அழகிய பெரியவன்
இடும்பைக்கூர் உணவகங்கள்
உணவகங்களுக்குப் போகிற ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒன்றை சுட்டிக் காட்டி வினா எழுப்புவது வழக்கம்.
ஏன் உணவை வாழை இலையிலோ, தையிலையிலோ கட்டித் தருவதில்லை? ஏன் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகிறீர்கள்? அச்சடிக்கப்பட்ட காகிதத்தை பொட்டலம் கட்ட உபயோகிக்கக் கூடாதே? இது புதிதாகச் சமைக்கப்பட்ட உணவா? இலேசாக ஊசிய வாடையைப் போல் அடிக்கிறதே? கொடுக்கிற பணத்துக்கான உணவின் அளவு இவ்வளவு தானா?
எங்கள் சிறு நகரில் ஒரு வினோதமான பழக்கம் இருக்கிறது. எல்லா இறைச்சி உணவுக் கடைகளிலும், பிரியாணி பாத்திரங்கள் கடைக்கு வெளியேதான் வைக்கப்பட்டிருக்கும். உணவை வாங்குகிற ஆட்கள் இந்தப் பாத்திரத்தை சுற்றி நின்று கொண்டு இருப்பார்கள். சிலர் பாத்திரத்துக்குள் குனிந்து பார்த்துக் கொண்டு பேசுவார்கள். பெரும்பாலும் அந்த பாத்திரத்தை மூடுவதில்லை என்பதால் சாலையில் போகின்ற வாகனங்கள் கிளப்பும் புழுதியும் தூசும் அந்த உணவில் வந்துப் படியும். இதைச் சுட்டிக்காட்டி, பிரியாணி பாத்திரத்தை உள்ளே வைக்கலாமே என்று நான் கேட்பேன். உள்ளே வைத்தால் ஆட்களுக்குத் தெரியாது என்று பதில் வரும். பிரியாணி கடை என்று பெயர்ப்பலகை வைத்த பிறகு எப்படி ஆட்கள் வராமல் போவார்கள்? நான் மீண்டும் கேட்பேன். கடைக்காரர் என்னை வினோதமாகப் பார்ப்பார்.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
காலையிலும் மாலையிலும் தள்ளுவண்டிகளில் இட்லி தோசை போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் சிற்றுண்டிக் கடைகள், உணவகங்கள், பீப் சிக்கன், காடை இறைச்சிகளைக் பொறித்துக் கொடுக்கும் கடைகள், துரித உணவு வகைக் கடைகள், போண்டா பஜ்ஜி வடை கடைகள், பேக்கரிகள், தேநீர் கடைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் எங்கள் ஊரில் இயங்கி வருகின்றன.
ஒரு சிறு நகரத்திலேயே இப்படியெனில், நாடு முழுவதிலும் இருக்கும் நகரங்களை கணக்கில் கொண்டால் அந்த எண்ணிக்கை பெருமளவு பெருமளவு இருக்கும். இத்தனை உணவகங்களிலும் உணவின் தரமும், பாதுகாப்பும் பேணப்படுகின்றனவா? நிச்சயமாக கிடையாது. உணவங்கள் பெரும்பாலும், சாப்பிட வருகிற மனிதரின் வயிற்றுப்பையை கணக்கில் கொள்வதில்லை; பணப்பையை மட்டுமே கணக்கில் கொள்கின்றன.
மனிதரின் இன்பத் துய்ப்பில் உணவுக்கே எப்போதும் முதலிடம். அடுத்தடுத்த நிலைகளில் தான் காமமும், போதையும், தனி விருப்பங்களும் வருகின்றன. எல்லா பாடுகளும் இந்த ஒரு ஜாண் வயிற்றுக்குத் தானே? என்று எளிய மக்கள் மிக இயல்பாகப் பேசுவார்கள். பழம்பாடல் ஒன்றில் உணவோடும், வயிற்றோடும் மனிதர் படும் பாட்டை நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார் பிற்கால ஔவை.
‘ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒரு நாளும் என்நோவு அறியாய் இடும்பைக்கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது’
ஒரே ஒருநாளுக்கு சாப்பிடாமல் இரு என்றால் இருப்பதில்லை. சரி, நிறைய உணவு இருக்கிறது. பலநாட்களுக்கும் சேர்த்து சாப்பிட்டுவிடு என்றால் அதையும் கேட்பதில்லை. வயிறே நீ என் வேதனையை புரிந்து கொள்ளாமல் பெரும் துன்பத்தைத் தருகிறாய். உன்னுடன் வாழ்வது மிகவும் சிரமம் என்கிறார் ஔவை. உணர்வில்லாமல் கூட ஒரு மனிதன் இருந்துவிடலாம். உணவில்லாமல் இருக்க முடியாது.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
உயிர் வாழ்தலின் அடிப்படைத் தேவையான பசியை தீர்த்துக் கொள்வதற்குத்தான் உணவு. உணவை உண்டால்தான் உயிர் வாழும், உடல் வளரும், ஆற்றல் கிடைக்கும். ஆனால் இந்த நிலைகளைக் கடந்து, சுவைக்காக உணவு என்கிற நிலையை உலகம் எட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
மனிதர்கள் உணவை தீயில் வாட்டிச் சுவைக்கத் தொடங்கியதிலிருந்தே ஒருவேளை அது தொடங்கியிருக்கலாம். உணவு வணிகத்தின் அடிப்படையே சுவையும், வகை வகையான உணவை சாப்பிட விரும்பும் மனிதனின் ஆசையும் தான். இதில் பசியாறுதல் என்பது கொஞ்சம் தான் இருக்கிறது. உணவின் மீதான மனிதரின் இந்த ஆசையைத்தான் உணவகங்கள் பணமாக்கிக் கொள்கின்றன. ஆனால் அதில் நேர்மை இருப்பதில்லை என்பதை அண்மையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பெருநகரங்களில் நடத்திய சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
வெளி மாநிலங்களிலிருந்து சென்னைக்கு இரயில் மூலமாக டன் கணக்கில் கொண்டு வரப்படும் இறைச்சிகள் கெட்டுப் போயிருப்பதை ஒருமுறை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இரயில் நிலையத்திலேயே கண்டுபிடித்து அழித்தனர். ஒருவேளை அப்படிக் கண்டுபிடிக்கப்படாமல் போயிருந்தால், கெட்டுப்போய் துர்நாற்றம் வீசும் அந்த இறைச்சிகள் சில வேதிப் பொருட்களால் நாற்றம் போக அலசப்பட்ட பின்னர், பக்குவமாகச் சமைக்கப்பட்டு நமது மேசைக்கு வந்திருக்கும்.
அண்மையில் சென்னை மதுரை உள்ளிட்ட பெரு நகர உணவகங்களில், உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் நடத்தப்பட்ட ஆய்வுகள் பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவிகின்றன. நாட்கணக்கில் வைக்கப்பட்டிருக்கும் கெட்டுப்போன இறைச்சிகளையும், காலாவதியான சமைத்த உணவுப்பொருட்களையும், நாட்பட்ட எண்ணையையும், தடைசெய்யப்பட்ட வண்ணங்கள் அதிகமாகச் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களையும் அந்த அதிகாரிகள் கைப்பற்றியிருக்கிறார்கள்.
ஷவர்மா எனப்படும் அசைவ உணவையும், பிரியாணியையும் சாப்பிட்டவர்கள் இறந்துபோன செய்தி முன்னர் பெரிய அளவில் பேசப்பட்டது. உணவகத்தில் பரிமாறப்பட்ட அசைவ உணவில் புழுக்கள் இருந்ததாக, விரும்பத்தகாத பொருட்கள் இருந்ததாகச் செய்திகள் வந்துகொண்டே தான் இருக்கின்றன.
காலாவதியான பொருட்களைச் சேர்த்து சமைப்பது, கெட்டுப்போன காய்க்கறிகளை உபயோகிப்பது, சுத்தம் இல்லாமல் சமைப்பது, நாட்பட்ட பொருட்களை குப்பைக் கூடையில் எறியாமல் ‘எப்படியாவது சரிசெய்து’ விற்றுவிடுவது, தடை செய்யப்பட்ட உடல் நலத்துக்கு ஆபத்தை உருவாக்கக்கூடிய வேதிப்பொருட்களை உணவில் சேர்ப்பது என்று சமைக்கப்பட்ட உணவு வணிகத்தில் சுயநலமும் அலட்சியமும் நிறைந்த முறைகேடுகள் மலிந்திருக்கின்றன.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
சமைக்கப்படாத உணவு வணிகத்திலும் இதே அளவுக்கு முறைகேடுகள் நிறைந்திருக்கின்றன. இறைச்சியையும், மீனையும் பலநாட்களுக்கு வைத்திருக்க ஃபார்மால்டிஹைடு எனப்படும் புற்றுநோயை உருவாக்குகின்ற வேதிப்பொருள் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது என்ற ஒரு செய்தியே இதற்கு உதாரணமாகச் சொல்வதற்குப் போதுமானது. அந்த அளவிற்கு மனிதரின் இலாபவெறியும் சுயநலமும் இந்தத் துறையில் மிகுந்திருக்கின்றன.
இன்று உணவு வணிகம் பெரும் வணிகமாக இருக்கிறது. உலகளவில் அதிக வருவாயை ஈட்டுவதும் அந்த வணிகம் தான். இந்தியா, உலகளவில் உணவுத் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னேறிவரும் நாடு. இங்கு உணவை வைத்து செய்யப்படும் வணிகம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் 535 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயரும் என கணிக்கப்படுகிறது. இத்துறையில் நிறையபேர் வேலை செய்கிறார்கள். நேரடியாக மக்களின் உடல் நலத்துடனும் உயிர்ப்பாதுகாப்புடனும் தொடர்புடையதாக இந்தத் துறை இருக்கிறது. இதை மேலும் மேலும் ஒழுங்கு படுத்துவது அவசியம்.
உணவு பாதுகாப்பு தொடர்பாக 2006ல் இயற்றப்பட்ட ’உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் சட்டம் – 2006 (FSSAI)’ என்ற ஒரு சட்டம் தற்போது நடைமுறையில் இருக்கிறது. உணவு பாதுகாப்பில் அதை விற்கிறவருக்கு இணையாகவும், சொல்லப் போனால் அதற்கு அதிகமாகவும் உண்கிறவருக்கு அதிக அக்கறை இருக்க வேண்டும். தாங்கள் சாப்பிடச் செல்லும் உணவகம் FSSAI தரச்சான்று பெற்றுள்ளதா என கவனிப்பது மிகவும் முக்கியம். உணவின் தரம் சரியில்லையென்றால் புகார் அளிக்கவும் கேள்வியெழுப்பவும் இழப்பீடு கோரவும் தயங்கக்கூடாது.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
உணவகங்கள் FSSAI சட்ட விதிகளின் படி நடக்கிறதா என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். Heart Attack Rewind, Project Clean Street Food, National Street Food Festival, MoU with Nasscom, Eat Right India Movement போன்ற நிகழ்ச்சிகளை FSSAI நடத்தி வருகிறது. இந்த நிகழ்சிகளையும், விழிப்புணர்வு பரப்புரையையும் பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை நடத்திட வேண்டும்.
சென்னையில் உணவு வீதி அமைக்கப் படப்போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே சென்னை தீவுத்திடலில் பிரியாணி திருவிழாவும் நடத்தப்பட்டது. அங்கங்கே பாரம்பரிய உணவு வகைகளின் திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன. இங்கெல்லாம் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வினை உணவுடன் சேர்த்தே ஊட்டவேண்டும்.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் – 18
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.