அழகிய பெரியவன்
மதம் அன்பு செய்யும் உந்துசக்தி
‘Man is certainly stark mad, he cannot make a flea, and yet he will be making Gods by dozens’
- M. E. de Montaigne
ஒரு தன்னார்வக் குழுவின் பயிற்சிப் பட்டறையில் பேசுவதற்காக அழைத்திருந்தார்கள். அந்தக் குழுவின் மாநில அளவிலான கருத்தாளர்கள் கலந்து கொள்கிற கூட்டம் அது. மதங்களின் கருத்தியலும் அவை ஏற்படுத்தும் தாக்கங்களும் என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
நான் பேசிக்கொண்டிருக்கும்போதே பாதிபேருக்கு இருப்பு கொள்ளவில்லை. நிலையாமைத் தத்துவங்களை அறிந்திருந்த அவர்களின் இருக்கையில் ஒரு நிலையாமை தெரிந்தது! அரங்கிலிருந்து இருவர் வெளியேறியே விட்டனர். அண்மைக் காலத்தில் உருவாகியிருக்கும் சகிப்பின்மையின் உண்மை நிலையை என்னால் அங்கு கண்கூடாகப் பார்க்க முடிந்தது. என்னுடைய உரைக்குப் பிறகு பல கேள்விகள் எழுப்பப்பட்டன.
ஒரு பெண்மணி கேட்டார்.
“என் வீட்டுக்குள், என் விருப்பத்துக்கு ஏற்ப, நான் வழிபாடு செய்துகொள்கிறேன். எந்தவிதமான பூஜை புனஸ்காரங்களையாவது செய்துகொள்கிறேன். மதம் என்பது முற்றிலும் எனது தனி விருப்பம். அப்படியிருக்க, அதை நான் ஏன் விமர்சிக்க வேண்டும்? அதன் உள் விஷயங்களை நான் எதற்கு பரிசீலிக்க வேண்டும்?”
என் பதிலைவிடவும், அந்தப் பெண்மணி எழுப்பிய கேள்வியில் இருக்கும் தர்க்க நியாயமே போதுமானதாக இருந்ததைப் போல அங்கிருந்த பலபேருடைய முகக்குறிப்புகள் சொல்லின. அவற்றையெல்லாம் கணக்கில் கொண்டே நான் பதில் சொன்னேன்.
“நான்கு சுவர்களுக்குள் செய்யப்படும் வழிபாடுகளாலும், பூசைகளாலும் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இருக்கப் போவதில்லை. அவை பொதுவான மானுட அறத்துக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்பதைத் தவிர. ஆனால், எதுவுமே வீட்டைத் தாண்டி பொதுவெளியில் வந்து கலக்கிற போதுதான் விவாதங்களும் சிக்கல்களும் தொடங்குகின்றன. அந்த நிலையில் ஒவ்வொருவரும் தன்னுடைய மதச்சார்பைப் பற்றியும், மதக்கருத்தியலைப் பற்றியும் கட்டாயம் கவனம் கொள்ள வேண்டியுள்ளது. அக்கறைப்பட வேண்டியுள்ளது. நாம் பின்பற்றும் ஒரு மதக்கருத்தியலால் சக உயிர்கள் மடியும்போதோ, துன்பத்துக்கு உள்ளாகும்போதோ அதைப்பற்றி நாம் எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும்?”
என் கருத்தை சிலர் ஆமோதித்தனர். ஆச்சரியப்படும் வகையில், என் கருத்தை பலப்படுத்தும் விதமாக, சில கேள்விகளும் வந்தன. பொதுவெளியில் மத நடவடிக்கைகளின் எல்லைகள் குறித்தும், நமது மதச்சார்பற்ற சனநாயக அரசின் சில அலுவலகங்களில் ஒரு மதத்தின் கடவுளர் படங்கள் மற்றும் அடையாளங்கள் மட்டும் வைக்கப்படுவதைக் குறித்தும் ஒருவர் கேள்விகளை எழுப்பினார்.
நம்மிடம் நிறைய சட்டங்கள் இருக்கின்றன. அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை செயல்படுத்துகிற இடங்களில் மதப்பிடிமானம் உள்ளவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அண்ணா முதலமைச்சராக இருந்தபோதே தமிழ்நாடு அரசின் அலுவலகங்களில் கடவுளர் படங்களை வைக்கக் கூடாது என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
மதம்
மதம் நிச்சயமாக மனிதனின் கண்டுபிடிப்புதான். கூட்டு வாழ்க்கையை மேற்கொள்கிறவனாக இருந்த ஆதி மனிதன், தான் பயந்ததையும் வியந்ததையும் கடவுளாகவும், புரியாததையும் அறியாததையும் மதமாகவும் நிர்மானித்துக் கொண்டான். இயற்கையையும், ஆட்சியாளர்களையும், வீரர்களையும் வணங்கினான். வீரர்களின் நடுகற்கள் அன்று முதலே வணக்கத்துக் குரியவையாக இருந்து வந்தன. காலப் போக்கில் அவை சிறுதெய்வங்களாகவும், குலசாமிகளாகவும் மாற்றப்பட்டுவிட்டன.
இருபது அல்லது இருபத்தைந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியதாக உறுதிபடுத்தப்படுகின்ற மனித இனத்தின் நெடும்பயணத்தில் மதங்களின் வயது வெறும் ஐந்தாயிரம் ஆண்டுகள் தான்! இதில் மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால் அரசன் - அரசு என்ற கருத்துருவாக்கங்கள் உருவானதன் உடன்போக்காகவே மதங்களும் உருவாகியிருக்கின்றன. வரலாற்றின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் அரசியலோடு பிணைந்திருக்காத மதமென்று ஒன்று இல்லவே இல்லை.
மதம் என்றால் அறிவு, சமயம் என்றால் உடன்படிக்கை, மார்க்கம் என்றால் வழி, நெறி என்றால் வாழும் நெறிமுறை அல்லது நீதிமுறை என்றெல்லாம் பிற்காலத்தில் மதங்களுக்கு புதுப்பொருளை ஏற்றி, அவற்றை மென்மையாக்கும் அறிவார்ந்த செயல்பாடுகள் நடந்தன. மதத்தை தனிமனித ஒழுக்கநெறியாக மாற்றி, சக மனிதனை அன்புசெய்கிற உந்து சக்தியாக ஞானிகளும், தத்துவவாதிகளும் வடிவமைத்தனர்.
அரசுக்கும் மதத்துக்கும் இடையிலான ஒட்டுபசையை சுரண்டியெடுத்துவிட்டு, அதை சனநாயகப்படுத்துகிற முயற்சிகள் நடந்தபோதெல்லாம் அதிகாரத்திலிருப்பவர்கள் அதைத் தடுத்து, அந்தப் பிணைப்பை மேலும் கெட்டிப்படுத்த முயன்றனர். இந்த முயற்சியில் அதிகார பீடங்களின் துணையோடு மதங்களே ஒன்றையொன்று எதிர்த்துக் கொண்டன. பிற மதத்தவரை அழிக்கின்ற வேலையில் ஈடுபடத் தொடங்கின. இந்தியாவில் இப்போது இதுவே நடக்கிறது.
ஓர் எளிய மனிதனின் நம்பிக்கையே மதம் என்ற நிலையைக் கடந்து, ஓர் எளிய மனிதனை நம்பவைப்பதே மதம் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
மதச்சகிப்பின்மை
இந்தியாவில் மதச்சகிப்பின்மையின் நிலை முற்றிலுமாக மாறிவிட்டதோ என்று அச்சப்படுகிற அளவுக்கு தற்போதைய சமூகச் சூழல்கள் மாறிவருகின்றன. கருத்தியல் தெளிவு மிக்க அரசியல் நண்பர்களையும், சமூக ஆர்வலர்களையும், கலை இலக்கியவாதிகளையும் சந்திக்கிற தருணங்களில் அவர்கள் என்னிடம் எழுப்பும் கேள்விகளில் ஒன்றாகவும், வெளிப்படுத்தும் கவலைகளில் ஒன்றாகவும் ‘மதவெறி அல்லது மதச்சகிப்பின்மை’ இருக்கிறது.
அன்றாடம் ஏறும் பெட்ரோல் விலைக்குக் கவலைப்படுவதைப் போல, அன்றாடம் உயரும் விலைவாசிக்குக் கவலைப்படுவதைப் போல, கேஸ்சிலிண்டர், மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு அன்றாடம் கவலைப்படுவதைப் போல, இனி மதச்சகிப்பின்மைக்கும் அன்றாடம் கவலைப்பட வேண்டுமோ என்ற நிலை இந்தியாவில் உருவானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
மதச்சகிப்பின்மை வெறுப்பிலிருந்து உருவாகிறது. மதச்சகிப்பின்மையால் வன்முறைகள் நிகழ்கின்றன. இந்தியாவில் இந்துமத அரசர்களாலும், இஸ்லாம் அரசர்களாலும் அதிகளவுக்கு வன்முறைக் குள்ளாக்கப்பட்ட மதங்கள் பௌத்தமும் சமணமும் தான். பௌத்த துறவிகளும், சமணத்துறவிகளும் கொல்லப்பட்டார்கள். அவர்களின் கல்விநிலையங்கள் சூறையாடப்பட்டன. அம்மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் மாற்றப்பட்டன. மதுரைக்கு அருகில் எண்ணாயிரம் சமணர்களை கழுவேற்றிய வரலாறு தமிழ்நாட்டில் உண்டு. பௌத்தம் மற்றும் சமணத்துக்கு அடுத்து இந்தியாவில் பெரிதும் பாதிக்கப்பட்ட மதங்கள் இஸ்லாமும், கிறித்தவமும் தான்.
சுதந்திரத்துக்குப் பிறகு இவையெல்லாம் முடிவுக்கு வந்துவிடும் என்று மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், அப்படியெல்லாம் எதுவும் நடந்துவிடவில்லை. 1947 தொடங்கி நூற்றுக்கணக்கான மதக் கலவரங்கள் இங்கே நடந்துள்ளன. 1946ல் தொடங்கிய நவகாளி கலவரங்கள், நாடு பிரிவினையின்போது நடந்த மதவன்முறைகள், 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரங்கள், பாகல்பூர் மற்றும் மும்பைக் கலவரங்கள். இவற்றிலெல்லாம் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேலே. இக்கலவரங்களின் உச்சம், 2002ல் நடந்த குஜராத் கலவரம்.
இந்துமத பெரும்பான்மைவாத கருத்தியலுடன் இந்திய ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு இந்த மதவெறுப்பும், மத வன்முறைகளும் அதிகரித்திருப்பதாக அறிக்கைகளும், செய்திகளும் சொல்கின்றன. 2016 தொடங்கி 2022 வரை இந்தியாவில், அதிலும் குறிப்பாக வட இந்தியாவில், 3400 மதக்கலவரங்கள் நடந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
மதவெறுப்பு
மதவெறுப்பு இன்று இந்தியாவின் தேசியப் பிரச்சினைகளில் ஒன்று. மனிதரிடையே மதவெறுப்பு இயல்பாகவே உருவாகிவிடுவதில்லை. அது திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது. அதிகாரமும், அறியாமையும் அதன் வளர்ச்சிக்குத் துணை போகின்றன. பிறமதங்களைக் குறித்த பொய்களும் அரைகுறை உண்மைகளும், கட்டுக்கதைகளும் தான் மதவெறுப்பின் அடிப்படை. தோற்றத்தை வைத்தும், பெயரை வைத்துமே ஒருவர் அடித்துக் கொல்லப்படலாம் என்ற அளவுக்கு சில வட இந்திய மாநிலங்களில் மத வெறுப்பு வேரோடியிருக்கிறது.
இந்த மதவெறுப்புப் பேச்சுகள் என்ன விளைவுகளை உருவாக்கும் என்பதற்கான மிக அண்மை உதாரணங்கள் பாஜக அரசியல்வாதிகளான நுபுர் சர்மாவும், நவீன் ஜிண்டாலும் தான். நபிகள் நாயகம் அவர்களைக் குறித்து இவர்கள் சொன்ன கருத்துகளின் தொடர்ச்சியாக வடஇந்திய மாநிலங்களில் பதற்றமும், மரணங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால், இந்தியா உலக அளவில் பெரும் தலைகுனிவை சந்தித்திருக்கிறது.
உலகமெங்கும் உள்ள இஸ்லாம் நாடுகளெல்லாம் இந்தியாவைக் கண்டித்திருக்கின்றன. பலநாடுகளில் இந்தியப் பொருட்களைப் புறக்கணிக்கச் சொல்லி ஆர்ப்பாட்டங்களும் நடந்திருக்கின்றன. அண்டை நாடுகளுடனான சுமுக உறவை இழப்பதுடன், பொருளாதார இழப்பையும் சந்திக்கிற சூழ்நிலைக்கு இதனால் இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
தேசிய குற்றப்புலனாய்வு புள்ளிவிவரங்கள், பசுவை முன்வைத்து அதிகரித்துவரும் கும்பல் கொலைகளைப் போல, மதவெறுப்புப் பேச்சுகளும், மதவெறுப்புக் குற்றங்களும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றன. இந்த மதவெறுப்பால் அதிகம் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்களும் (73.3%), கிறித்தவர்களுமே (26.7%). சாதிய நோக்கிலான வன்கொடுமைத் தடுப்புச்சட்டங்களைப் போல, இந்திய அளவில் மதவெறுப்புக் குற்றங்களைத் தடுப்பதற்குரிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று கேட்கிற அளவுக்கு இவை அதிகரித்துவிட்டன.
மதவெறுப்பு எப்படி வளர்கிறது என்பதை அறியவேண்டுமானால், அந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களின் பின்னணிகளையே திரும்பிப் பார்க்கலாம். மதச்சார்பின்மையைப் பேசுகிறவர்களுக்கு எதிராகவும், மாற்று மதத்தினருக்கு எதிராகவும் இந்த நபர்கள் வன்முறையில் ஈடுபட்டதால்தான் அவர்களுக்கு அரசியல் பொறுப்புகளே வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதிகார வெறியிலிருப்போர், குற்றமாக எண்ணவேண்டிய ஒரு செயலை, அரசியல் அங்கீகாரமாக மாற்றி வைத்திருக்கின்றனர்.
மதவெறுப்பை பரப்புவதில் அதிகாரப் பீடங்களுக்கு அடுத்து ஊடகங்கள் முன்நிற்கின்றன. அண்மையில் நடந்த டெல்லி கலவரங்களில் சில ஊடகவியலாளர்கள் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும். முகத்தை மறைத்துக்கொண்டு ஆதாரமற்ற செய்திகளை வரலாறுகள் என்று பரப்புவதில் ஒரு பெருங்கூட்டமே இன்று சமூக ஊடகங்களில் ஈடுபட்டுவருகிறது. இவர்களுடைய முதல் இலக்கு, வாசிப்புப் பழக்கமே இல்லாத, கைப்பேசிக்கு அடிமையானவர்கள் தான்.
கலை இலக்கிய வடிவங்கள் வழியாக வளர்க்கப்படும் மதவெறுப்பு மிகவும் மோசமானது. போலியான அறிவு வாதத்தோடும், தேவையற்ற உணர்வெழுச்சியோடும் இந்தவகை மதவெறுப்பு வெளிப்படுவதால் இதன் விளைவுகள் நீடித்ததாகவும், ஆபத்தானதாகவும் இருக்கின்றன. மாற்றுச் சிந்தனையை வழங்குகின்ற திரைப்படங்கள் எப்போதாவது ஒன்றிரண்டு அரிதாக வந்தாலும், ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகி, இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்ற கருத்தை வலுவாகக் கட்டமைத்துவிடுகிறது.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
கல்வி நிலையங்களையும், பாடதிட்டங்களையும் கூட இந்த மத வெறுப்புக் கருவிகளில் கட்டாயமாகச் சேர்க்கவேண்டும். இவை மென்மையாதும் மறைமுகமானதுமான பங்கை ஆற்றுகின்றன. பாடநூல்களில் வரும் கருத்துகளும் வழங்கப்படும் முறையும் நிச்சயம் மதச்சார்பின்மைக்கு ஏற்றதாக இல்லை. தற்போதுள்ள 1 முதல் 8 வகுப்பு வரையிலான பாடநூல்களில் குணங்குடி மஸ்தான் சாகிபு, அப்துல் கலாம், ஈத் பண்டிகை, ஒன்றிரண்டு மசூதிகளின் படங்கள், சில முஸ்லிம் பெயர்கள், இஸ்லாமியர் ஒருவர் தன்னுடைய கடையில் பொருட்களை விற்பது போன்ற ஓவியம், சில இஸ்லாம் மன்னர்களின் வரலாறுகள் ஆகியவற்றை பார்க்க முடிகிறது. ஒப்பீட்டளவில் பார்த்தால் இது மிகவும் குறைவு. கிறித்தவத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறவை இவ்வளவு கூட இல்லை. பிறமதங்களும், அந்த மதங்களைப் பின்பற்றுகிற மனிதர்களும் சமமானவர்கள் என்கிற மிக இயல்பான சிந்தனை ஆழமாகப்பதிவதற்கு பாடநூல்களில் அதிகளவிலான மதச்சமத்துவ மாற்றங்கள் தேவை.
மதவெறிக்கு எதிராக தமிழ்நாடு எப்போதுமே உறுதியாக நின்றிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் இனியும் அப்படித்தான் நிற்பார்கள். 1982 ஆம் ஆண்டு நடந்த மண்டைக்காடு கலவரம், 1997-1998 ஆண்டுகளில் நடந்த கோவைக் கலவரங்கள் தவிர தமிழகத்தில் வேறு ஒன்றையும் பெரிதாக சொல்ல முடியாது. இதற்குக் காரணம் உறுதியான அரச நடவடிக்கை மட்டுமல்ல. மக்களின் முதிர்ந்த மனநிலையும் தான்.
ஆனால், இந்த உறுதித்தன்மையை தளரச்செய்வதற்குரிய வேலைகளை சிலர் இங்கேயும் செய்துவருகிறார்கள். அவர்களுக்கு இந்த உறுதித்தன்மை பிடிக்கவில்லை. இதைக் குலைக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் திரைமறைவில் செய்யும் வேலைகளால் மத வெறுப்புப் பேச்சை தொலைக்காட்சி விவாதங்கள் தொடங்கி டீக்கடை பெஞ்சு வரை கேட்க முடிகிறது. அமைதியாக இருந்த வழிபாட்டுமுறைகள் இன்று ஆர்ப்பாட்டமாக மாறிவிட்டன. எங்கு பார்த்தாலும் ஆளுயர கடவுளர் சிலைகள் நிர்மானிக்கப் படுகின்றன. வழிபாட்டுத்தலங்கள் பெருகுகின்றன. வழிபாட்டு நிகழ்ச்சிகளில் மாற்று மதத்தினர் பங்கேற்கக்கூடாது என்று தடுக்கின்றனர். இந்த உண்மையை நாம் புறந்தள்ளத் தேவையில்லை. புறந்தள்ளினால் தமிழ்நாட்டின் தனித்த அடையாளம் இல்லை.
*
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் – 8
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.