக்கிறேன். அப்படிப் போன சிலதடவைகளில் பின்னணி இசையை மட்டும் கேட்க கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந் திருக்கிறேன். இசை விருப்பம் கொண்ட சில நண்பர்கள் எனக்கு இருந்தனர். அவர்களின் வீடுகளுக்கு இளையராஜாவின் இசையில் புதிதாக வெளியான பாடல்களைக் கேட்பதற்காகவே போவது வழக்கம்.

குறிப்பாக மார்ட்டின்-மைக்கேல்-மார்க் எனும் ’3எம்’ சகோதரர்களின் வீடு! இவர்களுடைய தாத்தா வெள்ளை மிஷினரிகளிடம் பட்லர் என்பதால் உலக இசைத் தொகுப்புகள் பலவும் அவர்களின் வீட்டில் ஒலிக்கும். பீத்தோவன், பாப், ராப், மைக்கல் ஜாக்சன், பீட்டில்ஸ், மார்லி, காலேத் என. இவர்களோடு இளையராஜாவும் இருப்பார்! அங்குதான் ’ஹவ் டு நேம் இட்’ ’நத்திங் பட் விண்ட்’ தொகுப்புகளைக் கேட்டேன்.

திரைப்படப் பாட்டுப் புத்தகங்களைச் சேகரித்தது, பத்திரிகைகளில் வரும் அவரைப் பற்றிய சிறுதுணுக்குச் செய்திகள் ஒன்றையும் விடாமல் வெட்டி ஆல்பத்தில் ஒட்டிவைத்தது, அவரின் சிம்பொனிக்காக வாழ்த்துக் கவிதையெழுதி நோட்டீஸ் அடித்து வினியோகித்தது, அவரின் ’வெட்ட வெளியில் கொட்டிக்கிடக்குது’ நூலையும், வாழ்க்கை வரலாற்று நூலையும் வாங்குவதற்காக சென்னைக்குச் சென்று அலைந்தது, அவரைப் பற்றிய எதிர்கருத்துகளைச் சொல்கிறவர்களிடத்தில் சண்டைபோட்டது, இப்படி என் தீவிர பற்றுத்தன்மையின் பரிமாணங்களை எடுத்துரைத்திட தனிக்கதைகள் பல உண்டு! விரும்புகின்ற சிலவற்றுக்கு காரணங்கள் இருப்பதில்லை. காரண காரியம் அற்றவை என்று எல்லார் வாழ்க்கையில் சில உண்டு. எனக்கு இளையராஜா அப்படிதான்!

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

என் மொழியில் நான் கேட்பவற்றுள் இளையராஜா மிகவும் தனித்துவமும், மேதமையும், கற்பனை வளமும் கொண்டவராகத் தோன்றினார். என் இசையார்வத்தை ஆற்றுப்படுத்துகிறதாக செவ்வியல் இசையும், அதன் தெளிந்த வடிவமான மெல்லிசையுமே இருந்தன. இந்த இருவகைமைகளிலும் இளையராஜா ஒரு பேருரு. என் ரசிப்பின் உச்சம் எப்போதுமே அழுகை தான். எவ்வளவு கட்டுப்படுத்திக் கொண்டாலும் உயிரை உருக்கும் ஒரு பாட்டைக் கேட்கிறபோது கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலுவதில்லை. இளையராஜா அவர்களின் இசையே அதிகளவில் மனதைக் கரைத்து என் கண்ணீரைப் பெருகச் செய்திருக்கிறது. மனதைக் கழுவியிருக்கிறது.

ஆறு சுவைதான். வகை வகையான உணவுகள். ஏழு நிறம் தான். வகை வகையான வண்ணங்கள். இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகள் தான். வகை வகையான சொற்கள். ஏழு ஸ்வரங்கள் தான். வகை வகையானப் பாடல்கள். ஆனால் எல்லைகளுள் இருந்து கொண்டே, எல்லாவற்றையும் கடக்கும் மனிதக் கற்பனைக்கோர் எல்லையில்லை என்பதை நான் இளையராஜா அவர்களிடத்தில் உணர்கிறேன். எத்தனையெத்தனைப் பாடல்கள். எத்தனையெத்தனை பின்னணி இசைக்கோர்ப்புகள். அவருடைய எல்லா பாடல்களுமே இன்று இணையத்தில் கிடைக்கின்றன. பின்னணி இசைக்கோர்ப்புகள் பொருள் வாரியாய் பிரிக்கப்பட்டும் இருக்கின்றன. ஒவ்வொன்றாய் கேட்கக் கேட்க மலைக்கிறது. ஒவ்வொரு முறையும் புதிதாகவே ஒலிக்கிறது. அவர் பெரும் மேதை மட்டுமல்ல. அவர் ஒரு சகாப்தமும் கூட.

இளையராஜாவின் மேதமை

இசை என்பது ஒரு புரிதல் முறைமை, வாழ்வின் இருப்பையும் அதிலிருந்து மீண்டெழும் மனவெழுச்சி வெளிகளையும் இசை வழியான புரிதல் முன்னெடுக்கின்றது. இந்நிலையில் ஒருவரின் பட்டறிவோடு இணைந்த தாய்மொழியை நிராகரித்து இசைவழியான புரிதலை முன்னெடுக்க முடியாது. என்கிறார் முனைவர். சபா. ஜெயராசா, ‘இசையும் சமூகமும்’ என்கிற தன்னுடைய நூலில். பிறமொழி இசையின் தாக்கத்தை முற்றாக ஒழித்து, தமிழ்மொழியில் பெரும் நுட்பங்களை உள்ளடக்கிய பாடல்களை கேட்கத்தந்தது இளையராஜா என்ற நுற்பவினைஞர் செய்திட்ட அசுரச்சாதனை. மொழியை இசையிலிருந்து பிரித்தல் என்பது, சமூகத்தை இசையிலிருந்து பிரித்தல் என்று மதிப்பிடப்படுகிறது. இதைத் தன் இசையால் சீர்செய்து தமிழையும், சமூகத்தையும் தனது இசையால் இணைத்தவர் இளையராஜா.

அவரின் இசையில் செவ்வியல், மென்மை, கதைக்கூறு வடிவம், தன்போக்கில் உலவும் சுதந்திரம் அல்லது சஞ்சாரம், புதிர்த்தன்மை, கலவை அல்லது பியூஷன், நாட்டுப்புறத் தன்மை, நுட்பம், துடிப்பு, புதுமை ஆகிய பத்துவகையான குணாம்சங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன். இவை ஒவ்வொன்றைக் குறித்தும் மிக விரிவாக எழுதுவதற்கு அவரின் இசைக்குள் ஏராளமான தரவுகள் கொட்டிக் கிடக்கின்றன. தமிழில் ஏற்கெனவே சிலர் தங்களின் பார்வைக் கோணத்தில் அவருடைய இசையைக் குறித்து இவ்விதமாக எழுதியுமுள்ளனர். ஓர் இசைக் கலைஞர் என்ற வகையில் தமிழில் அவரைப் பற்றித்தான் அதிக நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இன்னும் எழுதப்பட வேண்டும். மிகக்குறிப்பாக ஆங்கிலத்தில் மிகவும் விரிவாக எழுதப்படவேண்டும் என்பது என் விருப்பம்.

மெலடி, பாலிபோனி, ஹார்மனி என இசை மூன்று வகைப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட கீழைத்தேய நாடுகளில் மெலடியே அதிகளவில் பயிலவும் பாடவும் படுகிறது. ஒற்றை சுரங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ச்சியாக ஒரு முறையை அனுசரித்து வருவதே மெலடி. இது ஒருமுறையைத் தழுவியது. இதில் நம்முடைய கர்நாடக சங்கீதம் அடங்குகிறது.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

ஏழு ஸ்வரங்கள், ஏழு தாளங்கள், எழுபத்திரண்டு ராகங்கள் என்ற வரையறையைக் கொண்டது கர்நாடக சங்கீதம். ஏழு தாளங்கள் ஒவ்வொன்றும் ஐந்தைந்தாகப் பிரிந்து 35 தாளங்களாகின்றன. ஏழுஸ்வரங்களில் ச,ப தவிர மற்றவை இரண்டு பிரிவுகளுள்ளவை. எனவே ஸ்வரங்கள் 12 ஆகின்றன. 72 ராகங்களில் மேளராகம், மேளக்கர்த்தா ராகம், கர்த்தா ராகம், தாய் ராகம் என்ற வகைகள் உண்டு. இவ்வாறெல்லாம் சொல்லப்பட்டாலும் இந்த வரையறைகளை மீறாமல் திரும்பத் திரும்ப ஒரே விதமாகப் பாடப்படுபவையே கர்நாடக சங்கீதப் பாடல்கள். கர்நாடக இசையில் இந்த இராகக் கட்டமைப்பே அடிப்படை. தனிச்சுதந்திரம் என்பது வெகு குறைவு.

காலத்துக்கும், மனோநிலைமைகளுக்கும் ஏற்ற ராகப்பகுப்புகள் அதில் உண்டு. இந்த வரையறை களுக்குள்ளேயே புகுந்து பல பரிசோதனை முயற்சிகளை தன் பாடல்களில் செய்திருக்கிறார் இளையராஜா. யூடியூபை திறந்தால், அவர் கர்நாடக சங்கீத ராகங்களை எவ்வாறெல்லாம் வேறுவேறு வகைகளில் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை கர்நாடக சங்கீத விற்பன்னர்களின் வாயாலேயே கேட்க முடியும்.

ஐரோப்பாவிலும், அதன் செல்வாக்கு பரவிய நாடுகளிலும் பாலிபோனி மற்றும் ஹார்மனிகல் என்ற இசைவடிவங்களே செல்வாக்கு செலுத்துகின்றன. பாலிபோனி என்பது பலதொனிகள் கொண்ட இசைவரிகளை ஒரே தருணத்தில் வாசிப்பது. சுரத்தொகுதிகள் அல்லது சுரஅடுக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாய் வருவது ஹார்மனிகல். ஒரு சுரத்தை வாசிக்கும் பொழுதே அதன் இணை சுரங்களும், நட்புசுரங்களும் கூடவே ஹார்மனியில் வாசிக்கப்படும். இளையராஜாவின் இசையில் பாலிபோனி மற்றும் ஹார்மனிக்கல் இசைவடிவங்களின் தாக்கம் மிக அதிகம். ஒற்றைப் பாடலிலேயே அவர் வெவ்வேறு ஒலிநிலைகளில் எதிரும் புதிருமாகவும், குறுக்கும் நெடுக்குமாகவும் பலவகையான இசைக்கருவிகளைப் பயன்படுத்தியிருப்பார்.

இளையராஜா அவர்களுடைய மிகச்சாதாரணமான ஒரு பாடலில் கூட இத்தன்மையை கேட்கலாம். இந்தத் தன்மை என்பது இசை வடிவத்துக்குள்ளேயே ஒற்றைத்தன்மை என்பதை அழித்து சனநாயகத்தன்மையை கொண்டுவரும் முயற்சியாகும். இதைப் புரிந்துக் கொள்வதற்கு, பூமாலையே தோள்சேரவா பாடலை இங்கே நினைவுப்படுத்திக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் பல இசைச்சுரங்களைக் கொண்ட ஒருங்கிணைவு உறுப்பு மற்றும் இணையுறுப்பு (Part and Counterpart) ஒலிநிலைகள் அந்தப்பாடல் முழுவதும் ஒன்றையொன்று தொட்டும் தொடாமலும் ஓடிப்பிடித்து விளையாடுகின்றன. இப்படி எண்ணற்ற பாடல்கள்.

இளையராஜா அவர்கள் உள்ளடக்க அளவிலேயே மக்கள் சனநாயகத் தன்மைக் கொண்ட இசையை வழங்கியவர். குறிப்பிட்ட சில இசைக்கருவிகளை குறிப்பிட்ட மக்கள் திரளே கேட்க முடியும், அல்லது குறிப்பிட்ட மக்கள் திரளை குறிப்பிட்ட கருவியிசையைக் கேட்க முடியாதபடி செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தன் இசைக் கோர்ப்பின் மூலமாகத் தகர்த்தவர் அவர். அவர் வகைவகையான இசைக்கருவிகளை தன்னுடைய பாடல்களில் அவற்றின் அதிகபட்ச சாத்தியக்கூறுகளுடன் பயன்படுத்தினார். அக்கருவியின் உயிரை தன் பாடல்களில் பதியவைத்தவர் அவர் என்றால் மிகையில்லை.

அவரின் ஒவ்வொரு பாடலிலும், பின்னணி இசைக்கோர்ப்பிலும் கருவிகளின் பயன்பாடு, மேம்படுத்தல், சின்னச்சின்ன புதுமைகள் என்று நுட்பங்கள் நிறைந்திருப் பதனாலேயே எப்போது கேட்டாலும் அவை புதிதாகத் தெரிகின்றன. ஏழுசுரங்கள் நிற்கும் இடங்களான ஒலிநிலை என்பது மெலிவு (கீழ்ஸ்தாயி), சமன் (மத்தியஸ்தாயி), வலிவு (உச்சஸ்தாயி) என்ற மூன்று ஸ்தாயிகளில் அடங்கும். அவருடைய பாடல்களில் சுதந்திரமும், புதிர்த்தன்மையும் கொண்ட ஸ்தாயி சஞ்சாரங்கள் அதிகம் இருக்கும். மிகக் குறிப்பாக அவருடைய காதல் பாடல்களில் ஆண் பெண் குரல்களுக்கிடையிலான வெவ்வேறு ஸ்தாயிப் பின்னல்களை கொண்ட விளையாட்டே உண்டு.

இளையராஜா அவர்கள் கணிணி வழியே புரோகிராம் செய்யப்பட்ட உலோக இசையை வழங்கியவரல்லர். இசையின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொண்ட புத்திசையை கொடுத்தவர். அவரின் இசை அசலானதும் தனித்தன்மைகளைக் கொண்டதுமான உயிரிசை. இசை என்பது ஒலியளவுகளின் விளையாட்டு. இந்த ஒலியளவுக் கணிதத்தை துல்லியமாக புரிந்துவைத் திருப்பவராக மட்டுமல்லாமல் அதில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவராகவும் இருக்கிறார் இளையராஜா.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

கலைஞர் கருணாநிதி அவர்களிடமிருந்து இசைஞானி என்ற மிகப்பொருத்தமான பட்டத்தைப் பெற்றவர் இளையராஜா. அவர் பெற்ற இன்னொரு பட்டம் இசைச்சித்தர். இந்தப்பட்டமும் மிகப்பொருத்தமானது. இசையுலகில் ஆஹத நாதம், அனாஹத நாதம் என்ற இரு பகுப்புகள் வழங்கப்படுகின்றன. மனிதனுடைய முயற்சியால் உற்பத்தியாக்கப் படுகிறவையான கேட்கும், பாடும், வாசிக்கப்படும் சங்கீதம் ஆஹத நாதம் எனப்படுகிறது. அனாஹத நாதம் என்பது மனிதனுடைய முயற்சியின்றி இயற்கையிலேயே கேட்கப்படும் நாதம் என்று சொல்லப்படுகிறது. இந்த அனாஹத நாதம் யோகிகளாலும், சித்தர்களாலும் மட்டுமே அறியக் கூடியது. ஒரு யோகியாக இருந்து இசையை அறிந்தவர் என்பதால் இசைச்சித்தர் என்பது இளையராஜா அவர்களுக்கு மிகப்பொருத்தமானது என்பேன்.

இளையராஜா அவர்கள் சங்கீதம் என்பதைச் சுற்றிலுமிருந்த ஒளிவட்டத்தை மறுத்து அதை வெறும் ஒலி என்றவர். ஒருமுறை அவர் சென்னை வானொலியில் கொடுத்த பேட்டி இன்னும் என் நினைவில் இருக்கிறது. “வீடுபேறு அடைய நினைக்கும் பக்தன் ஒருவன், ராம நாமம் ஒன்றுதான் உலகில் மேன்மையானது என்ற ஜெபத்தைச் சொல்லிக்கொண்டே தன் வாழ்நாளை அர்ப்பணிக்கிறான். இதைப் பற்றியெல்லாம் எதுவுமே அறியாத எளிய இசைக்கலைஞன் ஒருவன் அதே ஜெபத்தை பிரக்ஞை இன்றியே தன் தோல்க்கருவியில் வாசித்துக் கொண்டிருக்கிறான். இதில் எதை ஞானம் என்பது?” என்று அதில் அவர் கேட்டார்.

தன் மேதமையைக் குறித்து பெருமிதம் கொள்ளாத இளையராஜா அவர்கள், எல்லாவற்றிலுமே தான் எனும் சுயத்தை அழித்துக்கொண்டு வெளியே நிற்பவராக கருதிக்கொள்பவர். சித்தர் மனோநிலையிலிருந்து பேசுபவர். இந்தியச் சமூக புத்தியின்படியே அவர் பேசுவது புரிந்து கொள்ளப்பட்டாலும் கவலைப் படாதவர். இசையைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாட திட்டத்தில் சேர்க்கவேண்டும். இசை இளம் உள்ளங்களை பக்குவப்படுத்தி அமைதியான உலகை உருவாக்கும். வன்முறை இல்லாத சமூகத்தை அமைக்கும் என்று பெரும் மேடைகளில் பேசிவருபவர்.


இளையராஜா அவர்கள் தமிழரின் பெருமிதம். இசையின் அடையாளம். அவர் நமது பீத்தோவன். அவரின் எண்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், தமிழ்ச் சமூகமும், அவர்தம் அரசும் அவருக்கு பெரும் விழா ஒன்றை எடுத்து தன்னையே பெருமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழருக்கு தன்னிடமுள்ள மேதைகளைப் போற்றத் தெரியவில்லை என்ற கறையையும் அவ்வாறே துடைத்துக் கொள்ள வேண்டும்.


*
கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள:
[email protected]

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் தொடர் – 7

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Azhagiya periyavan tamil indian express series part 6