சுப. உதயகுமாரன்
<18> வன்முறை தவிர்ப்போம்
தனிப்பட்ட வாழ்விலும், பொதுவாழ்விலும் வன்முறை தவிர்த்து, மென்முறை போற்றுவது மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையும் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள், தகராறுகள், பிரச்சினைகள் நிறைந்ததுதான். அவற்றை பேசித் தீர்ப்பதும், கடந்து செல்வதும்தான் மனிதமுறை, மென்முறை; அடித்துத் தீர்ப்பதும், அழிந்து போவதும் மிருகமுறை, வன்முறை.
ஆனால் நம்முடைய திரைப்படங்கள், அன்றாடக் கதையாடல்கள் உள்ளிட்டவற்றில் வன்முறை வியந்து போற்றப்படுகிறது, வீரமாக சித்தரிக்கப்படுகிறது. உண்மையில் வன்முறை ஒரு கோழைத்தனம் மிக்க செயல்பாடு. அச்சத்தாலும், பதற்றத்தாலும் முன்னெடுக்கப்படும் அறிவற்ற செயல்தான் வன்முறை. ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பது பழமொழி. பதறாதவர்கள், பொறுமையானவர்கள், தைரியமானவர்கள் ஆத்திரம் அடையமாட்டர்கள். “பைய வித்து முளைக்கும் தன்மை போல்” (பாரதியார்) செயல்பட்டு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண்பார்கள்.
உங்கள் தனிப்பட்ட வாழ்வில் வன்முறையை கவனமாக தவிர்த்து விடுங்கள். ‘வாட்ச்’ (WATCH) எனும் ஆங்கில வார்த்தையை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். இதன் ஐந்து அம்சங்களிலும் காணப்படும், வெளிப்படும் வன்முறையை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, வன்முறை சற்றும் இல்லாத நிலையை அடைய தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நீங்கள் பேசும் வார்த்தைகள் (Words), நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் (Actions), நீங்கள் செய்யும் சிந்தனைகள் (Thoughts), நீங்கள் போற்றும் குணநலன் (Character), நீங்கள் கொண்டிருக்கும் இதயம் (Heart) ஒவ்வொன்றிலும் வன்முறையை ஒழித்து, மென்முறையை ஓங்கச் செய்யும்போது, உன்னத நிலையினை நீங்கள் அடைவீர்கள்.
“அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல,” ஒருவர் தன்னைத் தோண்டி புண்படுத்தினாலும், அவரை பொறுமையோடுத் தாங்கிநின்று காக்கும் பூமித்தாய் போல பொறுமையாக பிரச்சினைகளைக் கையாளுங்கள். ஆத்திரம், பழிவாங்கல், வன்முறை போன்றவை எந்த விதத்திலும் நமக்கு உதவாது என்பதை உணருங்கள்.
அப்படியானால், ஒரு பிரச்சினையைக் கண்டு, அநியாயத்தைக் கண்டு, அக்கிரமத்தைக் கண்டு ஓடிப்போக வேண்டும், ஒதுங்கிநிற்க வேண்டும்,. பதுங்கிக் கொள்ள வேண்டும் என்பது என் வாதமல்ல. மாறாக, எழுந்து நிற்க வேண்டும், ஏனென்று கேட்க வேண்டும், கடுமையாகப் போராட வேண்டும் என்பதுதான் வேண்டுகோள். ஒரே ஒரு விடயம் என்னவென்றால், பேச்சாலோ, நடவடிக்கைகளாலோ, அணுகுமுறைகளாலோ வன்முறையைக் கையில் எடுக்கக்கூடாது.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்”
என்று பணிக்கிறது திருக்குறள். நன்னயம் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, அவரைப் போலவே இன்னா செய்யாமல், குறிப்பாக வன்முறைத் தாக்குதல் நடத்தாமல் இருப்பது சாலச் சிறந்தது. வன்முறைக்கு பதில் என்பது அதே போல வன்முறையோ, அல்லது அதிக வன்முறையோ அல்ல. “கண்ணுக்குக் கண் என்று நாம் அனைவரும் களம் இறங்கினால், ஒட்டுமொத்த உலகமே குருடாகிவிடும்” என்றார் மகாத்மா காந்தி. அதுதான் யதார்த்தம்.
இன்றளவும் மனிதச் சமூகம் மென்முறையோடுதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இரண்டு சகோதரிகள், அல்லது சகோதரர்கள் அன்போடு, ஒற்றுமையாக உறவாடி, மகிழ்ச்சியாக வாழ்வது நமது சமூகத்தில் செய்தியாவதில்லை. காரணம் அதுதான் நியதி, இயல்பு என்றே நாம் அனைவரும் பார்க்கிறோம். ஆனால் இரண்டு சகோதரர்கள் தமக்குள் அடித்துக் கொண்டு, கடித்துக் கொண்டு, அழிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, காவல்நிலையம், நீதிமன்றம் சென்றால், அது செய்தியாகிறது. அசாதாரணமான, வழக்கத்துக்கு மாறான, இயல்பற்ற நடவடிக்கைகள்தான் செய்தியாகின்றன. மாந்தநேயத்தொடு மனிதராக வாழ்வோம்.
இன்றைய இளைஞர்கள் கல்வி பயிலும்போது பள்ளி, கல்லூரிகளில் மாணவர் அமைப்புக்களை நிறுவலாமா, அரசியலில் ஈடுபடலாமா, தேர்தலில் நின்று கவனத்தைச் சிதறவிடலாமா, அங்கே வன்முறைச் செயல்கள் நிகழ்கின்றனவே என்றெல்லாம் பலரும் கேள்விகள் கேட்கின்றனர். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்று கொள்ளும் நாம், அரசியலை மட்டும் சீப்பழக்கம் என்று வெறுத்து ஒதுக்குவது தவறு.
அரசியல் இல்லாமல் இங்கே எதுவுமில்லை. அரசியல் மென்முறையோடு மேலாண்மை செய்யப்படுவதுதான் முக்கியம். கல்வி பயிலும் மாணவர்கள் அரசியல் கட்சிகளில் சேரவேண்டாம், அதிகாரத்தின் பின்னால் ஓட வேண்டாம். ஆனால் நிச்சயமாக அரசியல் அறிந்திருக்க வேண்டும். அதையும் கல்விக் கூடத்திலேயேப் படிப்பது என்பது தவறான விடயமே அல்ல. உண்மையில் மாணவர்கள் கருத்து வேறுபாடுகளைக் கடந்து செல்லவும், எதிர்கருத்து உடையவரோடும் கைகோர்த்து செயல்படவும், பொதுநலனுக்காக அனைவரும் கூட்டாகச் செயல்படவும் வளாக அரசியல் பெரிதும் உதவும்.
பொதுவாழ்வைப் பொறுத்தவரை, கீழ் மேல், மேல் கீழ் எனும் இரண்டு அணுகுமுறைகளைக் காணலாம். மக்களோடு ‘கீழே நின்று மேல்நோக்கி' (bottom up) சமூக-பொருளாதார-அரசியல் சீர்திருத்த வேலைகள் செய்வது மிகவும் கடினமானது, நேரமெடுப்பது, பொறுமை கோருவது, உடனடி பலன் தராதது. நம் வாழ்நாளிலேயே பலனைக் காணும் உத்தரவாதம் இல்லாதது. எனவேதான் பெரும்பாலானோர் இந்த வழியைத் தேர்ந்தெடுப்பதில்லை. இது கடின வழி.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
சமூக-பொருளாதார-அரசியல் சீர்திருத்தம் செய்ய, ஆட்சி அதிகாரம் பெற்று ‘மேலிருந்து கீழாக’ (top down) அணுகுவதுதான் எளிய வழி என்று சிலர் நினைக்கிறார்கள். என்னை முதல்வராக்கு, இந்த நிலம் என் கையில் சிக்கினால், ஒரே கையெழுத்து - போன்றவையெல்லாம் இந்த அணுகுமுறையின் வெளிப்பாடுகள்.
கீழிருந்து மேலாகச் செல்லும் போக்கில் சித்தாந்த நிலைப்பாடு, தனிமனித பொறுப்புணர்வு, கூட்டுமுயற்சி போன்றவற்றுக்கு பெரும் பங்கு இருக்கும். எனவே சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி, பங்கேற்பு சனநாயகம், கருத்துப் பரிமாற்றம், அன்புணர்வு, அறவழி, மாந்தநேயம் போன்றவை முக்கியத்துவம் பெறும்.
மேலிருந்து கீழ் அணுகுமுறையில் 'அருமையான நாம்' - 'ஆபத்தான அவர்கள்' எனும் பிளவு முக்கியம். 'நாம்' அப்பாவி இரைகள்; 'அவர்கள்' பெரும்பாவி கொடூரர்கள். நம்முடைய அனைத்து பின்னடைவுகளுக்கும் காரணமான 'அவர்களை' வெறுப்பது, கோபம் கொள்வது, வன்முறையைக் கைக்கொண்டு அவர்களை அழித்தொழிப்பதுதான் உய்வடையும் ஒரே வழியாக கருதப்படும்.
சமூகத்தில் நிகழும் ஒரு வன்கொடுமைக்கு எதிராக, 'மேல் கீழ்' பேர்வழி அதிகாரம் கைக்கு வரட்டும், மாற்றிக் கொள்ளலாம் என்று காத்திருப்பார். ஆனால் 'கீழ் மேல்' பணியாளரோ, இங்கேயே இப்போதே ஒத்துழையாமை இயக்கம் ஒன்றைத் தொடங்கி எதிர்த்து நிற்போம் என்பார். அதிகாரம் அரசு நிறுவனங்களிடம் இல்லை, மாறாக மக்கள் கைகளில் இருக்கிறது என்றறிந்து இயங்குவார்.
புரட்சியாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்றெல்லாம் தங்களை அழைத்துக் கொள்கிறவர்கள் சிலர் இன்றைய இளைஞர்களுக்கு மூன்று, நான்கு தலைவர்களைப் பற்றி மட்டும்தான் சொல்லித் தருகிறார்கள்: காரல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், தியாகி பகத்சிங்.
அவர்களைப் பொறுத்தவரை, மகாத்மா காந்தி என்றொருவர் பிறக்கவுமில்லை, போராடவுமில்லை, எழுதவுமில்லை, இயங்கவுமில்லை. அவர் பழமைவாதி, பிற்போக்குவாதி, புரட்சி, வர்க்கப் போர், வெட்டு, குத்து, கொளுத்து என்றெல்லாம் முழங்கவில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள்.
எந்தவொரு தலைவரையும் எடுத்துக் கொள்வோம். அவரை கடைந்தெடுத்தப் பிற்போக்குவாதியாகவும், அற்புதமான முற்போக்குவாதியாகவும் சித்தரிக்க முடியும். பார்க்கும் பார்வையும், முன்னிறுத்தும் முறையும், கதையாடல் வகையுமே தீர்மானிக்கின்றன. இதற்கு இன்றைய தமிழ்நாட்டில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் தந்தை பெரியார் அவர்கள்.
காந்தி என்றொருவர் நம்மிடையே பிறந்ததையே மறந்தால், அவர் தேர்ந்த தலைவரல்ல என்று மறுத்தால், அவரது அறவழி எனும் பேராயுதத்தை மறைத்தால், இலங்கையும், கள்ளக்குறிச்சியுமே இனிவரும் காலங்களில் பொதுவாழ்வு முறைகளாகும். அப்படி வன்முறைகள் நிகழும்போது, ஊழல் பெருச்சாளிகள் ஒழிகிறார்கள், லஞ்சப் பேர்வழிகள் அழிகிறார்கள், நயவஞ்சகர்கள் நாட்டைவிட்டு ஓடுகிறார்கள், பணவெறியர்களின், காமவெறியர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன, கொளுத்தப்படுகின்றன என்றெல்லாம் நாம் அனைவரும் குதூகலிப்போம். இந்த ‘உடனடி நியாயத்தீர்ப்பு’ நம்மைப் பரவசப்படுத்தும்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
ஆனால் இதே பாசிச வன்முறை நாளடைவில் நம் அனைவரையும் அழித்தொழிக்கும். இந்த வன்முறையை, அக்கிரமத்தை, சமூகத் தகர்ப்பையே வேண்டி விரும்பி அரசியல் செய்யும் சில பாசிச அராஜகவாதிகளின் கைகளுக்குள் நாம் சென்று சிக்கிக் கொள்வோம்.
புத்தன், இயேசு, நபிகளையே குறை சொல்கிறார்கள் என்றால், காந்தியிடம் குற்றம் கண்டுபிடிக்க ஏராளமான விடயங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த உண்மையான, நேர்மையான, எளிமையானத் தலைவன் நமக்கு கையளித்துச் சென்றிருக்கும் ‘அறவழிப் போராட்டம்’ எனும் பேராயுதமே நாம் அனைவரும் உய்வடைய உகந்த வழி, ஒரே வழி!
வள்ளுவர், வள்ளலார், மோகன்தாஸ் (காந்தி), மார்ட்டின் (லூதர் கிங் ஜூனியர்), மால்கம் (எக்ஸ்) போன்றோர் வழிநின்று சமூக அநீதிகளை, பொருளாதார அநியாயங்களை, அரசியல் அக்கிரமங்களைத் தட்டிக்கேட்போம். அறவழியில் போராடுவோம், அறவழிப் போராட்டங்களைக் காலத்திற்கேற்ப செழுமைப்படுத்துவோம், ஆக்கத்திறனோடு மாற்றியமைப்போம். காந்தியை மறுவாசிப்புச் செய்வோம். ஒரு சிவப்பு காந்தியைக் கண்டெடுப்போம்.
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com).
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் தன்னைத்தான் காக்கின் பகுதி – 19
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.