scorecardresearch

அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் – 19

Tamil writer Azhagiya Periyavan New Series for Tamil Indian Express Tamil News: அரசுகள் சில சட்டங்களை இயற்றியுள்ளன. பெயர் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. கலை இலக்கிய வெளிகளில் சிறப்புப் பாலினரைப் பற்றிய நேர்மரையான சித்தரிப்புகள் உருவாகி வருகின்றன. ஆனாலும் இது போதாது என்றே எண்ணுகிறேன்.

அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் – 19
Azhagiya Periyavan

அழகிய பெரியவன்

நாங்க யாரு?

வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென்று மழை பிடித்துக் கொண்டது. பலமான மழை. வண்டியை சாலையோரமாக நிறுத்திவிட்டு ஒரு அடுமனைக்குள் (பேக்கரி) நுழைந்து கொண்டேன். வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கென போடப்பட்டிருந்த மரபெஞ்சில் உட்கார்ந்து மழையை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன்.

தூரத்தில் ஒவ்வொரு கடையாக உதவி கேட்டு வந்துகொண்டிருந்த திருநங்கை ஒருவர் சிறிது நேரத்துக்கெல்லாம் நான் இருக்கும் கடைக்குள் நுழைந்து என்னருகில் அமர்ந்து கொண்டார். இளம் வயது. நல்ல கருப்பு. அழகான முகம். மஞ்சள் பூசி பொட்டிட்டிருந்தார். கொண்டையில் பூசுற்றப் பட்டிருந்தது. என்னைப் பற்றி ஒருவேளை அவர் அறிந்திருப்பார் போலிருந்தது. ஒரு மெல்லிய புன்னகை அவரிடம் வெளிப்பட்டது. திரைப்படத்தில் நடிப்பதற்காக திருநங்கை ஒருவர் தேவையென்று அவர்களின் தலைவியை ஒருநாள் பார்க்கப் போயிருந்தேன். அப்போது ஒருவேளை என்னை பார்த்திருக்கலாம். அல்லது யாராவது சில செய்திகளைச் சொல்லியிருக்கலாம். தான் பெற்றுவந்த பணத்தாள்களை எண்ணிக் கொண்டே என்னிடம் அவர் பேசத் தொடங்கினார்.

தினமும் இப்படிச் சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்கிறீர்கள் என்று நான் கேட்டது தான் எங்களின் உரையாடலுக்கான தொடக்கப் புள்ளி. தினந்தோறும் கிடைப்பதில் பாதியை அவர்களின் தலைவியிடம் கொடுத்துவிட்டு பாதியை தன்னுடைய தேவைக்காக வைத்துக் கொள்வதாகச் சொன்னார். என்னுடைய அடுத்தக் கேள்வி, உங்களுக்கு எதற்கு அவ்வளவு பணம். அவர் பட்டென்று சொன்னார்.

”நான் என்னுடைய குடும்பத்தை கவனித்துக் கொள்கிறேன். அவர்கள் என்னை வீட்டை விட்டு துரத்திவிடவில்லை. என்னை ஒரு ஆணாகவும், பெண்ணாகவும் ஏற்றுக்கொள்ளாத இந்தச் சமூகத்தில் நான் யாரை நம்பி இருப்பேன் சொல்லுங்கள்?”

வெளியே மழை வலுத்துப் பெய்து கொண்டிருந்தது. நான் அவரின் பதிலையே நினைத்துக் கொண்டிருந்தேன். இந்தச் சமூகத்தின் இயல்பான அங்கமாகிய சிறப்புப் பாலினர் குறித்த புரிதலோ, அக்கறையோ, அரவணைப்போ இல்லாமல் தான் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நான் சந்தித்தவருக்கு கிடைத்ததைப் போல வீட்டின் அரவணைப்பு எல்லாருக்குமே கிடைத்து விடுவதில்லை. LGBTQ எனப்படும் சிறப்புப் பாலினரில் முக்கால் விழுக்காட்டினர் வீட்டிலிருந்து துரத்தப் பட்டவர்களாகவும், சமூகத்திலிருந்து விலக்கப் பட்டவர்களாகவும் தான் இருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

அண்மையில் அவர்கள் சென்னையில் நடத்திய வண்ணமயமான வானவில்-2022 விழாவில் வலியுறுத்தியது சமத்துவத்தை தான். சாதியால், நிறத்தால், பாலினத்தால் நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளுடன் தங்களுக்கு நேரும் ஒடுக்குமுறைகளை இணைத்துக் கொண்ட அவர்கள் மார்க்சையும், அம்பேத்கரையும், பெரியாரையும் கருத்தியல் அடையாளங்களாக உயர்த்திப் பிடித்தனர்.

பாலின சமத்துவத்தையும் பாலியல் தேர்வையும் வலியுறுத்தும் தங்களின் கோரிக்கைகள் உயர்ந்த மனித விழுமியங்களைக் கொண்டதாக இருக்கின்றன என்பதை கெட்டித் தட்டிப்போன பொதுச்சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் முழங்கினார்கள். குடும்பம் முதலில் இதை புரிந்துகொண்டால் சமூகமும் இதை புரிந்து கொள்ளும். எல்லா ஒடுக்குமுறைகளின் தொடக்கப் புள்ளியாகவும் வளர் ஊடகாமகவும், நிகழ்களமாகவும் விளங்கிடும் குடும்பத்துக்கு இது குறித்த புரிதல்களை அரசு ஏற்படுத்திட வேண்டும். உரிய வல்லுனர்களின் மூலம் தனித்தனியே அழைத்து இந்த ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.

அரசுகள் சில சட்டங்களை இயற்றியுள்ளன. பெயர் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. கலை இலக்கிய வெளிகளில் சிறப்புப் பாலினரைப் பற்றிய நேர்மரையான சித்தரிப்புகள் உருவாகி வருகின்றன. ஆனாலும் இது போதாது என்றே எண்ணுகிறேன். அண்மையில் சிறப்புப் பாலினரை மய்யமாக வைத்து எழுதப்பட்ட ஒரு சிறுகதை நூலுக்கு அணிந்துரை எழுதிடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நூலின் பெயர் ’கைரதி 377’. இதை பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது.

பேசாப் பொருளை பேசத் துணிந்திருக்கும் மு. ஆனந்தனின் ’கைரதி 377’ எனும் இச்சிறுகதைத் தொகுப்பு, வாசிக்கிறவர்களின் மூளைகளில் புதிய சாளரங்களைத் திறந்து, புதிய செய்திகளை வெளிச்சமிட்டு, புதிதாக சிந்திக்கச் செய்யும் என்று உறுதியாக நம்புகிறேன்.

அறியப்படாத உண்மைகள், பேசப்படாத விடயங்கள் என்ற பெயரில் இந்த உலகில் இருப்பவையெல்லாம் தொலைவிலோ தூரத்திலோ இல்லை. நம்மைச் சுற்றித்தான் இருக்கின்றன. நமக்கு அருகிலேயே இருக்கின்றன. ஆதிக்க எண்ணங்களாலும், மரபு, மதம், பண்பாடு என்கின்ற பலவகையான கெடுபிடிகளாலும் நாம் அவற்றை அலட்சியத்தோடு பொருட்படுத்தாமல் விட்டு விடுகிறோம்.

இத்தொகுப்பில் இருக்கும் பதினோரு கதைகளும் இவ்வாறு நம்மால் அலட்சியப் படுத்தப்பட்ட, பொருட்படுத்தப்படாத, அருவருப்பாகவும், கேலியாகவும் கிண்டலாகவும், இழிவானதாகவும் முறையற்றதாகவும், வெகுமக்கள் விரோதமெனவும், சட்ட விரோதமெனவும் கருதப்படுகின்ற சிறப்புப் பாலினர்களைப் பற்றி பேசுகின்றன.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

சுவாசித்தல், உணவு உட்கொள்ளுதல், வளர்ச்சியடைதல், இனப்பெருக்கம் செய்தல் ஆகியவற்றை உயிருள்ளவற்றின் அடிப்படைப் பண்புகளாக அறிவியல் வரையறுக்கிறது. உயிரற்றவை எவையும் மேற்கண்ட செயல்களைச் செய்யா. இந்த உயிர்ப் பண்புகளில் இனப்பெருக்கம் செய்வதை இனங்களை நீடித்திருக்கச் செய்யும் கடமையாக மனிதரைத் தவிர்த்த மற்ற உயிரினங்கள் கருதுகின்றன. ஆனால் மனிதர்கள் இனப்பெருக்கத்தை அப்படிக் கருதுவதில்லை. இனப்பெருக்கம் என்கிற உயிரியல் செயலை மனிதர்கள் பாலியலாக மாற்றி, அதன்மீது கற்பு, ஆணாதிக்கம், சாதி, மதம், வணிகம் என்கிற சுமைகளை ஏற்றி மிக விசேடமாகப் பாவிக்கின்றனர். சொல்லப் போனால் மனித வாழ்க்கையின் ஆதாரப் புள்ளியாகவே பாலியல் மாற்றப் பட்டிருக்கிறது.

அறியாமையுடன் திரியும் மனிதரின் பார்வையில் உடன்பாடில்லாத எவையுமே விலக்கப்படவைதான். மாறிய அல்லது திரிந்த பாலினக் கூறுகளை அவர்கள் மூர்க்கமாக விலக்குகின்றனர். ஏனெனில் அவர்களால் அத்திரிந்த பாலினக் கூறுகளின் மீது கற்பு, ஆணாதிக்கம், சாதி, மதம், வணிகம் ஆகிய அளவுகோல்களை துல்லியமாகப் பொருத்த முடிவதில்லை!

பால் திரிபு அல்லது பால் மாற்றம் என்பதும், பலவகையான பால்விழைவுகளும் இயற்கையானதே. எல்லா உயிரினங்களிலும் இதைப் பார்க்க முடியும். தாவரங்கள் இருவகை இனப் பெருக்கத்திலும் ஈடுபடுகின்றன. ஒரு தாவரத்தின் வேரோ, தண்டோ, இலையோ, கிழங்கோ புதிய தாவரத்தைத் தோற்றுவிக்கிற பாலிலா இனப் பெருக்கத்தில் ஈடுபடுகிறது! மகரந்தச் சேர்க்கையால் பால் இனப்பெருக்கத்தின் மூலம் உருவாகும் விதைகளைப் போலவே சில தாவரங்கள் பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஸ்போர்கள் எனப்படும் நுண்ணிய விதைகளை உருவாக்குக்கின்றன! ஒரே தாவரத்தின் பூக்களிலேயே பெண்ணுறுப்பாகிய சூலகமும், ஆணுறுப்பாகிய மகரந்தத் தாள்களும் இடம்பெற்றுள்ளன.

விலங்கினங்களிலும் இப்படி உண்டு. மிக எளிய உயிரான மண்புழுக்கள் ஒரே சமயத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் செயல்படுகின்றன. ஒரே புழுவிலேயே ஆண் இனப்பெருக்க உறுப்புகளும், பெண் இனப்பெருக்க உறுப்புகளும் இருக்கின்றன. இதனால் இவற்றை ஹெர்மோபுரோடைட் என்று அறிவியல் உலகம் அழைக்கிறது. ஆண் விழைவு, பெண் விழைவு, பல எதிர்பாலினங்களைச் சேர்தல் என பலவகையான செயல்பாடுகளும் விலங்கினங்களில் இருக்கின்றன.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

விலங்கினங்களின் பாலியல் நடவடிக்கைகள் குறித்து தேடத்தொடங்கினால் பல ஆச்சர்யகரமான செய்திகளை நம்மால் அறிந்துகொள்ள இயலும். இதே ஆச்சர்யகரமான செய்திகள் மனிதரிலும் இருக்கின்றன. மனிதர்களும் விலங்கினங்களிலிருந்து வந்தவர்கள் தானே? கொஞ்சமே கொஞ்சம் அதிக அளவில் சுய சிந்தனையை அவர்கள் பெற்றிருப்பதால் உயிரியல் உண்மைகளைப் புறந்தள்ளி தாம் எண்ணுவதையே சரியென நினைக்கிறார்கள். இதன் விளைவாகத்தான் சிறப்புப் பாலினர்கள் மீதான அவலங்கள் தொடர்ந்து நிகழ்ந்தேறுகின்றன. மனிதர்கள் நிகழ்த்தும் இந்த அவலங்களை தன்னுடைய கதைகளில் எழுதியிருக்கிறார் ஆனந்தன்.

அலி, ஹிஜரா, யூனக், இன்டர் செக்ஸ், இடைப் பாலினம். திரினர், பாலிலி என்றெல்லாம் சிறப்புப் பாலினரைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பலவகையான சொற்களை ஆனந்தன் இக்கதைகளில் பயன்படுத்துகிறார். ஆனால் குறிப்பாக ’கைரதி’ என்ற பொதுப் பெயரைப் சிறப்புப் பாலினரை குறிப்பதற்காக உபயோகிக்கிறார். கவிதைகளில் நகுலனும் கலாப்பிரியாவும் பயன்படுத்திய சுசிலாவைப் போல! என்னுடைய கவிதைகளில் வரும் மௌனாவைப் போல. மா. அரங்கநாதன் கதைகளில் திரும்பத் திரும்ப வரும் முத்துக் கருப்பன் போல. மாற்றுப் பாலினரின் எல்லாருடைய கதைகளும் அவர்களைப் புறக்கணிக்கும் ஒற்றைப் புள்ளியிலிருந்தே முகிழ்ப்பதால், இந்த உத்தி, எல்லா கதைகளும் ஒருவருடையதே என்ற பார்வையை அளித்து அழுத்தத்தை உருவாக்குகிறது. கதிரவனுக்கு, ரவி என்றும் ஒரு பெயர் உண்டு. அதற்கு எதிர்ப்பதமாக சந்திரனை கைரவி என்கிறது தமிழ் அகராதி. இதற்கு அருகில் வரும் சொற்பிரயோகமான கைரதி, திருநங்கைகளைக் குறிக்கும் பிறிதொரு சொல்லாக இனி விளங்கலாம்.

அன்றாட வாழ்வில் மாற்றுப் பாலினர் சந்திக்கும் வெவ்வேறு சிக்கல்களை துல்லியமாகப் பேசும் இக்கதைகள் சில இடங்களில் நம்மைப் பிடித்து உலுக்குகின்றன. இத்தொகுப்பில் இருப்பவற்றை, மாற்றுப் பாலினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகளைச் சொல்கின்ற கதைகளாகவும், பொதுச்சமூகம் எந்தெந்த நிலைகளில் அவர்களைத் தம்முடன் இணைத்துக் கொள்வதற்கு தவறியிருக்கிறது என்ற விவரங்களை தரும் கதைகளாகவும் பகுக்கலாம்.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

நவீன சமூகம் என்று சொல்லிக்கொள்ளும் நம் சமூகம் முற்றிலுமாக ஒரு பாவனைச் சமூகம் தான். மனித குலத்திற்கு எதிரானவை என்று உறுதியாகத் தெரிவதைக்கூட இன்னும் நம்மால் விலக்க முடியவில்லை! சாதியம், ஆணாதிக்கம், அடக்குமுறைகள் என எண்ணற்ற இழிமைகளை நாம் இப்படிப் பட்டியலிடலாம். அப்பட்டியலில் மிக உறுதியாக மாற்றுப் பாலினரின் அவலங்களையும் சேர்க்கவேண்டும்.

குற்றப்பரம்பரை சட்டப்படி அலிகள் பெண் உடைகளை அணியக் கூடாது. அவர்கள் காலையிலும் மாலையிலும் காவல் நிலையத்துக்குச் சென்று கைரேகை வைக்க வேண்டும். இவற்றை மீறினால் இரண்டாண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும். அதைப் போலவே இயற்கைக்கு மாறாக உடலுறவு கொண்டால் சட்டப்பிரிவு 377 படி ஒரு வருட கடுங்காவல் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப் படலாம். திருநங்கை உதவித் தொகையைப் பெறுவதற்கு ஒருவர் பாலுறுப்பு நீக்க அறுவை சிகிச்சையை செய்திருக்க வேண்டும்.

இவையெல்லாம் சட்டப் பூர்வமாக சிறப்புப்பாலினர் சந்திக்கும் கொடுமைகள் என்றால், மதரீதியாகவும் அவர்களால் பெரும் கோயில்களிலோ, மசூதிகளிலோ, தேவாலயங்களிலோ மதக்குருக்களாக வரமுடியாது. இந்த அவலங்களையெல்லாம் இக்கதைகள் விரிவாக பதிவு செய்கின்றன. விண்ணப்பங்களில் சிறப்புப்பாலினம் என்று குறிக்கப்படாததை, அவர்களுக்கென்று கழிப்பறைகள் இல்லாததை, காவல் நிலையங்களில் வன்கொடுமைக்களுக்கு உள்ளாக்கப் படுவதை யெல்லாம் சொல்கின்றன.

அரவான் கதை எல்லோரும் அறிந்தது தான். ஆனால் சிவன் பார்வதி ஆகியோரின் சாபத்தைப் பெற்ற புதனின் மனைவியான இலா, ஒரு மாதம் ஆணாகவும், ஒரு மாதம் பெண்ணாகவும் இருக்குமாறு சபிக்கப்பட்டவள் என்று சொல்லி, ஒரு கைரதன் ஒரே சமயத்தில் ஒருவருக்கு கணவனாகவும், ஒருவருக்கு மனைவியாகவும் இரு வாழ்க்கை இருனராக இருப்பதாக ஒரு கதையில் சொல்லப்படுவது பெரும் வியப்புக்கு இட்டுச் சென்றுவிடுகிறது! இத்தொகுப்பு வைத்திருக்கும் இன்னொரு புதிய செய்தி இன்டர்செக்ஸ் என்கிற இடைப் பாலினத்தைப் பற்றியது. பிறக்கும்போதே இரு பால் உறுப்புகளுடன் பிறக்கும் இருபாலினக் குழந்தைகளின் ஆண் உறுப்புகள் (அது வெட்டுவதற்கு எளிதாக இருப்பதால்) நீக்கப்படுவதால் உருவாகும் பால்நிலை.

நஸ்ரியா ஒரு வேஷக்காரி எனும் சிறுகதையில் முகமது நஸ்ரூதின் என்ற ஆணாக மாறும் நஸ்ரியா குறித்த சித்திரம் ஒன்று வருகிறது. இது என் வகுப்பறையிலேயே நான் பார்த்த பாத்திரம் என்பேன். அப்போது நான் ஒரு மகளிர் பள்ளியில் பணியாற்றி வந்தேன். ஆங்கில வழி எட்டாம் வகுப்பு அறையில் படித்த ஒருத்தி/வன் மாணவிகளுக்கான சீருடையுடன் ஒருநாளும் வந்ததேயில்லை. நான், ஏனென்று விசாரிக்கும் போதெல்லாம் எதையாவது காரணமாகச் சொல்வாள்/வான். கடைசி வரை அவள்/ன் பேண்ட், டி ஷர்ட்டிலேயே தான் வந்தாள்/ன். இக்கதையைப் படித்ததும், இப்போது அவள்/ன் என்ன செய்துகொண்டிருப்பாள்/ன் என்ற கவலை எனக்குள் உருவானது. அதோடு ஏன் நாம் இதை எழுதாமல் போனோம் என்றும் குற்ற உணர்வுடன் கேட்டுக் கொண்டேன்.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

பொதுச்சமூகம் இதரர்களாகப் பார்க்கும் சிறப்புப் பாலினர்களின் அவஸ்தைகளை விவாதிக்கும் இக்கதைகள் உரிமைக்கு போராட்டம் தான் ஒரே வழி என்பதை அழுத்தமாய் மனதில் ஊன்றுகின்றன. தொடர் போராட்டங்கள் வழியாகத்தான் சொற்பமான சில உரிமைகளைக்கூட பெற முடிகிறது. எதற்கெடுத்தாலும் போராட்டமா என்று யார் சொன்னாலும் யதார்த்தம் அதுதான். எவ்வளவு படித்திருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களை, எவ்வளவு படித்திருந்தாலும் பெண்களை அவரவர்களாகவே பார்ப்பதைப் போலத்தான், எவ்வளவு படித்திருந்தாலும் திருநங்கைகளை ’ஒம்போதுகளாகத்’ தான் இச்சமூகம் இழிவுபடுத்தி பார்க்கிறது என்கிறார் ஒருவர் ஒரு கதையில். இத்தொகுப்பு சொல்லும் செய்தி அதுதான். அந்தப் பார்வை மாறவேண்டும் என்பதற்காகவே அந்த உண்மை உரைக்கப்படுகிறது.

இத்தொகுப்பின் முத்தாய்ப்பான கதையாக மாத்தாராணி கிளினிக்கைச் சொல்வேன். அதை ஒரு திரைச் சித்திரமாகவும் கூட மாற்றலாம். அக்கதையில் வருகின்ற பெண் காவல் ஆய்வாளரைப் போன்றவர்கள் தான் இச்சமூகத்துக்கு தேவை. அவரைப் போன்றவர்களாலேயே தான் இங்கு மாற்றங்கள் வேர்விடுகின்றன.

இத்தொகுப்பை படித்து முடிக்கும் ஒருவர், LGBTQ சிறப்புப் பாலினரைப் பார்த்ததும் வாயோரத்தில் அநிச்சையாய் முளைவிடும் தன் கேலிச்சிரிப்பை நிறுத்திக் கொள்வார் எனில் அங்கிருந்தே அவர்களுக்கான ஆதரவு தொடங்கிடும் என்பேன் நான். எளிய செயல்களிலிருந்தே பெரிய மாற்றங்கள் உருவெடுக்கின்றன.
*

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Azhagiya periyavans tamil indian express series part 19