நித்யா பாண்டியன்
ஜம்மு காஷ்மீரில், மக்கள் ஜனநாயக கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையில் அமைக்கப்பட்டிருந்த கூட்டணி உறவினை அனைவரும் தொடர்ந்து பல ஆண்டுகளாக, கிட்டத்தட்ட 3.5 ஆண்டுகளாக பார்த்து வந்த மக்கள் மத்தியிலும் அக்கூட்டணி தோல்வி முகத்தினையே தந்திருக்கின்றது.
என்ன தான் நடக்கின்றது காஷ்மீரில்?
இருவேறு கொள்கையினையும் புரிதல்களையும் உடைய இரண்டு கட்சி அமைப்புகள் ஒரு இடத்தில் செயல்பட்டால் அது எவ்வாறாய் இருக்கும் என்பதற்கு இம்மூன்றரை ஆண்டு ஆட்சி காலமே சாட்சி. காஷ்மீர் மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம், துப்பாக்கிச் சூடு, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் - 1958, சரிவடையும் காஷ்மீர் சுற்றுலாத்துறை என சந்தித்த ஒவ்வொரு பிரச்சனைகளில் இருந்தும் வெளிவர விரும்பி, இக்கட்சிகளை தேர்வு செய்தனர் இம்மக்கள்.
மொத்தம் 89 சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ள ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 45 என்ற பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பினை 2014ம் ஆண்டு தேர்தல் எந்த கட்சிக்கும் தரவில்லை. ஒமர் அப்துல்லாவின் கட்சி 15 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும், மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களிலும் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் சுமார் இரண்டு மாதங்கள் கழித்தே, மெஹபூபா முஃப்தி அவர்களின் தந்தை மற்றும் மறைந்த முன்னாள் காஷ்மீர் மாநில முதலமைச்சர் முஃப்தி முகமது சயீத் அவர்களின் தலைமையில் பாஜக-பிடிபி கூட்டணி காஷ்மீரில் ஆட்சி அமைத்தது.
இரு தரப்பினருக்கும் பல்வேறு முக்கிய நோக்கங்கள் இருப்பினும், காஷ்மீரில் அமைதியினை நிலைநிறுத்த வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார்கள். பிடிபி ஆட்சி அமைக்கும் போதே தங்களுடைய கோரிக்கைகளை பாஜகவிடம் தெரிவித்திருந்தது. மத்தியிலும் பாஜகவே ஆட்சி செய்வதால், இக்கூட்டணியின் மூலம் மக்கள் மத்தியில் அமைதியையும் மேம்பாட்டினையும் மேற்கொள்ளலாம் என்று நம்பியது பிடிபி. ஆட்சிக்கு வரும் போதே, பிரிவினைவாதிகளுடனான பேச்சு வார்த்தை, சிறப்பு அதிகாரச் சட்டத்தினை நீக்குதல், பிரதம அமைச்சர் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுதல் என்ற விருப்பங்களை முன் வைத்தது பிடிபி. பாஜகவும், 2008 அமர்நாத் புனித யாத்ரை கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்கினை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினையும் விடுத்திருந்தது. தொடர்ந்து மெஹபூபா முஃப்தியின் செயல் விமர்சனத்திற்கு உள்ளானதோடு மட்டுமல்லாமல் அவரையும் இறுதியில் பிரிவினைவாத நோக்கத்துடன் செயல்படுகின்றார் என்ற குற்றச்சாட்டினை வைத்தது பாஜக.
விருப்பங்களும் வேண்டுதல்களும் இப்படியிருக்க, காஷ்மீர் நிலவரத்தில் நடந்தவையெல்லாம் வெறும் வன்முறைகள் மட்டுமே.
2016 காஷ்மீர் கலவரம்
ஹிஜ்புல் முஜாஹிதீன் இயக்கத்தினைச் சேர்ந்த கமாண்டர் புர்ஹான் முஜாஃபர் வானி, தன்னுடைய 15 வயதில் வீட்டிலிருந்து வெளியேறி பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்து கொண்டார். அவரின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது அரசாங்கம். அவரை 2016 ஜூலை அன்று இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றார்கள். அவருடைய இறுதி ஊர்வலத்தில் அவருடைய உடல் பாகிஸ்தான் கொடியால் மூடப்பட்டிருந்ததாலும், ஆயிரக்கணக்கானோர் அந்த இறுதி ஊர்வலத்தில் பங்கு பெற்றதாலும் , நிலைமை மோசமானது. இராணுவம் மற்றும் கலகக்காரர்களுக்கு இடையில் மோதல்கள் பெரிதாக கல்லெறிதலில் தொடங்கி, பெல்லட் குண்டுகள், மற்றும் ஊரடங்கு உத்தரவு என அனைத்துப் பிரச்சனைகளும் பெரிதானது. இத்தொடர் கலவரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டார்கள். 96 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு அதனைத் தொடர்ந்து 53 நாட்களுக்கு கர்ஃப்யூ(?) போடப்பட்டது.
பாதுகாப்பு படைவீரர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள்
இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது இந்த மூன்றரை ஆண்டுகள் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. 2016ல் 267 பாதுகாப்பு படை வீரர்களும், 2017ல் 358 பேரும், 2018 ஏப்ரல் வரை 96 படைவீரர்களும் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள். 2012ல் இருந்து 2015 வரை 166 படைவீரர்கள் மட்டுமே கொல்லப்பட்ட நிலையில் இக்கூட்டணியாட்சியில் 600க்கும் மேற்பட்ட படைவீரர்கள் இறந்திருக்கின்றார்கள்.
மக்களின் நிலை
எங்கோ யாரோ செய்யும் தவறுக்கெல்லாம், மக்களை பிரிவினைவாதிகளைப் போல் சித்தகரிப்பதும், அவர்கள் பாகிஸ்தானிற்காக உளவு வேலை செய்பவர்களாகவும் நடத்துவது மிகவும் கொடுமையானது. சொந்த மக்கள் மீது அவநம்பிக்கை கொண்டுள்ள அரசாகவே இவ்வரசு மக்கள் மத்தியில் இடம் பெற்றுள்ளது. இதனால் தானோ என்னவோ, எங்கு எந்த பிரிவினைவாத இயக்க நபர்களை சுடவோ அல்லது கைது செய்யவோ அரசு முடிவு செய்யும் போதெல்லாம் கல்லெறிதலில் ஈடுபடுகின்றார்கள் மக்கள்.
கத்துவா கொலை வழக்கு
காஷ்மீரின் பக்கர்வால் என்னும் நாடோடி இனத்தினைச் சேர்ந்த எட்டு வயது சிறுமியினை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தொடர்பாக மொத்த நாடே வருத்ததில் இருந்தது. ஆனால் அப்பகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுடன் இணைந்து கொண்டு குற்றவாளிகளை கைது செய்யக் கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள். அப்போதே இக்கூட்டணியின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தளர்ந்து போனது. ஒமர் அப்துல்லா அந்த சமயத்தில் மெஹபூபாவினை ஆட்சியில் இருந்து விலகுமாறு அறிவுரை கூறியிருக்கின்றார்.
ரமலான் நோன்பு மற்றும் அமர்நாத் புனித யாத்ரை
இந்த கூட்டணி ஆட்சியால் நடந்த மிக முக்கியமான நல்ல காரியம் எதுவென்றால் ரமலான் நோன்பு மற்றும் அமர்நாத் புனித யாத்ரையினை மனதில் கொண்டு ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியது தான். காஷ்மீர் வேலியில் இருந்த அனைத்து மக்களாலும் வரவேற்கப்பட்ட மிக முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரிவினைவாதிகளை சந்தித்து பேச ஒப்புக் கொண்டார். பிரிவினைவாத அமைப்புகளும் ரமலான் நாட்களை கருத்தில் கொண்டு தாக்குதல்கள் எதுவும் நடத்தாமல் இருந்தது. ரமலானை தொடர்ந்தும் தாக்குதல் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முனைப்பில் தான் மத்திய அரசு இருந்தது. ஆனால் பாகிஸ்தானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா தயராக இல்லை. அமைதியை நிலை நிறுத்த எடுக்கப்ப்ட்ட முடிவுகள்
சுஜாத் புகாரி கொலை
என்ன நல்லது செய்தாலும் இறுதியில் காஷ்மீரில் நிலை மோசமாக சென்றுவிடுகின்றது. காஷ்மீரில் நடக்கும் மிக முக்கியப் பிரச்சனைகள் அனைத்தையும் இந்து பத்திரிக்கை மூலம் நாடறிய செய்த ஊடகவியலாளர் சுஜாத் புகாரி ரமலான் நோன்பு முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது அவருடைய பாதுகாவலர்கள் உட்பட மூவரையும் கலகக்காரர்கள் சுட்டுக் கொன்றனர். நிலைமை கை மீறிப் போனதை உணர்ந்த மத்திய அரசு, ரமலான் புனித நாளுக்குப் பின்னர் ஒரு நாள் கூட போர் நிறுத்தம் கிடையாது என அறிவித்தது. யாரிந்த சுஜாத் புகாரி
கூட்டணி முறிவு
மேற்கூறிய ஒவ்வொரு நிகழ்விற்கு பிறகும் கூட்டணியில் இருந்து வெளியேற பிடிபி கட்சியே முதலில் நினைத்தது. பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு முதலமைச்சராக நீடித்தார் மெஹபூபா. ஆனால் நிலைமையின் தீவிரம் அறிந்த பின்னர் காஷ்மீரின் பாஜக தலைவர் இராம் மாதவ் அதிகாரப்பூர்வமாக பிடிபிக்கு அளித்துவந்த ஆதரவினை திரும்பப் பெறுவதாக அறிவித்ததார். காலம் தாழ்த்தாமல் முதலமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்து ஆட்சியை கலைத்தார் மெஹபூபா முஃப்தி. இன்றிலிருந்து ஆளுநர் ஆட்சி நடைமுறையில் இருக்கின்றது. இதுவரையில் காஷ்மீரில் 8 முறை ஆளுநர் ஆட்சி நடைமுறையில் இருந்திருக்கின்றது. காஷ்மீரில் முடிவுக்கு வந்த கூட்டணி ஆட்சி
என்னவாகப் போகின்றது காஷ்மீர்?
அமைதிக்கும் தனக்கும் அணுவளவும் சம்பந்தம் இல்லை என்ற ரீதியில் தான் தற்போது காஷ்மீர் வேலி இருக்கின்றது. அமைதி மற்றும் போர் நிறுத்த ஒப்பந்த நடவடிக்கைகளை மேற்கொண்டும் நிலை மோசமாகிப் போனது. தமது மக்களுக்கென ஒரு பிரதிநிதி இருந்தும் நிலை இப்படியாக இருக்க, காஷ்மீரில் காஷ்மீர் அல்லாதோரால் ஒரு ஆட்சி நடைபெறும் எனில் நடப்பது என்னவாக இருக்கும் என்று அனைவரும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். இயல்பு நிலைக்கு என்று திரும்பும் காஷ்மீர் என்னும் பூலோக சொர்க்கம் என்பது பதில் தெரியா கேள்வியாகவே இருக்கின்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.