அழகிய பெரியவன்
பெண் படிப்பதற்கும் … ஆண் படிப்பதற்கும்
பெண் படிப்பதற்கும் ஆண் படிப்பதற்கும் இடையில் இருக்கும் சமூக நிலைமைகளை மாணவி ஸ்ரீமதியின் மரணம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. இன்றும் பெண்கள் படிப்பது அவ்வளவு எளிதானதில்லை. இரங்கலுக்குரிய அந்த மாணவியின் மரணச்செய்தி நம்மை உலுக்குகின்றதோடு ஆழ்ந்த கவலையையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி அம்மையார் படிக்கையில், அவர் வகுப்பறையின் நடுவில் திரை ஒன்று கட்டப்பட்டிருந்ததாக வரலாறு சொல்கிறது. மாணவர்களையும் மாணவிகளையும் பிரித்து வைப்பதற்கான திரை அது. இன்று திரைகள் வகுப்பறையில் இல்லை. ஆனால் கண்ணுக்குத் தெரியாத பல திரைகள் சமூகத்திலும், மக்களின் எண்ணங்களிலும் இருக்கின்றன. அவற்றை எந்தச் சுரணையும் இல்லாமல் விலக்கிக் கொண்டு நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
பாதுகாப்பற்றதும், ஆபத்துகள் நிறைந்ததும், மனவழுத்தம் கொண்டதும், சவால் மிகுந்ததுமான பயணமாக பெண்கல்வியை ஏன் மாற்றி வைத்திருக்கிறோம் என்று சமூகம் யோசித்துப் பார்ப்ப தேயில்லை. மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான செய்திகளையும், வீடியோக்களையும் பார்க்கின்ற, எண்பது விழுக்காடு கல்வியறிவு பெற்ற நம்சமூகம் ஒன்று, அந்தத் தனியார் பள்ளிக்குச் சென்று வன்முறையில் ஈடுபட்டு பொருட்களைக் கொள்ளையடிக்கிறது. அல்லது உச்சுக் கொட்டி விட்டு வேறு வேலைகளைப் பார்க்கப் போய்விடுகிறது.
மகளிர் மற்றும் இருபாலர் படிக்கின்ற உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் காலையிலும், மாலையிலுமாக சில நாட்களுக்கு கவனித்தால் ஒவ்வொருநாளும் பெண்பிள்ளைகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் புரியும். முதலில் அவர் எதிர்கொள்வது எதிர்பாலினரிடமிருந்து வரும் சீண்டல்களும் தொந்தரவுகளும்.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
தலைமுடியைத் தீய்த்துக் கொண்டும், காதில் கம்மலை போட்டுக் கொண்டும், வண்ண வண்ண பனியன்கள் மற்றும் அழுக்கு டிரக் பேண்டுகளை அணிந்து கொண்டும், கட்டுக் கடங்காமல் இளைஞர்கள் சுற்றுவதை அங்கு பார்க்கலாம். அந்த இளைஞர்களின் பெற்றோர் இதைக் கண்டிப்பார்களா? வேடிக்கைப் பார்க்கின்ற பொது சமூகம் கண்டிக்குமா? இதற்கெல்லாம் நிச்சயமான பதில்களில்லை.
அடுத்து, பெண்பிள்ளைகள் பள்ளிகளுக்கு வந்து சேருகின்ற சிரமம். இலவச பேருந்து பயணச் சலுகையை அரசு வழங்கியிருந்தாலும் பள்ளி நேரத்துக்கு பேருந்துகள் இருக்காது. மலை கிராமம் அல்லது காட்டுப்பகுதி என்றால் அவர்கள் தனியே நடந்து செல்ல வேண்டும். அல்லது ஷேர் ஆட்டோக்களில் பயணம் மேற்கொள்ள வேண்டும். இது தினம் தினம் சவால்களைக் கொண்டது.
பள்ளிகளுக்கு உள்ளே இருக்கும் சிக்கல்களில் முதன்மையானது சரியான கழிவறை வசதிகள் இல்லாமை, மாதவிலக்கின் போது எதிர்கொள்ளும் சங்கடங்கள் மற்றொன்று. பிறகு, செய்திகளின் வழியே நாம் அறிய வருகின்ற பாலியல் குற்றங்கள். தனியார் பள்ளிகளில் கார்போரல் பனிஷ்மெண்ட் என்ற வகுப்பறை தண்டனைகளும், வார்த்தை அத்துமீறலும் மிக மிக அதிகம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் அந்த மாணவி படித்துவந்த சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைப் போலத்தான் தொண்ணூறு சதவிகித தனியார் பள்ளிகள் இருக்கின்றன. அங்கு சென்று மாணவர் உரிமைகள், மனித உரிமைகள் என்று பேசினால், அவையெல்லாம் என்ன என்று நம்மையே திருப்பிக் கேட்பார்கள். அங்கிருக்கும் மனிதர்களின் மூளைகளை மூடியிருப்பவை டியூரா, அரக்கனாய்டு, பயோ மேட்டர் உறைகள் அல்ல. சாதிய, அதிகார, பண உறைகள்.
ஒழுங்கு என்பதை இராணுவ ஒழுங்குக்கும் மேலானதாக தனியார் பள்ளிகள் கருதுகின்றன என்று தோன்றினாலும், அதற்குள் ஒளிந்திருப்பது வெளியே எதுவும் தெரிந்துவிடக் கூடாது என்கிற தந்திரமே. அந்தப் பள்ளிகளின் நிர்வாகிகள், அலுவலக நிர்வாகிகளிடம் அடக்குமுறையைப் பிரயோகிப்பார்கள். அலுவலக நிர்வாகிகள் அதை அப்படியே ஆசிரியர்கள் மீது பிரயோகிப்பார்கள். ஆசிரியர்கள் அந்த அடக்குமுறையை மாணவர்களிடம் காட்டுவார்கள். சில நேரங்களில் இந்தப்பள்ளிகள் ஒவ்வொன்றும் வதை முகாம்களோ என்றுகூட தோன்றும். அங்கு படிக்கும் மாணவர்களிடம் பேசிப்பார்த்தால் இன்னும் அதிகப்படியான வார்த்தைகளை அவர்கள் சொல்வார்கள்.
இப்பள்ளிகளில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களில் பெரும்பாலும் பெற்றோர்கள் பேசுவதேயில்லை. மாணவர்களின் நடத்தை, ரேங்க், நீட், இத்யாதிகள் மற்றும் பயிற்சிகள், பள்ளிக் கட்டணங்கள் பற்றியே பேசப்படும். அதிகாரிகள் பார்வையிடப் போனால் என்ன நடக்கும் என்பதை விவரிக்கத் தேவையில்லை! குறிப்பாக சிபிஎஸ்சி பள்ளிகளில் மாநில அரசின் அதிகாரம் இருப்பதில்லை. இப்பள்ளிகளில் மாநில அரசு அறிமுகப்படுத்தும் எந்த திட்டங்களும் அரசு பள்ளிகளைப்போல முழுமையாக செயல்படுத்தப் படுவதேயில்லை.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் மாணவர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. 2016ல் மாணவர் மரணங்கள் 9,748. 2020 ல் இதுவே 12,526. கல்வி நிலையங்களில் சாதிய கொடுமைகள் மற்றும் பாலியல் அத்து மீறல், ஆசிரியர்களின் வன்முறை, சமத்துவமின்மை, பாடச்சுமை, பாடங்கள் புரியாத நிலை, தேர்வில் தோல்வி மற்றும் தோல்வி பயம், திறனின்மை, ஆகிய காரணங்களால் மாணவர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.
தமிழகத்தில் கடந்த பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது, ஒரே நாளில் 11 மாணவர் தன்மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தேசிய குற்ற அறிக்கை 2020ன் படி, ஒவ்வொரு 42 நிமிடத்துக்கும் ஒரு மாணவர் மரணம் நிகழ்கிறது. அதாவது ஒவ்வொரு நாளும் 34 மாணவர் மரணங்கள். இப்படி இறக்கின்றவர்களில் நிச்சயமாக மாணவிகள் அதிகம்.
ஒரே ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டால் கூட அது தேசிய செய்தியாகிறது. ஆனால் மாணவர்களின் மரணங்களை சமூகம் மௌனமாக கடந்து செல்கிறது. இது ஏன் என்று கேட்கிறார்கள் இதைக் குறித்து ஆராய்ந்து எழுதுகிறவர்கள்.
தமிழ் நாட்டில் 4,445 மெட்ரிக் பள்ளிகள், 5,296 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், 1,371 சிபிஎஸ்சி பள்ளிகள் (11,335) செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 37,431 அரசுப் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது ஏறக்குறைய பாதியளவுக்கு இருக்கும் தனியார் பள்ளிகளில் பெற்றோருக்கும் நிர்வாகத்துக்கும் ஆக்கப்பூர்வமான எந்த உறவும் கிடையாது. அதைப் போலவே அரசுப்பள்ளிகளுடனும் பெற்றோர் ஆரோக்கியமான உறவை ஏற்படுத்திக் கொள்வதில்லை. இந்த குறையைப் போக்குவதற்கே அரசு இப்போது ’நம்பள்ளி, நம் பெருமை’ பள்ளி மேலாண்மைக் குழுக்களை உருவாக்கியுள்ளது.
இப்படி மரணமடையும் மாணவர்கள் நமது செல்லப் பிள்ளைகள் இல்லையா? நமக்கு நமது பிள்ளைகள் எடுக்கும் மதிப்பெண்கள் முக்கியமா அல்லது அவர்களின் மதிப்புக்குரிய உயிர் முக்கியமா? அவர்கள் எந்த வகையான சூழல்களில் படிக்கிறார்கள் என்று நாம் கவலைக் கொள்கிறோமா? பெரும்பாலான தனியார் பள்ளிகள் மாணவர்களை கைதிகளாய் நடத்தும் ஜெயில் போலவே இயங்கிக் கொண்டிருப்பதை நம்முடைய பெற்றோர்கள் அறிவார்களா?
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
அரசுப்பள்ளிகளை நோக்கி கைநீட்டும் பெற்றோர் தனியார் பள்ளிகளிடம் மட்டும் ஏன் வாய் மூடிக்கிடக்கின்றனர்? அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க ஏன் விரும்புவதில்லை? அரசுப்பள்ளிகளை அருகிலிருக்கும் கல்வி ஆதாரங்களாகவும், வளங்களாகவும் ஏன் எண்ணுவதில்லை? இதற்கெல்லாம் காரணம் பொது புத்தியில் உறைந்திருக்கும் ஆங்கிலக் கல்வி மோகம் எனும் அறியாமை. இந்தப் பொறியில் தான் பெற்றோர்கள் சிக்கி தங்களின் பிள்ளைகளை பலிகொடுத்து விடுகின்றனர்.
அரசும் பெற்றோரும் இதில் உறுதியாய் தலையிட வேண்டும். அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தப் பட்டிருக்கும் பள்ளி மேலாண்மைக் குழுக்களைப்போல தனியார் பள்ளிகளிலும் மேலாண்மைக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்ற விதிகள் இருக்கின்றன. ஆனால் அவை வெறுமனே விதிகளாகவும், கண்துடைப்புக் குழுக்களாகவும், ஆவண (ரெக்கார்டு) குழுக்களாகவுமே இருக்கின்றன. தனியார் பள்ளிகளில் கல்வி அதிகாரிகளின் தொடர் ஆய்வுகளும், கண்டிப்பான கண்காணிப்புகளும் கிடையாது. கூடுதலாக, பெற்றோர், கல்வியாளர், அரசு அதிகாரிகள் என்ற முத்தரப்பு குழு ஒன்றை அமைத்து, அனைத்துத் தனியார் பள்ளிகளையும் ஆண்டுக்கு இருமுறை அரசு ஆய்வு செய்ய வேண்டும். பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் இருப்பதைப்போன்ற ஆலோசனை மய்யங்கள் (கிரிவியன்ஸ் செல்ஸ்) பள்ளிகளிலும் அமைக்கப்பட வேண்டும்.
நம் கண்ணெதிரிலேயே நம் பிள்ளைகள் மர்மமான முறையில் இறப்பதையும், நம்முடைய பொறுப்பற்ற தனத்தின் உச்சியில் இருந்து அவர்கள் குதித்து மரணமடைவதையும் பார்த்துக் கொண்டிருப்பதை போன்றதொரு அவமானகரமான நிலை ஏதேனும் இருக்குமா? இதுவா நாம் உருவாக்கியிருக்கும் நாகரிக சமூகம்?
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் – 13
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.