அழகிய பெரியவன்
.
உள்நோக்கக் கொண்டாட்டங்கள்
.
கொண்டாட்டங்கள் இல்லாத மனித வாழ்க்கை வெறுமையானது. மனதை இலகுவாக்கி, களிப்படையச் செய்து, உற்சாகமூட்டுவது கொண்டாட்டங்கள் தான். திருமணம், வீட்டுவிழா, பிறந்தநாள் போன்ற தனிவிழாக்களில் சிலர் மட்டுமே பங்கேற்க முடியும். எல்லா வரையறைகளையும் தாண்டி, எல்லாரும் ஒன்று சேர்வது பண்டிகைகளில் தான். பண்டிகைகள் எனப்படும் திருவிழாக்களில் எப்போதுமே ஊற்சாகம் பொத்துக் கொள்ளும்.
திருவிழாக்கள் வைத்திருக்கும் கூட்டு மனநிலை ஓர் ஆதி மனநிலை. பிராண்ட்ஸ் ஃபனான் போன்ற தத்துவவாதிகள் இந்த ஆதி மனநிலை குறித்தும், திருவிழாக்களுக்கும் மானுட உளவியலுக்கும் இருக்கின்ற தொடர்புகள் குறித்தும் நிறைய ஆய்வுகளை செய்திருக்கிறார்கள்.
சிறுவயது தொடங்கி வாலிபவயது வரை நான் உற்சாகத்தோடு பங்கேற்ற பல திருவிழாக்கள் என் மனதில் வந்துபோகின்றன. அவை ஆழமான குதுகலம் மிக்க நினைவுகள். நான் படித்து வளர்ந்த ஆம்பூர் தேவலாபுரம் ஆற்றுத்திருவிழா அந்நினைவுகளில் முதன்மையானது. அன்றைக்கு தேவலாபுரம் பாலாற்றங்கரையில் இருக்கும் செழிப்பான விளைநிலங்கள் சூழ்ந்த ஓர் ஊர்.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
திருவிழா குறித்து சாட்டு வைத்ததுமே முதல் வேலையாக பாலாற்றை சுத்தம் செய்திடும் வேலைகள் தொடங்கிவிடும். நான் படித்த பள்ளிக்கு எதிரில் இருக்கும் பெரிய திடலில் (ஊர் மந்தை) திருவிழா என்பதால் எல்லாவற்றையும் நாங்கள் அருகிலிருந்து எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்ப்போம். அன்று பாலாறு வெண்ணிற மணல் பரப்புடன் சுத்தமாகவும், பரந்து விரிந்தும் இருந்தது. ஆனாலுமே மாட்டை கட்டி மணல் பரப்பை சமப்படுத்திட கோரை ஓட்டுவார்கள். திருவிழா முடியும் வரை மக்கள் யாரும் ஆற்றுக்குள் இயற்கை உபாதைகளை கழிக்க இறங்க மாட்டார்கள். மக்கள் மனதிலே கட்டுப்பாடும் பயமும் வந்துவிடும்.
கெங்கையம்மன் கோயிலைச்சுற்றி பெரிய பந்தல் போடப்படும். கூழ் ஊற்றுதல், சிரசு ஊர்வலம், மஞ்சள் தண்ணீர் ஆடுதல் என்று மூன்று நாள் திருவிழா களை கட்டிவிடும். ஆற்றில் பலவகையான தின்பண்டங்கள், பொம்மைகள், அணிமணிகள் என்று பலவகையான பொருட்களை விற்கும் கடைகள் ஒரு வாரத்துக்கு முன்பாகவே வந்துவிடும். குடை ராட்டிணம், தொட்டி ராட்டிணம் என்று பெரிய பெரிய ராட்டிணங்களை நிர்மானிக்கும் வேலைகள் நடக்கும். கடல் கன்னி, பாம்பு கன்னி போன்ற காட்சி அரங்குகளும் உண்டு.
இரண்டாவது நாள் தான் பெரியவிழா. பிரபலமான திரைப்பட பின்னணிப் பாடகர்கள் பாடும் பாட்டுக் கச்சேரியை வைப்பார்கள். திறந்த ஆற்றுத்திடல். கரையில் மேடை. நட்சத்திரங்கள் மின்னும் கரிய, அமைதியான, இனிய இரவு. காற்றில் கலக்கும் இசைப்பெரு வெள்ளம். ஆறு முழுவதும் மணலில் குடும்பம் குடும்பமாக, கூட்டம் கூட்டமாக பொறிக்கடலை தின்பண்டங்களை கொறித்துக்கொண்டும் விசில் அடித்தும் ஆடியும் பாடியும் இலயித்துக் கொண்டும் கிறங்கிக்கிடக்கும் மக்கள். கச்சேரி முடிவதற்குள் ஒருபுரத்தில் நட்சத்திரங்களை வம்புக்கிழுக்கும் பிரகாசங்களுடனும், ஒளிக்கற்பனைகளுடனும் வானவேடிக்கை. இதையெல்லாம் அனுபவிக்கும் மனித மனநிலை எப்படி இருக்கும் என்ற கற்பனையை எளிதாகச் செய்துகொள்ளலாம். என்னதான் விலகியிருக்க நினைதாலும் இக்கொண்டாட்டங்களும் சூழலும் உங்களை உள்ளே இழுத்துவிடும். இவற்றினூடே இளைஞர்களின் வேடிக்கை கலாட்டாக்கள், இனிய ரகசியக் காதல்கள், உறவுகள் நிகழ்ந்தேறும்.
இப்பண்டிகையை ஒட்டிய வீட்டு கொண்டாட்டங்கள் வேறு. ஒவ்வொரு வீட்டிலும் சிறப்புணவு. என்னுடைய பாட்டி வீட்டில், தேங்காய்ப் பாலெடுத்து தேங்காய்ச்சோறு செய்வார்கள். எங்களுக்கு அது அப்போது மிக விசேடம். கூடவே அதற்கு சுவை மிகுந்த ஏதேனுமொரு இறைச்சிக் குழம்பு. எங்கெங்கோ தொலைவுகளில் இருக்கும் சொந்தங்களை கடிதம் எழுதி அழைப்பார்கள். எல்லாரும் ஒன்று கூடி, நலதுக்கம் விசாரித்து, சிரித்து மகிழ்ந்து கழியும் திருவிழா நாட்கள்.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
மற்றொரு மறக்க முடியாத திருவிழா என்னுடைய ஊருக்கு அருகில் இருக்கும் சாத்துக்கடி திருவிழா. இங்கும் கெங்கையம்மன் பண்டிகை தான். இங்கு ஆறு கிடையாது. ஆனால் சாமி சோலை எனப்படும் பெரிய மரங்கள் சூழ்ந்த திடல் உண்டு. ஆல், அரசு, வேம்பு, அத்தி, வில்வம், விளா, நாவல், புங்கன், புளியன் என்று பிரம்மாண்டமாய் வளர்ந்திருக்கும் மரங்கள்.
எக்காலத்திலும் அடர்ந்த இருளும், பறவைகளின் கூச்சலும், பேரமைதியும் அங்கு குடிகொண்டிருக்கும். பகலில் கூட அந்தப் பக்கங்களில் நடமாடுவதற்கு ஆட்கள் அஞ்சுவார்கள். அந்தப்பக்கமாக போகும் சிறுவர் கூட்டம் மட்டும் பழங்களை அடிக்கும். நானும் கூட அங்கு பழங்களை அடித்திருக்கிறேன். அத்திப் பழத்தையும் நாவலையும் எடுத்துத் தின்றிருக்கிறேன். பெரிய பெரிய வில்வம் பழங்களை கிழிந்துபோன புத்தகங்களை ஒட்டுவதற்காக அடித்து வீழ்த்தியிருக்கிறேன்.
அத்திடலில் இருக்கும் கோயிலில் அம்மன் சிரசு வந்து சேர அரைநாள் பிடிக்கும். பலவகையான மனிதர்களும் சேர்ந்து வாழும் சாத்துக்கடியில் வீதி வீதியாக சிரசும் கரகமும் போகும். அனேகமாக எல்லாவீடுகளிலும் மாலை சாற்றும், மஞ்சள் நீர் சுற்றி கற்பூர தீபாரதணையும் நடக்கும். தேங்காய்ச்சூரை விடுவார்கள். சிலர் ஆடு அல்லது கோழிகளை பலியிடுவர்.
அம்மன் சிரசுக்கும், கரகத்துக்கும் முன்னால் நாட்டுமேளம், பம்பை மேளம், கரகாட்டம், சிலம்பம் என்று அணியணியாக ஆடிக்கொண்டு போவார்கள். சிலம்பம் சுற்றுவதில் சில இஸ்லாமியர்களும் சேர்ந்துகொள்வதை நான் பார்த்திருக்கிறேன். இங்கேயும் அதேவிதமான தின்பண்டக் கடைகள், ராட்டிணங்கள், வளையங்களை வீசி பொருட்களை எடுப்பதைப் போன்ற பல கேளிக்கை விளையாட்டுகள். மாலையில் வானவேடிக்கை. கூடுதலாக இரவில் தெருக்கூத்தும் நாடகமும் உண்டு.
இந்த திருவிழாக்களில் இருந்தது வெறுமனே மத உணர்வு மட்டுமேயல்ல. அதில் சாதியையும் மதத்தையும் கடந்து எல்லா மக்களும் கலந்துக் கொண்டார்கள். மக்களிடம் பக்தியும், கொண்டாட்ட உணர்வும் சமவிகிதத்தில் கலந்து இருந்தன. காலம் செல்லச்செல்ல இந்தத் திருவிழாக்கள் பக்குவப்படும், மேம்படும் என்றே நான் நினைத்திருந்தேன். பலரும் அப்படித்தான் நினைத்திருப்பார்கள். ஆனால் இந்தத் திருவிழாக்கள் இன்று மாறிவிட்டன.
திருவிழாக்களில் தாய்வீட்டுச்சீர் கொடுப்பது, முதல் சடங்கைச் செய்வது, முதல் மரியாதையைப் பெறுவது வழிவழியாக சில குடும்பங்கள் தான். அதில் பங்காளிச் சிக்கல் ஏற்பட்டது சீர்குலைவின் முதல் தொடக்கம். பின்னர் ஒற்றுமை உணர்வு படிப்படியாகக் குறைந்தது. அந்தந்த ஊர்களின் பெருமிதத்தையும், சாதி ஆதிக்கத்தையும் காட்டுவதற்கான களமாக இத்திருவிழாக்கள் மாற்றப்பட்டன. திருவிழாக்களில் இருக்கும் கேளிக்கையை தொலைக்காட்சிகளும் பின்னர் கைபேசிகளும் சூறையாடின. இன்று திருவிழாக்களில் இருந்த அந்த ஆதி கூட்டு மனநிலை முற்றிலுமாக மறைந்து விலகல் உணர்வு தோன்றிவிட்டது.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
இன்று அந்த விலகல் மனநிலையை மதவாத கருத்தியல்கள் குறிவைத்து அள்ளிச் சுருட்டி, தனக்கான களமாக மாற்றியிருக்கின்றன. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் நாடுமுழுவதும் திட்டமிட்டு கொண்டாட ஊக்குவிக்கப்பட்டு வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாக்கள். சிறுவயதில் விநாயகர் சதுர்த்தியென்றால் கொழுக்கட்டை, சுண்டல். உகாதி என்றால் தோசைக்கறி. இப்படியாக இருந்த உணர்வுகளை தற்போதைய கொண்டாட்டங்கள் குற்ற உணர்வுக்குள்ளாக்கி குமையச் செய்திருக்கின்றன.
தமிழகத்தில் மட்டும் இலட்சத்துக்கும் மேற்பட்ட சிலைகள் நிர்மாணிக்கப்படும் என்று சில அமைப்புகள் அறிவித்துள்ளன. மக்களின் கொண்டாட்டங்களை தீர்மானிக்கும் உரிமையை இந்த அமைப்புகளுக்கு யார் கொடுத்தது என்று கேள்வி கேட்காத வகையில் இந்தச் சிலைகளுக்கு முன்னால் ஆடும் இளைஞர்கள் தெளிவின்றியும், வெறியிலும் இருக்கின்றனர். கிராமங்கள் தோறும், வீதிகள் தோறும் அதிகரித்திருக்கும் இந்தக் கொண்டாட்டங்களில் ஒரு துளியளவு கூட ஆன்மீகம் இல்லை, பக்தியில்லை. ஒற்றுமையுணர்வு இல்லை. கொண்டாட்டங்கள் என்பவை சகமனிதரை அவமதிப்பதல்ல. அரவணைத்து ஈர்த்துக் கொள்வதற்கானவை.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.