Advertisment

அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 4

Tamil writer Azhagiya Periyavan New Series on Seizure of power from women tamil: அதிகாரம் என்பதை ஒருவர் பிறர்மீது செலுத்தும் தனி அதிகாரம் என்றும், ஒன்றின் நிமித்தம் பலர் மீது செலுத்தப்படும் கூட்டு அதிகாரம் என்றும் இரண்டாகப் பிரிக்கலாம்.

author-image
WebDesk
New Update
Azhagiya Periyavan’s Tamil Indian Express series part - 4

Azhagiya Periyavan

அழகிய பெரியவன்

Advertisment

அதிகாரப் பறிமுதல்

மளிகைப் பொருட்களை வாங்குவதற்காக கடைவீதிக்குச் சென்றிருந்தேன். அரசியலில் இருக்கிற ஒரு பெண்மணிக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் பேனர்கள் வைக்கப் பட்டிருந்தன. டவுனில் நான்கைந்து இடங்களில் அப்படி வைத்திருந்தார்கள். ஓரிடத்தில் நின்று ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருக்கையில் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.

“இவளுக்கு வந்துக்கிற வாழ்வப் பாத்தியா? வீட்டுவேல செஞ்சிணு அப்பிடியே இருக்க வேண்டியவ. எங்க வந்து சிரிக்கிறா பாரு!”

அரசியலுக்கு வருகின்ற பெண்களின் பின்னால் பல பேச்சுக்கள் இருக்கின்றன. முதலில் பேசப்படுவது அவர்களது ஒழுக்கம். அவை பெரும்பாலும் கட்டுக் கதைகள். எந்தத் தயக்கமும் வெட்கமும் கூச்சமும் இல்லாமல் ஊரறிந்த ரகசியமாய் அது காற்றில் பரவும். அடுத்து அவர்களுடைய அறிவும் திறமையும். இந்தப் பேச்சுகளில் பெரும்பாலும் கேலியும் கிண்டலும் தெறிக்கும். உலக ஞானமோ, செயல் திறமோ அற்றவர்கள் பெண்கள் என்ற முடிவானதோர் கருத்துத் தொனிக்கும். இத்தகைய பேச்சுகளுக்கு யாருமே விதிவிலக்கல்ல. பெரிய அரசியல் பொறுப்பில் இருக்கிற பெண்களிலிருந்து ஊள்ளாட்சி நிர்வாகப் பொறுப்பில் இருக்கிற பெண்கள் வரை இதுவே நிலை.

ஒரு படபிடிப்புக்கான இடத்தைத் தேர்வு செய்திட கிழக்குத் தொடர்ச்சி மலையின் உள்ளொடுங்கிய கிராமங்களுக்கு திரைத்துறை நண்பர்களுடன் போயிருந்தேன். அந்தக் கிராமங்களின் ஊராட்சிக்கு தலைவராக இருந்தவர் ஒரு பெண். அவர் பேசியது இன்னும் என் காதுகளில் ஒலித்தபடியே இருக்கிறது.

“காலாகாலமா இந்தப் பஞ்சாயத்து ஆம்பள நிக்கிறமாதிரி தான் இருந்துச்சி சார். இப்பதான் பொம்பள நிக்கலாமின்னு ஆச்சி. இதுக்குன்னே காத்துணு இருந்தவளாச்சே, உடுவனா? நின்னு ஜெயிச்சிட்டேன்! இந்தப் பஞ்சாயத்துல என்னென்னா செய்யணும்னு எனுக்கும் நெனப்பு இருக்குது சார். நான் நெனச்சத செய்வேன்!”

உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அதிகாரியாக போயிருந்தபோது இதைப் போலவே சில உறுதிமிக்க பெண்களை சந்தித்தேன். ஒரு கிராமப் பஞ்சாயத்து வார்டு, பெண்கள்-பொது என ஒதுக்கப் பட்டிருந்தது. அந்த வார்டுக்கு எந்தப் பிரிவுப் பெண்களும் போட்டியிடலாம் என்றாலும் அங்கு அப்படியொரு நிலைமை இல்லை. வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்த ஒரு தலித் பெண்ணை ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சிலர் தடுத்தனர். தனியாக ஒதுக்கீடு செய்திருந்தால் மட்டுமே போட்டியிடவேண்டும். பொது என்று இருப்பதை தங்களுக்கு விட்டுவிடவேண்டும் என்று அவர்கள் கட்டாயப் படுத்தினர். கணவன் தயங்கி நின்றாலும் அந்தத் தலித் பெண் அதற்கு துளியும் சம்மதிக்கவில்லை. மிக உறுதியாகவும், மூர்க்கமுடனும் எதிர்த்துப் பேசி அவர்களை விரட்டியடித்தார். நானும் தலையிடவே அங்கு நிலைமை சுமுகமாயிற்று. மிரட்ட வந்தவர்கள் பின்வாங்கிச் சென்றுவிட்டனர். அந்தப் பெண்ணை பார்த்து நான் வியந்து போனேன்.

கடந்த உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது பஞ்சாயத்துத் தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. வார்டு உறுப்பினர்களில் சரிபாதி பெண்களாயிருந்தனர். நிறைய பேர் பதவிப்பிரமாண உறுதிமொழியைப் படிப்பதற்குத் தடுமாறினர். சிலர் சுருக்கமாகச் சொல்லி கையெழுத்திட்டனர். ஆனால் எழுபது வயதை நெருங்கிடும் ஒரு பெண் தடுமாற்றமிருந்தாலும் உறுதியாக பிரமாண அறிக்கையைப் படித்துவிட்டு பொறுமையாகக் கையெழுத்தைப் போட்ட பின்பே அமர்ந்தார். மேடையிலிருந்த சிலர் தடுத்த போதும் அவர் கேட்கவில்லை. இவை எளிய உதாரணங்கள். ஆனாலும் அடிநிலை உதாரணங்கள்.

பொது வாழ்க்கைக்கு வரும் பெண்கள் மதவாதம், சாதியவாதம், அதிகாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தப் ’பொதுச்சமூக ஆணியச்சிந்தனை’ களுக்கு எதிராகத்தான் முதலில் போராடுகிறார்கள். அதற்குப் பிறகே பொதுச்சேவை. வெளி வேலை-வீட்டு வேலை, வெளி ஆண்-வீட்டு ஆண், சுய பிம்பம்-பொதுபிம்பம், சாதியாதிக்கம்-மத ஆதிக்கம். இப்படி எல்லா நிலைகளிலுமே பெண்களுக்கு இரண்டு பாரங்கள். இரு நுகங்கள். பெண்களுக்குள் பெரும் விருப்பங்களும் கனவுகளும் இலட்சியங்களும் இருக்கின்றன. அவற்றை சிறிதளவேணும் அடைவதற்கு ஆணிய (ஆண்+இயல்) பொதுச்சமூகம் உருவாக்கி வைக்கும் இத்தகைய தடைச் சட்டகங்களை இணை செயல்பாடாக உடைத்து நொறுக்கிக் கொண்டே முன்னேற வேண்டியுள்ளது. இதில் களைத்துப் பின்வாங்கி வீடுகளுக்குள் சென்று கதவை மூடிக்கொள்கின்ற பெண்களும் உண்டு. எல்லாவற்றையும் புறந்தள்ளி மிளிர்ந்து நிற்கின்ற பெண்களும் உண்டு.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

அதிகாரம்

நான் இங்கு குறிப்பிடும் பொதுச்சமூக ஆணிய சித்தாந்தத்திற்கு இன்னொரு பெயர் ஆணாதிக்கம். அந்த ஆணாதிக்கத்தின் அடிப்படையாக இருப்பது அதிகாரம். சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் நடந்த சிறுகதை பயிற்சி முகாம் ஒன்றில் பேசுவதற்காகப் போயிருந்தேன். கோவை மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தினர் அந்த முகாமை ஏற்பாடு செய்திருந்தனர். மாலை அமர்வு முடிந்த பின்னர், நண்பர்களுடன் பேசியவாறே இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஓர் இளைஞன் என்னை அணுகிக் கேட்டான்.

“உங்க தோப்பு சிறுகதையில வர்ற தவணம் என்கிற அம்மா பாத்திரம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் தோழர். ஆனா ஒரு சந்தேகம். நிலமில்லாத விவசாயத் தொழிலாளியான தவணம் ஒடுக்கப் படறாங்க. அவங்களுக்கே அந்த நிலம் கிடைச்சதும், அவங்களும் அதிகாரத்தோட நடந்துக்கிறாங்க? இது சரியா தோழர்?”

ஒரு கணம் நான் சொற்களுக்கு யோசித்தேன். பிறகு, அது உழைக்கும் மக்களின் அதிகாரம். ஆதிக்கவாதிகளின் அதிகாரத்துக்கும் உழைக்கும் மக்களின் அதிகாரத்துக்கும் வேறுபாடு உண்டு. குணாம்சத்தில் இரண்டும் ஒன்றல்ல என்று சொன்னேன். ஆனாலும் எனக்கு திருப்தியேற்படவில்லை. அந்த இளைஞன் குறிப்பிட்டது என்னுடைய பிரபலமான தோப்பு சிறுகதையை.

அக்கதையில் தவணம் என்கிற ஏழை தலித் பெண்மணியின் குடும்பம் ஒரு தென்னந்தோப்பில் காவலுக்கு இருந்து வருகிறது. ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த அந்தத் தோப்பினுடைய முதலாளியிடமிருந்து பலவகையான சாதிய ஒடுக்குமுறைகளை தவணம் சந்திக்கிறார். தன் மகனை இழக்கிறார். அந்த முதலாளி அவரை பாலியல் ரீதியாக சுரண்டவும் பார்க்கிறான். அவர்கள் அந்தத் தோப்பை விட்டு வெளியேறுகிறார்கள். தவணத்தின் மகன் ஆசிரியராகி ஒரு நிலையை அடைந்த பிறகு அவனே அந்தத் தென்னந் தோப்பை விலைக்கு வாங்கி தன் அம்மாவிடத்தில் தருகிறான். உடல் நலிந்து எழமுடியாதபடி கிடக்கும் தவணம் அந்தத் தோப்பின் பத்திரத்தை கையில் வாங்கியதும், எழுந்து நின்று அந்த முதலாளியின் பெயரைச் சொல்லி, தோப்பில் விழுந்து கிடக்கின்ற தேங்காய்க் குலைகளை எடுத்துப் போடச் சொல்கிறார்.

தவணம் தன்னுடைய பழைய முதலாளியான ஆணைப்பார்த்து அதிகாரத்தோடு வேலைச் சொன்னதைத்தான் அந்த இளைஞனால் ஏற்கமுடியவில்லையோ என்றும் நான் யோசித்தேன். ஆண்கள் அழக்கூடாது என்று கற்பிக்கப்படும் நாடு தானே இது? ஏன் அப்படியானதொரு சிந்தனை தன்னையறியாமலேயே அந்த இளைஞனுக்குள் இருந்திருக்கக் கூடாது? ஒருவேளை தவணம் அப்படிக் கட்டளையிட்டிராமல் தவணத்தின் கணவன் சொல்லியிருந்தால் இவ்வாறான கேள்வி எழுந்திருக்குமா என்றும் நான் யோசித்தேன்.

அவ்வப்போது எனக்குள் வந்து போகின்ற, அந்தக் கோவை தம்பி கேட்ட கேள்வியோடு கடைத்தெருவில் பின்னாலிருந்து ஒலித்த குரலும் சேர்ந்துக் கொண்டது. தொடர்ந்து பல கேள்விகள் பெருகின. அதிகாரத்தின் வகைமைகள் தான் என்ன? பெண்கள் ஏன் இன்னமும் முழுமையான அதிகாரத்தைப் பெறவில்லை? இப்போதிருக்கிற அரைகுறை அதிகாரமும் அவர்களுக்கு சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறதா? மீண்டும் மீண்டும் ஓரிடத்திலேயே குவிக்கப்படுகிறதா? பெண்களிடமிருந்து ஆண்கள் அதிகாரத்தை எவ்விதம் பறித்துக் கொள்கிறார்கள்? எளிய பெண்களிடம் செல்லும் அதிகாரத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காக ஆண்கள் செய்கின்ற ஏமாற்று வேலைகள் என்னென்ன?

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

அதிகாரம்

அதிகாரம் என்பதை ஒருவர் பிறர்மீது செலுத்தும் தனி அதிகாரம் என்றும், ஒன்றின் நிமித்தம் பலர் மீது செலுத்தப்படும் கூட்டு அதிகாரம் என்றும் இரண்டாகப் பிரிக்கலாம். இந்த இருவகை அதிகாரங்களையும் பெண்கள் இன்றைக்குக் கொண்டிருக்கிறார்களா? சார்புநிலையற்ற தனித்துவமான சுயமரியாதையுடைய ஜீவியாக தன்னை வைத்துக் கொள்வதற்கு சட்டம் வழங்கிடும் தனிமனித உரிமைகளும், கூட்டு அதிகாரமாகிய அரசியல் அதிகாரப் பங்கேற்பும் அவர்களிடம் சேர்ந்திருக்கிறதா? பரிசீலித்துப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

ஒருவர் அதிகாரமற்று இருக்கும்போது பிறருடைய செயல்களுக்கு எளிதில் இரையாகிவிடுகிறார். அதிகாரத்துடன் இருப்பவர்களோ பலவற்றிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். ஆண்களிடம் அதிகாரம் இருப்பதால் அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். பெண்களிடம் அதிகாரம் இல்லாததால் கொலையாகிறார்கள். வல்லுறவுக்கும் வன்முறைக்கும் உள்ளாகிறார்கள். அவர்களுக்குக் கல்வி மறுக்கப்படுகிறது. அவர்களின் புழங்கு வெளிகள் சுருக்கப்படுகின்றன. மதச்சட்டங்களும் சாதியச்சட்டங்களும் அவர்கள் மேல் பிரயோகிக்கப்படுகின்றன.

அதிகாரம் கொண்டவராக இருக்கின்ற ஒரு மனிதர் தன்மீதும், பிறருடைய வளங்களின் மீதும் கட்டுப்பாட்டை உடையவராக இருக்கிறார். அதிகாரம் உள்ளவர் தன் வினைகளின் மூலம் மற்றவர்களை பாதிக்கின்றவராக இருக்கிறார். அதிகாரம் ஏனைய பாதிப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு அவருக்கு உதவிசெய்கிறது.

ஆதி பெண்ணியச் சமூகமாகிய தாய்வழிச் சமூகம் மெல்ல மெல்ல தன்னுடைய பிடியை இழந்தவுடன் அதை தந்தையர் சமூகம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. அதன்பிறகு காலப்போக்கில் மனித சமூகத்தில் உருவான குடும்பம், சொத்து, அரசு, சமூகப் படிநிலை, அந்தஸ்து, கவர்ச்சி, மரபு வழியாகப் பெறப்படும் உரிமைகள், வல்லாண்மை, மறைமுகமாகவோ நேர்முகமாகவோ கோரிப் பெறும் அனுகூலங்கள், அடி நீரோட்டமாக ஓடும் வழிவழியான நம்பிக்கைகள், கல்வியறிவு, பிரபல்யம், வன்முறை, குழுச் செயல்பாடு, புறச்சமூகத் தாக்கம் என எல்லாவற்றிலும் அதிகாரம் நுழைந்துக் கொண்டது. அல்லது புகுத்தப்பட்டது. பின்னர் இந்த இடங்களில் தன்னுடைய அதிகாரப் பிடிமானங்கள் சற்றும் குறைந்துவிடாத வண்ணம் பார்த்துக் கொண்ட ஆண்களின் சமூகம், பெண்களுக்கான நிலையை கராறாக வரையறை செய்து வைத்துக் கொண்டது.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

நேர் மற்றும் எதிர் அதிகாரம்

உயிரியல் அதிகாரம் இல்லாமல் எந்த உயிரினமும் உலகில் வாழவே முடியாது. சார்லஸ் டார்வினின் ’வலுத்தது வாழும், தக்கன தழைக்கும்’ என்கிற கோட்பாடுகள் இந்த உயிரின அதிகாரத்தை விளக்குகின்றன. ஒரு சூழலில் தாக்குப்பிடித்து வாழ்வதற்கு உயிரினங்களுக்கு தகவமைப்பு தேவைப்படுகிறது. பாம்புக்கு விஷம் இல்லாது போயிருந்தால் அவை கழுத்தில் அணியும் மாலையாகவோ, விளையாட்டு உயிரினமாகவோ கூட மனிதரால் பாவிக்கப் பட்டிருக்கலாம்! எனவே ஒவ்வொரு உயிரினத்துக்கும் அதிகாரம் தேவைப்படுகிறது.

அந்த வகையில் உலகின் காவலராகத் தன்னை எண்ணிக் கொள்ளும் மனிதர் வானளாவிய உயிரியல் அதிகாரத்தை வைத்துக் கொண்டு இயற்கையைச் சீரழிக்கின்றனர். அதோடு சமூக அதிகாரத்தை உருவாக்கி சகமனிதரையும் ஆள்கின்றனர்.

அதிகாரம் ஒருவருடைய தனித்தன்மையை அதிகரிக்கிறது. மற்றவர்களிடமிருந்து நாம் வேறுபட்டவர் என்று நேர்மறையாக (சிலசமயம் எதிர்மறையாகவும்) எண்ண வைக்கிறது. அதிகாரம் உள்ளவர் அதிகளவிலான ஆக்கப்பூர் உணர்வை உணர்கிறார். அதிகாரம் மிக்கவர் எதையும் முதலில் செய்யத் துணிகிறார்.

அதிகாரத்தின் வேண்டாத பக்கங்களும் இருக்கின்றன. சில நேரங்களில் அதிகாரம் மிக்கவர்களிடம் சமூகம் விரும்பாத செயல்கள் இருக்கின்றன. அதிகாரம் பாலியல் அதுமீறல்களில் ஈடுபட வைக்கிறது. அல்லது அப்படியான எண்ணம் உடையவர் அதிகாரத்துக்கு வந்தால் அவர் இன்னும் அதிகமாக அதில் ஈடுபடுகிறார். வன்முறை அல்லது குரூரச் சிந்தனை கொண்டவர் அதிகாரத்துடன் தொடர்பு வைத்துக் கொள்கின்றவராகவும், பாலுறவு எண்ணங்களை உடையவராகவும் இருக்கின்றார்.

இதில் ஆச்சர்யகரமாக, அதிகாரத்தில் இருக்கின்ற ஆண் பிறருடனான தொடர்பை குறைத்துக் கொள்கிறான் அல்லது பொதுச் சமூகத்துடனான தொடர்பை சுருக்கிக் கொள்கிறான் என்றும், அதிகாரத்தில் இருக்கும் பெண் சமூகத்துடனான அந்த உறவையும் தொடர்பையும் மேலும் அதிகரித்துக் கொள்கிறாள் என்றும் உளவியல் சொல்கிறது!

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு, அதிகாரத்தின் தீமையான பக்கங்களால் விளையும் விளைவுகளை பற்றி சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி அதிகாரத்தில் உள்ளவர்கள் கருணையுடன் இருக்கும்படிக்கு பயிற்சியளிக்க வேண்டும். அதிகாரத்தில் இருக்கின்றவர்களுக்கு பிறருடைய பார்வைக் கோணம் பிடிபடாதாகையால் பிறருடன் அவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இன்று நமக்கு வழங்கப் பட்டிருக்கும் சனநாயக அரசமைப்பு அதிகாரத்தை மென்மையாக்குவதற்கான வேலையைத்தான் முதன்மையாகச் செய்ய எண்ணுகிறது. சனநாயகம் செய்ய நினைக்கும் இந்த வேலையை பெண்கள் அதிகாரத்துக்கு வந்து மேற்கொண்டால் வேலை இன்னும் எளிதாகிவிடும்.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

பெண்கள் சனநாயக அதிகார அமைப்புகளில் அதிகளவில் நுழைந்து தன்னுடைய இடத்தை காலிசெய்து விடுவார்கள் என்ற பதற்றம் ஆண்களுக்கு இருப்பதனால் தான், மிகவும் தந்திரமாக பெண்கள் அடங்காப் பிடாரிகள், அதிகாரத்துக்கு வந்தால் திமிர் பிடித்தவர்களாக மாறுபவர்கள், முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் என்றெல்லாம் ஆணிய பொதுச்சமூக பிம்பங்களை உருவாக்குகிறார்கள். பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களைக் குறித்த எதிர்மறையான கருத்துகளையும் தொடர்ந்து கட்டமைக்கிறார்கள்.

கொஞ்சம் திரும்பி வரலாற்றைப் பார்த்தால் எத்தனை சட்டங்களை நம்முடைய சனநாயக அமைப்பு பெண்களுக்காக இயற்றித் தந்திருக்கிறது என்பது தெரியும். அத்தனைச் சட்டங்களும் தாமாகவே முன்வந்து கருணையால் செய்யப்பட்டவையல்ல. ஆணாதிக்கவெறி புரையோடிப் போயிருக்கிற இந்தச் சமூகத்தின் கொடுமைகளை சகித்துக் கொள்ள முடியாமல் செய்யப்பட்டவை.

இத்தனைச் சட்டங்கள் இருந்தும் இன்னும் கொடுமைகள் ஒழியவில்லை. இந்திய சமூகத்தில் ஓர் ஆணும் பெண்ணும் எந்தவகையான தளைகளும் இன்றி இயல்பாகச் சேர்ந்து வாழ்வதற்குரிய எளிய விடயங்களிலிருந்து கூட இன்னும் இச்சமூகம் மீண்டு வரவில்லை. வரதட்சிணைக் கொடுமைக்காக இந்த வாரம் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப் பெற்ற விஸ்மயா வழக்கையே இதற்கு ஆதாரமாகச் சொல்லமுடியும்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கேரள மாநிலம் கொல்லத்திலுள்ள தனது வீட்டில் 24 வயது நிரம்பிய விஸ்மயா பிணமாகக் கிடந்தார். ஆயுர்வேத மருத்துவ மாணவியான விஸ்மயாவுக்கும், மோட்டார் வாகனத்துறையில் பணிபுரிந்து வந்த கிரண்குமாருக்கும் திருமணமாகி ஓராண்டே ஆகியிருந்தது. விஸ்மயாவின் உடலில் காயங்கள் இருந்தன. அவர் உடல் கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது. காரணம் வரதட்சிணை.

நூறு சவரண் நகையும், 1.25 ஏக்கர் நிலமும், பத்து இலட்சம் மதிப்புள்ள காரும் மணக்கொடையாக வாங்கிக் கொண்ட பிறகும் கிரண்குமாரின் வரதட்சிணை வெறி அடங்கவில்லை. கேரள அரசு உடனடியாக வரதட்சிணைக் கொலைகளைத் தடுக்கின்ற வகையில் 24-மணி நேர ஹெல்ப் லைனை உருவாக்கியது. 2017 ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக கேரளாவில் 7000 வரதட்சிணை மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றதென தேசிய குற்றஅறிக்கை சொல்கிறது.

மெத்தப் படித்தவர்களும், முற்போக்கு பேசுகிறவர்களும் நிறைந்த கேரளாவில், கம்யூனிசம் ஆட்சி செய்கின்ற கேரளாவில் இதுதான் பெண்களின் நிலை. பிற இந்திய மாநிலங்களில் நிலைமைகள் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

சட்டங்கள்

பெண்சிசுக் கொலை சட்ட விரோதமானது எனக்கூறும் வங்காள ஒழுங்கு முறைச் சட்டம் பிரிடிஷ் இந்தியாவில் 1804 ஆம் ஆண்டு கொண்டுவரப் பட்டது. பின்னர் அதே சட்டத்தின் கீழ் உடன்கட்டை ஏறும் பழக்கம் சட்ட விரோதமென்று அறிவிக்கப்பட்டது. 1856ல் கொண்டு வரப்பட்ட இந்து விதவைகள் மறுமணச் சட்டம், விதவைகள் மறுமணம் செய்திட அனுமதியளித்தது. 1872ல் குழந்தைத் திருமணம் தடைசெய்யப்பட்டது. 1930ல் சிறுவர் சிறுமிகளுக்கான திருமண வயது உயர்த்தப்பட்டது. அப்போது பெண்களின் திருமண வயது 10. இந்தச் சட்டம் ஆணுக்கு 18 என்றும், பெண்ணுக்கு 14 என்றும் நிர்ணயம் செய்தது. மதராஸ் தேவதாசி ஒழிப்புச் சட்டம் 1947, தேவதாசி ஒழிப்பு மற்றும் அவர்களின் சட்டப்பூர்வ திருமண உரிமைக்காக கொண்டு வரப்பட்டது.

1955ல் இயற்றப்பட்ட இந்து திருமண சட்டத்திருத்தம், திருமணம் செய்து கொள்வதிலும் மணவிலக்குப் பெறுவதிலும் இருபாலருக்கும் சம அதிகாரத்தை வழங்கியதோடு, ஆணுக்குத் திருமண வயது 21 என்றும், பெண்ணுக்குத் திருமண வயது 18 என்றும் உறுதி செய்தது. தொடர்ந்து பெண் கடத்தல் தடுப்பு (1956), பேறுகால உரிமைகள் (1961), வரதட்சிணை தடுப்பு (1961), சம அளவு கூலி (1976), மருத்துவ அடிப்படையிலான கருக்கலைப்பு உரிமை (1971), சதி தடுப்பு ஆணையம் (1987), பெண்களைத் தவறாகவும் மோசமாகவும் ஆபசமாகவும் சித்தரிப்பதைத் தடுத்தல் (1986), பெண்கள் தேசிய ஆணையம் (1992), கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து அழிப்பதைத் தடுத்தல் (1994), குடும்ப வன்முறை தடுப்பு (2005), குழந்தைத் திருமணத் தடுப்பு (2006), பணியிடத்தில் பாலியில் வன்முறை தடுப்பு (2013) என பல சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

ஐ.எஃப்.எஸ் படித்துவிட்டு வெளியுறவுத்துறை பணியில் திருமணமான பெண்கள் சேர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் உரிமையில்லை. அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கே அரசிடமிருந்து எழுத்துப்பூர்வமாக அனுமதியைப் பெறவேண்டும். விமானப் பணிப்பெண்ணாக சேரும் ஒருவர் நான்காண்டுகளுக்கு திருமணமே செய்துகொள்ளக்கூடாது என்றெல்லாம் விதிகளைக் கொண்டிருந்த இந்நாட்டில் நீதிமன்றம் சென்றுதான் எல்லாவற்றையும் உடைக்க முடிகிறது. நீதிமன்றமே சொன்னாலும் சில தீர்ப்புகளை இன்னமும் இங்கு நிறைவேற்ற இயலவில்லை. குழந்தைப் பெற்றுவிட்டால் ஒரு பெண் திரைப்படங்களில் கூட கதாநாயகியாக முடியாது என்று உறுதியாக நம்புகிறவர்கள் தான் நாம்!

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

அதிகாரத்தைத் தடுத்தல்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆர்டிகிள்-15, பலவகையான சமத்துவ உரிமைகளை வழங்குகிறது. ஆர்டிகிள் 243 D மற்றும் ஆர்டிகிள் T ஆகியவற்றில் 1992 ஆண்டு செய்யப்பட்ட 73வது சட்டத் திருத்தத்தின்படி உள்ளாட்சித் தேர்தலில் மூன்றில் ஒருபங்கு இடங்கள் (33%) பெண்களுக்கு வழங்கப்பட்டன. அவ்விடங்களில் வெற்றி பெற்று வருகின்ற உள்ளாட்சி பெண் பிரதிநிதிகளின் நாற்காலிகளில் அவர்களுடய கணவர்களோ, சகோதரர்களோ உட்கார்ந்துக் கொள்வதும், அதிகாரத்தில் தலையிடுவதும் இன்னமும் நடக்கின்றது. துண்டறிக்கைகளிலோ, பேனர்களிலோ கூட அப்பெண்களின் புகைப்படங்களுக்கு பதிலாக ஆண்களின் படங்கள் இடம்பெறும் அளவுக்கு அதிகாரப் பறிப்பு தலைவிரித்தாடுகிறது.

தலித் பெண்களுக்கு நிலைமைகள் இன்னும் மோசம். அவர்கள் பஞ்சாயத்து தலைவராகவே வந்தாலும் அலுவலகங்களில் நாற்காலிகளில் உட்கார முடியாத நிலை, கொடியேற்ற முடியாத நிலை, அடிமை வேலைகளை தொடர்ந்து செய்திடும் நிலை. இந்த உள்ளாட்சிப் பிரதிநிதித்துவம் கூட சட்ட மன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் இல்லை. சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மூன்றில் ஒருபங்கு இடம் பெண்களுக்குக் கிடையாது. 181 பெண் உறுப்பினர்கள் இருக்கவேண்டிய நாடாளுமன்றத்தில் தற்போது பெண்கள் 78 பேர் தான். 78 பெண் உறுப்பினர்கள் இருக்க வேண்டிய தமிழக சட்டமன்றத்தில் தற்போது பெண்கள் 12 பேர் மட்டுமே (திமுக 6, அதிமுக 3, பாஜாக 2, காங்கிரஸ் 1). ஆனால் முரண் என்னவென்றால் வாக்காளர்களில் பெண்களே அதிகம்!

உள்ளாட்சி மன்றங்கள், சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு நடைபெறும் தேர்தலில் தலித் மற்றும் பழங்குடியின பெண்களுக்கு வழங்கப்படுகின்ற இடஒதுக்கீட்டை அப்பெண்களை கலப்பு மணம் புரிந்திருக்கும் ஆதிக்கச்சாதி ஆண்கள் மறைமுகமாகப் பறித்துக்கொள்வதும் தற்போது அதிகரித்துள்ளது. பெண்களை முன்னிறுத்தி நடைபெறுகின்ற இந்த அதிகாரப் பறிமுதல் பெண்களையும், தலித் மற்றும் பழங்குடியினரையும் ஒருசேர வஞ்சிக்கிறது.

அரசியலில் பெண்களின் வருகை அதிகரித்துவிட்டது. அதன் விளைவாய் பெண்கள் விமானம் ஓட்டுகிறார்கள். ரயிலை இயக்குகிறார்கள். ஆட்டோ ஓட்டுகிறார்கள். பெண்கள் ஆடும் டி20 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. பெண்கள் தங்களின் வீடுகளில் இருக்கும் ஆண்களைக் கொடுமை செய்கிறார்கள். வடிவேலு கோவை சரளாவிடம் அடிவாங்குகிறார். மன்னன் திரைப்படத்தில் விஜயசாந்தி திமிரோடு நடந்துக்கொள்கிறார். எனவே பெண்கள் அதிகாரம் பெற்று விட்டார்கள். என்று ஆணாதிக்கச் சிந்தனையிலிருந்து இன்னும்கூட விடுபடாமல், இந்தப் புதிய நூற்றாண்டிலும் பட்டிமன்றங்களில் பேசிச் சிரித்துக் கொண்டிருக்கிறது ஆணிய பொதுச் சமூகம். இது குரூர நகைச்சுவை.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 5

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment