அழகிய பெரியவன்
(2) ஆசிரியர் தாக்கப்படும் காலம்!
கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடன் மோதிக் கொள்கிறார்கள். கற்களால் தாக்கிக் கொள்கிறார்கள். பள்ளி மாணவர்களின் மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்திருக்கிறான். பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் சண்டையிடுகிறார்கள். மாணவிகள் பியர் குடிக்கிறார்கள். வகுப்பறைப் பொருட்களை மாணவர்கள் உடைத்து சேதப்படுத்துகிறார்கள். தாவரவியல் செய்முறை ஏடு எங்கே எனக் கேட்டதற்காக இழிவாகத் திட்டியபடியே ஆசிரியரை அடிக்கக் கை ஓங்குகிறான் ஒரு பள்ளி மாணவன். இடத்தில் உட்காரச் சொன்ன ஆசிரியரை கன்னத்தில் அறைகிறான் ஒரு பள்ளி மாணவன். ஆசிரியர் கரும்பலகையில் எழுதிக் கொண்டிருக்கையில் அரபிக்குத்து பாடலுக்கு மாணவன் நடனமாடுகிறான்.
காலம் சடாரென்று மாறிவிட்டது. ஆசிரியர்கள் மாணவர்களை அடித்தக் காலம் போய், மாணவர்கள் ஆசிரியர்களை அடித்து அவமதிக்கிற காலம் வந்துவிட்டது! இப்படிக் குறைபட்டுக் கொள்ளும் செய்திகளை சமீபகாலமாக அதிகளவில் பார்க்க முடிகிறது. சற்றேரக்குறைய ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிச்சுமைகள் இன்றி கட்டற்று இருந்த கொரோனா காலம் தான் இதற்கு முதன்மையான காரணம் என்று சிலர் சமாதானம் சொல்கிறார்கள். ஆனால் இப்போது மட்டும் தான் இப்படி நடக்கின்றதா?
எல்லா காலங்களிலும் எல்லாமும்
உண்மையில் எல்லா காலங்களிலும் எல்லாமும் நடந்திருக்கின்றன. எண்ணிக்கையில் கொஞ்சம் கூடக்குறைய இருக்கலாம். அல்லது அறியப்படாமல் இருக்கலாம். வேறு மாற்றமில்லை! இருபது வருடங்களுக்கு முன்பு இப்போது இருப்பதைப் போல யூடியூப் இல்லை. கூகுள் இல்லை. எழுத்து ஊடகங்களுக்கும் இதைப்போன்ற செய்திகளை வெளியிடுவதில் அப்போது சிறிதளவேணும் தயக்கங்கள் இருந்தன.
இன்று அப்படியெல்லாம் எதுவுமில்லை. எந்தக் காணொலி ஊடகத்தைத் திறந்தாலும் மாணவர்கள் முறை தவறி நடந்து கொள்வதாக செய்திகள் பிரவாகித்து வருகின்றன. அச்செய்திகளே தொடர்ந்து முதன்மை படுத்தப்படுகின்றன. மாணவர்கள் மோசமாக நடந்துக் கொள்கிறார்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்லும் ஊடகங்கள், அதே மாணவர்கள் சிறப்பாக செயலாற்றுகையில் அந்த நேர்மறைச் செய்திகளை அத்தனை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவதில்லை. மௌனமாகக் கடந்துச் செல்வதே அவற்றின் வழக்கம்.
நான் யாரையும் வெறுக்க மாட்டேன். யாரும் யாரையும் வெறுக்கக் கூடாது. அனைவர் மீதும் அன்பு செலுத்த வேண்டும். சமூகத்தின் புறக்கணிப்பு ஒருவரை வன்முறையாளராக மாற்றும் என்று தனது முகஅமைப்பைக் கேலி செய்பவரைப் பார்த்துச் சொன்ன மாணவன் அப்துல் கலாமின் செய்தியையும், குறவர் இன மாணவியான திவ்யாவின் தன்னம்பிக்கை நிறைந்த பேச்சு மற்றும் முதல்வரின் சந்திப்பு குறித்தச் செய்தியையும் பரவலாக வெளியிட்ட ஊடகங்கள் தடாலென்று மாணவர்கள் சேட்டைச் செய்யும் செய்திகளுக்கு நகர்ந்துவிட்டன.
எல்லா துறைகளிலும் மீறல்களும் உரசல்களும் உண்டு. அதற்குக் கல்வித்துறை விலக்கல்ல. கல்லூரிப் பேராசிரியரும் மாணவியும் காதலித்துக் கொள்வதாக 1962 லேயே சாரதா என்ற திரைப்படம் தமிழில் வந்தது. ஒரு காலம் வரைக்கும் கல்லூரிகளில் ரேக்கிங் தலைவிரித்து ஆடியது. நாவரசுவின் கொடூரக் கொலையை தமிழகம் இன்னமும் மறக்கவில்லை. இச்சம்பவங்களுக்குப் பிறகே ரேக்கிங் தடைச் சட்டங்கள் இயற்றப்பட்டன.
நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில், மூர்க்கத்தனம் மிகுந்த வகுப்புத் தோழன் ஒருவன் எனக்கு இருந்தான். வாத்தியார் அடிக்கிறார் என்பதற்காக அவருக்கு வாங்கி வந்த தேநீரில் எச்சிலைத் துப்பித் தந்திருக்கிறான்! ஆசிரியரின் சைக்கிள் டயரில் காற்றைப் பிடுங்கி விடுவது அல்லது கிழிப்பது, ஆசிரியருடைய ஸ்கூட்டரின் பெட்ரோல் டாங்கில் சர்க்கரையையோ, மண்ணையோ போடுவது, வாத்தியார் உட்காரும் இடத்தில் ஆணியை வைப்பது, அவரின் சட்டையில் மையைத் தெளிப்பது எல்லாமே அப்போதும் நடந்திருக்கின்றன!
மேல்நிலை வகுப்பில் படித்துக் கொண்டிருக்கையில் ஒருமுறை நாங்கள் வேதிப் பொருட்களை எக்குத்தப்பாக வேண்டுமென்றே ஊற்ற அறிவியல் மற்றும் கணக்குப்பிரிவு கம்பைண்டு வகுப்பில் தீப்பிடித்துக் கொண்டது! மாறு வேடப் போட்டியில் ரத்தக் கண்ணீர் எம். ஆர். ராதா வேடம் போட்டுக் கொண்டு வந்த எங்கள் வகுப்பு மாணவன் ஒருவன், மேடையில் உட்கார்ந்திருந்த பள்ளி முதல்வருக்கு முன்னாலேயே பீடியைப் பற்றவைத்து இரண்டு இழுப்பு இழுத்தவுடன் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டான்!
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
வேலூரில் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கையில் தேர்வு அறைக்குள் ஒரு பேராசிரியர் மாணவரால் தாக்கப்பட்டதை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். திடீரென்று அது நடந்து விட்டது. காப்பி அடித்ததை தடுத்ததற்காகவே அவர் தாக்கப்பட்டார் என்று பின்னர் கேள்விப்பட்டேன். இந்தத் தாக்குதலை விடவும் அப்போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, அந்தத் தாக்குதலை பேராசிரியர். அய். இளங்கோவனைத் தவிர சக ஆசிரியர்கள் யாருமே கண்டிக்க முன்வராத போக்குதான்! பேராசிரியர் இளங்கோவன் தனிஆளாக கல்லூரி முதல்வரின் அறைக்கு முன்னால் அமர்ந்து ஆசிரியரைத் தாக்கிய மாணவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். இதை வாசித்துக் கொண்டிருக்கும் போதே அவரவருடைய நினைவுகளில் இதைப் போன்ற பல சம்பவங்கள் வந்து போகும்.
கல்வியைக் கற்றுத்தந்து, எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்ற ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கி அவமரியாதைச் செய்வது பெரும் தவறு. இதற்கு உரிய நடவடிக்கைகளை துறைசார்ந்து எடுத்தாக வேண்டும். ஆனால் சமூகவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் மாணவர்களை மட்டுமே கண்டிப்பதும், எல்லா தவறுகளையும் தூக்கி மாணவர்கள் மீதே வைத்து சுமக்கச் செய்வதும் நிச்சயம் சரியாக இருக்காது. மாணவர்கள் முரட்டுத்தனம் அடைந்து வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என தொடர்ந்து சொன்னாலும், வயதிலும் அறிவு முதிர்ச்சியிலும் அவர்கள் மிகவும் இளையவர்கள் என்பதையும், குடும்பம் மற்றும் சமூக நிறுவனங்களில் அவர்கள் பெரியவர்களுக்குக் கீழானவர்கள் என்பதையும், குடும்பம் மற்றும் சமூக நிறுவனங்களின் வன்முறைக்கு அவ்வப்போது இலக்காகின்றவர்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் வன்முறையில் ஈடுபடும் போக்கு உலகளாவிய பிரச்சினையாகும். மேற்கத்திய நாடுகளில் மாணவர்கள் வன்முறையிலும் பாலுறவிலும் ஈடுபடுவது பெரும் சிக்கலாக இருக்கிறது. அங்கு இளம் வயது கருத்தரிப்புகளும் அதிகம். இதைத்தடுக்க கருத்தடை சாதனங்களை பள்ளிகளிலேயே வைத்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. பொதுவாக மாணவர்களின் ஆவேசமான இச்செயல்பாடுகளை தாக்குதல், சீண்டல், பிறரை எரிச்சலடையச் செய்தல், நடத்தையில் ஒழுங்கின்மை, மரியாதை குறைவாக நடந்து கொள்ளுதல் எனப் பகுக்கலாம்.
மாணவர் உளவியல்
மாணவர்களின் உளவியல் தனித்தன்மை உடையது. தன் வயதொத்தவர்களின் நடத்தை பாதிப்பு இதில் அதிகம். அதாவது சக நண்பர்களைப் பார்த்து அப்படியே போலச் செய்தல். இந்த உளவியல் பண்பினாலேயே மாணவர்கள் இதைப்போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது உளவியலாளர்களின் கூற்று. மூர்க்க குணமுடையவர்களுடன் நட்புகொள்வதால் அமைதியான மாணவர்களும் இதில் ஈர்க்கப்படுகிறார்கள். தன்னுடைய நடத்தையை காரணம் காட்டி சகமாணவர்கள் நிராகரிப்பதாலோ, அல்லது கொண்டாடுவதாலோ இச்செயல்கள் ஊட்டம் பெறுகின்ற. தங்களின் வீடுகளில் முதன் முதலில் இந்த உணர்வெழுச்சி வெளிப்பாடுகளை தெரிந்து கொண்டாலும், பள்ளி சூழலிலேயே மாணவர்கள் அவற்றை அதிகளவில் வெளிப்படுத்துகின்றனர்.
இந்த உளவியல் கூற்றுகளை கவனத்தில் கொள்கின்ற சூழ்நிலை பள்ளிகளில் இருக்க வேண்டும். மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதோடு மட்டுமின்றி, அவர்களின் அதீத உணர்வெழுச்சிகளை மடைமாற்றம் செய்வதற்கேற்ற கலைத்திட்டங்கள் தேவைப்படுகின்றன. விளையாட்டு மற்றும் கலை சார்ந்த செயல்பாடுகள், களப்பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஆகியவை பாடதிட்டத்தில் கட்டாயம் தேவை. ஆசிரியர் பேசிக்கொண்டே இருப்பது, வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் உட்கார்ந்து மாணவர்கள் கேட்டுக் கொண்டேயிருப்பது என்ற நிலை தான் இன்னும் கல்வி நிறுவனங்களில் தொடர்கிறது. இளமைத் துடிப்பில் இருக்கும் மாணவரை இந்த நிலை, எந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதை தனியே விளக்கத் தேவையில்லை.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
கல்விநிலையத் தண்டனைகள்
ஆசிரியர்களின் அவமரியாதைக்கும், வன்முறைக்கும், சக மாணவர்களின் நிராகரிப்புக்கும் இலக்காகும் மாணவர்களே இச்செயல்களில் அதிகமாக ஈடுபடுகின்றனர் என்பது உளவியலாளர்களின் பிறிதொரு கூற்று. சகமாணவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும், நிராகரிப்புக்கும் மட்டுமின்றி, ஒருசில ஆசிரியர்களின் முரடுத்தனத்துக்கும், சாதிவெறிக்கும், பாலியல் விழைவுகளுக்கும் பலியான எண்ணற்ற மாணவர்களின் கதைகள் நம்மிடத்தில் உண்டு. தனிப்பானையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை அருந்தாமல், பொதுப்பானை நீரை அருந்தியதற்காக ஒரு மாணவியை அடித்து பார்வையைப் பறித்த சமூகம் தானே நம் சமூகம்?
“என்னப் பாத்து கைய நீட்டி பேசினான் சார். சும்மா உடுவனா? அந்தக் கையையே ஒடச்சிட்டனில்ல!”
”இன்னிக்கி என்னாமா சாப்பாடு? செத்த மாட்டுக்கறியா? அப்படின்னு கேட்டதுக்கு அவ மூஞ்சி போன போக்கப் பாக்கணுமே சார்! இதுங்கெல்லாம் படிச்சி என்னத்த கிழிக்கப் போதுங்களோ?”
“உன்னோட கருப்புக்கும், என்னோட செவப்புக்கும் கொழந்த பொறந்தா எப்படியிருக்கும் சொல்லுடி?”
இதைப் போன்ற பேச்சுகளை ஒருசில ஆசிரியர்களின் வாயிலிருந்து நான் கேட்டிருக்கிறேன்.
டியூஷனுக்குச் சென்று, வீட்டுக்குத் திரும்பியதும் தூக்கிட்டுக் கொண்ட மாணவி, ஆர்வத்துடன் கல்லூரியில் சேர்ந்துவிட்டு பிறகு போகாமல் நின்றுவிட்ட மாணவி, கருகலைப்பு செய்து, மனநலம் பாதிக்கப்பட்டு, நடைபிணமான மாணவி இப்படி நிறைய கதைகள் நம் சமூகத்தில் உண்டுதானே? இந்தப் பேச்சுகளை, இந்தச் சூழல்களை எதிர்கொண்ட அந்த மாணவரின் நிலையும், எதிர்வினையும் எப்படி இருந்திருக்கும்? அல்லது எப்படி இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்?
ஆசிரியர் பணி என்பது உள்ளீட்டளவில் வெறுமனே சம்பளம் வாங்கிடும் ஒரு வேலையல்ல. அது எதிர்கால சமூகத்தை உருவாக்குகின்ற மாபெரும் பணி. திறனற்ற ஆசிரியரை மாணவர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதேயில்லை. பாடநூலில் இருப்பதை அப்படியே வாந்தியெடுப்பதல்ல ஆசிரியரின் பொறுப்பு. அவருக்கு பன்முகத் திறன்கள் தேவைப்படுகின்றன. சமூகம், கலை, இலக்கியம், விளையாட்டு ஆகிய துறைகளில் பயிற்சியும் அறிவும் தேவை. பேச்சுத்திறனும், தலைமைத்துவ பண்பும் மிக மிக அவசியம். இவை எதுவுமே இல்லாத ஆசிரியர், தன் இயலாமையை மறைப்பதற்கு மணவரின் மீது வன்முறையைப் பிரயோகிக்கிறார். அல்லது மாணவரிடமிருந்து அவமரியாதையை எதிர்கொள்கிறார்.
மாணவர்கள் இளையவர்களாயினும் அவர்களுக்கும் மான உணர்ச்சியும், அவமான உணர்வும் உண்டு. சுயமரியாதையுணர்வு உண்டு. அதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கொடுத்திட வேண்டும். திறன் அடிப்படையிலோ, வாழ்க்கைச் சூழல்கள் மற்றும் நிலைகளின் அடிப்படையிலோ ஆசிரியர்கள் மாணவர்களை அடையாளப் படுத்தி பாகுபாடு காட்டாமல் இருப்பதே இதற்கு மற்றொரு சிறந்த தீர்வு.
குடும்பமும் சமூகமும்
மாணவர்கள் குடும்பங்களிலிருந்து வருகிறார்கள். குடும்பம் மாணவரின் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. குடிப்பழக்கம், ஆணாதிக்கச் சிந்தனை, சாதியுணர்வு, திருட்டு, ஏமாற்று எல்லாமே குடும்பத்தின் வழியாகவே மாணவருள் நுழைகின்றன. சிறந்த பண்புகளை, கருத்துகளை, நூல்களை பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்வது பெற்றோரின் கடமையாகிறது. ஈன்று புறந்தருவது பாடலிலிருந்து தந்தை மகற்காற்றும் கடமை பாடல் வரை சொல்வது அதைத்தான்.
குடும்பம் இணைந்திருக்கிற சமூகத்துக்கும் இதில் பங்கிருக்கிறது. போதைப் பொருட்கள், திரைப்படங்கள், வன்முறைக்களங்கள் போன்றவற்றை சமூகமே மாணவரிடத்தில் கையளிக்கின்றன. மாணவன் ஆசிரியரை அடிக்கிறான் என்றால் அவன் சமூகத்தை அடிக்கிறான் என்றே பொருள். தான் பெற்றதை அவன் சமூகத்திடமே திரும்பக் கொடுக்கிறான். அவர்களிடத்தில் கொடுக்கும்போது கூச்சப்படாமல் இருந்துவிட்டு, அவர்களிடத்திலிருந்து வாங்கும்போது வருத்தப்படுவதால் சமூகத்துக்கு எந்தப் பயனும் இல்லை.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
குருவும் நவீன ஆசிரியரும்
இந்த விடயத்தில் வேறு சில பரிமாணங்களும் இருக்கிறதாக எண்ணுகிறேன். மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டும், குருவந்தனம் சொல்லிக் கொடுக்கப்பட்டும் பிள்ளைகள் வளர்க்கப் படவேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் ஆகும் என்ற கருத்தை வலியுறுத்தும் நிலைக்கு இந்தச் சம்பவங்களைக் கடத்திக்கொண்டு செல்வதன் மூலம் பழைய குருகுலமே சிறந்தது, அல்லது அவ்வகையான கல்வியைத்தரும் தனியார் நிறுவனங்களே சிறந்தவை என்ற கருத்தாக்கத்தை உருவாக்குகிறார்கள் என்ற ஐயம் உறுதியாக ஏற்படுகிறது.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது, அரசாங்கத்தில் பதவி அடிப்படையில் கடைபிடிக்கப்படுகின்ற மதிப்பு நிலையைப் போன்ற சமூக மதிப்பு நிலை. இதை பகுத்துப் பார்த்தால் அன்று குரு என்று சொன்னது இன்றைய ஆசிரியரைக் கிடையாது. குரு வேறு, நவீன ஆசிரியர் வேறு. குரு பிரம்மா, குரு விஷ்ணு குருதேவோ / மஹேஷ்வரஹா குரு ஷாக்ஸ்த்ஷா பரபிரம்மா / தஸ்மை ஸ்ரீ குருவே நமஹா என்ற பாடலில் பிரம்மாவும், விஷ்ணுவும், சிவனும் குருக்கள். அந்தக் குருக்களான பரபிரம்மாக்களை வணங்கி வேண்டினால் அறிவு கிடைக்கும் என்ற பொருள் உள்ளது.
அன்றைய குரு வருணப்படி நிலைகளின் உச்சியில் இருந்துக் கொண்டு, சாதியப் படிநிலைகளின் அடிப்படையில் கல்வியைக் கொடுத்தவர். பௌராணிகப் பாத்திரங்களான ஏகலைவன், கர்ணன் ஆகியோரிடம் ஏற்றத் தாழ்வுமிக்க விழுமியங்களின் அடிப்படையில் இந்தக் குருக்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது நமக்குத் தெரியும். அனேகமாக உலக அளவிலேயே முதன்முதலாக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனை விதிகளை வகுத்தது இந்தியாவில்தான் என்று நினைக்கிறேன்!
மனுஷ்மிருதியில் ஒரு மாணவன் ஆசிரியரிடத்தில் எவ்விதம் நடந்துகொள்ள வேண்டும், எந்தமாதிரியான பணிவிடைகளை செய்திடவேண்டும் என்ற விதிகளும், அவன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் அளிக்கப்பட வேண்டிய தண்டனைமுறைகளும் விவரிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இன்றைய நவீன ஆசிரியர் அறிவியல் மனப்பான்மையுடனும், சமத்துவ மனநிலையுடனும் இருக்க வேண்டியவராகிறார். குருவுக்கும் நவீன ஆசிரியருக்கும் இடையே நீண்ட இடைவெளி இருக்கிறது. அல்லது அவர்கள் எதிர் எதிர் துருவங்களில் இருக்கிறார்கள். சமூகத்திலும் ஆசிரியர்களிடத்திலும் ‘குரு’ பற்றிய அழுத்தமான செய்திகள் பரப்பப்பட்டுக் கொண்டே இருப்பதன் அழுத்தத்தால் இன்று ஒரு நவீன ஆசிரியரும் தன்னை ஒரு பழைய குருவாகவே நினைத்துக் கொள்கிறார்.
விர்சுவல் அகாடெமிகள்
இந்தச் செய்திகளின் பூதாகாரத்துக்குப் பின்னால் விர்ச்சுவல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எனப்படும் கார்ப்பரேட்டுகளின் கைகளும் உள்ளன என்றும் தோன்றுகிறது. வேதாந்தா, பைஜூஸ், அன் அக்காடெமி, சிம்பிள் லேர்ன், அமேசான் அகாடெமி, டெக்கி, ஸ்மார்ட் டாக், ஆன்லைன் எம்பிபிஎஸ், கிளவுட் டியூட்டர், வைஃபை கிளாசஸ் டாட்காம், தி டீச்சர்ஸ் ஹப் இப்படி ஏராளமான இணைய வழிக்கல்வி நிறுவனங்கள் இப்போது கோடிக்கோடியாய் பணம் சம்பாதிக்கின்றார்கள்.
வேதாந்தாவில் சாதாரணமக பதிவதற்கு 5000 ரூபாய் தேவை. கடந்த வருடம் மட்டும் 2,50000 மாணவர்கள் ஒழுங்காக பணம் கட்டி படித்ததாக சொல்லியிருக்கிறார் வேதாந்தா நிறுவனர் வம்சி கிருஷ்ணா. இதை ஒரு மில்லியனாக மாற்றுவதே எண்ணம் என்கிறார் அவர். பைஜூசின் நிதியீட்டல் 4.3 பில்லியன் டாலர். ஏற்கெனவே ஆன்லைன் கோச்சிங் டூல் மார்கெட் குறித்து சீனா போன்ற சில நாடுகள் மக்களை எச்சரிக்க ஆலோசனைக் குழுவை அமைத்திருக்கின்றன.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
ஆனால் நமது நாட்டிலோ யுபிஎஸ்சி போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் சில கட்டங்களை தனியாரிடத்தில் கொடுத்து இணைய வழியாகவே வழங்கலாம் என்ற நிலையை நோக்கி அரசே நகர்ந்து கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஆசிரியர் மாணவர் நேரடி உறவென்பது அற்புதமானது, உணர்வுப்பூர்வமானது. அதைத் தடுத்து, கருத்தாக்கத் திட்டங்கள் மட்டுமே புகுத்தப்பட்ட வெற்று மூளைகளைத் தயாரிக்கின்ற நிலையை நோக்கி ஆதிக்க நிறுவனங்கள் நம்நாட்டுக் கல்வி நிலையை நகர்த்தத் தொடங்கியுள்ளன. அரசுப் பள்ளிகளின் தரம் பற்றிய பொய்ச் செய்திகளை மக்கள் மத்தியிலே பரப்பி, அரசாங்கங்கள் கல்வியை கைகழுவி விடவேண்டும் என மிரட்டுகிறவர்கள் இவர்கள் தான்.
கூட்டு நடவடிக்கை
நோய் நாடி நோய் முதல் நாடி என்றார் வள்ளுவர். காரண காரியங்களின்றி இங்கு எதுவுமில்லை. மாணவர்களின் நடத்தை மாற்றத்தைப் பற்றி நடத்தப்படுகின்ற வெற்றுப் பேச்சோ, அங்கலாய்ப்போ, ஒரு சார்பான நடவடிக்கைகளோ எந்தப் பலனையும் அளிக்கப் போவதில்லை.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் – 3
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.