*
அழகிய பெரியவன்
*
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் அல்ல உலகம்
*
இந்த நூற்றாண்டு பிளாஸ்டிக் நூற்றாண்டு! பிளாஸ்டிக் இல்லாமல் ஒரு நாளை இப்போது நம்மால் கடத்த முடியாது. பற்தூரி, சோப்பு டப்பா, தண்ணீர் போத்தல், எண்ணெய் போத்தல், சீப்பு, முகப் பூச்சுத்தூள் டப்பா, உணவு டப்பா, தண்ணீர் குழாய், தண்ணீர் கேன், பொருட்களின் உறைகள், மருத்துவ உபகரணங்கள், பைகள், வாளிகள், மின்சாதன பொருட்கள், கூரைஷீட்டுகள், செயற்கை தோல் எனப்படும் ரெக்சின்கள், நாற்காலிகள், சிடி தட்டுகள், நைலான் பொருட்கள், செயற்கையிழை ஆடைகள், போலி கண்ணாடிகள், வாகன பாகங்கள், கணிணி பொருட்கள். இப்படி இன்னும் எத்தனையோ பொருட்கள். எல்லாமே பிளாஸ்டிக்!
பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே உலகம் அதை இன்னும் அதிகமாய் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அல்லது அதை எப்படி ஒழிப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இன்னும் கூடுதலாக, அதை ஒழிக்கலாமா வேண்டாமா என்ற தயக்கமும், அக்கறையின்மையும் நிலவிக் கொண்டிருக்கின்றன.
பிளாஸ்டிக்
பல்வேறுவகையான வீட்டுபயோகப் பொருட்களைச் செய்வதற்கு விலங்கின் கொம்புகள், தந்தங்கள், ஆமையோடு, ரப்பர் போன்றவற்றை தொடக்கத்தில் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக வெப்பப் படுத்தப்படும்போது நெகிழும் தன்மையுடைய விலங்கின் கொம்புகளையும், தந்தங்களையும் சீப்பு, பியானோ கட்டைகள், பில்லியர்ட்ஸ் பந்துகள் போன்ற பொருட்களை செய்வதற்கு அதிகளவில் பயன்படுத்தினர்.
இவற்றுக்கு மாற்றாக ஒருபொருளைத் தயாரிக்க வேண்டும் என மேற்கத்திய நாட்டு அறிவியலாளர்கள் முயன்று வந்தனர். அந்தச் சமயத்தில் அலேக்சாண்டர் பர்க்ஸ் என்பவர், 1862 ஆம் ஆண்டில், செல்லுலோஸ் நைட்ரேட்டும், பருத்தி இழைகளும் கந்தகம் மற்றும் நைட்ரிக் அமிலத்தில் கரைவதையும், அது தாவர எண்ணெயில் கலந்தால் நெகிழும் தன்மையுடைய ஒரு பொருளாக உருவாவதையும் கண்டறிந்தார்.
பின்னர் இந்தப் பொருளை இங்கிலாந்து பர்மிங்ஹாமில் நடந்த ஒரு கண்காட்சியிலும் அவர் பார்வைக்கு வைத்தார். இது தந்தத்துக்கும், ஆமையோட்டுக்கும் மாற்றாகவும், விலை மலிவான பொருளாகவும் இருந்தது. இந்தப் பொருளுக்கு அவர் பர்கிசன் என்ற பெயரில் காப்புரிமை பெற்றிருந்தார்.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி அவரோடு இருந்த டேனியல் ஸ்பில், ஜான் வெஸ்லி, ஹையாத் ஆகியோர் செலுலாய்ட் தயாரிப்பு ஆலையை அமைத்தனர். இந்த செலுலாய்டு திரைப்படச் சுருளை தயாரிக்கவும், பலவண்ண கண்கண்ணாடிகளைத் தயாரிக்கவும் பெருமளவுக்கு உதவியது. பின்னர் பெல்ஜியத்தை சேர்ந்த வேதியலாளரான லியோ பேக்லேண்ட், 1907 ஆம் ஆண்டு முழுக்க முழுக்க வேதிப்பொருட்களால் ஆன சிந்தடிக் பிளாஸ்டிக்கை கண்டுபிடித்தார். பார்மால்டிஹைட் என்ற வேதிப்பொருளையும், பீனாலையும் வெப்பப்படுத்தி அதிக அழுத்தத்தில் சேர்த்தபோது அவர் கண்டறிந்த பொருள் உருவானது. அவர் அதற்கு பேக்லைட் என்ற பெயரைச் சூட்டினார். அடர் வண்ணத்திலும், மரக்கட்டையின் தன்மையிலும் இருந்த இந்த பேக்லைட் மின்பொத்தான்கள், கலைப்பொருட்கள், காமிராக்கள், ரேடியோக்கள், தொலைபேசிகள் செய்வதற்கு பயன்பட்டன.
எத்திலினையும் பென்சால்டிஹைடையும் வெப்பம் மற்றும் அழுத்தத்தில் இணைக்க நினைத்த ஆய்வு தோல்வியடைந்தது. ஆனால் அந்தக் கலனுக்குள் அப்போது ஆக்சிஜன் வாயு நுழைந்ததால், அது அவற்றுடன் வேதிவினைப்புரிந்து வெண்ணிற மெழுகு போன்ற பொருளை உருவாக்கியது. இவ்வாறு தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட அதுவே பாலித்திலின் என்கிற, இன்று பலவகையிலும் பயன்படுகிற வணிக பிளாஸ்டிக் பொருள்.
இது முதன் முதலில் இரண்டாம் உலகப்போரின் போது ரேடார் கருவிகளின் இணைப்புத் தடங்கள் மீது பாதுகாப்புப் பொருளாகப் பயன்பட்டது! இன்றைய பிளாஸ்டிக் என்பது கரிமப் பொருட்களும், ஹைட்ரஜனும், பெட்ரோலியமும் அல்லது இயற்கை வாயுவும் சேர்ந்து பலபடியாக்க (பாலிமரைசேஷன்) வினையின் மூலம் கிடைக்கிற வேதிப்பொருளாகும். இது வெப்பத்தினால் நெகிழவோ அல்லது இறுகவோ கூடிய தன்மைகளைக் கொண்டது.
பிளாஸ்டிக்கின் வணிகம்
இந்தியாவில் பிளாஸ்டிக் தயாரிப்பு வணிகம் முன்னணியில் இருக்கிறது. இந்தத் துறையில் மட்டும் நான்கு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வேலை செய்கின்றனர். பிளாஸ்டி, லினோலியம், வீட்டு உபயோகப் பொருட்கள், மீன்பிடிவலைகள், மருத்துவ கருவிகள், வணிகப் பொருட்களின் உறைகள், பிளாஸ்டிக் படச்சுருள்கள், குழாய்கள் போன்றவை இங்கு அதிகளவில் தாயாரிக்கப்படுகின்றன.
பிளாஸ்டிக் தயாரிப்புக்குத் தேவையான கச்சாப்பொருட்களை சுமார் 200 நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பங்களாதேஷ், நேபாளம், இங்கிலாந்து, துருக்கி, பிரான்சு, வியட்நாம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு அதிகளவில் அனுப்புகிறது. 2021 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவின் பிளாஸ்டிக் வணிகம் 162 மில்லியன் அமெரிக்க டாலர். இது 2025 க்குள் 25 பில்லியன் டாலராக வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறது இந்தியா! பிளாஸ்டிக் தயாரிப்பை ஊக்குவிக்க PLEXCONCIL என்ற அமைப்பே அரசால் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. உலக அளவிலான பிளாஸ்டிக் தயாரிப்பு மற்றும் வணிகத்தின் மதிப்பு 593.00 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
பிளாஸ்டிக் தயாரிப்பின் வளர்ச்சி என்பது தாராளமயம் என்கிற வணிக மற்றும் பொருளாதார கொள்கைகளோடு தொடர்புடையது என்கிறது பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டிருக்கும் ஒரு கையேடு. அதுமட்டுமின்றி நுகர்வு கலாச்சாரத்துடனும், நகர்மயமாக்கலுடனும் நெருங்கிய தொடர்புடையாதாக இருக்கிறது. பிளாஸ்டிக் தொழிற்சாலைகளின் வரவால் கோடிக்கணக்கான சணல் விவசாயிகள் தங்களது தொழிலை இழந்துள்ளனர். அதுமட்டுமின்றி பிளாஸ்டிக் குழாய்கள் இன்று விவசாயத்துக்குள் ஊடுறுவி, சொட்டுநீர் பாசனம் எனும் வணிகப்பயிர் உற்பத்திக்கு ஊக்கமளித்து வருகின்றன.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
பிளாஸ்டிக் ஏற்படுத்தும் பாதிப்பு
சுற்றுச்சூழல் பாதிப்பு, மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் உடல்நல பாதிப்பு என இரண்டு வகையான பாதிப்புகள் பிளாஸ்டிக்கால் உருவாகின்றன. ஒரு ஆண்டுக்கு சுமார் 245 மில்லியன் டன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருட்கள் உலக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளே அதிகம். அவற்றின் உற்பத்தி சதவிகிதம் 40%.
விலை மலிவானதாகவும், தயாரிப்புக்கு எளிதானதாகவும், கையாளுவதற்கு உகந்ததாகவும் இருந்ததால் அதிகளவில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மெல்ல மெல்ல உலகை நிறைக்கத் தொடங்கியது. இன்று கடல், மலைகள், நிலப்பரப்பு, நீர் நிலைகள் என எங்கெங்கு காணினும் பிளாஸ்டிக் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
பிளாஸ்டிக் மக்காது என்பது மெதுவாகவே உணரப்பட்டது. பிளாஸ்டிக்குடன் ஒட்டியிருக்கும் ஆபத்து அங்குதான் தொடங்குகிறது. ஒரு தகர டப்பாவோ, அலுமினிய பாத்திரமோ கூட சுமார் 500 ஆண்டுகளில் மக்கிவிடும். ஆனால் மில்லியன் ஆண்டுகள் ஆனாலும் பிளாஸ்டிக் துகள்களாக சிதையுமே தவிர மக்காது. இந்துப் புராண கதைகளில் சொல்வதைப் போல சொன்னால் இது மாசுபடுத்தும் மார்கண்டேயன்!
உலகம் முழுவதும் பல பில்லியன் டன் கணக்கில் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்திருக்கின்றன. அளவுக்கதிகமாக அவை எரியூட்டப்படுவதால் அவற்றிலிருந்து வரும் புகை காற்றை கடுமையாக மாசுபடுத்துகிறது. நிலத்தில் புதைக்கப்படுவதால் மேல் மண் வளம் குறைந்த ஒன்றாக மாறுகிறது. நிலத்தின் மேல் அங்கங்கு பரவியிருப்பதால் நிலத்திற்குள் காற்றும் நீரும் புகுவதை பிளாஸ்டிக் தடை செய்கிறது. நீர் நிலைகளிலும், கடலிலும் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்து நீர்வாழ் உயிரினங்களை கொல்வதுடன், சூழல் உணவுச்சங்கிலியை பாதிக்கின்றன. இன்று சிறு நகரங்கள் தொடங்கி பெரும் நகரங்கள் வரை பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்துவது ஒருபெரும் சிக்கலாக உருவெடுத்திருக்கிறது. பூவுலகின் நண்பர்கள் கையேடு ஒப்பிடுவதைப் போல, இந்த பிளாஸ்டிக் கழிவை அப்புறப்படுத்தும் சிக்கல் அணுக்கழிவை அப்புறப்படுத்தும் சிக்கலுக்கு இணையானது.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
பிளாஸ்டிக் பயன்பாடு மனிதருக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் சிக்கலான உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றது என்று ஆய்வுகள் சொல்கின்றன. 90% பிளாஸ்டிக்குகள் புதைப்படிவ எரிபொருட்களிலிருந்து (பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு) தயாரிக்கப்படுவதால் அவை ஆபத்தான நச்சுக்களை வெளியேற்றுகின்றன. அவற்றை எரிப்பதாலும், பிளாஸ்டிக் நுண்துகள்களாலும் தாலேட்டுகள், பாலி-புளூரினேட்டட் வேதிப்பொருட்கள், பைபீனால்-A (BPA), புரோமினேட்டட் கதிர்வீச்சு, ஆண்டிமணி டிரையாக்சைடு உள்ளிட்ட மிக ஆபத்தான வேதிப்பொருட்கள் நீரிலும், நிலத்திலும், உணவுப் பொருட்களிலும், உடலிலும் கலக்கின்றன. இதனால் பலவகையான புற்றுநோய்கள், நரம்பு நோய்கள், இனப்பெருக்க குறைபாடுகள், நோய் எதிர்ப்பாற்றல் சீர்குலைவு, கண், தோல் போன்ற புலனுறுப்புகளில் பாதிப்பு, சுவாசக்கோளாறுகள், செரிமன மண்டல கோளாறுகள், ஈரல், மூளை போன்ற உயிர் உறுப்பு பாதிப்புகள் உண்டாகின்றன.
இந்தியாவில் பிளாஸ்டிக் தடை
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கை அண்மையில் ஒன்றிய அரசு தடைசெய்திருக்கிறது. இந்தியா இந்த பிளாஸ்டிக் தடையை மிகத்தாமதமாக அவசரக் கோலத்தில், ஒரு கடமைக்கு அறிவித்திருக்கிறது.
கேரி பேக்ஸ், காது குடையும் பிளாஸ்டிக்குச்சி, உறிஞ்சு குழல்கள், டம்ளர்கள், விருந்து மேசையில் பயன்படுத்தப்படும் விரிப்புகள், பேக்கிங் உறைகள் உள்ளிட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பலவகையான பிளாஸ்டிக்குகள் இதில் அடங்கும். இந்த அறிவிப்பிலும் சில குழப்பங்கள் இருக்கின்றன. பேக்கிங்களுக்கு பயன்படுத்தப்படும் பிளஸ்டிக்குகளை அந்தந்த தயாரிப்பு நிறுவனங்களே அப்புறப்படுத்த வேண்டும் என்ற விதி இருப்பதால் இந்தத் தடை அவற்றுக்குப் பொருந்தாது என்கிறது ஒன்றிய அரசின் அறிவிப்பு. இது வினோதமாக இருக்கிறது.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
இன்று பொருட்களை பேக்கிங் செய்கிறதற்குத்தான் அளவுக்கதிகமான பிளாஸ்டிக்குகள் பயன்படுகின்றன. அதே போல ஷாம்பு, எண்ணெய், ஊறுகாய் என ஏகப்பட்ட பொருட்கள் சின்னச் சின்ன பாக்கெட்டுகளில் வருகின்றன. அவற்றுக்கும், அரை லிட்டர், கால் லிட்டர் தண்ணீர் மற்றும் குளிர்பான குப்பிகளுக்கும் எந்தவிதமான தடைகளோ, வரையறைகளோ இந்த அறிவிப்பில் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த விடயத்தில் நாம் வழக்கம் போல தாமதம் என்றுதான் சொல்லவேண்டும்.
2002 லியே பங்ளாதேஷ் பிளாஸ்டிக்குக்கு தடையை அறிவித்தது. அது நமது அண்டை நாடு! இன்று உலகில் முழுமையாகவோ, பகுதியளவிலோ எண்பதற்கும் கூடுதலான நாடுகள் பிளாஸ்டிக்கை தடைசெய்திருக்கின்றன. இந்த நாடுகளில் மிகவும் பிந்தங்கிய வளர்ச்சியுடைய 30 ஆப்ரிக்க நாடுகளும் அடங்கும். கென்யா 2017ல் கடுமையான பிளாஸ்டிக் தடையை அறிவித்தது. இதுவே இன்று பிளாஸ்டிக் தடையில் மிகவும் கெடுபிடி கொண்ட நாடாக அறியப்படுகிறது.
கென்யாவில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் வெள்ளப் பெருக்குக்கும், கழிவுநீர் கால்வாய் அடைப்புக்கும் பிளாஸ்டிக்கே காரணம் என்று தெரியவந்தது. அந்நாட்டின் கால்நடைகளில் பாதிக்கும் மேற்பட்டவை பிளாஸ்டிக்கை உண்டு இறந்தவை எனவும் தெரிய வந்தது. இதனால் அவர்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் நான்காண்டு சிறை அல்லது பல லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தாய்லாந்தில் 2020 முதல் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தினர். மிகக்குறிப்பாக சின்ன சின்ன பாக்கெட்டுகள் கடுமையாக தடை செய்யப்பட்டன. ருவாண்டாவில் 2008 லிருந்தே பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது. அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்கெனவே பிளாஸ்டிக் தடை இருக்கிறது.
பத்தாண்டுகளுக்கு முன்னர் கூட, உணவகங்களில் உணவு வாங்குவதற்கு அடுக்குக் கிண்ணத் தூக்கிகளையும், பாத்திரங்களையும் எடுத்துச் செல்கிற பழக்கம் இருந்தது. தேநீர் மற்றும் பழச்சாறு கடைகளிலும், விருந்துகளிலும் ஸ்டீல் டம்ளர்களையும் கண்ணாடி டம்ளர்களையும் பயன்படுத்தி வந்தார்கள். மளிகைப் பொருட்கள் காகிதப் பொதிகளில் கட்டித் தரப்பட்டன. பூ முதல் இறைச்சி வரை கட்டித்தருவதற்கு வாழையிலைகளும், வேறு இலைகளும் பயன்பட்டன. உறிஞ்சு குழாய் இல்லாமலேயே குளிர்பானங்களை வாய்வைத்தோ, தூக்கியோ குடித்தனர்! எளிதில் உடையும் பொருட்களையும் பளபளப்பான பொருட்களையும் வைக்கோல் பிரிகளால் சுற்றி பொதி கட்டினர். காகித உறைகளும், துணிப்பைகளும் உபயோகத்தில் இருந்தன. இப்போதிருக்கும் உலகம் ஒன்றும் திடீரென்று குதித்துவிடவில்லை!
ஆனால் இந்த பிளாஸ்டிக் மனிதரிடையே சோம்பேறித்தனத்தையும், அலட்சியத்தையும், பொறுப்பற்ற தன்மையையும் ஏற்படுத்தி விட்டதுடன், தூக்கியெறியும் குவளைகளை கொடுத்து, மறைமுகமாக ’தனிக்குவளை’ என்கிற ஒருமுறை ஊக்கப்படுத்தி, வேற்றுமையுணர்வையும் (சாதியுணர்வு என்றும் கூடச் சொல்லலாம்) தூண்டிவிட்டது. ஒருமுறை பயன்படுத்தப்படுகின்ற பிளாஸ்டிக் என்பது மேல்தட்டு நுகர்வுக் கலாச்சாரத்தின் தேவையை பூர்த்திசெய்வதுடன், அந்த பாதிப்பை சமூகத்தின் கீழடுக்கு வரையிலும் பரப்புகிறது.
காலையில் பிளாஸ்டிக் உறையில் சுடச்சுட ஊற்றி கட்டித்தரப்படும் தேநீர் பொட்டலத்தை பிடித்துக்கொண்டு வீட்டுக்குச் செல்பவர்கள் பலர். சிற்றுண்டி கடைகளில் இட்லி துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன. உணவுண்ண வாழையிலை இல்லை. பிளாஸ்டிக் தாள்களே. உணவகங்களில் குழம்பையும், விதவிதமான சட்டினிகளையும் பிளாஸ்டிக் உறைகளிலேயே கட்டித்தருகின்றனர். காய்க்கறிக்கடையிலும், மளிகைக் கடையிலும் பிளாஸ்டிக் பைகள்.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
வாழையிலையையும் காகிதத்தையும் ஒப்பிடுகையில் பிளாஸ்டிக் பைகள் விலை மலிவு என்பதால் வணிகர்கள் காட்டும் இலாப நோக்குடன் இணைந்த அலட்சியம். எங்கு சென்றாலும் கைவீசி சென்றுவிட்டு, பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வாங்கி வந்துவிடலாம் என்ற பொறுப்பற்ற தான்தோன்றித்தனத்துடன் இணைந்த மக்களின் அலட்சியம். இவற்றுடன் பின்னிப் பிணைந்திருக்கும் அறிவியல் அறியாமை. அரசின் பாராமுகம். இவையெல்லாம் இணைந்து தான் பிளாஸ்டிக் சிக்கலை உருவாக்கி யிருக்கிறது.
சுயநலத்தாலும், அறியாமையாலும், பொறுப்பற்ற தனத்தாலும் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் வெப்பத்துக்கும், சூரிய ஒளிக்கும் ஆட்படும்போது பசுமை இல்ல வாயுக்களான மீதேனையும், எதிலினையும் அதிகளவில் வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன. இதனால் உலக வெப்பமயமாதல் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இருப்பது ஒரு உலகம் தான். இது அழிந்துபோனால் இன்னொன்றை வாங்கிக்கொள்ள உலகம் ஒன்றும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் அல்ல.
*
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் – 11
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.