-
அழகிய பெரியவன்
ஜென்மம் இத்தேசத்தில் எய்தினராயின்…
இந்தியா தன்னுடைய எழுபத்தைந்தாவது விடுதலைக் கொண்டாட்டங்களை பெருமிதத்துடன் தொடங்கியிருந்த நேரத்தில், அதன் இளம் குடிமகன் ஒருவன் சாதி இந்துக்களுக்காக (சவர்னர்) வைக்கப்பட்டிருந்த பானையிலிருந்து நீரெடுத்துப் பருகிய ‘குற்றத்திற்காக’ ஆசிரியர் ஒருவரால் வகுப்பறையிலேயே அடித்து நொறுக்கப் பட்டிருக்கிறான் (கொல்லப் பட்டிருக்கிறான்).
2002ல் கோத்ரா இரயில் எரிப்பைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட கலவரத்தில், ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களையே விடுதலை செய்கிறது இந்தியாவுக்குள்ளிருக்கிற ஒரு சட்டத்தின் அரசு. ஆனால் தாகத்துக்கு தண்ணீர் மொண்டு குடித்ததற்காக ஒரு தலித் சிறுவனுக்கு மரணத்தை தண்டனையாக வழங்குகிறது இந்தியச் (சாதியச்) சமூகம். எவ்வளவு முரண்! இது தான் இந்திய விடுதலையின் எழுபத்தைந்து ஆண்டுகால நிலை.
ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மாவட்டத்திலுள்ள சுரானா சைலா கிராமத்தில், சயல் சிங் என்பவர் சரஸ்வதி வித்தியா மந்திர் என்ற பெயரில் பள்ளி ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். அவர் கல்வியைக் கற்பிக்க பள்ளி நடத்தாமல், சாதியத்தை கற்பிக்கவே பள்ளியை நடத்தி வந்தது போல் தெரிகிறது.
கடந்த மாதம் 20 ஆம் தேதி அப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த இந்திர குமார் தாகத்திற்காக பானையிலிருந்து நீரை மொண்டுப் பருகியிருக்கிறான். அதைப் பார்த்த சயல் சிங், அந்தப் பானை சாதி இந்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமானது. அதில் தலித் மாணவர்கள் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று இழிவான வார்த்தைகளால் சொல்லித் திட்டிக் கொண்டே இந்திர குமாரை அடித்திருக்கிறார். அந்தச் சிறுவனின் கண்கள் வீங்கி காதிலிருந்து இரத்தம் வழியத் தொடங்கியிருக்கிறது. உடலின் ஒரு பக்கம் செயலிழந்துப் போயிருக்கிறது.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
சாதி இந்து ஆசிரியரின் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஜாலோர், பாகோடா, பின்மால், உதய்ப்பூர், மேசானி ஆகிய மாவட்ட மருத்துவ மனைகளுக்கெல்லாம் சிகிச்சைக்காக அலைந்து திரிந்த தந்தை தீவாராம் மேக்வால், இறுதியில் அகமதாபாத் மருத்துவமனையில் அவனைச் சேர்த்திருக்கிறார். கடைசியில் அந்தச் சிறுவன் அகமதாபாத் மருத்துவமனையில் இறந்திருக்கிறான்.
இதற்கிடையில் ரஜபுத்திர சாதியைச் சேர்ந்த அந்த ஆசிரியரின் சார்பில் சுமார் நாற்பதற்கும் மேற்பட்டோர் தீவாராம் மேக்வாலின் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். ஒன்றரை லட்சம் ரூபாயை இழப்பீடாகத் தருவதாகவும், ஒரு லட்சம் ரூபாயை சிகிச்சைக்கென கொடுப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். அதை வாங்கிக்கொண்டு வாயைமூடி இருந்துவிட வேண்டும் என்றும், காவல் துறையில் புகார் கொடுக்கக் கூடாது என்றும் மிரட்டியிருக்கிறார்கள்.
தற்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஒருவேளை அங்கு பா.ஜ.க ஆட்சி செய்திருந்தாலும் இப்படித்தான் நடந்திருக்கும். ஏனெனில் இந்தியா, அரசியல் கட்சிகளின் போர்வையில் சாதியால் ஆளப்படுகிற நாடு.
அந்தச் சிறுவனின் கொலைக்கு கண்டனங்களும், குடும்பத்துக்கு இழப்பீடும் அறிவிக்கப் பட்டிருக்கின்றன. சுரணையுள்ள ஒரு ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் இதைக் கண்டித்து தன் பதவியை இராஜினாமாவும் செய்திருக்கிறார் (பனாசந்த் மேக்வால், அட்ரு சட்டமன்றத் தொகுதி).
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
இந்தக் கொடூர நிகழ்வு சில நாட்களுக்கு பேசுபொருளாக இருந்து பின்னர் மறைந்து போகும். இந்தியா அந்நிய ஆதிக்கத்திடமிருந்து விடுதலைப் பெற்றிருக்கலாம். ஆனால் அது இன்னமும் சாதியால் அடிமைப் படுத்தப் பட்டிருக்கும் நாடு. முரண்பாடுகளின் மூட்டையாகவும், பிற்போக்குத் தனங்களின் பிறப்பிடமாகவும், முட்டாள் தனங்களின் முகமாகவும் இந்தியா இன்னமும் விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிடவும் சிறந்த உதாரணம் வேறு எதுவும் இருக்க முடியாது.
‘ஜாதி மதங்களைப் பாரோம் – உயர் ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின் வேதியராயினும் ஒன்றே – அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே’ என்று பாரதி (தேசிய கீதங்கள்) பாடினார். அது ஒரு கனவு. ஒரு இலட்சியம். வேதியரும், வேறு குலத்தினரும் ஒன்றே என மேடைதோறும் முழங்கிக் கொண்டு பட்டியலின மக்களை சாதியின் பெயரால் நாள்தோறும் கொன்று கொண்டிருக்கிறது இந்தியா.
இந்திய ஒன்றிய அரசின் தேசிய பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் கடைசியாக வெளியிட்டிருக்கும் 2016 ஆம் ஆண்டு அறிக்கையின்படி இந்திய ஒன்றியம் முழுமையிலும் சாதி வெறியால் 777 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். உத்திர பிரதேசத்தில் மட்டும் அதிகபட்சமாக 274 பேர். தமிழ்நாட்டில் 58 பேர். இந்தச் சாதிவெறி கொலைகளில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது. (ஆதாரம்: NCSC அறிக்கை 20.09.2020). இந்தப் புள்ளிவிவரம் அலுவல் ரீதியாக பதிவாகியது மட்டுமே. வெளியில் தெரியாத வண்ணம் எத்தனையோ மறைந்தும் போயிருக்கலாம்.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
1998 ஆம் ஆண்டு, தமிழகத்தில் சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்திலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தனம் என்கிற மாணவி ஜாதி இந்து மாணவர்கள் குடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பானையிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடித்து விட்டாள் என்பதற்காக ஒரு ஆசிரியரால் தாக்கப்பட்டாள். அந்தச் சாதிய கொலைவெறித் தாக்குதலில் தனம் ஒரு கண்ணின் பார்வைத் தெளிவை இழந்தாள். கால் நூற்றாண்டு கழிந்தும் அதைவிடவும் கொடூரமான சம்பவங்கள் பட்டியலின மக்களுக்கு எதிராக இந்திய ஒன்றியத்தில் நடந்து கொண்டிருக்கின்றன என்றால் நாம் இன்னும் எதில் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம்? நாம் எழுபத்தைந்தாவது விடுதலை நாளை கொண்டாடுவதன் உண்மையான பொருள்தான் என்ன?
மனம் விரும்பி காதலிக்கும் இரு சாதி இணைகள் இந்தியாவில் யாருடைய எதிர்ப்பும் இன்றி திருமணம் செய்து கொள்கிற நிலை இருக்கிறதா? ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடக்கின்றன. இந்திய சனநாயக நாட்டில் உழைக்கும் மக்களுக்காகப் பணியாற்றுவதாகச் சொல்லி பதிவு செய்து இயங்கும் கட்சியே சாதிமறுப்பு திருமணத்துக்கு எதிராக இருந்ததை இளவரசன் திவ்யா விடயத்தில் பார்க்க முடிந்தது. இன்றும் நாட்டில் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசியகொடியை ஏற்ற முடியாத நிலை இருக்கிறது. அவ்விதம் ஏற்ற வேண்டுமென்றால் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சித் தலைவரும் காவல் துறையும் தான் துணைக்கு வரவேண்டும்.
ஜவஹர்லால் நேரு, குல்ஜாரிலால் நந்தா, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொராஜி தேசாய், சரண் சிங், ராஜீவ் காந்தி, விஸ்வநாத் பிரதாப் சிங், சந்திர சேகர், பி.வி.நரசிம்ம ராவ், ஹெச்.டி.தேவ கவுடா, இந்தர் குமார் குஜ்ரால், அடல் பிகாரி வாஜ்பேயி, மன்மோகன் சிங், நரேந்திர மோடி என்ற இந்தியப் பிரதமர்களின் வரிசையில் தலித் ஒருவருக்கு இடமுண்டா? அந்த இடம் எப்போது உருவாகும்? தலித் மக்களின் கல்வி நிலையைப் பற்றியோ, பொருளாதார முன்னேற்றங்களைப் பற்றியோ விரிவாக இங்கு எதுவும் சொல்லத் தேவையில்லை.
தலித் மக்கள் மட்டுமின்றி பெண்கள், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள், மாற்றுப் பாலினர் ஆகியோரின் நிலையும் இந்தியாவில் இதைப் போலத்தான் இருக்கின்றன. 2020-2021 ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக தேசிய அளவில் 26,513 புகார்கள் தேசிய பெண்கள் ஆணையத்தால் பெறப்பட்டுள்ளன.
இவற்றில் அமில வீச்சு 9, மணக்கொடை (வரதட்சிணை) கொலைகள் 327, பாலியல் வல்லுறவு 1293, காவல்துறை அத்துமீறல் 1460 (ஆதாரம்: NCW அறிக்கை, 2020-21) பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக அதிகப் புகார்களைப் பெறும் மாநிலங்களில் தமிழகம் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் 48.04% பெண்கள், அரசமைப்புச் சட்டம் வழங்கிடும் உரிமைகளை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர் என்கிறது அந்த அறிக்கை.
மதச்சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழும் சூழல் இந்தியாவில் தற்போது இல்லை என்று உலகளவிலான ஊடகங்களே செய்திகளை வெளியிடும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகியுள்ளன. சிறுபான்மையினரை அழித்தொழிப்போம் என்று மிக வெளிப்படையாக பேசிடும் நிலை (யதி நரசிங்கானந்த் கிரி) நிலவுகிறது.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
பசுவின் பெயராலும், மாட்டிறைச்சியின் பெயராலும், மதமாற்றத்தின் பெயராலும் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இவையெல்லாம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 29 மற்றும் 30 வழங்கிடும் உரிமைகளுக்கு எதிரானவை என்பதை குறித்து கவலைபடுவதற்கு இங்கு வாழும் பெரும்பான்மையானவர்கள் தயாராக இல்லை.
இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும். மதமாற்றத்துக்கு மரண தண்டனை வழங்க வேண்டும், சிறுபான்மையினரின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும் என்று இன்று பேசுவது சாதுக்களின் சம்மேளனங்கள் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களே அவ்வாறு பொதுவெளியில் பேசுகிறார்கள்.
அமெரிக்காவின் கேட்டோ நிறுவனமும், கனடாவின் ஃபிராசர் நிறுவனமும், ஃபிரெடெரிக் நாமன் அமைப்பும் இணைந்து உலகம் முழுவதும் சுமார் 165 நாடுகளில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் மனித உரிமைகள் பட்டியலை (HFI) வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா 119 வது இடத்தைப் பெற்றிருக்கிறது.
அவர்கள் வைக்கும் 0-10 என்ற புள்ளிகளில் இந்தியா, பொதுவான மனித சுதந்திரத்தில் 6.39 புள்ளிகளையும், தனிமனித சுதந்திரத்தில் 6.2 புள்ளிகளையும், பொருளாதார சுதந்திரத்தில் 6.66 புள்ளிகளையும் பெற்றிருப்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது (cato.org/human-freedom-index).
தனிமனித மற்றும் பொருளாதார சுதந்திரம், சட்ட நடைமுறைகள், பாதுகாப்பு, மக்கள் இயக்கம், மதச்செயல்பாடுகள், கூட்டுறவு, மனிதக்கூடல், கருத்து வெளிப்பாடு, தகவல் பரவல், மனித உறவு, அரசின் செயல்பாடுகள், நீதி நடைமுறைகள், சொத்துரிமை, பணப் புழக்கம், வெளிநாட்டு வர்த்தகம், ஒழுங்குமுறைகள் உள்ளிட 12 பொருண்மைகளின் கீழ் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நமது ஆசிய கண்டத்தில் இருக்கின்ற சிங்கப்பூர் (48), மலேசியா (82), நேபாள் (84), பூடான் (98), ஸ்ரீலங்கா (112) ஆகிய நாடுகளே கூட நம்மைவிடவும் முந்தைய இடத்தில் இருக்கின்றன. நமது நாட்டுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறிய நாடுகளான ஸ்விசர்லாந்து, நியூசிலாந்து, டென்மார்க், எஸ்தோனியா, அயர்லாந்து ஆகியவை முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
’பிணியின்மை செல்வம் விளைவின்பம் – ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து’ (குறள்-738)
நோயில்லாதிருத்தல், செல்வம், விளைபொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்கிறார் வள்ளுவர். இவற்றுள் இன்பவாழ்வும், நல்ல காவலும் மிக மிக முக்கியமாகும். அவை இல்லையென்றால் வாழும் நாடு நாடாகத் தோன்றாது.
இந்திய அரசியலமைப்பின் தந்தை பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் அரசியலமைப்புச் சட்ட விவாதங்களுக்குப் பிறகு 1949 ஆம் ஆண்டு, நவம்பர் 25 அன்று நாடாளுமன்றத்தில் பேசுகிறபோது சொன்னார்.
“அரசியலமைப்புச் சட்டம் என்பது நாட்டுக்கு சட்ட மன்றம், அரசு நிர்வாகம், நீதித்துறை போன்ற உறுப்புகளை மட்டுமே வழங்க வல்லது. இதிலிருக்கும் உண்மை என்னவென்றால், நாட்டில் இந்த உறுப்புகள் சிறப்பாக இயங்குவதென்பது இவற்றை தமது கருவியாகக் கொண்டு தங்களின் விருப்பங்களையும், அரசியலையும் நிறைவேற்றிக் கொள்கிற மக்களையும், அரசியல் அமைப்புகளையும் பொறுத்து இருக்கிறது”
அவர் அந்த உரையில் மற்றோர் இடத்தில் சொன்னார்.
”சமூக சனநாயகம் இன்றி அரசியல் சனநாயகம் இல்லை. சமூக சனநாயகம் என்பதன் பொருள் என்ன? அதன் பொருள் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை கொள்கைகளாக அங்கீகரிக்கிற வாழ்க்கை முறை. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இல்லாத நிலை உருவாகுமானால் அது பலரின் மீது சிலர் செலுத்துகிற அதிகாரத்துக்கே வழிவகுக்கும்”
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் – 17
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.