வாயிருந்தும் ஊமைகள் : பெண் விவசாயக் கூலிகளின் பரிதாப நிலை!

பெண் விவசாய கூலிகள் பாரபட்சமாகவே நடத்தப்படுகிறார்கள். அவர்களின் கூலி கூட ஆண்களைவிட எப்போதும் குறைவாகவே இருக்கிறது.

By: Updated: August 21, 2018, 04:21:46 PM

மனித இனம் இயற்கையில் செய்த குளறுபடிகளால் ஏற்பட்ட பருவ நிலை மாறுபாடுகள் ஒருபுறம் விவசாயத்தை வதைத்துக் கொண்டிருக்கிறது.

மறுபுறம் நம்மை ஆளும் அரசுகளே நமது நிலங்களையும், இயற்கை வளங்களையும் பிடுங்கிக் கொண்டு வளர்ச்சி என்ற பெயரில் நம்மை அடிமைகளாக்கி சித்திரவதை செய்துக் கொண்டிருக்கிறது.

இந்த செயல்களால் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டும் பாதிப்புகளுக்கு உள்ளாவதில்லை. விவசாயத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பியிருக்கும் உதிரியான உழைக்கும் மக்கள் திரளும்தான் பாதிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு நிகராக நேரடியாக அடிவாங்குவது விவசாயக் கூலிகள் தான்.

பெண் விவசாய கூலிகள்

விவசாயக் கூலி வேலைகளில் பெண்களின் பங்கு எண்ணிக்கையிலும், உழைப்புகளிலும் அபாரமானது. எனவே விவசாயக் கூலி பெண்கள் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதைப் பார்ப்போம்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த இந்தப் பெண்கள் கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள். பொருளாதார ரீதியாகவும், உழைப்பு ரீதியாகவும், வழிகாட்டலிலும் இவர்கள்தான் குடும்பத்திற்கு முதுகெலும்பாக இருப்பவர்கள்.

படிப்பறிவு இல்லாமலும், நிலங்களுக்கு உரிமையாளராக இல்லாமலும் விவசாயக் கூலிகளாக மட்டுமிருக்கும் இந்தப் பெண்களின் வாழ்க்கைப் பாடுகளை நம்மிடையே பகிர்ந்து கொண்டனர்.

பெண் விவசாய கூலிகள் இந்திரா

வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது

விபத்தில் படுகாயம் அடைந்து வேலைக்குச் செல்ல முடியாத கணவர். இருபத்தியாறு வயதான மாற்றுத் திறனாளி மகன். திருமணமான மகள். கல்லூரிப் படிப்பிற்காக ஏங்கும் கடைசி மகன்.

இவர்களது வாழ்வாதாரத்தின் ஒற்றைப் பிடிமானம் இந்திரா மட்டுமே. பதினைந்து வருடங்களுக்கு மேலாக விவசாயக் கூலியை மட்டுமே நம்பி வைராக்கியமாக குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.

‘‘நாத்து நட, களைப் புடுங்க, வைக்க கட்டுற வேலைக்குப் போய் ரேஷன் கடை அரிசி வாங்கித்தான் குடும்பத்த பாக்குறேன். என் குடும்பத்துக்கு நான் மட்டுந்தான் இருக்கேன்.

ஒரு நாளைக்கு நூத்தி அம்பது ரூவா கெடைக்கும். ரெண்டு போகம் வெளைச்சலுக்கு வேலைக்குப் போன காலமிருக்கு. முன்ன மாதிரி இப்போ விவசாயமும் இல்ல, கூலி வேலையும் இல்ல.

மழை தண்ணி இல்லாம போச்சு. ஆத்து, கண்மாய் எல்லாம் காஞ்சு போச்சு. இருக்குற தண்ணியையும் ஒழுங்கா தொறந்து விடுறது கிடையாது. இந்த நிலைமை இப்படியிருக்க, பொழைக்கிற நிலத்த கவர்மெண்ட்டே அழிக்குது.

என்னனு? கேட்டா, ரோடு போட போறாங்களாம். வேற வழி தெரியாம அந்த ரோட்டுலேயே போய் ஏதாவது வியாபாரம் செஞ்சு பொழைக்க நெனச்சா ரோட்டுல விக்கக் கூடாதுன்னு வெரட்டுறாங்க.

இப்போ தினமும் செத்து செத்து குடும்பத்த பாக்குறோம். இதே மாதிரி போச்சுனா ஒரே அடியா செத்துருவோம்’’ என்று கோபத்தோடு பேசும் இந்திரா சித்தாள் வேலைக்கு போய் கொண்டிருக்கிறார்.

பெண் விவசாய கூலிகள் கக்கம்மா

‘அக்கா, தங்கச்சி நாங்க ரெண்டு பேருமே நாத்து நட, கருவேல மரம் வெட்டப் போனா ஒரு நாளைக்கு ஆளுக்கு நூறு ரூவா கெடைக்கும். அதுவும் ஆள் பார்த்துதான் கூப்பிடுவாங்க.

எல்லாரும் ஒரே வேலைக்குப் போனாலும் ஆம்பளையாளுகளுக்கு மட்டும் அதிக சம்பளம் தருவாங்க. வாரத்துல நாலு நாளைக்கு வேலை இருக்கும். மறு வாரத்துல வேலை இருக்காது.

தண்ணி கெடுக்குற எடத்துல கொஞ்சம் கொஞ்சம் வெவசாயம் நடக்குது. அங்க வேலைக்குப் போய் ஓட்டிக்கிட்டு இருக்கோம். அதுக்கும் இப்போ போறது இல்ல.

கட்டட வேலைக்கு போறோம். காலையில எட்டரை மணிக்கு போயிட்டு சாயந்திரம் ஆறு மணிக்கு வருவோம். இருநூத்தி அம்பது ரூவா சம்பளம் கெடைக்கும்.

வயக்காட்டு வேலைக்குப் போனா மதியமே வந்துருவோம். இப்போ அதிகமா கட்டிட வேலைக்குத்தான் போயிட்டு இருக்கோம்’ என்கிறார் கக்கம்மா.

இயந்திர மயம்

‘சொந்த பந்தம்லா எனக்கு யாருமில்ல. இருபது வருசத்துக்கும் மேல வயக்காட்டு வேலைக்கு போய்க்கிட்டு கஞ்சி குடிச்சுக்கிட்டு இருந்தேன்.

இப்போ உடம்புக்கு சரி இல்லாம போனதுனால கூலி வேலைக்கும் போறதில்ல. பக்கத்துலேயே கெடைக்குற வேலையப் பார்த்துக்கிட்டு இருக்கேன்.

முன்ன எல்லாம் ஆளுகள வச்சுதான் கதிரு அறுக்க, நடுகை நட, களை வெட்டுற வேலை எல்லாம் நடந்துச்சு. இப்போ எல்லாம் மிஷின் வேலைதான் நடக்குது.

இந்த மிஷினுக வந்த பின்னாடி ஏகப்பட்ட கூலி ஆளுகளோட வாழ்க்கை பாதிப்பாயிருச்சு.

அந்த ஆளுக எல்லாம் இப்போ கல் குவாரிகளுக்கும், செங்கல் சூளைகளுக்கும், வெறகு வெட்டவும் போயிருச்சுக.

ரெண்டு போகத்துக்கு வந்த ஆத்து தண்ணி, இப்போ ஒரு போகத்துகே வரல’ என்கிறார் பெருமாயி.

‘பதினஞ்சு வயசுல இருந்து வயக்காட்டு வேலைகளுக்குப் போயிட்டு இருக்கேன். நடவு நட்டாச்சுனா அதுல இருந்து அறுப்பு முடியிற ஆறு மாசத்துக்கு தொடர்ச்சியா வேலை இருக்கும்.

தொட்டதுக்கெல்லாம் மிஷினக் கொண்டு வந்தா, என்ன பண்றது? கர்ப்ப பை ஆப்ரேசன் பண்ணதுனால சுமைத் தூக்குற வேலைகளுக்கும் என்னால போக முடியில.

மகள மில்லுக்கு அனுப்பிட்டேன். ஒரு மகனுக்கு மூளை வளர்ச்சி இல்ல. முன்னாடி ஆடு, மாடு, மனுஷன் எல்லாத்துக்கும் கொறை இல்லாம இருந்தோம்.

இப்போ இந்த பத்து வருஷமா ரொம்ப கஷ்டமா போயிருச்சு. குடிக்கக் கூட தண்ணி இல்லாம போச்சுன்னா விவசாயம் எப்படி நடக்கும்.

தனியா கிணத்துப் பாசனம் வச்சுருந்தாக் கூட தண்ணி ஊத்து வரணும்லங்க. நாங்க படிக்கலைன்னு, எதிர்த்துப் பேச முடியலைன்னு இந்த கவர்மெண்ட்டும் இஷ்டத்துக்கு ஆடுறாங்க.

சாப்பாட்டுக்கே குறை வந்துருச்சு. எப்படி வாழப் போறோம்னு தெரியல. இருக்குற விவசாய நிலங்கள் எல்லாம் பொட்டலா போயிருச்சு’ என்று ஆதங்கப்படுகிறார் பாண்டியம்மாள்.

மாற்றுப் பணி

ஏழு வயதிலிருந்து விவசாயக் கூலி வேலைகள் அனைத்திற்கும் போன பஞ்சின் முதல் சம்பளம் இரண்டு ரூபாய் அதிகபட்சம் மூன்று ரூபாய். அவருக்கு இப்போது நாற்பத்தைந்து வயது நடக்கிறது.

கூலி வேலைக்குப் போவதை நிறுத்தி மூன்று ஆண்டுகள் ஆகிறது. அவர் கடைசியாக வாங்கிய சம்பளம் அறுபது ரூபாய். அதிகபட்சம் நூற்றி ஐம்பது ரூபாய்.

பெண் விவசாய கூலிகள் பஞ்சு

பாசனங்களில் தண்ணீர் வறட்சி உண்டானதால் போர்வெல் போட்டும் தண்ணீர் ஊற்று ஊறவில்லை.

இந்த நிலைமையில் விவசாயமே அருகிப் போய்விட, விவசாயக் கூலியை நம்பி பயனில்லை என்று உணர்ந்த பஞ்சு அன்றாட வாழ்வை நகர்த்த பேக்கரிகளில் பாத்திரங்கள் கழுவப் போய் உள்ளார்.

பஞ்சு இரவு பகலாக தண்ணீரிலேயே கிடந்து உழைத்ததில் கடுமையான சளி, இருமலுக்கு ஆளான பஞ்சிற்கு இப்போது உடலை உருக்கியிருக்கும் ஆஸ்துமா நோய்.

சகதியில் உழைத்து வளர்ந்த உடம்பு இருமலின் அதிர்வைப் பொறுக்க முடியாமல் உதிர்ந்துக் கொண்டிருக்கிறது.

அரசின் புள்ளிவிபரங்களில் விவாசயக் கூலி பெண்களை சொற்ப எண்ணிகையில் பதிவேற்றிவிட முடியாது. கிராமங்களில் பெரும்பான்மை இவர்கள்தான்.

காலம் காலமாகத் தெரிந்த விவசாயக் கூலிகளில் மட்டும் புழங்கிவிட்டு இப்போது கட்டிட வேலைகளுக்கும், கடைகளுக்கும் வேலைக்குப் போய் பழகிக் கொண்ட இந்தப் பெண்களிடம் அவர்களது எதிர்காலம், விவசாயத்தின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியினை முன்வைத்தால் எதிர்காலம் குறித்த பயம் மட்டுமே மிச்சமிருக்கிறது.

முத்துராசா குமார்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Woes from the mouth wretched womens pity

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X