சுப. உதயகுமாரன்
[10] இலக்குகளை எட்டுவோம்
அடையாளம் பற்றிப் பேசும்போது நான் சுட்டிக்காட்டியிருந்தது போல, மனித வாழ்வின் இரண்டு அடிப்படை கேள்விகளுள் இரண்டாவது முக்கியமான கேள்வி, “(இம்மண்ணுலக வாழ்வில்) எனக்கு என்ன வேண்டும்?” என்பதுதான்.
பெரும்பாலானோர் பணம் வேண்டும் என்று விரும்புகிறார்கள். பணம் இருந்தால் எதை வேண்டுமென்றானாலும் விலைகொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். வேறு சிலர் ஓர் அரசியல்வாதியாக, அல்லது அரசு உயர் அதிகாரியாக அதிகாரம் பெற வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். இன்றைய நிலையில் அதற்கும் ஏராளமானப் பணம் தேவைப்படுகிறது. பணமும், அதிகாரமும் இருந்தால் புகழ் வருகிறது என்பதால், புகழை விரும்புகிறவர்களும் பணத்தின் பின்னால்தான் ஓடுகிறார்கள்.
இவ்வுலக யதார்த்தத்தை சுட்டிக்காட்டும் வள்ளுவம்.
அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு
என்கிறது. அதாவது, பொருள் இலாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாததுபோல, உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம். அப்படியானால், பொழுதெலாம் பொன், பொருளை ஈட்டி, அவற்றை நோட்டுக் கட்டுக்களாகவும், தங்கக் கட்டிகளாகவும், பங்குவர்த்தக (அடிக்)கட்டைகளாகவும் ஏராளமாக சேமித்து வைப்பதைத்தாண்டி, இவ்வுலக வாழ்வில் வேறேதும் இலக்குகளே கிடையாதா?
தேடிச் செலவுசெய் யும்பொருள் நம்பொருள்; சேர்த்துவைக் கும்பொருள் யார்பொருளோ? வாடி வயிற்றுக்கொன் றீயாத லோபிக்குஇவ் வையக வாழ்வேதும் உண்டோ? அடா!
என்று கேட்கிறார் கவிமணி. பொருள் தேடுவது, செலவிடுவது, சேமிப்பது எனும் மூன்று அம்சங்களை சுட்டிக்காட்டும் அவர், ‘காசு, பணம், துட்டு, மணி’ என்று அலையாமல், பாரதியார் சொல்வது போல, “தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்” என்று அறிவுரைக்கிறார்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
சரி, பணம் சம்பாதிப்பது வாழ்வின் இலக்கு இல்லையென்றால், வேறு எது நமது இலக்கு? என்னைப் பொறுத்தவரை, வாழ்வின் இலக்கு என்பது இவ்வுலகின் நீண்ட நெடியத் தொடர் ஓட்டத்தில் உங்களின் சிறப்புப் பங்களிப்பைச் செய்வதும், உங்களைச் சுற்றியுள்ளோர் உங்களைப் பற்றி பெருமிதம் கொள்ளவைப்பதும், உங்கள் வாழ்க்கையை மனிதகுலத்துக்கே அர்த்தமுள்ளதாக மாற்றுவதும்தான்.
இவற்றுள் மனிதனாய் இருப்பதும், இயங்குவதும் உங்களின் முதல் இலக்காக இருக்கட்டும். பாவேந்தர் சொல்வது போல,
மானிடம் போற்ற மறுக்கும் – ஒரு மானிடம் தன்னைத்தன் உயிரும் வெறுக்கும்; மானிடம் என்பது குன்று – தனில் வாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று மானிடருக்கினி தாக – இங்கு வாய்ந்த பகுத்தறிவாம் விழியாலே வான்திசை எங்கணும் நீ பார்! – வாழ்வின் வல்லமை ‘மானிடத்தன்மை’ என்றே தேர்.
இரண்டாவது இலக்கு நீங்கள் வாழும் சமூகத்துக்காக நீங்கள் செய்யும் பணிகளைக் கண்டு உங்களுக்கானவர்கள் உங்களைப் பற்றி பெருமைகொள்ளச் செய்வது. பாவேந்தர் இன்றைய இளைஞர்கள் செய்ய வேண்டிய இரண்டு முக்கியமான கடமைகளைச் சுட்டிக்காட்டுகிறார்:
சாதி ஒழித்திடல் ஒன்று – நல்ல தமிழ் வளர்த்தல் மற் றொன்று பாதியை நாடு மறந்தால் – மற்றப் பாதி துலங்குவதில்லை.இந்த சமூகத்தில் நீங்கள் ஆற்றுவதற்கான அரும்பணிகள் ஆயிரமாயிரம் இருக்கின்றன. அவற்றுள் உங்களுக்குப் பிடித்த சிலவற்றை தேர்ந்தெடுத்துக்கொண்டு இயங்குங்கள்.
மூன்றாவது இலக்கு உங்களுக்கே உரித்தான சிறப்புக்களை, தனித்தன்மைகளை, திறமைகளை வெளிக்கொணர்ந்து, உங்கள் வாழ்க்கையை உங்களுக்கும், உலகுக்கும் அர்த்தமுள்ளதாக மாற்றுவது எனலாம். ஆசிரியர் ஆவேன், ஓவியர் ஆவேன் என்று உங்களுக்கானத் தொழிலை, வருமானத்துக்கான வழியைத் தேர்வது ஒரு பக்கமாகவும், அதன் வழியாக இவ்வுலக வாழ்வை இயன்ற அளவு மேம்படுத்துவது என்பது மறுபக்கமாகவும் இருக்கட்டும்.
இப்போது நீங்கள் சிந்தித்து சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. உங்களை முழுமையாக அணியமாக்கிக்கொண்டு சேவைக்குள் இறங்குவதா (Self before service), அல்லது சேவை செய்தவாறே உங்களைக் கண்டுணர்வதா (Self through service) எனும் கேள்வி எழுகிறது. இது உங்களின் தனிப்பட்டச் சூழலைப் பொறுத்து நீங்கள் தீர்மானித்துக் கொள்ளவேண்டிய விடயம்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
இதைவிட முக்கியமான விடயம் என்னவென்றால், சிறு கடுகு உள்ளத்தோடு வீழ்வதா, அல்லது பெரும் தாயுள்ளத்தோடு வாழ்வதா என்பதுதான். பாவேந்தர் பாங்குறக் கேட்கிறார்:
தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு தானுன் டென் போன் சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன் தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!….. தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம் தொல்லுலக மக்களெல்லாம் ‘ஒன்றே’ என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்!
தாயுள்ளத்தோடு வாழ முடிவெடுத்தாலும், தகுதி, தராதரம் என்றெல்லாம் எண்ணி உங்களை சுருக்கிக் கொள்ளக்கூடாது.
Think big and your deeds will grow,
Think small and you will fall behind
என்கிறது ஓர் ஆங்கிலக் கவிதை. நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே ஐ.நா. பொதுச்செயலாளராக ஆவதுதான் என்னுடைய இலக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தேன். நியூ யார்க் நகரிலுள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தின் படத்தை எனது மேசையில் வைத்திருந்தேன். அதை அவ்வப்போது கண்ணுறுவதும், கனவில் மூழ்குவதும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாய் இருந்தன.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
கூலி வேலை செய்து வாழ்ந்த தாத்தாக்களின், எழுதப் படிக்கத் தெரியாத பாட்டிகளின் பேரன் ஐ.நா. பற்றி கனவுகண்டது பாரதி அறிவுரைத்த “பெரிதினும் பெரிது கேள்” என்பதாகவே அமைந்தது. ஆனாலும் அப்படி ‘பெரிய’ கனவு கண்டதன் விளைவாக என்னுடைய அமெரிக்க மாணவ, மாணவிகளை எண்ணிறந்த முறை ஐ.நா.வுக்கு இட்டுச்செல்வதற்கும், அங்கே பன்னாட்டுப் பிரதிநிதிகளின் முன்னால் உரையாற்றுவதற்கும் என்னால் முடிந்தது.
நீங்கள் நிர்ணயித்துக்கொண்ட இலக்கு நீங்கள் நினைத்தது போலவே முழுமையாகக் கைகூடவில்லை என்றால் கலங்காதீர்கள். இயற்கை உங்களுக்காக வேறு ஏதோ திட்டம் வைத்திருக்கிறது என்பதை உணருங்கள்.
சில்வியா நாசர் (Sylvia Nasar) நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் படித்த ஓர் அறிவார்ந்த பொருளாதார மாணவி. உலகப் புகழ்பெற்ற 1973-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற வாசிலி லியோன்டிஃப் (Wassily Leontief) எனும் அறிஞரின் நான்கு உதவியாளர்களுள் ஒருவர் அவர். ஆனால் அவருடைய முனைவர் பட்டத்துக்கான இறுதித்தேர்வு ஒன்றில் ஒரு சிறு தவறிழைத்து, சில்வியா குறைந்த மதிப்பெண்கள் பெற்றார். அந்த சிறு தவறின் காரணமாக அவருடைய முனைவர் பட்டத்துக்கான கல்வியைத் தொடர முடியாமற் போயிற்று.
கல்வித் தடைபட்டு, கனவைத் தொலைத்துவிட்ட சில்வியா நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் பொருளாதார நிருபராக வேலைக்குச் சேர்ந்தார். அப்போது 1994-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜான் எஃப் நாஷ் (John F. Nash) என்பவரை பேட்டிகாணும் வாய்ப்பினைப் பெற்றார். இளம் வயதிலேயே மிகப் பெரும் கணிதவியல் நிபுணராகத் திகழ்ந்து, பின்னர் மனச்சிதைவு நோய்க்கு ஆளாகி, தன்னுடைய அறிவு பலத்தாலும், மனத்திடத்தாலும் அந்த நோயை வென்று வெற்றிவாகை சூடிய அந்த மாமனிதரைப் பற்றி சில்வியா ‘ஓர் அழகான மனது’ (A Beautiful Mind) என்கிற புத்தகத்தை எழுதினார். அந்த புத்தகம் உலகெங்கும் மிக அதிக எண்ணிக்கையில் விற்று பெரும் லாபம் ஈட்டியது. பின்னர் அந்த நூல் திரைப்படமாக எடுக்கப்பட்டு, 2001-ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் பரிசினை வென்றது. ஊர் பேர் தெரியாத ஒரு பொருளாதார நிபுணராக அல்லது ஒரு கல்லூரிப் பேராசிரியாக இருந்திருக்க வேண்டிய சில்வியா, உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக உயர்ந்து நின்றார்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
வாழ்க்கை இப்படி சில எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி உங்களை எங்கோக் கொண்டு சென்றுவிடும் இயல்புடையது. ஒரு தோல்வி மாபெரும் வெற்றிக்கான படிக்கட்டாக மாறிவிடும்.
வள்ளுவம் சொல்லும் வாக்கினை உள்வாங்கிக் கொள்ளுங்கள்:
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
ஒரு செயலை செய்து முடிப்பதற்கு ஏற்ற காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் அது கைகூடும்.
‘எங்கேப் போகிறோம்’ என்றறிந்து விரையும் ஓர் ஓட்டுனர் தான் செல்லவிருக்கும் வழிப்பாதை பற்றி, பயணம் பற்றி, போகும் வழியில் எழும் சாதகபாதகங்கள் பற்றியெல்லாம் முன்கூட்டியே சிந்திப்பார், தேவையான முன்தயாரிப்புக்களைச் செய்துகொண்டு, முனைப்போடு பயணிப்பார். இலக்கை எளிதில் விரைவில் அடைவார்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
ஆனால் ‘எங்கோப் போகிறோம்’ என்றெண்ணி வெறுமனே அலைந்து திரியும் ஓர் ஓட்டுனர் எங்கேப் போவது என்றறியாது, எப்படிச் செல்வது என்று தெரியாது, எங்கேயும் போய்ச் சேர மாட்டார். அவரது இலக்கற்ற பயணம் இனிமையானதாகவோ, பயனுள்ளதாகவோ இருக்காது.
எனவே ‘எங்கேப் போகிறோம்’ என்று தெளிவாகத் திட்டமிட்டு, கடந்தகாலம், கடக்கவிருக்கும் காலம் பற்றியெல்லாம் கவலைப்படாது, கவிமணி வார்த்தைகளை மனங்கொள்ளுங்கள்: சென்றதை எண்ணி வருந்தாதேடா! – இனிச் சேர்வதும் எண்ணி நடுங்காதேடா! இன்றைக் கிருப்பதே உண்மை, அடா!-நாளை எப்படி யோ? தெரியாதே, அடா! உங்கள் இலக்கு நோக்கி உண்மையாக, உறுதியாக, உளபூர்வமாக ஓடிக்கொண்டிருங்கள். வாழ்க்கை உங்களை உயர்வுக்குத்தான் அழைத்துச் செல்லும்.
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com).
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் தன்னைத்தான் காக்கின் – பகுதி 11
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil