Advertisment

இந்த பிரச்சனையை உருவாக்கியது ரஷ்யா தான், உக்ரைன் அல்ல

சோவியத்தின் கூட்டுக் கொள்கைக் காரணமாக உக்ரைன் விவசாயிகள் விலைப் பொருட்களை சோவியத் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். உணவுக்காக வேறெங்கும் வெளியே செல்லக் கூடாது என்ற தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக ஏற்பட்ட பஞ்சத்தில் சிக்கி 40 லட்சம் உக்ரேனியர்கள் மாண்டு போனார்கள்.

author-image
WebDesk
New Update
Russia Ukraine war, eastern Russia, war zone, opinion

Olha Vorozhbyt 

Advertisment

Russia has created this crisis not Ukraine: ஸ்லாவிக் மக்களைக் கொண்ட மற்றொரு அண்டை நாடான ரஷ்யா எங்கள் நாட்டின் மீது முழு வீச்சில் படை எடுத்து வருகின்ற இந்த நேரத்தில் நான் இந்த வரிகளை எழுதுகிறேன். இதை நான் எழுதுகிறேன் ஆனாலும் இன்றைய சூழலை என்னால் நம்பவே முடியவில்லை. மாஸ்கோ எங்களின் எல்லைகளின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்முனை தாக்குதலை மட்டும் நடத்தவில்லை. பெலாரஸ் போன்ற மற்ற நாடுகளில் இருந்தும் தாக்குதலை துவங்கியது. மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்தும் இத்தகைய தாக்குதலுக்கு மற்றொரு ஸ்லாவிக் நாடும் துணை நிற்கிறது.

”உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலான்ஸ்கை நேற்று இரவு தன்னாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் 137 உக்ரேனியர்கள் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டனர். 316 பேர் காயம் அடைந்தனர் என்று குறிப்பிட்டார். ரஷ்ய ஏவுகணைகள் எங்கள் தலைநகரம் கிவ், இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ், கிழக்கு மாகாணமான கெர்சோனை தாக்குகிறது. பல திசைகளில் இருந்து ரஷ்ய தாங்கிகள் எங்களின் எல்லைக்குள் நுழைய முயன்று வருகின்றன. சில இடங்களில் அவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்தாலும் உக்ரைன் ராணுவத்தினர் பல இடங்களில் ரஷ்ய ராணுவத்தின் செயல்பாட்டை முறியடித்து ரஷ்ய ராணுவனத்தினருக்கு சவாலாக நிற்கின்றனர்.

Ukraine latest news live updates: உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா.. இணைய சேவைகள் முடங்கியது!

தூக்கமற்ற 24 மணி நேரத்தை தொடர்ந்து, கொஞ்சம் இளைப்பாற கண்களை மூடினால், அதிகாலைக்கு முன்பே ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆளான சுஹுயிவ் பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்புப் பகுதிக்கு அருகே தன்னுடைய மகனை இழந்து நிற்கும் அப்பாவின் சோகம் என் கண் முன்னே வந்து செல்கிறது. இறந்து போனவர்களில் குழந்தைகளும் அடங்குவார்கள். 21ம் நூற்றாண்டில், மத்திய ஐரோப்பாவில் எனக்கும் என்னுடைய நாட்டிற்கும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நம்புவதற்கு எனக்கு கடினமாக உள்ளது. பிப்ரவரி 24ம் தேதி அன்று ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை துவங்கியது. ஆனால் 8 ஆண்டுகளுக்கு முன்பு க்ரீமியாவை ரஷ்யாவுடன் இணைத்த போதே இன்றைய போருக்கான ஆயத்தப் பணிகள் துவங்கிவிட்டன. டான்பாஸ் பகுதியில் உக்ரைன் ராணுவ வீரர்களையும், தன்னார்வலர்களையும் கொன்றது ரஷ்யாவுக்கு ஆதரவாக இருக்கும் உக்ரேனியர்கள் அல்ல ரஷ்ய ராணுவம் தான் என்பது இப்போது தெளிவாகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக ரஷ்யா தனது செல்வாக்கை உக்ரைனில் நிலை நிறுத்த தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. மற்ற மத்திய ஐரோப்பிய நாடுகளைப் போன்றே உக்ரேனியர்களும் முதலாம் உலகப் போருக்கு பிறகு அவர்களுக்கென்று சொந்த நாட்டை உருவாக்க போராடி வந்தனர். அதில் நாங்கள் வெற்றியும் பெற்றோம். 1918ம் ஆண்டு சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்டு, ஓராண்டில் மேற்கு உக்ரைன் குடியரசுடன் ஒன்றிணைந்தோம். ஆனாலும் மற்ற மத்திய ஐரோப்பிய நாடுகளைப் போல் எங்களால், எங்கள் சொந்த நாட்டில் வாழ்வதை கொண்டாட இயலவில்லை. மேற்குப் பகுதி போலாந்தாக மாறிய பிறகு ரஷ்ய ராணுவம் மற்றும் போல்ஷ்விக் உக்ரைனை 1920ம் ஆண்டு தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இப்படித்தான் சோவியத் காலம் உக்ரைனில் உதயமானது.

ரஷ்யா- உக்ரைன் போர்: காரணம் என்ன? முழுப் பின்னணி

வரலாற்றாசிரியர்களிடையே, உக்ரைன் ஒரு தனி நாடாக இருப்பது சோவியத் அதிகாரிகளால் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை என்று ஒருமித்த கருத்து உள்ளது. இதைத்தான் உக்ரேனியர்களும் ரஷ்யர்களும் ஒரே மக்கள் தான் என்றும் வ்ளாடிமிர் லெனின் தான் உக்ரைனை உருவாக்கினார் என்றும் ரஷ்ய அதிபர் புடின் தன்னுடைய ஏகாதிபத்ய சொல்லாடல்களால் மறுத்து வருகிறார். இதனால் தான் சோவித் யூனியன் ஒரு கூட்டாட்சி நாடாக இருந்தது. ஆனால் அது சர்வாதிகார ஆட்சி. உக்ரைன் அதில் ஒரு பகுதியாக இருந்ததால் அதற்கான விலையையும் கொடுத்தது.

1932-33 காலங்களில் உக்ரைனில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. ஹோலோடோமோர் என்று அழைக்கப்பட்ட அந்த பஞ்சத்தில், வறுமையின் பிடியில் சிக்கி 40 லட்சம் உக்ரேனியர்கள் மாண்டு போனார்கள். இது அன்றைய காலகட்டத்தில் உக்ரேன் மக்கள் தொகையில் 13% ஆகும். இன்று அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட 13 நாடுகள் அந்த பஞ்சத்தை உக்ரேனியர் இனப்படுகொலை என்று அடையாளப்படுத்தியுள்ளன. சோவியத்தின் கூட்டுக் கொள்கைக் காரணமாக உக்ரைனில் இருந்த விவசாயிகள் அனைவரும் தங்களின் விலைப் பொருட்களை சோவியத் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். உணவுக்காக அவர்கள் வேறெங்கும் வெளியே செல்லக் கூடாது என்ற தடை விதிக்கப்பட்டிருந்தது. ”ஃபைவ் ஸ்பைக்லெட்ஸ்” என்ற மோசமான சட்டத்தின் கீழ் விவசாயிகள் உணவு சேகரிப்பது தடை செய்யப்படிருந்தது. அதன விளைவாக பசியால் பல விவசாயிகள் மாண்டு போனார்கள். இந்த சட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். பலர் சுட்டுக் கொள்ளப்பட்டனர். என்னுடைய கணவரின் குடும்பத்தினர், அவருடைய கொள்ளுப்பாட்டி எவ்வாறு அக்காலத்தில் குழந்தைகளை காப்பாற்றினார் என்பது தொடர்பான வருத்தம் அளிக்கும் அனுபவத்தை தலைமுறை தலைமுறையாக பகிர்ந்து வருகின்றனர். பணக்கார குடும்பம் தூக்கி எரிந்த உருளைக்கிழங்கு தோலை தன்னுடையக் குழந்தைகளுக்கு உணவாக கொடுத்திருக்கிறார் அந்த பாட்டி.

பல உக்ரேனிய அறிவாளிகள், இசைக்கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் சோவியத் அரசால் சிறைக்கு அனுப்பப்பட்டனர். வதை முகாம்களில் அவர்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இரண்டாம் உலகப் போரும் உக்ரைனுக்கு மோசமான இழப்பை ஏற்படுத்தியது. திமோத்தி ஸ்நைந்தர் கூறும் ரத்த பூமியின் மையப்பகுதியில் உக்ரேன் அமைந்திருக்கிறது. இன்றைய போலந்திலிருந்து மேற்கு ரஷ்யா வரை நீண்டுள்ள இந்த மண் சோவியத் மற்றும் நாசிக்களின் கைகளில் சிக்கி பல்வேறு இன்னல்களை சந்தித்தது.

எனவே, 1980களின் இறுதியில், கிளாஸ்னோஸ்ட்டும் பெரெஸ்ட்ரோயிகாவும் மாற்றத்தைக் கொண்டுவந்தபோது, ​​உக்ரேனியர்கள் ஈர்க்கப்பட்டனர். சுவரசியமாக முதல் உந்துதல் டான்பாஸில் இருந்தே ஏற்பட்டது. 1989-90களில் அந்த பகுதிகளில் பணியாற்றும் நிலக்கரி சுரங்க ஊழியர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை அறிவித்தனர். பொருளாதாரம் தான் இதற்கு முக்கிய காரணம். அவர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை. வேலை பார்க்கும் சூழலும் மிகவும் மோசமாக இருந்தது. இதற்கான முடிவுகளை மாஸ்கோ எடுக்காமல் கிவ் எடுக்க வேண்டும் என்று விரும்பினார்கள். இந்த போராட்டங்கள் சோவியத் ஒன்றியத்தின் சரிவிற்கும் உக்ரைனின் சுதந்திரத்திற்கும் முன்னோடியாக கருதினார்கள். டிசம்பர் 1, 1991, "உக்ரைனின் சுதந்திரப் பிரகடனச் சட்டத்துடன் நீங்கள் உடன்படுகிறீர்களா? என்ற கேள்விக்கு க்ரீமியாவில் வசித்தவர்கள் உட்பட 90.92% மக்கள் ஆம் என்று கூறினார்கள். அதன் பின்னர் ஒரு வாரத்தில் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டது.

ரஷ்யா – உக்ரைன் போர் இந்திய பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

இந்த 30 ஆண்டுகளும் உக்ரைனுக்கு சுமூகமாக இல்லை. ஆனால் தொடர்ந்து அமைதியான அணுகுமுறையை கடைபிடித்தது உக்ரைன். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு உக்ரைனிடம் மூன்றாவது மிகப்பெரிய அணு ஆயுதக் கிடங்கு இருந்தது. 1996ம் ஆண்டு கிவ் அனைத்து அணு ஆயுதங்களையும் கைவிட்டது. அணு ஆயுதங்களை அமைதியாக குறைத்துக் கொண்ட நிகழ்வு உலக வரலாற்றில் இரண்டே முறை மட்டுமே நடந்துள்ளது. அதில் ஒன்று உக்ரைனால் நடத்தப்பட்டது. இதற்கு பதிலாக 1994ம் ஆண்டு புதாபெஸ்ட் மெமோராண்டம் கையெழுத்தானது. ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் சேர்ந்து உக்ரைனின் பிராந்திய இறையாண்மைக்கு உத்தரவாதம் அளித்தது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம். 1997ஆம் ஆண்டில், உக்ரைன் அதிபர் லியோனிட் குச்மா ரஷ்ய அதிபர் போரிஸ் யெல்ட்சின் இருநாடுகளுக்கு இடையே ஒரு நட்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். உக்ரைன், அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மாஸ்கோ மரியாதை காட்டிய இருதரப்பு ஒப்பந்தங்கள் இவை இரண்டு மட்டுமே.

உக்ரைன் நெருக்கடி என்று சமீபத்திய நிகழ்வுகளை உலக நாடுகளில் உள்ள ஊடகங்கள் தவறாக வழிநடத்துகின்றன. ரஷ்யா இந்த நெருக்கடியை உருவாக்கியதே தவிர உக்ரைன் இல்லை. உலகம் விரைவில் நெருக்கடி என்பதற்கு பதிலாக இதனை போர் என்று குறிப்பிடும் என்று நான் நம்புகிறேன். நாசிக்கள் இரண்டாம் உலகப் போரின் போது தாக்கியதைப் போன்று ரஷ்யா கோழைத் தனமாக அதிகாலை நான்கு மணிக்கு தன்னுடைய அண்டை நாட்டை தாக்கி “போரை” ஆரம்பித்துள்ளது.

2014ம் ஆண்டு முதல் உக்ரைன் பல விதங்களில் மாற்றம் அடைந்துள்ளது. போருக்கு மத்தியிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போன்று தன்னை வளர்த்துக் கொண்டது. நிறைய வாய்ப்புகளை கொண்டிருந்தது. விசா இல்லாத நாடாக இருந்தது. மிகவும் ஆழமான, விரிவான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எங்கள் தொழில்முனைவோருக்கு கூடுதல் விருப்பங்களை வழங்கியது. உக்ரைன் ஒரு ஜனநாயக நாடு. கிரெம்ளினைப் பொறுத்தவரை, ஒரு எதிரிகளை குறிவைக்கும் போது, ஜனநாயக அண்டை நாடு என்பதை அது ஏற்றுக் கொள்ளவில்லை. உக்ரேனியர்கள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் நுழைய மிகவும் ஆர்வம் காட்ட இது தான் காரணம். கடந்த கருத்துக் கணிப்பின்படி, உக்ரேனியர்களில் 67% பேர் ஐரோப்பிய ஒன்றியத்திலும், 59.2% பேர் நேட்டோவிலும் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த எண்கள் ரஷ்ய ஆக்கிரமிப்பின் விளைவால் ஏற்பட்டது. ஏன் என்றால் 2013-இல், 20%-க்கும் குறைவான உக்ரைனியர்களே நேட்டோவில் நுழைய விரும்பினர்.

இது கொஞ்சம் வித்தியசமாக தோன்றலாம். ஆனாலும் புடினின் இந்த ஆக்கிரமிப்பால் உக்ரேனியர்கள் அதிக அளவு தேசப்பற்று கொண்டவர்களாக மாறிவிட்டனர். ரஷ்ய மொழி பேசும் உக்ரேனியர்களும், உக்ரேனிய மொழி பேசும் உக்ரேனியர்களும் தங்களை உக்ரேனியர்களாகவே பார்க்கின்றனர். முழு வீச்சில் ஆரம்பமான இந்த போர் உக்ரேனியர்களை வருங்காலத்தில், அண்டை நாடான ரஷ்யாவை அதிகம் வெறுக்க தான் வைக்கும். ஆனாலும், உக்ரைன் மீதான க்ரெம்ளினின் இந்த போருக்கு எதிராக ரஷ்யா உட்பட உலக நாடுகள் முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருவது இந்த சூழலை ரஷ்ய மக்கள் மாற்றி அமைப்பார்கள் என்ற நம்பிக்கையை தருகிறது. நூற்றுக்கணக்கான ரஷ்ய தாய்கள் தங்களின் பிள்ளைகளை நேற்றில் போரில் பலி கொடுத்துள்ளனர். தங்களின் மகன்களுக்காக புடினை எதிர்த்து நிற்பார்களா?

போர் குறித்து இந்தியா தன்னுடைய அறிக்கையை மிகவும் கவனமாக வெளியிட்டுள்ளது. ஆனாலும் வலி மிக்க தன்னாட்டு வரலாறு, உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள உதவும். க்ரெம்ளினுக்கு தன்னுடைய பேரரசை மீண்டும் நிலை நிறுத்த விரும்புகிறது. உக்ரைனை அந்த நோக்கில் தான் பார்க்க துவங்குகிறது. இதனை உக்ரேனியர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இதற்கு எதிராக தொடர்ந்து அவர்கள் போராடுவார்கள்.

பிரிட்டன் இப்போது, இந்தியாவை தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தில் ஒரு அங்கம் என்று கூறினால் அதனை கற்பனை செய்து பார்க்க முடியுமா? இது சாத்தியமற்றது. ஆனால் அதனைத் தான் தற்போது ரஷ்யா செய்து கொண்டிருக்கிறது. இந்த அசாத்தியமான முடிவை அடைவதற்காக இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எப்போதும் இல்லாத வகையில் எங்கள் நகரங்கல் மீது ஏவுகணைகளை வீசுகிறது. எங்கள் நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர எங்களுக்கு உதவுங்கள். உக்ரைன் மட்டும் இதை விரும்பவில்லை. உக்ரைனில் வெடித்த முதல் குண்டுக்கு பிறகு உலகமே இதில் ஆட்டம் கண்டுள்ளது.

This column first appeared in the print edition on February 26, 2022 under the title ‘A letter from Ukraine’. The writer is Deputy Editor-in-Chief of Ukrayinskyi Tyzhden, a weekly magazine in Ukraine.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment