ப.சிதம்பரம்
இந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட நபரை அல்லது இனமக்களை தாக்குவதற்கு இரண்டே வழிகள் தான் இருக்கின்றன. ஒன்று நிஜ உலகில் மற்றொன்று சமூக வலைதளங்களில். கடந்த நான்கு வருடங்களில் தாக்குதல்கள் என்பது மிகவும் அதிகமாகிவிட்டன. நிஜ உலகில், அதாவது இந்தியாவில் பெண்கள் ஜீன்ஸ் அணிந்தால், பூங்கா அல்லது மதுபான விடுதிகளில் காதலர்கள் ஒன்றாக அமர்ந்திருந்தால் கூட பிரச்சனையாகி அது தாக்குதல்களில் முடிந்துவிடுகிறது.
உத்தரப் பிரதேசம் தாத்ரி பகுதியில் முகமது அக்லாக் என்பவரை மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று அடித்தார்கள். ஹரியானாவில் பெகலு கான் அவருடைய மாட்டுப் பண்ணைக்கு மாடுகள் வாங்கிச் சென்ற போது அடித்துக் கொல்லப்பட்டார். குஜராத்தில் உள்ள உனா பகுதியில் தலித் குழந்தைகள் அடிக்கப்பட்டார்கள். அசாம், ஜார்கண்ட், மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் இது போன்ற பிரச்சனைகள் மிகவும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. தாக்குதல்களுக்கு ஆளாகுபவர்களில் அதிகம் இருப்பவர்கள் இஸ்லாமியர்கள், தலித்கள், மற்றும் பழங்குடி மக்கள் தான்.
கடந்த நில நாட்களாக வாட்ஸ் ஆப் வதந்திகளை நம்பி குழந்தை கடத்துபவர்கள் என்று நினைத்து நிறைய நபர்களை அடித்துக் கொன்ற சம்பவங்களும் இங்கு நடைபெற்றுள்ளன.
இணைய உலகில் இந்த தாக்குதல்களுக்கு ஒரு பெயர் இருக்கிறது: ட்ரோல். மிகவும் மோசமான, அசிங்கமான, வன்முறையான, கீழ்த்தரமான தாக்குதல்களை வார்த்தைகள் என்ற ஆயுதங்களைக் கொண்டு கண்ணுக்குத் தெரியாத ஒருத்தரை காயம் செய்கிறார்கள். ஒரு வேளை அவர்கள் நிஜ வாழ்வில் இருக்கும் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய நிலை வந்துவிட்டால் மேலே கூறியவர்களைப் போல் கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள் என்பது உண்மை.
சுஷ்மா சுவராஜ் மீது தொடுக்கப்படும் ட்விட்டர் தாக்குதல்
மிக சமீபத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ் மீது ட்விட்டர் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. பாஜக கட்சியின் மிக முக்கிய உறுப்பினராக தன்னுடைய வாழ்நாளில் பெரும் பங்கினை கழித்திருக்கிறார். படித்தவர், வெளி உலகம் அறிந்தவர், விசாலமான மனப்போக்கினைக் கொண்டவர். ஆனால் தன்னை இந்துப் பெண்ணாக பாஜகவில் அடையாளப்படுத்திக் கொள்ள சிறிதும் தயங்காதவர். நிறைய தேர்தல் களம் கண்டு அதில் வெற்றியும் பெற்றவர். 2009 – 2014 வரை, பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக பதவி வகித்தவர். தன்னை ஒரு நல்ல தலைவராக வளர்த்துக் கொண்டார். அந்த தேர்தலில் அவர் வெற்றிப் பெற்றிருந்தால், நிச்சயமாக பிரதம அமைச்சராக மாறியிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
2014 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதற்கிடைப்பட்ட தருணத்தில் நரேந்திர மோடி ஒரு கட்சியின் தலைவராக தன்னை வளர்த்துக் கொண்டு இன்று பிரதமராக இருக்கிறார் மோடியின் வருகையை எதிர்த்து எல்.கே. அத்வானி மற்றும் சுஷ்மா எதிர்ப்புகள் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இத்தனை எதிர்ப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் தனி ஆளாக நின்று போராடி, ஆளும் கட்சியின் அரசவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் சுஷ்மா.
சுஷ்மா சுவராஜ்ஜின் பணிகள்
வெளியுறவுக் கொள்கைகளை காரணம் காட்டி, அவருடைய அத்தனைப் பொறுப்புகளையும் பிரதம அமைச்சகம் பகிர்ந்து கொண்டது. ஆனால் தன்னுடைய நற்பெயரினை தன்னுடைய செயல்களால் நிலை நாட்டிக் கொண்டார் சுஷ்மா.
வெளிநாட்டில் யாராவது மாட்டிக் கொண்டால், யாராவது சிறை தண்டனை பெற்றால், பாஸ்போர்ட் மற்றும் விசா விசாரணைகள், இந்தியாவில் இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு படிக்க வருபவர்கள், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்கள் என அனைவரின் பிரச்சனைகளையும் சாதுர்யமாக கையாண்டார். இதன் காரணமாக எதிர்க்கட்சிகளுடன் வாக்குவாதத்தில் அவர் ஈடுபடுவது குறைந்து போனது.
ஆனால் திடீரென மக்களுக்கு சுஷ்மா மீது வெறுப்பு வரும் படியாக ஒரு சம்பவம் நடைபெற, அனைவரும் சுஷ்மாவினை ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சுஷ்மாவோ அல்லது அவரின் அலுவலகத்தில் இருப்பவர்களோ, லக்னோ பாஸ்போர்ட் நிலையத்தில் வேலை செய்துவந்த ஒருவரை இடம் மாற்றம் செய்திருக்கிறார்கள்.
மதம் மாறி திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியினருக்கு அந்த அதிகாரி பாஸ்போர்ட் தர மறுத்துவிட்ட விசயத்தை அத்தம்பதிகள் ட்விட்டர் மூலம் அமைச்சகத்திற்கு தெரிவித்தனர். அதனால் அந்த அதிகாரியின் பணியிடம் மாற்றப்பட்டது. இதனை அறிந்த மக்கள் சுஷ்மாவினை ட்ரோல் செய்து வசைபாடி இருக்கிறார்கள். இந்த ட்விட்டர் ஆர்மி தான் சில காலங்களாக எதிர்கட்சித் தலைவர்களை ட்ரோல் செய்து கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் யார்? இவர்களுக்கு யார் நிதி உதவி அளிக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவர்.
என்ன செய்தார் சுஷ்மா?
தன்னை இந்த ட்விட்டர் ட்ரோல்களால் பாதிக்கப்பட்டவராக மாற்றிக் கொண்டு, அந்த ட்விட்டர் பதிவு ஒவ்வொன்றையும் லைக் செய்து அதை ரீ-ட்வீட்டும் செய்திருக்கிறார். மேலும் ஒரு படி மேலே போய் அந்த ட்ரோல்களுக்கு ஆதரவாகவும், தனக்கு ஆதரவாகவும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று ஒரு ‘போல்’ நடத்தினார் சுஷ்மா. விளைவோ சற்று விபரிதமாக முடிந்துவிட்டது. 57% பேர் சுஷ்மாவிற்கும் 43% பேர் ட்ரோலகளுக்கும் ஆதரவினை தந்தார்கள்.
இது நடந்து வெகு நாட்கள் ஆனபிறகு, ராஜ்நாத் சிங் சுஷ்மாவிடம் “இந்த ட்ரோல்களை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று கூறியுள்ளார். இந்த ட்ரோல்களில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் நிறைய அமைச்சர்கள் பாலோ செய்து வருகிறார்கள். ஆனால் அவர்களை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவும் யாரும் துணியவில்லை.
ஆனால் உள்துறை அமைச்சருக்கு ஒரு கேள்வி “ட்ரோல்களை அப்படியே விட்டுவிடலாமா? அப்படியே இந்த கலாச்சார காவல், காதல் ஜிகாதிகள், பசுப் பாதுகாப்புப் படையின் அட்டகாசங்களையும் அப்படியே பெரிது செய்யாமல் விட்டுவிடலாமா?”
ஒருவரை அநாகரீகமாக எந்த ஒரு தளத்தில் பேசினாலும், அதனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து தான் ஆக வேண்டும். எந்த காரணத்திற்காகவும் தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டிப்பதை தாமதம் செய்யக் கூடாது.
தமிழில் நித்யா பாண்டியன்