Advertisment

குடும்பம், பதவி, போட்டி: மு.க.ஸ்டாலினை சூழும் 5 சவால்கள்

மு.க.ஸ்டாலினுக்கு முதல் சவால், பொருளாளர் பதவியை இட்டு நிரப்புவதுதான்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Live Updates

Tamil Nadu News Live Updates

மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 28-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் கூடிய திமுக பொதுக்குழுவில் திமுக புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதையொட்டி முன்கூட்டியே தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட கட்டுரை இது..

Advertisment

கருணாநிதி இல்லாத திமுக, புதிய சவால்களை மு.க.ஸ்டாலினுக்கு தர இருக்கிறது. அந்த சவால்களின் பட்டியலை இங்கு காணலாம். மேலோட்டமாக பார்த்தால், கடந்த சில ஆண்டுகளாகவே அந்த சவால்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து வருபவர்தானே? எனத் தோன்றும்! ஓரளவு அது நிஜம்தான்! ஆனாலும் புதிய சவால்கள் முளைத்து எழுகின்றன என்பதை இந்தக் கட்டுரையைப் படித்தால் புரிவீர்கள்!

கருணாநிதி, கடந்த 2 ஆண்டுகளாகவே பெயரளவுக்குத்தான் திமுக தலைவராக இருந்தார். செயல் தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலினே கட்சியின் தேர்தல் வியூகங்கள், கூட்டணி, பிரசாரம் அனைத்தையும் முன்னின்று இயக்கினார்.

கருணாநிதி ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்துவிட்ட நிலையில், அதி விரைவில் மு.க.ஸ்டாலின் கட்சியின் அதிகாரபூர்வ தலைவர் ஆவது உறுதி! ஏற்கனவே கட்சியை வழிநடத்தி வருபவர்தான் ஸ்டாலின்! ஆனாலும் முறையாக, முழுமையாக தலைவர் ஆகும்போது புதிய சவால்கள் முளைப்பது எதார்த்தம்!

M K Stalin, Karunanidhi Son, Challenges To MK Stalin, மு.க.ஸ்டாலின், மு.க.ஸ்டாலின் சவால்கள், திராவிட முன்னேற்றக் கழகம் MK Stalin And Challenges:மு.க.ஸ்டாலினுடன் முழுமையாக ஒட்டிக்கொண்டிருக்கும் ஒருவர் ஆ.ராசா!

பொருளாளர் பதவிக்கு பலத்த போட்டி

1. மு.க.ஸ்டாலினுக்கு முதல் சவால், பொருளாளர் பதவியை இட்டு நிரப்புவதுதான்! செயல் தலைவர் ஆன பிறகும், பொருளாளர் பதவியை அவரே வைத்துக் கொண்டிருக்கிறார். இனி தலைவர் ஆன பிறகும் அவரே வைத்துக் கொள்வது சாத்தியம் இல்லை! அப்படி வைத்துக்கொண்டால், அதுவும் விமர்சனத்திற்கு உள்ளாகும்!

திமுக.வில் தலைவர், பொதுச்செயலாளர் பதவிகளுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த பதவி அது என்பதால், பொருளாளர் பதவிக்கு ஏக போட்டி ஏற்பட்டிருப்பது நிஜம்! விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பொன்முடி, திருவண்ணாமலை எ.வ.வேலு, திருச்சி கே.என்.நேரு ஆகியோர் இதற்கான ரேஸில் இருக்கிறார்கள்.

ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு துணைப் பொதுச்செயலாளராக புரமோஷன் பெற்ற ஐ.பெரியசாமியும் இப்போது அடுத்த புரமோஷனுக்கு ஆசைப்படுகிறார். இவர்களில் யாருக்கு பொருளாளர் பதவியைக் கொடுத்தாலும் மற்ற மூவரின் அதிருப்தியை சம்பாதித்தே ஆகவேண்டும்.

கருணாநிதி இறந்த தருணத்தில் கோபாலபுரம் இல்லம், சி.ஐ.டி காலனி இல்லம் ஆகிய இடங்களில் சில முன்னேற்பாடுகளை கவனிக்க ஸ்டாலினால் அனுப்பி வைக்கப்பட்டவர் எ.வ.வேலு. மெரினாவில் கருணாநிதிக்கு இடத்தை உயர் நீதிமன்றம் உறுதி செய்ததும், அங்கேயும் துரைமுருகனுடன் சென்று ஏற்பாடுகளை கவனித்தவர்! இந்த அடிப்படையில் தனக்கு பொருளாளர் பதவி கிடைக்கும் என ரொம்பவே நம்பியிருக்கிறார் எ.வ.வேலு.

கருணாநிதி மறைந்த தருணத்தில் இருந்து மு.க.ஸ்டாலினுடன் முழுமையாக ஒட்டிக்கொண்டிருக்கும் மற்றொருவர் ஆ.ராசா! இன்று (ஆகஸ்ட் 10) செயற்குழு தேதியை அறிவிப்பதற்கு முன்பாக பேராசிரியர் அன்பழகனை சந்திக்க ஸ்டாலினுடன் சென்ற குழுவில் துரைமுருகனுடன் இவரும் இடம் பெற்றிருந்தார்.

இனி டெல்லி அரசியல் பக்கம் செல்லும் திட்டத்தில் இல்லாத ஆ.ராசா, கொள்கை பரப்புச் செயலாளர் பதவியில் இருந்து பொருளாளர் பதவி நோக்கி நகர விரும்புகிறார். ஆ.ராசாவுக்கு பொருளாளர் பதவியை தந்தால், கட்சியின் முக்கிய பதவியை தலித் ஒருவருக்கு கொடுத்ததாக ஸ்டாலினின் இமேஜ் எகிறும் என்றும் சிலர் சுட்டிக் காட்டுகிறார்களாம்!

திமுக மகளிரணி தலைவி மற்றும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான கனிமொழியும் புரமோஷனுக்கு காத்திருக்கிறார். அழகிரி குடைச்சல் குறையாத சூழலில் கனிமொழியை ‘கூல்’ செய்ய வேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு உண்டு. திமுக சீனியர்கள் ஆசியும் கனிமொழிக்கு இருப்பதாக தெரிகிறது.

M K Stalin, Karunanidhi Son, Challenges To MK Stalin, மு.க.ஸ்டாலின், மு.க.ஸ்டாலின் சவால்கள், திராவிட முன்னேற்றக் கழகம் MK Stalin And Challenges: அன்பழகன் விட்டுக் கொடுத்தால், அந்தப் பதவியைப் பிடிக்க துரைமுருகன் தயாராக இருக்கிறார்.

பொதுச்செயலாளர் வழி விடுவாரா?

2.அடுத்த சவால் பொதுச்செயலாளர் பதவி! திமுக.வில் எந்த ஒரு அறிவிப்பாக இருந்தாலும், ஒழுங்கு நடவடிக்கையாக இருந்தாலும் பொதுச்செயலாளர் பெயரில்தான் நடக்கும். கருணாநிதியைவிட ஒன்றரை வயது மூத்தவரான அன்பழகனிடம், நினைத்த நேரத்தில் கையெழுத்து பெற முடிவதில்லை. அவரது உடல்நிலை அப்படி!

அண்மையில் சென்னை விருகம்பாக்கம் பிரியாணி கடையில் தகறாறு செய்த பிரமுகரை கட்சியை விட்டு நீக்கும் நடவடிக்கை பற்றிய அறிவிப்பு அன்பழகன் பெயரில், ஆனால் அவரது கையெழுத்து இல்லாமலேயே வெளியானது.

நான்கைந்து வருடங்களுக்கு முன்பாகவே பொதுச்செயலாளர் பதவியை அன்பழகன் விட்டுக் கொடுப்பது பற்றிய பேச்சு வந்தபோது, ‘கருணாநிதி தலைவராக இருக்கிற வரை நானும் பொதுச்செயலாளராக இருந்து கொள்கிறேன்’ என அவர் சொன்னதாக தகவல்!

எனவே தற்போது அவரே விலகல் விருப்பத்தை தெரிவிப்பாரா? என்கிற எதிர்பார்ப்பு திமுக மேல்மட்டத்திலேயே இருக்கிறது. அன்பழகன் விட்டுக் கொடுத்தால், அந்தப் பதவியைப் பிடிக்க துரைமுருகன் தயாராக இருக்கிறார். ஆனால் பவர்ஃபுல்லாக இருந்த ஆற்காடு வீராசாமி பதவியை இழந்தபிறகு கண்டு கொள்ளப்படவில்லை.

திமுக தலைமை செயற்குழு அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு: தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்! To Read, Click Here

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மருத்துவரான அவரது வாரிசுக்கு ‘சீட்’ கேட்டும் கிடைக்கவில்லை. இதுதான் பேராசிரியரை உறுத்துவதாக சொல்கிறார்கள். ஒருவேளை பேராசிரியர் குடும்ப வாரிசு ஒருவருக்கு கவுரவமான கட்சிப் பதவி, நாடாளுமன்றத் தேர்தலில் சீட் என்கிற வாக்குறுதிகளுடன் அவர் விலகலாம். ஆனாலும் கருணாநிதி கல்லறை ஈரம் காயும் முன்பே அவரை துரத்திவிட்டார்கள் என்கிற அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதால், இதற்கு சில மாதங்கள் ஆகலாம்!

குடும்ப பஞ்சாயத்து

3.கருணாநிதி குடும்ப பஞ்சாயத்துகளும் ஸ்டாலினுக்கு எப்போதும் பெரிய சவால்தான்! கருணாநிதியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மு.க.அழகிரி, தனக்கு இல்லாவிட்டாலும் தனது மகனுக்கு கட்சியிலும், கட்சி அறக்கட்டளைகளிலும் பதவி கேட்டு உறவினர்களிடம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

மு.க.தமிழரசு, மு.க.முத்து, மாறன் குடும்பங்களில் இருந்தும் கட்சியில் உரிய அங்கீகாரங்களை எதிர்பார்க்கிறார்கள். கருணாநிதி இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் மொத்த குடும்பமும் உடைந்து நின்ற போது அவர்களுக்கு ஆறுதலாக நின்றவர்கள் முரசொலி மாறன் மனைவி மற்றும் சகோதரரான செல்வம், அமிர்தம் உள்ளிட்டவர்கள்தான்! எனவே இவர்களை அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு இருக்கிறது.

உடனடித் தேவை வெற்றி!

4. திமுக.வுக்கு இப்போதைய தேவை, உடனடியாக ஒரு தேர்தல் வெற்றி! ஒருமுறை விட்டு ஒருமுறை பொதுத்தேர்தல்களில் ஜெயித்து வந்த திமுக 2011 சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வாஷ் அவுட், 2016 சட்டமன்றத் தேர்தலில் மயிரிழையில் தோல்வி, கடைசியாக நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 3-வது இடத்திற்கு சென்று டெப்பாசிட் இழப்பு என தேர்தல் அரசியலில் பலத்த அடி வாங்கியிருக்கிறது.

எனவே அடுத்து வருகிற திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்கள் ஸ்டாலினுக்கு அக்னி பரீட்சை! அதுவும் திருப்பரங்குன்றத்தில், அழகிரி குறுக்கு சால் ஓட்டுவாரோ? என்கிற பதற்றமும் இருக்கிறது.

கூட்டணி அமைப்பதில் பலவீனம்?

5.ஸ்டாலினின் ஆகப் பெரிய பலவீனமாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுவது, தோழமைக் கட்சித் தலைவர்களுடன் நட்பு பேணுவதில் அதிக அக்கறை காட்டாதது! அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வலைவீசிப் பிடிக்க டிடிவி தினகரன், கமல்ஹாசன் போன்றவர்கள் இப்போதே களத்தில் சுற்றுகிறார்கள். புதிதாக ரஜினிகாந்த் கட்சியையும் எதிர்பார்க்கலாம்!

ஸ்டாலின் எப்படி கூட்டணி அமைக்கப் போகிறார்? என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் இருக்கும். வருகிற நாடாளுமன்றத் தேர்தல், அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் தாக்கத்தை உருவாக்கும்!

(பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது)

 

Mk Stalin Dmk M Karunanidhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment