/indian-express-tamil/media/media_files/2025/03/28/HiiKgOtJldJvLr8u85El.jpg)
"ஃபிட்னஸின் முக்கிய அம்சமே சரியான டயட் முறைதான். நமது உணவுப்பழக்கம் ஆரோக்கியமானதாக இருந்தால்தான் உடல் ஸ்ட்ராங்காகவும் பிட்டாகவும் இருக்கும்." என்று நடிகை கயாடு கூறியுள்ளார்.
அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்தவர் கயாடு லோஹர். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான 'முகில்பேட்டை' என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ விஷ்ணு நடித்த 'அல்லூரி' மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
இதன்பின்னர் ஒரு மராத்தி மற்றும் மலையாளப் படத்தில் நடித்திருக்கிறார். இருந்தபோதும், அவரின் பெயர் அந்த அளவிற்கு வெளியில் தெரியவில்லை. தமிழில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'டிராகன்' படத்தில் நடித்தற்கு பிறகு தான் அவர் மிகவும் பிரபலமாகி இருக்கிறார். டிராகன் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகை கயாடு லோஹருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
தற்போது கயாடு, 'இதயம் முரளி' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் ஜாதி ரத்னாலு என்கிற தெலுங்கு பட இயக்குனர் கே.வி.அனுதீப்பின் 'பங்கி' படத்தில் நடிக்க உள்ளார். அவருக்கு மேலும் பட வாய்ப்புகள் குறைந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், நடிகை கயாடு தனது ஃபிட்னஸ் மற்றும் டயட் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக குங்குமம் டாக்டர் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "நான் சினிமாவிற்குள் வருவதற்கு முன்பே மாடலிங் துறையில் இருந்ததால் ஃபிட்னெஸ் எவ்வளவு முக்கியம் என்பதை அறிவேன். அதுபோன்று மாடலிங் துறையில் நுழைந்ததுமே ஜிம்மிங் போக ஆம்பித்துவிட்டேன். அந்தவகையில் நான் அதிகாலையே எழுந்துவிடுவேன். முதலில் தினசரி குறைந்தபட்சம் ஒருமணி நேரமாவது யோகா செய்வேன். அதன்பின்னர், ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் அரைமணி நேரம்.
பின்னர், அரை மணி நேரம் நடைப்பயிற்சி. அதன்பிறகு தான் ஜிம் பயிற்சிகள் தொடங்குவேன். வாரத்தின் ஏழு நாட்களும் உடற்பயிற்சிகளை செய்வேன். ஒருவேளை ஜிம் போக முடியவில்லையென்றால் வீட்டிலேயே பயிற்சிகளை மேற்கொள்வேன். எனது தினசரி பயிற்சிகள் என்றால், ஸ்டெமினாவை அதிகரிக்கும் வகையில் பைலேட்ஸ் பயிற்சிகள், புஷ்- அப், புல் – அப், க்ரஞ்சஸ் மற்றும் ஸ்குவாட் பயிற்சிகளும் செய்வேன். அதுபோன்று நடனப் பயிற்சிகளுக்கும் தினசரி ஒருமணி நேரமாவது ஒதுக்குவேன். இது தவிர ஓய்வு நேரங்களில் டிரக்கிங், டிராவலிங் மிகவும் பிடித்தமானவை.
ஃபிட்னஸின் முக்கிய அம்சமே சரியான டயட் முறைதான். நமது உணவுப்பழக்கம் ஆரோக்கியமானதாக இருந்தால்தான் உடல் ஸ்ட்ராங்காகவும் பிட்டாகவும் இருக்கும். நான் தினசரி கடைபிடிக்கும் உணவு பழக்கம் என்னவென்றால், காலை எழுந்ததும் 2 டம்ளர் வெதுவெதுப்பான நீரை அருந்திவிடுவேன். அதன்பின்னர், ஜிம் பயிற்சிகளை எல்லாம் முடித்துவிட்டு காலை உணவு எடுத்துக் கொள்வேன். அதில், குறைந்த கொழுப்பு உள்ள பால் ஒரு டம்ளர் கட்டாயமாக இருக்கும். பின்னர், சிறிது நேரம் கழித்து ஒரு வெஜ் சாண்ட்விச் மற்றும் ஏதேனும் ஒரு பழ ஜூஸ் எடுத்துக் கொள்வேன். இவைதான் காலை உணவு.
அடுத்தபடியாக, மதிய உணவில் பச்சை காய்கறிகள், சாலட், அரிசி சாதம், ரொட்டி மற்றும் தயிர் எடுத்துக் கொள்வேன். பின்னர், 3 -4 மணி அளவில் மாலை நேர ஸ்நாக்ஸாக, நட்ஸ் அல்லது ட்ரை ஃப்ரூட்ஸ் அதனுடன் காபி அல்லது ஏதேனும் ஒரு பழச்சாறு எடுத்துக் கொள்வேன். பின்னர், இரவு உணவாக காய்கறிகளில் செய்த சப்ஜி மற்றும் சப்பாத்தி இருக்கும். அல்லது பச்சை காய்கறிகளாலான சாலட் எடுத்துக் கொள்வேன். இது தவிர, அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள் கொஞ்சமாக எடுத்துக் கொள்வேன். பின்னர், கடைசியாக ஒரு டம்ளர் பால் அல்லது ஏதேனும் டெஸர்ட் எடுத்துக் கொள்வேன். இவைதான் நான் தினசரி கடைபிடிக்கும் உணவு பழக்கமாகும்." என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.