தேனில் சிக்கிய ‘ஈ’ : டி.டி.வி.தினகரன் மீள முடியுமா?

தினகரனின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது. தொடர்ந்து அவர் கொடுத்துவரும் பேட்டிகளைப் பார்க்கும் போது, அரசியலில் இருந்து அவர் ஒதுங்கிவிடமாட்டார்.

Tamil Nadu news today live updates
Tamil Nadu news today live updates

ச.கோசல்ராம்

தமிழக அரசியலில் ’பேக் சீட்’ டிரைவிங் செய்து வந்த சசிகலாவும் அவரது குடும்பத்தினரும், டிரைவராக மாற நினைத்த நிலையில், பல இன்னல்களையும் சோதனைகளையும் சந்தித்து வருகிறார்கள். எத்தனை சோதனைகள் வந்தாலும் கொஞ்சமும் அசராமல் மீண்டும் மீண்டும் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார், டிடிவி.தினகரன். அவர் அரசியல் தேனில் சிக்கிய ஈ என்று அரசியல் வட்டாரத்தில் வர்ணிக்கிறார்கள்.

என்னுடைய உடன்பிறவா சகோதரி என்று ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டவர், சசிகலா. 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் அவருடன் வசித்து வந்தார். ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது, நிழல் முதல்வராகவே செயல்பட்டார். சசிகலா மட்டுமல்லாது, அவரது குடும்பத்தினர்கள் பலரும் போயஸ் கார்டனிலும் ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அதிமுக வேட்பாளர் தேர்வு, அமைச்சரவை தேர்வு என எல்லா மட்டத்திலும் அவர்கள் சொன்னதே நடந்தது.

2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது, சசிகலாவையும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் கட்சியில் இருந்து நீக்கினார், ஜெயலலிதா. அப்போது கூட, அவரது குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி, போயஸ் கார்டனில்தான் இருந்தார். ஓரே மாதத்தில் சசிகலா மீண்டும் போயஸ் கார்டன் இல்லத்துக்குள் அழைத்துக் கொள்ளப்பட்டார். அதற்கு முன்னதாக மன்னிப்பு கடிதம் கொடுத்ததோடு, நானோ எனது குடும்பத்தினரோ அரசியலில் ஈடுபடமாட்டோம் என்று உறுதியும் கொடுத்தார்.

ஆனாலும் பின்னணியில் இருந்து அரசியல் செய்தது சசிகலா குடும்பத்தினர்தான். ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ம் தேதி சேர்க்கப்பட்ட போது, போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அனைவரும், மருத்துவமனையில் குவிந்தனர். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களும், சசிகலா குடும்பத்தினரை தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை. டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா இறந்த போது, பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டது. அதைச் சுற்றி, சசிகலா குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் எல்லாம் கொலு பொம்மை போல படிக்கட்டில் உட்கார வைக்கப்படிருந்தனர். இது கட்சி தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

எதைப் பற்றியும் கவலைப்படாமல், நாங்கள்தான் கட்சி. எங்களுக்குத்தான் ஆட்சி என்பது போல செயல்பட்டனர். மாவட்டவாரியாக கட்சி நிர்வாகிகளை போயஸ் கார்டனுக்கு வரவழைத்து, சசிகலா கட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும் என சொல்ல வைத்தனர். பொதுக்குழுவைக் கூட்டி, சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்து, அந்த பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு கெஞ்சுவது போன்ற நாடகத்தையும் நடத்திக் காட்டினார்கள். அதோடு நின்றிருந்தால் கூட பரவாயில்லை. முதல் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை பதவியை ராஜினமா செய்ய கட்டாயப்படுத்தினார்கள். ஒரு கட்டத்தில் அவரை, சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த சில அடிக்க போனதாகவும் சொல்லப்பட்டது.

இதையெல்லாம் மத்திய அரசு கவனித்து வந்தது. ஆட்சியையும் அதிகாரத்தையும், மக்களை சந்திக்காத சிலர் ஆக்கிரமிக்க நினைப்பதை, மத்திய அரசு விரும்பவில்லை. முதல் அமைச்சராக இருந்த் ஓ.பன்னீர் செல்வத்தை தூண்டிவிட்டு கலகத்தை ஏற்படுத்தினார்கள். ஓராண்டுக்கு மேலாக தூங்கிக் கொண்டிருந்த சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீடு வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.

ஆனாலும் சசிகலா தரப்பு அசரவில்லை. 122 எம்.எல்.ஏ.க்களை அழைத்துக் கொண்டு கூவத்தூர் ரிசார்ட் சென்றனர். ஆனால் கவர்னர் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. சசிகலாவுக்கு சிறை தண்டனை கொடுத்த பின்னரும் ஒருவாரம் வரை காத்திருந்தார். சசிகலா குடும்பத்தில் ஒருவரை முதல்வராக்கினால், சிக்கல்கள் தொடரும் என்பதால், எடப்பாடி பழனிச்சாமியை முதல் அமைச்சராகினார்கள். டிடிவி.தினகரனை துணைப் பொதுச் செயலாளராக்கினார், சசிகலா. மத்திய அரசுக்கு கிடைத்த அடுத்த பின்னடைவு இது.

ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் நடக்க இருந்த தேர்தலில் டிடிவி.தினகரனையே வேட்பாளராக அறிவித்தனர். முதல்வர் உள்பட அமைச்சர்கள் அனைவரும் டிடிவி.தினகரனுக்காக பிரசாரம் செய்தனர். தேர்தல் கமிஷனை வைத்து இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஆனாலும் டிடிவி.தினகரன் பின்வாங்கவில்லை.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தேர்தலில் ஜெயிக்க தீவிரம் காட்டினார். தேர்தலில் டிடிவி.தினகரன் ஜெயித்தால் முதல் அமைச்சராகிவிடுவார் என்ற தகவல் பரவியது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தேர்தல் நிறுத்தப்பட்டது. அடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறை சோதனை நடத்தி, 89 கோடி ரூபாய் தேர்தலுக்கு செல்வு செய்ததற்கான கணக்கு வழக்குகளை எடுத்தனர்.

தேர்தல் நிறுத்தப்பட்டதும், எடப்பாடி பழனிச்சாமியை ராஜினாமா செய்ய தினகரன் கட்டாயப்படுத்தினார். மூத்த அமைச்சர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பிளவை உளவுத்துறை மூலம் புரிந்து கொண்ட மத்திய அரசு, அடுத்த காயை நகர்த்தியது. இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் கமிஷன் அதிகாரிக்கு பணம் கொடுக்க முயன்றதாக வழக்குப் போட்டு, தினகரனை திகார் ஜெயிலில் அடைத்தனர்.

ஏப்ரல் 26ம் தேதி ஜெயிலில் அடைக்கப்பட்ட தினகரன் ஜூன் 2ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இந்த இடைப்பட்ட காலத்திற்குள் முதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தினகரனுக்கு எதிராக திரும்பினர். ஆனாலும் 18 எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் வைத்துக் கொண்டு, ஆட்சி கவிழ்ப்புக்கு தயாரானார். நடுவில் வந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்தார். ஆனாலும் மத்திய அரசின் கோபத்தில் இருந்து அவர் தப்ப முடியவில்லை. 18 எம்.எல்.ஏ.க்கள் பதவியும் பறிக்கப்பட்டது.

அவருடைய ஓரே நம்பிக்கையாக இருந்தது, இரட்டை இலை சின்னம்தான். அதையும் ஓபிஎஸ்-இபிஎஸ் அணியிடம் தேர்தல் கமிஷன் மூலமாக ஒப்படைத்துவிட்டது மத்திய அரசு. டிடிவி.தினகரனின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது. ஆனாலும் தொடர்ந்து அவர் கொடுத்துவரும் பேட்டிகளைப் பார்க்கும் போது, அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி ஓடிவிடமாட்டார் என்றே தெரிகிறது.

இரட்டை இலை சின்னத்தை பறிகொடுத்திருக்கும் நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. ஆட்சியும் அதிகாரமும், கட்சியும் இல்லாத சூழலிலும் அவர் தைரியமாக இருப்பது போலவே காட்டிக் கொள்கிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்திருக்கிறார். தேர்தலில் வெற்றியைவிட, அவர் வாங்கும் வாக்குகள்தான் அவரின் அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்யும்.

Web Title: Ttv dinakaran housefly on honey poet

Next Story
எண்ணூர் அனல் மின் நிலையங்களும் மீனவர்களின் வாழ்வாதாரமும்Ennore_Thermal_Power_Plant
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X