Advertisment

அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் - 15

Tamil writer Azhagiya Periyavan New Series for Tamil Indian Express Tamil News: நிலக்கரி பயன்பாட்டுக்கு வந்த இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்குள்ளாகவே நமது புவி, பெருந்தொழில் முதலாளிகளாலும், கட்டற்ற நுகர்வு மனப்பான்மையாலும் சூழல் மாறுபாட்டுக்கும், வெப்பமாதலுக்கும் ஆளாகி தத்தளிக்கத் தொடங்கியிருக்கிறது.

author-image
WebDesk
New Update
Azhagiya Periyavan’s Tamil Indian Express series part - 15

Azhagiya Periyavan



Advertisment

அழகிய பெரியவன்

*

எல்லாம் மழை


*

மழைக்காலம் தொடங்கி விட்டது. இனி நகரங்களின் வீதிகளிலும், சிறு நகரங்களின் தெருக்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம்! மழைக் காலங்களில் ஏரிகளும், குளங்களும் நிரம்பி, ஆறுகள் பெருக்கெடுத்து, கிராமங்களின் வழித்தடங்கள் துண்டிக்கப்படும் காலம் போய், நகரங்களிலேயே அந்த சூழ்நிலைகள் ஏற்படுகின்ற காலமாகியிருக்கிறது.

சிலர் சொல்லலாம் இது கொஞ்சம் அதிகமான மழைப் பொழிவு என்று. நிச்சயமாக அப்படி இல்லை. வானம் கறுத்து, தூறலில் தொடங்கி, தூவானத்தில் முடிந்திடும் மழையல்ல இப்போது பெய்வது. திடீரென்று மழைமேகங்கள் திரள்கின்றன. மதகின் கதவுகளைத் திறந்தது போல மழை ஒரே இடத்தில் கொட்டித் தீர்க்கிறது. எல்லாம் முடிந்ததும் வானம் ஒன்றுமே செய்யாத பூனையைப் போலப் பார்க்கிறது.

தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் மழை தருபவை தென்மேற்குப் பருவமழையும், வடகிழக்குப் பருவமழையும் ஆகும். ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை தென் மேற்குப் பருவமழை. அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வட கிழக்குப் பருவமழை. இதில் தென் மேற்கு பருவமழையில் தான் அதிக மழைப் பொழிவு இருக்கும்.

இப்பருவங்களில் சில ஆண்டுகள் நல்ல மழை இருக்கும். சில ஆண்டுகள் போதிய அளவுக்கு மழை இருக்காது. ஆனால் கடந்த ஆண்டு மிகக் கடுமையான மழையை தமிழகம் சந்தித்தது. இந்திய வானிலைத்துறை (Indian Meteorological Department - IMD) அறிக்கையின் படி, 1918 ஆண்டுமுதல் சென்னையில் பெய்த அதிகப்படியான மழைப் பொழிவு என்பது 1088.4 மி.மீ. சென்னை, 2015 ஆம் ஆண்டு 1049 மி.மீ மழைப் பொழிவைச் சந்தித்தது. அதையே அந்த நகரத்தால் தாங்க முடியவில்லை.

கடந்த ஆண்டு சென்னை 1097.6 மி.மீ மழைப் பொழிவைப் பெற்றிருக்கிறது. சுமார் 79% அதிகப்படியான மழைப் பொழிவை சென்னை பெற்றதாக வானிலை அறிஞர்கள் சொல்கின்றனர். ஒட்டுமொத்த தமிழகமே சுமார் 76% மழையை அதிகப்படியாக கடந்த ஆண்டில் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் சில மாவட்டங்களை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மழை. எல்லா நீர் பிடிப்பு பகுதிகளிலும், நீர் வழிகளிலும் வெள்ளப் பெருக்கு. அப்பொழுது நிரம்பிய தண்ணீர் சில இடங்களில் இன்னும் கூட வற்றாமல் இருக்கிறது.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

வேலூர் மாவட்டத்தில் நாங்கள் இருக்கும் பகுதி மலை சார்ந்த பகுதி. எங்களுக்கு வற்றாத ஆறுகள் என்று எதுவும் கிடையாது. ஆனால் அந்த சொற்றொடரை கடந்த மழை பொய்யாக்கிவிட்டது. பாலாற்றிலும், அதன் கிளை ஆறுகளிலும், காட்டாறுகளிலும், ஓடைகளிலும் இன்னும் கூட தண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கிறது. இதைப் போன்ற ஒரு காட்சியை எங்கள் மாவட்டத்து மக்கள் பார்த்தது கிடையாது. 50 ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்த ஏரிகள் கூட நிரம்பியதால் மக்கள் ஆடு வெட்டி பூசை போட்டு பக்தியுடன் கொண்டாடினார்கள்!

கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. தண்ணீர் தன்னுடைய நிஜமான முகத்தை வெளிக்காட்டியது. சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலேயே பல இடங்களில் போக்குவரத்து தடையாகின்ற அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல நெடுஞ்சாலைகளும், கிராமப்புற சாலைகளும் துண்டிக்கப்பட்டன. சின்னச் சின்ன நீர் வழிகள் கூட வெள்ளத்தால் கரை புரண்டு பாய்ந்தன. தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் ஓரங்களிலும் வீடுகளைக் கட்டியிருந்தவர்களில் பலர் வீடற்றவர்களாயினர்.

ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சில பழைய வீடுகள் இடிந்து விழுந்து உடைமை சேதங்கள் மட்டுமின்றி, உயிர் சேதங்களும் ஏற்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. பொதுமுடக்கத் தளர்வுகளால் கொரோனா பெருந் தொற்றில் முடங்கிக் கிடந்த மக்கள், மெல்ல மெல்ல வெளியே வந்து தங்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளத் தொடங்கிய போது பெய்த இந்த மழை மீண்டும் மக்களை முடக்கிப் போட்டது.

இந்த ஆண்டும் அதே நிலைமைகள் திரும்பிடுமோ என்ற அச்சம் உருவாவதைத் தடுக்க முடியவில்லை. முதல் பருவமழையின் தொடக்கத்திலேயே பல மாவட்டங்கள் கனமழையைச் சந்தித்திருக்கின்றன. தமிழகத்தில் இருக்கும் அணைகளும், நீர்த்தேக்கங்களும் இப்பொழுதே 86% அளவு கொள்ளளவுக்கு நிரம்பிவிட்டதாக பொதுப்பணித் துறையின் அறிக்கை சொல்கிறது. இந்த ஆண்டில் இன்னும் ஒரு பருவமழையை தமிழகம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

கேரளா, பீகார், அசாம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மகாராஸ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை பெய்கிறது. தொடர்ந்த மேகவெடிப்பு மழையால் தெலுங்கானா மாநிலம் பாதிக்கப்பட்டது. மக்களின் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாத அம்மாநில முதல்வர், மேகவெடிப்பை வெளிநாட்டு சதியென்று சொல்லி கேலிக்கு ஆளானார்!

மழைக்கு வஞ்சனை இல்லை. உலகம் முழுவதுமே பெருவெள்ளங்களும், மேக வெடிப்புகளும், கனமழையும் பெய்வதாக செய்திகள் சொல்கின்றன. சென்னை பெருநகரம் மட்டுமல்ல, நியூயார்க் பெருநகரமும் கூட வெள்ளத்தால் தத்தளிக்கிறது. கனமழையின் விளைவாக கடந்த ஆண்டு அந்த நகரத்தை வெள்ளம் சூழ்ந்தது. செண்ட்ரல் பார்க், விமானநிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நாலு அங்குல அளவுக்கு மழைநீர் தேங்கியிருக்கிறது. இது மனித வாழ்க்கைக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான அச்சுறுத்தல் என்று அந்த நாட்டின் தேசிய பருவநிலை சேவைகளின் துறை அறிவித்திருக்கிறது. வெள்ளத்தால் பலரும் இறந்திருக்கின்றனர். இந்த ஆண்டும் அந்நகரத்தில் அதே போல கனமழையின் காரணமக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. கனமழையும், திடீர் வெள்ளமும் இன்று உலகளாவிய பேரிடர்களாக மாறிவிட்டன.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1



ஒரு காலத்தில் பேரிடர் மீட்புத்துறை என்ற ஒன்று இல்லை. இன்று அத்துறையின் சேவை ஆண்டு முழுவதுமே தேவைப்படும் அளவுக்கு நிலைமைகள் உருவாகியிருக்கின்றன.

இந்த மழைக்கு என்ன காரணம்? புவி வெப்பமயமாதலினால் உருவாகியிருக்கும் பருவநிலை மாற்றம் தான். வானிலைக்கும் காலநிலைக்கும் நெருக்கமான தொடர்பு கொண்டதாக புவி வெப்பநிலை விளங்குகிறது. வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க மழைப் வானிலையும் காலநிலையும் மாற்றமடைகின்றன. வானிலையின் ஓர் அங்கமான மழைப் பொழிவும் அதிகரிக்கிறது.

கடுமையான வெப்பத்தின் விளைவாக ஒரு பகுதியிலிருக்கும் வளிமண்டலக் காற்று விரிவடைந்து, அங்கு ஏற்படும் வெற்றிடம் அடர்த்தி மிகுந்த வளிமண்டலக் காற்றை தன்னை நோக்கி இழுக்கிறது. அவ்விதம் வந்து நிரம்பிடும் காற்றினால் மேகங்கள் திரண்டு கனமழை பெய்கிறது. வானத்தில் திரண்டிருக்கும் மேகங்கள் மீது வெம்மையான புவிக்காற்று சென்று படிவதால் மேகவெடிப்பு உருவாகின்றது.

ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல், உத்தரகாண்ட் மாநிலங்களில் இந்த ஆண்டின் ஏழு மாதங்களுக்குள்ளாகவே 26 மேகவெடிப்புகள் உருவாகியிருப்பதாக செய்திகள் சொல்கின்றன. இதற்குக் காரணம் பருவநிலை மாற்றம் என்கிறார்கள் அறிஞர்கள். புவி வெப்பமாதலின் விளைவாக இந்தியாவைச் சுற்றியுள்ள கடல்களில் இருக்கும் நீர் அதிகளவில் ஆவியாகி, ஈரப்பதம் நிறைந்த காற்றாகச் சென்று பெருமழைப் பொழிவுகளையும் மேகவெடிப்புகளையும் உருவாக்குவதாக வானிலை ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

நிலக்கரி பயன்பாட்டுக்கு வந்த இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்குள்ளாகவே நமது புவி, பெருந்தொழில் முதலாளிகளாலும், கட்டற்ற நுகர்வு மனப்பான்மையாலும் சூழல் மாறுபாட்டுக்கும், வெப்பமாதலுக்கும் ஆளாகி தத்தளிக்கத் தொடங்கியிருக்கிறது. இனி வெறுமனே பேரிடர் மீட்பு மட்டுமே போதாது. காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் உறுதியான நடவடிக்கைகள் தேவை. தமிழ்நாடு அரசு இதை உணர்ந்து சுற்றுச்சூழல் துறையை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை என மாற்றியிருப்பது வரவேற்புக்குரியது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இப்படியொரு துறை இல்லை என்றே நினைக்கிறேன்.

பெயர் மாற்றத்தோடு, செயல்மாற்றமும் கைகோர்க்க வேண்டும் என்பது காலநிர்பந்தம். நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றுவது, கார்பன் உமிழ் அளவை குறைப்பது, மாற்று எரிசக்திகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து அதிகப்படுத்துவது, வனங்களின் அளவை அதிகரிப்பது உள்ளிட்ட பணிகளை அரசு போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடவேண்டும். ’கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை’ என்றார் வள்ளுவர். நாம் அறிவியல் மனப்பான்மையோடு விழிப்பு கொண்டு செயலாற்றவில்லை என்றால் பெய்யாமல் கெடுக்கும் மழை, பெய்தும் உலகைக் கெடுக்கும்.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 16

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment