–
அழகிய பெரியவன்
கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றம்
பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது அது நடந்தது. இதுவரையில் நான் சந்தித்த வேதனை மிகுந்த நிகழ்ச்சிகளில் இனி அதற்கும் நிச்சயம் இடமிருக்கும். நான் வந்து கொண்டிருந்த சாலையில் ஆட்கள் யாரும் இல்லை. தனிமையாக இருந்தது. அப்பொழுது என் எதிரில் வந்து வண்டியை நிறுத்திய இளைஞன் என்னை பார்த்து வணக்கம் செய்தான்.
அவனிடமிருந்து கடுமையான சாராய நெடி அடித்தது. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவன் என்னிடம் படித்த மாணவன். நன்றாகக் குடித்திருந்தான். என்னிடம் பணம் தருமாறு கெஞ்சினான். ஐயா என்னைத் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்லியபடியே காலில் விழுவதற்கு வந்தான். காலிலும் விழுந்தான். பெருந்துக்கமாகப் போய்விட்டது. சற்றேக்குறைய மூன்று நான்கு ஆண்டுகள் அவனுக்கு நான் கற்றுக் கொடுத்த பாடம், சொல்லிய அறிவுரைகள், உரையாடிய உரையாடல்கள் எல்லாமே என் நினைவுக்கு வந்து போயின. எவற்றாலும் பயனில்லையே என்று மனம் கசந்தது.
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என் மற்றுச் சான்றோர் முகத்துக் களி.
என்ற குறள் மனதில் ஒலித்தது. கள்ளுண்பவனை பெற்றவளே விரும்ப மாட்டாள், வருந்துவாள் எனில் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோர் எனும் பெரியோர் வருந்தமாட்டாரா? என்கிறார் திருவள்ளுவர்.
அவன் தந்தை இல்லாத இளைஞன். அம்மா மட்டும்தான் அவனுக்கு. அவர் நூறுநாள் வேலை செய்துவரும் ஏழை விவசாயக்கூலித் தொழிலாளி. உடன் பிறந்தவர்களும் இல்லை. இன்னும் வாக்களிக்கின்ற வயதை கூட அவன் எட்டிடவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே மதுவுக்கு அடிமையாகி விட்டிருக்கிறான்.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
அவலக் காட்சிகள்
மற்றொரு காட்சியை பள்ளிக்குச் செல்லும் போது, அதே ஆளரவமற்ற சாலையில் பார்த்தேன். பதினோராம் வகுப்பு படிக்கின்ற வயதேயுடைய இரண்டு சிறுவர்கள் சாலையோரமாக புல்தரையில் அமர்ந்து காலையிலேயே குடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எதிரில் மது பாட்டில்கள், மிக்சர், தூக்கி எறியப்படும் நெகிழி குவளைகள், தண்ணீர் போத்தல். அவர்கள் வந்த இருசக்கர வாகனம் அருகில் நின்றிருந்தது.
அந்தப் பக்கமாகச் செல்லும் வழிப்போக்கர்கள் எவரைக் குறித்தும் அவர்கள் முகத்திலோ, உடல் மொழியிலோ துளியளவுகூட அச்சமோ, தயக்கமோ, வெட்கமோ இல்லை. கள்ளுண்டால் நாணம் போய்விடும் என்பார் திருவள்ளுவர்.
இன்னொரு காட்சி இன்னும் கொடுமையானது. அறிவியல் பாடத்துக்காக வகுப்பு மாணவர்களை களப்பயணத்துக்கு அருகிலிருக்கும் மலையடிவாரம் பக்கமாக அழைத்துச் சென்றிருந்தேன். அங்கு காட்டாற்று பாலத்துக்கு அருகில், சாலை ஓரமாக ஒரு சிறுபாறையின் மேல் அமர்ந்துக் கொண்டு ஒரு மாணவனின் தந்தை தன்னை மறந்து குடித்துக் கொண்டிருந்தார்.
அந்த ஊருக்குள் நுழைவதற்கு அதுவே பிரதான சாலை. அவனுடன் படிக்கும் வகுப்புத் தோழர்களான மாணவர்களும் மாணவிகளும் அந்த மாணவனின் தந்தையைப் பார்த்த அடுத்த கணம் அவனைப் பார்த்தனர். அந்த ஒரு கணம், விடலைப் பருவத்தில் இருந்த அம் மாணவனின் மனம் எதை எண்ணியிருக்கும்? கற்பனை செய்வதற்கும் முடியாத தருணம் அது.
கொரோனா பெருந்தொற்றின் இறுதி காலத்தில் பள்ளிக்கு சில காலம் வந்துவிட்டு நின்றுபோன வளரிளம்பருவ சிறுமியொருத்தியை அழைத்து நான் விசாரித்தபோது, தன்னுடைய அப்பா மட்டுமின்றி அம்மாவும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டிருப்பதால் தன்னால் பள்ளிக்கு வரமுடியவில்லை என்றாள்.
ஏதோ ஒரு கிராமத்தில் மட்டும் இப்படி இருக்கிறதாக எண்ண வேண்டியதில்லை. பகலிலேயே கையில் மது பாட்டில்களுடன் மிக இயல்பாகத் திரியும் இளைஞர்களைப் பார்க்கமுடிகிறது. சாலை ஓரத்தில், திறந்த வெளியில், காட்டோரங்களில், ஆற்று மணலில், ஊரின் பொது இடத்தில், வீட்டுத் திண்ணையில் என்று அங்கிங்கெனாதபடி அவர்கள் அமர்ந்து எந்தவிதமான உறுத்தலுமின்றி குடிக்கிறார்கள்.
தமிழகத்தில் எல்லா இடங்களிலும், இந்த நிலைமைகள் தான் உறுதியாக இருக்கும். எங்கெல்லாம் திறந்த வெளி இருக்கிறதோ அங்கெல்லாம் காலி மது போத்தல்கள், நெகிழி குவளைகள், கடித்து உறிந்து எறியப்பட்ட கள்ளச் சாராயப் பொட்டலங்கள் காணக் கிடைக்கின்றன. இந்தச் சூழல் ஒன்றே தமிழகம் எவ்வளவு குடிக்கிறது என்பதைச் சொல்வதற்கு போதுமானதாக இருக்கிறது. காலம் சட்டென்று மாறிவிட்டது.
இளைஞர்களின் ஒளிமயமான காலம், குடிமயமான காலமாகத் தெரிகிறது. ஒரு தலைமுறை கண்ணெதிரிலேயே சீரழிந்துகொண்டிருக்கிறது. இதைப் பார்க்கச் சகிக்கவில்லை.
ஐந்தாண்டுகளுக்கு முந்தைய ஒரு கணக்கெடுப்பின்படி இந்திய ஒன்றியம் அளவில் அருணாச்சல பிரதேசமே குடியில் முதலிடம் (59%). அதற்கடுத்து திரிபுராவும், தெலுங்கானாவும், ஒடிசாவும், மணிப்பூரும் வருகின்றன. அப்போது தமிழ்நாடு ஏழாவது இடத்தில் இருந்திருக்கிறது. அண்மையில் ஒன்றிய அளவில் எடுக்கப்பட்ட குடும்பம் மற்றும் சுகாதாரம் குறித்த கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 25.4 % ஆண்களும், 0.3 % பெண்களும் குடிப்பதாக தெரிகிறது (25.7). இதில் முதல் பத்து இடத்தில் தமிழகம் வரவில்லை. ஆனால் மக்கள் தொகையில் கால்பங்கு எனும்போது, இதுவே அதிகம் தான்.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
சிறுவயது முதலே குடியர்களைப் பார்த்து வளர்ந்தவன்தான் நான். அவர்களுடனேயே கூட வாழ்ந்திருக்கிறேன். ஆனால் அவர்கள் எல்லாம் வயதில் மூத்தவர்கள். அதுவும் சமூகத்துக்கும், பெரியவர்களுக்கும் பயந்து அஞ்சி மறைவாகக் குடித்தவர்கள். குடித்த பிறகு வீட்டில் வந்து முடங்கிக் கொண்டவர்கள். உழைப்பின் களைப்பையும், உடல் வலியையும் மறக்க குடித்தவர்கள்.
ஆனால் இப்போது பார்க்கும் காட்சிகளோ அவ்விதமானவையல்ல. பதிமூன்று அல்லது பதினான்கு வயதிலேயே குடிக்கப் பழகுகின்ற சிறுவர்களையும், இளைஞர்களையும் பெருமளவில் பார்க்க முடிகிறது. அவர்கள் முதலில் இதை அசட்டைக்காகவும், உற்சாகத்துக்காகவும் மேற்கொண்டு பின்னர் அதற்கே அடிமையாகி விடுகின்றனர். இந்தக் காலமாற்றத்தை ஏற்க முடியவில்லை. இதற்கு வழங்கப்படும் எந்த நியாயங்களும், விளக்கங்களும் நியாயமற்றதாகவும், அருவருப்பானதாகவும் இருக்கின்றன.
மதுவினால் ஏற்படும் விளைவுகள்
மது பழக்கத்தால் தனிமனித அளவிலும் சமூகத்திலும் ஏற்பட்டு வரும் தீமைகள் அதிகம். தனிமனித அளவில் பார்த்தால் இளைஞர்களிடையே சிந்தனை ஆற்றலும், கல்வியறிவும் மழுங்கடிக்கப்படுகிறது. முரட்டுத்தனமும், தான் தோன்றித்தனமும் வளர்கிறது. பெரியவர்கள் மீதான மதிப்பும், சமூக ஒழுங்கும், சுய கட்டுப்பாடும் இல்லாமல் போகிறது.
உளவியல் சிக்கல்களும், மனபாதிப்புகளும் உருவாகின்றன. மதுவால் ஆற்றல் மிகுந்த இளையோரின் மனிதவள இழப்பே அச்சுறுத்தலாக முதலில் வந்து நிற்கிறது. இன்று சாதிவெறி அமைப்புகளிலும், மதவெறி அமைப்புகளிலும் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபடுவதற்கு மதுவினால் அவர்கள் மூளைகள் மழுங்கடிக்கப்படுவதே முதன்மையான காரணம்.
மதுவினால் மரணங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. குடியினால் ஏற்படும் மரணங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான தரவுகள் நிச்சயம் இருக்காது. ஆனால் தினமும் அங்கங்கு கண்ணில் படுகின்ற மரண அறிவிப்பு பதாகைகளே அதற்கு சாட்சி. தற்போது குடியினால் நிகழும் இளவயது மரணங்களை அதிகளவில் பார்க்கமுடிகிறது. இறந்துபோகின்ற இளைஞர்களுக்கு குடும்பங்கள் இருந்தால், அவர்களின் இளம் மனைவியரையும், பிள்ளைகளையும் அந்த மரணம் பேராழியாக அடித்துச் சிதைத்து விடும். மதுவினால் குடும்ப வன்முறைகளும் அதிகரிக்கின்றன. இவற்றாலெல்லாம் பெருமளவுக்கு பெண்களும் குழந்தைகளுமே பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
சமூகவியல் அடிப்படையில் பார்த்தால் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட இளைஞர்களும், பழங்குடி இளைஞர்களும், அவர்தம் குடும்பங்களுமே மிக அதிக அளவில் மதுவால் சீரழிக்கப்படுகின்றனர். திருமணம், இறப்பு, மதவிழாக்கள், ஊர்த்திருவிழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எல்லாமே இன்று மதுவால் பொருளிழந்து விட்டன. கொலை கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு மதுப்பழக்கமும் ஒரு காரணம் என்பதை மறுக்கவே முடியாது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதும் அதிகரித்திருக்கிறது. 2019 ஜனவரி முதல் 2022 பிப்ரவரி வரை குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக 4.22 லட்சம் வழக்குகள் பதியப்பட்டதாகவும், ரூபாய் 18.70 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டதாகவும் தமிழக டிஜிபி நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்திருக்கிறார்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதின் விளைவாக 262 பேர் கடந்த ஐந்தாண்டுகளில் இறந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வழக்குகளில் 8.47 லட்சம் ஓட்டுநர் உரிமங்களை நிறுத்தி வைத்திருப்பதாகவும், 4,851 ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தத் தரவுகளை களநிலவரத்துடன் ஒப்பிடுகையில் எங்கோ தொலைவில் இருக்கும் என்பதே உண்மை.
அரசின் பங்கு
உணவுப் பொருட்களை வழங்குகின்ற நியாயவிலைக் கடைகளைப் போல, டாஸ்மாக் மதுக்கடைகளையும் அரசே நடத்தும் என்பதை முன்பு யாரேனும் சொல்லியிருந்தால் அவரை மக்கள் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் தற்போதைய நிஜம் அதுதான். ஏன் அரசு இந்த முடிவுக்கு வந்து சேர்ந்தது என்பதற்கு, மது விற்பனை இல்லையென்றால் கள்ளச்சந்தை மதுவணிகம் பெருகும், மதுவிலக்கினால் தனிநபர்களான மதுவியாபாரிகள் மட்டுமே பயனடைவார்கள் என்றெல்லாம் பின்னணி காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் அக்காரணங்கள் வணிகநோக்கம் கொண்டவையே தவிர சமூகநல நோக்குடையவை அல்ல. மதுவால் ஏற்படும் கேடு குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்கு அரசுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது. இந்தப் பரப்புரைத் திட்டங்களுக்கு அரசு, சுமார் 4 கோடி ரூபாயை ஒதுக்குவதாக அரசால் அண்மையில் சொல்லப்பட்டுமிருக்கிறது. ஆனால் இந்த சொற்பத் தொகையை செலவிட்டுக் கொண்டே மது விற்பனையின் மூலமாக அரசு பெருந் தொகையை ஈட்டிவருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 5,380 டாஸ்மாக் கடைகளில் 6,715 கண்காணிப்பாளர்கள்,15000 விற்பனையாளர்கள், 3,090 உதவியாளர்கள் பணிபுரிகின்றனர். டாஸ்மாக் மது விற்பனையின் மூலமாக, 2021-2022 ம் ஆண்டு தமிழ்நாடு அரசுக்கு கிடைத்திருக்கிற வருவாய் ரூபாய் 36,013.14 கோடி. இதில் 12,125 கோடி எக்ஸைஸ் வரி, 9,555.36 கோடி விற்பனை வரி. கடந்த ஆண்டு இது 33,811.15 கோடி ஆகும். ஆண்டாண்டுக்கு இது உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
அரசு அதிகாரப்பூர்வமாக விற்கின்ற மதுவுடன், கள்ளச்சாராயம், வேறு மாநிலங்களிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்படும் மதுவகைகள், போலி மதுவகைகள் ஆகியவையும் சேர்ந்து மக்களிடையே புழக்கத்தில் இருக்கின்றன. இவற்றுள் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பிற போதைப் பொருட்கள் தனி.
1983-84 ஆண்டில் டாஸ்மாக்கின் வருவாய் ரூபாய் 139.41 கோடி. 2005 – 06 இல் இது ரூபாய் 7335.00 கோடியாக உயர்ந்திருக்கிறது. தொடக்கத்தில் 109.59 % என்று இருந்த மதுவிற்பனை வளர்ச்சி, இன்று வரை சுமார் 260 % ஆக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அரசுக்கு கிடைக்கும் வருவாய் அளவில் பார்த்தால் இந்திய ஒன்றிய அளவில் தமிழகம் முதல் ஐந்து இடங்களிலேயே நிற்கிறது.
சமூகம் மதுவால் பாதிக்கப்படுகிறபோது அதை தடுத்து நிறுத்துவதற்குரிய பெரிய பொறுப்பு அரசிடம் இருக்கிறது. மதுவிற்பனை கொள்கையை வருவாயுடன் மட்டுமே இணைத்துப் பார்க்க முடியாது. ஒரு சமூகத்தின் மனிதவளம் பாதிக்கப்படுகையில், அதை சரி செய்யவதற்கும், மருத்துவ செலவுகளுக்கும், நலத் திட்டங்களுக்கும் அரசு அதிகமாக செலவிட வேண்டியதிருக்கும். இவற்றுடன் ஒப்பிடுகையில் மதுவால் கிடைக்கும் வருவாய் ஒன்றும் பெரிதில்லை. அதனால் மாற்று வருவாய் திட்டங்களை நோக்கி அரசு நகரவேண்டும். இளைய தலைமுறை அறிவும், ஆளுமையும் அற்ற தலைமுறையாக உருவாகுமானால் அந்தச் சமூகம் பெருமைக்குரிய சமூகமாக நிச்சயம் இருக்காது.