அழகிய பெரியவன்
*
அழியும் பேருருக்கள்
*
அண்மையில் ஒருநாள் ஒற்றை யானை ஒன்று எங்கள் ஊர்ப் பக்கங்களில் இரவில் நடமாடுவதாகப் பேசிக்கொண்டார்கள். கிழக்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்கள் நிறைந்த எங்கள் ஒன்றியத்தில் காடுகளுக்கும் மலைகளுக்கும் அருகில் இருக்கும் பகுதிகளுக்குத் தான் பொதுவாக யானைகள் வரும். ஆனால் இந்த முறை சிறுநகரத்தை ஒட்டிய கிராமங்களுக்கே யானை வந்திருந்தது.
மேக்னா என்று வனத்துறையினரால் பெயரிடப்பட்ட அந்த ஒற்றை யானை ஆந்திர எல்லையை ஒட்டிய கவுடண்ய யானைகள் சரணாலயத்திலிருந்து எப்படியோ வெளியேறி, மனிதர்கள் வாழும் பகுதிக்கு வந்து அலைந்து திரிந்து விட்டு, தற்போது ஜமனாமத்தூர், ஆலங்காயம் வனப் பகுதிகளில் சுற்றுவதாக செய்திகள் கிடைக்கின்றன.
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்குச் சமயத்தில் எங்கள் ஊரைக் கடந்து செல்லும் மங்களூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையை ஒட்டிய ஒரு கிராமத்துக்கு சிறுத்தை வந்திருந்தது. அது ஒரு வீட்டுக்குள் நுழைந்ததும் வீட்டிலிருப்பவர்கள் பீதியில் கூச்சலிட்டபடி வெளியே ஓடிவந்து கதவை வெளிப்புறமாகச் சாத்திவிட, சிறுத்தை வீட்டுக்குள் சிக்கிக் கொண்டது. பின்னர் வனத்துறையினர் அதை மீட்டு காட்டில் கொண்டுச் சென்று விட்டனர்.
எங்கள் மலைக் கிராமங்களில் கரடிகளோ, மலைப் பாம்புகளோ, மயில்களோ, மான்களோ, காட்டு முயல்களோ, காட்டுப் பன்றிகளோ வருவதாக மக்கள் சொல்வார்கள். காட்டு மாடுகளும், ஆடுகளும் மேய்ச்சலுக்குச் சென்று திரும்புகையில் அந்த மந்தையுடன் சில சமயங்களில் மான்களும் வந்துவிடுவதாக பலரும் சொல்லி அறிந்திருக்கிறேன். ஆனால் சிறுத்தைகளும், யானைகளும் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவதைப் பற்றிய செய்திகள் மிகவும் அரிது. தற்போது இந்த வகைச் செய்திகள் அதிகரித்து வருகின்றன.
நகர்மயமாக்கலும், தொழில்மயமாக்கலும் அதிகரிக்க அதிகரிக்க காடுகளின் அளவு குறைந்துக் கொண்டே வருகிறது. விளைநிலங்களின் பரப்பும் குறைந்து வருகிறது. காட்டையும் மலைகளையும் ஒட்டியிருக்கும் விளைநிலங்களைக் கூட வீட்டுமனைகளாக மாற்றுகின்ற போக்கு அதிகரித்திருக்கிறது. இந்தச் செயல்பாடுகளால் காடுகளுக்கும் மலைகளுக்கும் அருகாமையில் மனித குடியிருப்புகளும், தொழிற்சாலைகளும் போகின்றன. இதனால் காட்டு விலங்குகள் தங்களின் சுதந்திரமான நடமாட்டப் பகுதியை இழந்து கடுமையாகப் பாதிக்கப் படுகின்றன.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
இம்மாற்றங்களால் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி உயிரிழப்பது யானைகள் தான். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 101 யானைகள் உயிரிழந்திருக்கின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான கணக்கெடுப்பின் படி 30 யானைகள் உயிரிழந்திருக்கின்றன.
தண்ணீர் கிடைக்காமலும், வறட்சியிலும் சிக்கித்தான் பெரும்பாலான யானைகள் இறந்துள்ளன என்று தமிழக வனத்துறை தெரிவித்திருக்கிறது. இவற்றோடு மின்சாரம் தாக்கியும், இரயில் மோதியும், துப்பாக்கியால் சுடப்பட்டும் யானைகள் இறந்திருப்பதாகவும் அந்த வனத்துறை அறிக்கை சொல்கிறது.
மனித செயலால் யானைகள் இறக்கும் விகிதம் குறைவுதான் என்கிறது தமிழக வனத்துறையின் அறிக்கை. அதற்காக அந்த இறப்புகளை எண்ணிக்கைக் குறைவானவையென்று எளிதாகக் கடந்துச் சென்றுவிட முடியாது. இயற்கைக்கு இணையாக, மனித செயல்பாடுகளும் யானைகளின் இறப்புக்கு காரணமாக அமைவது மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்தியாவில் 2009 – 2019 வரையிலான பத்தாண்டுகளில் 1,160 யானைகள் மனித செயல்பாடுகளால் இறந்துள்ளன என்கிறது ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை. மின்சாரம் தாக்கி 600 யானைகள். ரயில் மோதி 186 யானைகள். வேட்டையாடப்பட்டு 169 யானைகள். விஷம் வைக்கப்பட்டு 64 யானைகள்.
யானை இறப்புகளுக்கு வேறு சில காரணங்களும் சொல்லப் படுகின்றன. அவற்றுள் ஒன்று காட்டுத்தீ. காட்டுத்தீயும் மனித செயல்களின் விளைவுகளால் ஏற்படுபவை தான். தற்போது நெடுஞ்சாலைகளும், பாலங்களும் வேறு பெருகிவிட்டன. இதனால் சாலை விபத்துகளில் கூட யானைகள் சிக்கலாம். காடுகளை ஒட்டிய பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்படுவதால் அங்கு குடிநோயாளிகளால் உடைக்கப்படும் கண்ணாடி போத்தல்கள், எறியப்படும் பிளாஸ்டிக் உறைகள் ஆகியவற்றாலும் யானைகளுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
வன விலங்குகளில் யானைகள் நுண்ணறிவு மிக்கவை. அவை தங்களுடைய பாதையை நீண்டநாட்களாக நினைவில் வைத்திருக்கக் கூடியவை. பாதை மாறாதவை! அவற்றின் பாதைகள் ஆறுகளையும் மலை அடிவாரங்களையும் ஒட்டிய சமதளப்பகுதிகளாகும். அந்தப் பகுதிகளை நாம் விவசாயத்துக்கும், வீடுகளுக்கும், சொகுசு விடுதிகளுக்கும் பிடித்துக் கொள்கிறோம்.
மலை வாசஸ்தலங்களில் சொகுசு விடுதிகள் கட்ட ஏராளாமான யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப் பட்டிருப்பதாக முன்னர் வழக்குகள் நடைபெற்றன. அவற்றை அகற்றுவதற்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அந்த உத்தரவுகள் எப்படி நிறைவேற்றப்பட்டிருக்கும் என்பதை இங்கு விவரிக்கத் தேவையில்லை. ஆனால் யானைகள் அவற்றின் வழித்தடங்களில் நுழையும்போது மட்டும் அவற்றை விரட்டச் சொல்லி கூக்குரலிடுகிறோம்! யானைகளின் பாதுகாப்பு அச்சுறுத்தலில் மனிதர்களின் சுயநலம், அரசின் மெத்தனப் போக்கு, பெருமுதலாளிகளின் ஊடுறுவல் அனைத்துமே கலந்திருக்கின்றன. இயற்கையின் பேருருக்கள் மனிதனின் சிறிய ஆசைகளால் அழிகின்றன.
இந்தியாவில் வனவிலங்குகள் தொடர்பான மனித செயல்பாடுகள் வேறுவகையாகவும் வினோதமாகவும் இருக்கின்றன. கடந்த வாரம் ஒடிசா மாநிலத்தில் பெய்த பெருமழையில், ஆறு ஒன்றின் நடுவில் சிக்கிக் கொண்ட குரங்கை பாலம் கட்டி, ஊர் மக்களும், பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்டார்கள் என்ற செய்தி தொலைக் காட்சிகளில் வெளியானது.
ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் விலங்குகளை மீட்கும் செய்திகள் அவ்வப்போது இப்படி வந்தாலும் கூட, குரங்குகளை மீட்கும் செய்திகள் கொஞ்சம் அதிகமாகவே வருகின்றன! இந்தச் செய்திகளை பார்க்கிறபோது, ஒருவேளை அவ்வாறு சிக்கிக்கொண்டது பன்றியாகவோ, எருமையாகவோ, கழுதையாகவோ இருந்திருந்தால் இவ்வளவு முயற்சியை எடுத்திருப்பார்களா என்ற சந்தேகமும் உடன் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. பாஜக ஆளும் பல மாநிலங்களில் பசுப்பாதுகாப்புக்கு சட்டங்களை இயற்றி கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். கோசாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் குரங்குகள் குரங்குகள் தான்; பசுக்கள் பசுக்கள் தான். இந்தியாவில் மட்டும் தான் குரங்குகள் குரங்குகள் கிடையாது; பசுக்கள் பசுக்கள் கிடையாது! தற்போது இருக்கும் ஒன்றிய அரசு அவற்றுக்கு அந்தஸ்து உயர்வை அளித்து ஆணை வெளியிடுவது ஒன்றுதான் இன்னமும் பாக்கி! அவ்வளவு அபத்தங்கள் குரங்குகளை வைத்தும் பசுக்களை வைத்தும் இங்கே அரங்கேறுகின்றன.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
குரங்குகளையும் பசுக்களையும் விலங்குகளாக இல்லாமல் கடவுளாக பார்க்கின்ற பார்வை இருப்பதால் கற்பனைக்கு எட்டாததெல்லாம் நடக்கிறது. காட்டோரங்களில் இருக்கின்ற நிலங்களில் கூட்டம் கூட்டமாக இறங்கி அழிவு வேலையில் ஈடுபடும் குரங்குகளை யாரும் எதுவும் செய்வதில்லை. பசுக்கள் தெருக்களில் அலைந்து திரிகின்றன. அவை சாப்பிட்டது போகத்தான் நமக்கு என்று சொல்லி கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள்!
விபத்தில் அடிபட்டு இறந்துபோகிற குரங்குகளை மனிதருக்கு கொடுக்கின்ற மரியாதையை விடவும் அதிகமாகக் கொடுத்து அடக்கம் செய்கிறார்கள். குரங்குகள் இறந்த இடங்களில் கோயில் கட்டுகிறார்கள். காட்டு வழியில் போகிறவர்களும், வருகிறவர்களும் குரங்குகளுக்கு உணவுப் பொருட்களை கொடுக்கிறார்கள். அந்த உணவு குரங்குகளின் உணவு அல்ல என்றாலும் இது தொடர்ந்து நடக்கிறது. பசுக்களின் பெயரால் தலித் மக்களும், இஸ்லாமிய மக்களும் கொல்லப்படுவது நாள்தோறும் தொடர்கின்றது.
குரங்குகளின் மீதும், பசுக்களின் மீதும் காட்டுகிற அக்கறையை பிறவிலங்குகளின் மீது காட்டுகிறோமா? காட்டுவிலங்குகளை வேட்டையாடுவதற்கும், அவற்றின் இடத்தைப் பிடித்துக் கொண்டு விரட்டி அடிப்பதற்கும் தயாராக இருக்கிற நாம், குரங்குகளுக்கும் பசுக்களுக்கும் தருகின்ற மரியாதையில் சிறிதளவையாவது மற்றவற்றுக்குக் கொடுக்கிறோமா?
குறிப்பாக யானைகளை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும்? யானைகள் இறக்க இறக்க காடுகளின் அழிவு அதிகரிக்கும். தன் வாழ்நாளில் ஒரு யானை தான் தின்று செறித்து இடும் எச்சங்களின் வழியாக சுமார் பதினெட்டு இலட்சம் மரங்களை உருவாக்குகின்றனவாம். அவ்வாறெனில் தற்போதைய காடுகளின் உருவாக்கத்தில் அதிகம் பங்கு வகிப்பவை யானைகளே.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
யானைகளை காப்பதற்கு வனத்துறை எடுக்கும் நடவடிக்கைகளை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். அவை நிச்சயம் போதாது. யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் இடத்தில் குழிகளை எடுத்திருக்கிறார்கள். அக்குழிகள் புதுப்பிக்கப் படாததால் பெரும்பாலும் தூர்ந்துபோய் கிடக்கின்றன. காட்டுப்பகுதிகளின் எல்லைகளில் வனவிலங்குகளுக்காக கட்டப்படும் தண்ணீர்த் தொட்டிகள் இடிந்துபோய், வறண்டுகிடக்கின்றன.
வனப்பகுதிகளில் யானைகளின் தாகத்தைப் போக்குவதற்கு எப்போதும் வற்றாத செயற்கை நீர்நிலைகளை உருவாக்க வேண்டும். யானைகள் மனிதக் குடியிருப்புகளில் நுழைகின்ற பகுதிகளில், யானைக் குழிகளை அமைப்பதோடு, அப்பகுதிகளில் யானைகளுக்குப் பிடித்தமான உணவுப் பொருட்களை பழங்குடி மக்களின் உதவியுடன் வனத்துறையே பயிரிடவேண்டும். சமூகக்காடுகள் திட்டத்தைப் போல யானைக் காடுகள்.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் – 14
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.