சுப. உதயகுமாரன்
<1> முன்னுரை
இது இளையோருக்கான தன் மேலாண்மைத் திறன்களை வளர்த்தெடுக்க உதவும் ஒரு தொடர். கொரோனாப் பெருந்தொற்றால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி இரண்டாண்டுகள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. ஏற்கனவே கிடைத்துக்கொண்டிருந்த தரமில்லாக் கல்வியும் தடைப்பட்டுப்போய், இணையவழிக் கல்வி, பெயரளவிலானத் தேர்வு, மதிப்பில்லா மதிப்பெண்கள் என்றானபோது, மாணவர்கள் ஒரு மாபெரும் தேக்கநிலையை எதிர்கொண்டனர்.
மாணவரல்லாத இளையோர் ஏற்றதொரு சமூக—பொருளாதார--அரசியல் சூழலோ, ஆதரவுதரும் கட்டமைப்புக்களோ ஏதுமின்றி, வாழ்வின் இலக்குகளைத் தொலைத்துவிட்டு, வாடி வதங்கிக் கொண்டிருக்கின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் ஒருபுறம் என்றால், வேலைக்கமர்த்தும் (employability) தகுதியின்மை இவர்களை இன்னொருபுறம் தாக்கி அழிக்கிறது. இப்படி அடித்தளமே ஆடிக்கொண்டிருக்கும்போது, இளம் தொழிலாளர்கள் மேலோங்கி வளருவதற்கான வாய்ப்புக்கள் ஏதுமின்றி துவண்டு போகின்றனர்.
கொரோனாப் பெருந்தொற்று முடக்கத்தினாலும், குடும்ப வறுமையினாலும், கல்வித் தடைகளினாலும், ஏராளமான மாணவர்கள் பள்ளி கல்லூரிகளிலிருந்து விலகிவிட்டனர். கட்டிடத் தொழில், மீன்பிடித் தொழில் போன்ற சிறு சிறு வேலைகளுக்குச் சென்று, பொருளீட்டி குடும்பத்துக்கு உதவ வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்பட்டனர். தமக்கு கிடைக்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை வீட்டுக்குக் கொடுத்துவிட்டு, மீதமுள்ளக் காசை தங்கள் செலவுகளுக்கென வைத்துக்கொள்கிறார்கள்.
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, கல்வி இடைநிற்றலுக்கு உள்ளாகி, வாழ்க்கையின் அர்த்தமும், வருங்காலத்தின் நிரந்தரத்தன்மையும் கேள்விக்குள்ளாகிப்போன நிலையில், ஏராளமான இளைஞர்கள் விரக்தியும், வேதனையும் அடைகின்றனர். ஏற்கனவே நம் சமூகத்தில் மதுபானங்களும், கஞ்சா, கொகெய்ன் போன்ற போதைப்பொருட்களும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பல இளைஞர்கள் இவற்றுக்குள் இடறி விழுகின்றனர். இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் அரிசிக்கு அடுத்தபடியாக அதிகம் விற்பனையாகும் பொருள் கஞ்சாதான் என்றால் அது மிகையில்லை.
இப்படியாக இளைஞர்களின் வாழ்க்கை அழிந்து கொண்டிருக்கிறது. எதிர்காலம் இருண்டு கிடக்கிறது. சக்திமிக்க சமூக-பொருளாதாரப் பின்புலமும், உறுதியான குடும்பப் பின்னணியும், தனிப்பட்ட முறையிலான விழிப்புணர்வும் கொண்டவர்கள் மட்டுமே தப்பித்துக்கொள்ள முடியும் என்கிற நிலை உருவாகியிருக்கிறது.
மேற்குறிப்பிட்ட அம்சங்கள் வாழ்வில் அமையப் பெறாதவர்களின் நிலைமை கவலைக்குரியதுதான். வழிதவறிப்போகும் இளைஞர்களையும், இளம்பெண்களையும் பெற்றோர் கண்டித்தால், வம்பு வழக்குகள், ஓடிப்போதல், காணாமற்போதல், தற்கொலை போன்ற நடவடிக்கைகளால் அவர்கள் தண்டிக்கப்படுகின்றனர். இப்படியாக கண்டிக்கவும் முடியாமல், கண்டுகொள்ளாமல் இருக்கவும் முடியாமல் பெற்றோர் பெரும் துன்பத்துக்கு ஆளாகின்றனர்.
அதிகாரபீடங்கள் இவை குறித்தெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. காரணம் அவர்களைப் பொறுத்தவரை, சிந்திக்காத, செயல்படாத, மழுங்கிபோன இளைஞர்கள் ஒரு மாபெரும் வரப்பிரசாதம். சமூக-பொருளாதார-அரசியல் ஏற்பாடுகளைக் கேள்வி கேட்காமல், ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்போரிடம் கணக்குக் கேட்காமல், கண்மூடி, காதுமூடி, வாய்பொத்தி, தலைகவிழ்ந்து, கைகட்டிக் கிடக்கும் இளையோர் எவ்வளவு பெரிய ஏந்தல் அவர்களுக்கு!
“ஆகாவென்று எழுந்து பார், யுகப் புரட்சி” என்று கொண்டாடுமளவுக்கு எந்தவிதமான மாற்றமும், ஏற்றமும் இங்கே வருவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. ஒருபுறம் செல்வச்செழிப்பு, இன்னொருபுறம் ஏதுமற்ற வறுமை; ஒருபக்கம் உயரப்பறக்கும் ஓராயிரம் வாய்ப்புக்கள், இன்னொரு பக்கம் இழுத்து மூடப்பட்டிருக்கும் இரும்புவாசல்கள் – இப்படியாக இருக்கும், இயங்கும் நம்முடைய சமூகத்தில் ஒவ்வோர் இளைஞனும், இளம்பெண்ணும் தன்னைத்தான் காத்துக்கொள்வது மிக மிக முக்கியமானதாக இருக்கிறது.
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையேக் கொல்லும் சினம்
என்றார் வள்ளுவர். சினம் மட்டுமல்ல, சின்னச் சின்ன விடயங்கள் பலவற்றிடமிருந்து நம் இளைஞர்களை தங்களைக் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு சிறு தவறுகூட உங்களின் மாண்பை, கண்ணியத்தை, கவுரவத்தை, நற்பெயரை, வாய்ப்புக்களை, வருங்காலத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் ஆபத்தோடு வாழவேண்டிய நிலைக்கு இன்றைய இளைஞர்கள் தள்ளப்பட்டிருக்கிறீர்கள்.
முந்தையத் தலைமுறைகளின் இளமைக்காலம் போலல்லாமல், உங்களின் கவனத்தை திசைதிருப்பும் விடயங்கள், தவறு செய்யத் தூண்டும் விடயங்கள் ஏராளமாக பல்கிப் பெருகிக் கிடக்கின்றன. வாழ்க்கை உங்களை நோக்கி எறிந்து கொண்டிருக்கும் ‘கூக்ளி’ ஆச்சரியங்களைப் போலவே, உங்களுக்கு எதிராகப் பின்னப்படும் சதிவலைகளையும் நீங்கள் கவனமாக தவிர்க்க வேண்டியிருக்கிறது.
ஒரு திறமைமிக்க செப்படி வித்தைக்காரர் போல, அத்தனைப் பிரச்சினைகளையும் நீங்கள் ஒரே நேரத்தில் சாமர்த்தியமாகக் கையாண்டாக வேண்டும். இந்த வினோதமான, சில நேரங்களில் விபரீதமான, விளையாட்டை விளையாடுவதற்கு நீங்கள் நிலையாக, உறுதியாக நின்றாக வேண்டும். வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை ரயிலில் நிலைக்குத்தி நிற்பதற்கான அடிப்படைகளைத்தான் தன் மேலாண்மைத் திறன்கள் என்றழைக்கிறோம்.
இத்திறன்கள் வாய்க்கப்பெற்றோர், இவற்றை கவனமாக வளர்த்தெடுப்போர் தங்களுக்குத் தாங்களே பெரும் துணையாக இருக்க முடியும். அதைத்தான் கவிமணி தேசிகவிநாயகம் அவர்கள் இரத்தினச்சுருக்கமாகச் சொன்னார்:
நாமே நமக்குத் துணையானால்,
நாடும் பொருளும் நற்புகழும்
தாமே நம்மைத் தேடிவரும்;
சற்றும் இதற்கோர் ஐயமுண்டோ?
“நாமே நமக்குத் துணையாவது” என்பது தன் மேலாண்மைத் திறன்கள் குறித்து அறிந்திருப்பதும், அவற்றை
சிரத்தையுடன் வளர்த்தெடுப்பதும்தான்.
பள்ளிகள், கல்லூரிகள், பணியிடங்கள் போன்றவற்றில் நாம் பெறுகிற திறன்களை கடினத்திறன்கள் (Hard Skills), மென்திறன்கள் (Soft Skills) என்றெல்லாம் வகைப்படுத்துகிறோம். ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் ஊன்றிக் கவனஞ்செலுத்தி பற்றவைப்பவர் (வெல்டர்), குழாய்நுட்பர் (பிளம்பர்) என்று தேர்ச்சி பெறுகிறவர்கள் கடினத்திறன் கொண்டவர்களாக அறியப்படுகின்றனர். இப்படிப்பட்ட தனித்துறைப் பயிற்சி ஏதுமின்றி அனைவரும் பெற்றிருக்கவேண்டிய அல்லது குறைந்தபட்சம் அறிந்திருக்க வேண்டிய திறன்களை மென்திறன்கள்
என்றழைக்கிறோம்.
இவற்றைப் போலல்லாமல் அன்றாட வாழ்க்கையை அழகுற நடத்த நமக்குத் தேவையான அடிப்படைத் திறன்களை வாழ்க்கைத் திறன்கள் என்று குறிப்பிடுகிறோம். இவற்றை நம்முடைய குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள், வழிபாட்டுத்தலம், பொதுச்சமூகம் என பல்வேறு மூலங்களிலிருந்து நாம் பெறுகிறோம்.
இந்த வாழ்க்கைத் திறன்கள் வரைமுறை அற்றவை. இந்த பட்டியலை தயாரிப்பது மிகவும் கடினமானது. ஆனால்கவிமணி அவர்கள் குறிப்பிடும் “நாமே நமக்குத் துணை”யாக இருப்பது எப்படி என்பது குறித்துசிந்திக்கும்போது, தன் மேலாண்மை (Self-management) திறன்கள் என்று சிலவற்றைக் கண்டுணரலாம். ஆங்கிலத்தில் God helps those who help themselves (தனக்குத் தானே உதவி செய்கிறவர்களுக்குத்தான் கடவுளே உதவுகிறார்) என்று குறிப்பிடுகிறார்கள். தெய்வப்புலவர் திருவள்ளுவர், பாவேந்தர் பாரதிதாசன், கவிமணி தேசிகவிநாயகம் போன்ற தமிழின் சிகரங்களிலிருந்துத் தொண்டியெடுத்தும், என்னுடைய தனிப்பட்ட வாழ்வியல், அனுபவங்களிலிருந்து அள்ளியெடுத்தும் என் கருத்துக்களை இங்கேப் பதிகிறேன்.
முதலில் உடலில் இருந்து ஆரம்பிக்கலாம் என்றெண்ணுகிறேன். உடலின் புறத்திலும், அகத்திலுமான சில
விடயங்களைப் பற்றி பேசிவிட்டு, உணர்வுகள், உறவுகள், கல்வி மற்றும் தொழில், தகுதிகள் மற்றும் திறமைகள்,
ஆசைகள் மற்றும் கனவுகள், வாழ்வியல் விடயங்கள் குறித்துப் பேசலாம்.
அன்றாட வாழ்க்கைத் திறன்கள் உடலின் புறத்திலும், அகத்திலும் இருந்தே அமைகின்றன. “உடலினை உறுதி செய்” என்ற பாரதியின் வேண்டுகோளிலிருந்து, நடை. உடை, பாவனை என்று தொடரலாம்.
உணர்வுகள், உறவுகள் தொடர்பான திறன்கள் அனைத்தும் அன்றாட வாழ்க்கையின் தேவைகள், சவால்கள் போன்றவற்றை திறம்பட நேர்மறையாக எதிர்கொள்ளத் தேவைப்படும் உளவியல்-சமூகத் திறன்களே வாழ்க்கைத் திறன்கள். நெகிழ்வுத்தன்மை, முயற்சி, ஆக்கத்திறன், தலைமைத் திறன், சமூகத்திறன்கள் போன்றவையே இந்நூற்றாண்டின் மிக முக்கியமான வாழ்க்கைத் திறன்கள்.
பகுப்பாய்வு, மதிப்பாய்வு, தன் பலங்களின் மூலம் பாடம் படித்தல், நிறுவனங்கள் கடந்து நிதமும் கற்றல், பிறரோடு இணைந்து கற்றல், நெகிழ்வுத்தன்மை போன்ற வழிகளின் மூலமே நாளைய வாழ்க்கைக்குத் தேவையான திறன்களைப் பெற முடியும்.
எல்லாமறிந்த முதிய ஆசிரியர் ஏதுமறியா இளம் மாணவருக்கு பாடம் எடுப்பது போன்றோ, அனைத்துமறிந்த அப்பா அவை எதுவும் தெரியாத மகனுக்கு அறிவுரைப்பது போன்றோ நான் எழுத விரும்பவில்லை. ஓர் அண்ணனாகக்கூட அல்ல, வெறும் நண்பனாகவேப் பேச விழைகிறேன். பாவேந்தர் சொல்வது போல,
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com)
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 2
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.