/tamil-ie/media/media_files/uploads/2022/09/tamil-indian-express-2022-09-13T174949.428.jpg)
Suba Udayakumaran
சுப. உதயகுமாரன்
<19> மரியாதைக் காப்போம்
சமூகத்தில் நாம் அனைவருமே எதிர்பார்ப்பது அங்கீகாரம், கெளரவம், மானம், மரியாதை போன்றவற்றைத்தான். பலரும் பணத்தின் பின்னால் ஓடுவதும், சொத்துக்கள் வாங்கிக் குவிப்பதும், அதிகாரப் பதவிகளை அடைய முயல்வதும், புகழுக்காக ஏங்குவதும் இதற்காகத்தான். இவற்றின் மூலம் தன் மீதான சமூக மரியாதையை உருவாக்கிக் கொள்வதும், தக்கவைத்துக் கொள்வதுமே நோக்கங்களாக அமைகின்றன.
சில நேரங்களில் சில மனிதர்கள் மானத்தை அடகுவைத்தாவது மரியாதையைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றனர். தங்கள் கடமையைச் செய்ய லஞ்சம் வாங்கும் பல அரசு அதிகாரிகள்கூட தகுதியேயின்றி பெரும் மரியாதையை எதிர்பார்க்கின்றனர். காவல்துறையிலும் இதே மாதிரிதான். பெரும்பாலான அதிகாரிகள் தங்களின் மரியாதையைப் பெறுவதில் முனைப்பாக இருப்பார்கள். வாகனப் பரிசோதனையின்போது உங்களை நிறுத்தினால்கூட நீங்கள் எழுந்து நிற்க வேண்டும், வண்டியைவிட்டு இறங்க வேண்டும் என்றெல்லாம் நிர்பந்திப்பார்கள். அவர்களுக்கான அதிகாரம், மரியாதை போன்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனை நீங்கள் கேள்விக்குள்ளாக்கினால், மூர்க்கத்தனமாகத் தாக்குவதற்கும் அவர்களில் பலர் முற்படுகிறார்கள்.
நமது தமிழ்நாட்டில் பல அரசியல் தலைவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும்கூட இப்படித்தான். ஒரு சாதாரண வட்டச் செயலாளர் வந்தால்கூட “அண்ணன் வர்றாரு விலகு; அண்ணன் வர்றாரு விலகு” என்று பெரும் களேபரம் செய்து விடுவார்கள். உயர்கல்வி பெற்ற சிலரும்கூட இதே மாதிரிதான் சிந்திக்கிறார்கள், செயல்படுகிறார்கள். தங்களின் சிறப்புக் கல்வியைக் காட்டி, தனித்திறமைகளைக் காட்டி என்னை ஆமோதியுங்கள், எனக்கு மரியாதை செலுத்துங்கள் என்று கேட்காமல் கேட்பதைப் பார்க்கிறோம்.
எடுத்துக்காட்டாக, சில மருத்துவமனைகளில் ஒரு நடைமுறையைப் பார்த்திருப்பீர்கள். மருத்துவர் தன்னுடைய மருத்துவமனை அறைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளைப் பார்க்க வரும்போது, “டாக்டர் வருகிறார், டாக்டர் வருகிறார்” என்று கட்டியம் கூறிக்கொண்டே ஒரு நர்ஸ் வருவார். எழுந்து நில்லுங்கள், வெளியே போங்கள் என்று ஏக கெடுபிடிகளோடு அலப்பறை செய்வார்கள்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
மரியாதையை இப்படித் தேடி அடைவதற்கும், கேட்டுப் பெறுவதற்கும் காரணம் என்ன? உள்ளுக்குள் இருக்கும் வெறுமை, தன்னை உணராமை, தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை என பல்வேறு உளவியல் காரணங்கள் இருக்கலாம். சமூக அளவில் பார்க்கும்போது, நம்மில் பலர் பழைய நிலபிரபுத்துவச் சிந்தனைப்போக்கும், சாதியாதிக்க மனோபாவமும் கொண்டவர்களாகவே இருக்கிறோம்.
மரியாதையைக் கேட்டுப் பெறுகிறவர்கள் மீது யாருக்கும் மரியாதை வருவதில்லை. தேவைப்படும் நேரத்தில் செயற்கையாக மரியாதை டிராமா ஒன்றை நடத்திக்கொண்டு புறக்கணித்துவிடுவார்கள். மரியாதை கோரப்படாமலே தாமாக மனமுவந்து தரப்பட வேண்டும். உங்கள் நடத்தை, நல்லொழுக்கம், சிந்தனைகள், செயல்பாடுகள், பேச்சுக்கள், வாழ்க்கை முறை போன்றவற்றினால் கிடைக்கிற மரியாதைதான் சிறந்தது, உயர்ந்தது.
குறைகுடம் கூத்தாடும் ஆனால் நிறைகுடம் ததும்பாது என்பதை நாமறிவோம். நீங்கள் உங்களைச் செவ்வனே அறிந்திருந்தால், உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால், உள்ளுக்குள் ஒரு பெரும் தன்னம்பிக்கையும், பாதுகாப்பு உணர்வும் ததும்பி நின்றால், உங்களுக்கு பிறருடைய அங்கீகாரமும், ஆமோதிப்பும் அத்தனை அவசியமல்ல.
ஒரு முறை என் வீட்டருகேயுள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன் மருத்துவர் முத்துக்குமார் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் வருவதும், போவதுமாக இருந்தார். அவர் ஒவ்வொரு முறை உள்ளே நுழையும்போதும், ஒரு மூதாட்டி எழுவதும், அமர்வதுமாக இருந்தார். டாக்டர் முத்துக்குமார் நேராக அவரிடம் சென்றார்; அவரது இரண்டு தோள்களின் மீது தன்னுடைய கைகளை வைத்துக்கொண்டு, “அம்மா, நான் ஆயிரம் முறை இங்கே வந்து செல்வேன். நீங்கள் ஒவ்வொரு முறையும் எழுந்து நிற்க வேண்டியதில்லை. தயவுசெய்து உங்கள் இருக்கையில் அமைதியாக அமர்ந்திருங்கள்.” ஒரு சக மனிதருக்கு அவரளித்த மரியாதை அவர் மீதான என்னுடைய மரியாதையை ஆயிரம் மடங்கு உயர்த்தியது.
இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் காங்கிரசு கட்சியில் சந்திரசேகர், மது லிமயே, ராம் தன், கிருஷ்ணகாந்த், மோகன் தாரியா போன்ற தலைவர்கள் இளம் துருக்கியர் என்றழைக்கப்பட்டனர். நெருக்கடி நிலை மற்றும் கட்சியின் சர்வாதிகாரப் போக்கு பிடிக்காமல் இவர்களில் பலர் காங்கிரசு கட்சியிலிருந்து விலகி ஜனதா கட்சியில் சேர்ந்தனர். என்போன்ற இளைஞர்களுக்கு இவர்கள் எல்லோருமே ஆதர்ச நாயகர்களாகக் காட்சியளித்தனர். பின்னர் 1977-ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சியமைத்தபோது, திரு. சந்திரசேகர் கட்சியின் தலைவரானார், மோகன் தாரியா மத்திய அமைச்சரானார். இவர்களை எல்லாம் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களுள் நானும் ஒருவன்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
கடந்த 1992-ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள கொலராடோ மாநிலத்தில் “நீடித்த நிலைத்த வளர்ச்சி” (Sustainable Development) பற்றிய ஒரு சர்வதேச மாநாடு நடந்தது. அதில் பேசுவதற்காக நான் சென்றிருந்தேன். அங்கே போனதும் திரு. மோகன் தாரியா அவர்களும் சிறப்பு அழைப்பாளராக வந்திருப்பதைக் கேள்விப்பட்டேன். அவரைக் கண்டுபிடித்து, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரோடுக் கைகுலுக்கி மகிழ்ந்தேன்.
அன்று மதியம் ஓர் ஆய்வுக் கூட்டத்தை ஓர் இளம் அமெரிக்கக் கல்லூரி மாணவி ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருந்தார். அதில் நானும், திரு. மோகன் தாரியாவும் கலந்துகொண்டோம். என்னைப் போன்ற இந்தியர்கள் எல்லோரும் திரு. மோகன் தாரியா அவர்களை ‘சார்’ என்றும் ‘ஜி’ என்றும் அழைத்துக் கொண்டிருந்தபோது, அந்த இளம்பெண் மிகவும் இயல்பாக, சாதாரணமாக “மோகன்” என்று அவரை பெயர் சொல்லி அழைத்தார்.
ஒரு கணம் அது அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும், பெயர் சொல்லி அழைப்பதும், அனைவரையும் சமமாக நடத்துவதும் மரியாதைக் குறைவானதல்ல என்பது புரிந்தது. கலாச்சார வேறுபாடுகள் இருந்தாலும், மரியாதை என்பது அனைத்துச் சமூகங்களிலும் போற்றப்படுகிறது.
வடக்கத்தி நாடுகளில் ஒரு பெண் தான் விரும்புகிறவரை திருமணம் செய்து கொள்வதை மனித உரிமை எனக்கொண்டு, அவரின் உரிமைகளை மதிக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்கான சமூக மரியாதை எள்ளளவும் குறைவதில்லை. ஆனால் பல தெற்கத்தி நாடுகளில் ஒரு பெண் தன் வாழ்க்கைத்துணையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டால், ஆணவக்கொலை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தின் கெளரவம் சிதைக்கப்பட்டு விட்டதாக குற்றம் சுமத்திக் கொன்றொழிக்கிறார்கள். இம்மாதிரியான மூடப் பழக்கவழக்கங்களை, வன்கொடுமைகளை அழித்தொழிப்பதுதான் நம்முடைய சமூகத்துக்கான மரியாதையை உருவாக்கும்.
மரியாதையும், கெளரவமும் ஒன்றுக்கொன்று நெருங்கியத் தொடர்புடையவைதான். நீங்கள் கெளரவமாக நடந்து கொண்டால், உங்களுக்கு மரியாதைக் கிடைக்கிறது. உங்களுடைய கெளரவமான நடவடிக்கைகளும், வாழ்க்கை முறையும் உங்களுக்கு ஒரு தனிப்பட்ட அதிகாரத்தைத் தருகின்றன.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
தனிப்பட்ட அதிகாரம் என்பது ஒருவர் தனது அறிவை, திறமைகளை, நேரத்தை, ஆற்றலை, பொருளை சமூக நலனுக்காக அர்ப்பணித்து உழைத்து, தொண்டாற்றி மக்கள் மத்தியில் பரிச்சயம், செல்வாக்கு, நம்பிக்கை, நன்மதிப்பு, புகழ் போன்றவற்றை ஈட்டி, அதன் மூலம் தனக்கான ஓர் அதிகாரத்தைப் பெறுகிறார். மகாத்மா காந்தி, தந்தை பெரியார், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், மால்கம் எக்ஸ், நெல்சன் மண்டேலா போன்ற பல தலைவர்கள் அரசாளும் அதிகாரத்தைப் பெறவில்லை என்றாலும், தனிப்பட்ட முறையில் இன்றளவும் அதிகாரம் மிக்கவர்களாக விளங்குகிறார்கள்.
ஒரு தனிமனிதனும் இதே போன்ற ஒரு தனிப்பட்ட அதிகாரத்தை, மரியாதையைப் பெற முடியும். அன்றாட வாழ்வின் சலனங்களுக்கு, சபலங்களுக்கு, இடறல்களுக்கு இடம்கொடுக்காமல் நம்மை கண்ணியமாக, கெளரவமாக வழிநடத்துவது சமூக மரியாதையைப் பெறுவதற்கான முதற்படி.
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.
எனும் ஏற்றமிகு மந்திரத்தை எப்போதும் நெஞ்சில் நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குள் மனக்குழப்பங்கள் ஏற்படும்போது தெளிவு பெற இம்மந்திரம் ஒன்றே போதும்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
சாதி, மத, இன உணர்வுகள் போன்றவற்றை விட்டொழித்து, அனைவரையும் மனிதர்களாக மாண்புடன் மரியாதையாக நடத்துங்கள். உங்கள் மீதான மரியாதை தானாக உயரும். உடல்மொழியாலும், உங்கள் நடத்தையாலும் உங்கள் மரியாதைக் குணத்தை வெளிப்படுத்துங்கள். பிறருடைய கருத்துக்களுக்கும், சிந்தனைகளுக்கும் மதிப்பளித்து அவற்றை கூர்மையாகக் கேளுங்கள். அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அடுத்தவரைப் பேச அனுமதிப்பதும், அதனை கவனமாக செவிமடுப்பதும் உங்கள் மீதான மரியாதையை உயர்த்தும்.
“உடுக்கை இழந்தவன் கைபோல” பிறருக்கு ஓடோடிச் சென்று உதவும்போது, தனக்கென மட்டும் வாழாது பிறருக்காகவும் வாழும்போது, நீங்கள் பிறரின் மரியாதையைப் பெறுவீர்கள். நீங்கள் எப்போதாவது ஒரு தவறிழைத்துவிட்டால், அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள், பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்புக் கேளுங்கள். உங்கள் குறைகளுக்கான நியாயங்களைக் கற்பிக்க முயலாதீர்கள். யார் மீதாவது, எதன் மீதாவது கோபம் எழுந்தாலும், அதனை நெஞ்சிலேக் கொண்டு அலையாதீர்கள்.
“பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே, பகைவனுக்கு அருள்வாய்” என்கிறார் பாரதியார். எக்காரணம் கொண்டும் சக மனிதர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்துவது நமது நோக்கமாக இருக்கக்கூடாது. மோதலோ, கருத்துப்பரிமாற்றமோ, பேரப்பேச்சோ எதுவாக இருந்தாலும், எதிர்த்தரப்பை முகம்கோணச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நமது சமூகத்தில் அனைவருக்கும் தலையும், முகமும் மிகவும் முக்கியமானவை. நம்முடைய மரியாதை மட்டுமல்ல, பிறருடைய மரியாதையும் முக்கியம் என்று செயல்படுங்கள். மரியாதையை விதைப்போம், மரியாதையை அறுப்போம்.
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com).
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் தன்னைத்தான் காக்கின் பகுதி – 20
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.