மத்திய தரைக்கடலின் கிழக்கு கரையில் அமைந்திருக்கும், நவீன லெபனான், சிரியா மற்றும் இஸ்ரேலை உள்ளடக்கிய பகுதி பழங்காலத்தில் ஃபொயேனிஷியா (Phoenicia) என்று அழைக்கப்பட்டது. மத்தியத் தரைக்கடல் வழியாக உலகின் பல பாகங்களுக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு வர்த்தகம் செய்துள்ளனர் ஃபொயேனிஷியா மக்கள்.
அப்படி அவர்கள் வர்த்தகம் செய்து வந்த காலத்தில் சிசிலியின் மேற்கு கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும், மோட்யா என்ற ஒரு குட்டித் தீவில் செவ்வக வடிவில் பெரிய குளம் ஒன்றை உருவாக்கியுள்ளனர் .
வெகு காலமாக அந்த குளம், கப்பல் கட்டும் இடம் அல்லது ஒரு துறைமுகமாக இருந்திருக்கலாம் என்றே ஆராய்ச்சியாளர்கள் நம்பி வந்தனர். சமீபத்தில் ரோமில் அமைந்திருக்கும் செப்பியன்ஸா பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆராய்ச்சியாளார் லொரென்ஸோ நீக்ரோ மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த குளம் பற்றிய பல்வேறு சுவாரசிய தகவல்களை பதிவு செய்துள்ளார்.
ஃபொயேனிஷிய வியாபாரிகள் மத்தியத் தரைக்கடலில் அமைந்திருக்கும் பல்வேறு கலாச்சாரங்களை தங்களின் பயணங்கள் வழியாக அறிந்திருந்த நிலையில் இந்த குளத்தை வழிபாட்டு மையமாக பயன்படுத்தி வந்துள்ளனர் என்று தெரிவிக்கிறார் லொரென்ஸோ.
பேரிடர் நகரம் சென்னை: எச்சரிக்கும் IPCC அறிக்கை
கோடை மற்றும் குளிர் காலங்களில் சூரியன் பூமத்திய ரேகைக்கு மிக அருகிலும் மிக தொலைவிலும் கடந்து செல்லும். அப்போது ஆண்டின் நீளமான பகல் பொழுது ஜூன் 21ம் தேதி அன்றும், ஆண்டின் குறைவான பகல் பொழுது டிசம்பர் டிசம்பர் 22ம் தேதி அன்றும் ஏற்படும். இந்த இரண்டு நிகழ்வுகளின் போது வானில் புலப்படும் நட்சத்திரங்கள், நட்சத்திரக் கூட்டங்களின் தோற்றத்தை பிரதிபலிக்கும் 3 கோவில்களை இந்த குளத்தின் அருகே எழுப்பியுள்ளனர் ஃபொயேனிஷிய மாலுமிகள்.
ஒலிம்பிக் பந்தய களத்தைக் காட்டிலும் சற்று பெரிய அளவில் இருக்கும் இந்த குளத்தில் இரவு நேரங்களில் வானியல் நிகழ்வுகளை அப்படியே பிரதிபலிக்கும். இதனை பயன்படுத்தி நட்சத்திரங்களின் நிலைகளை கண்டறிந்து வானிலை மாற்றங்களை இவர்கள் கற்றறிந்திருக்கலாம் என்று கருதுகிறார் லொரென்ஸோ. மேலும் ஒரு கோவிலில் காணப்பட்ட நேவிகேஷன் கருவி மற்றும் குளத்தின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருக்கும் வானியலுடன் தொடர்புடைய எகிப்திய கடவுளின் சிலை ஆகியவை இந்த சந்தேகங்களை மேலும் வலுவடையச் செய்கிறது.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு மோட்யா பகுதியில் ஆய்வு செய்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் தான் செவ்வக வடிவ குளம் ஒன்று இப்பகுதியில் உருவாக்கப்பட்டு, அது அருகில் இருக்கும் கடலோடு இணைக்க ஒரு கால்வாயும் வெட்டப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். இதே போன்ற மற்றொரு குளம் கார்தாகே (Carthage) என்ற வட ஆப்பிரிக்க கடற்கரையில் அமைந்திருக்கும் ஃபொயேனிஷிய நகர் ஒன்றில் அமைந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த குளம் நேரடியாக கடலுடன் இணைக்கப்படவில்லை என்பதால் இது ஒரு துறைமுகமாக செயல்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார் லொரோன்ஸோ. மேலும் மோட்யாவில் 2002ம் ஆண்டில் இருந்து ரேடியோகார்பன் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அவரின் குழு, எவ்வாறு இந்த குளத்தில் தண்ணீர் வருகிறது என்பதை ஆய்வு செய்ய குளத்து நீரை வெளியேற்றினர். அப்போது அங்கே இயற்கையாகவே நீரூற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார் அவர்.
அடர் வெள்ளை – ஆழ்ந்த கரும் புள்ளிகள்; நூறு ஆண்டுகளுக்கு பிறகு நீலகிரியில் தென்பட்ட பட்டாம்பூச்சி
கி.மு. 396ம் ஆண்டு படையெடுத்து வந்த யவனர்களுடனான போர் முடிவுற்ற பிறகே இந்த இயற்கை ஊற்றில் இருந்து கடலை நோக்கி செல்லும் கால்வாய் வெட்டப்பட்டது என்கிறார் இந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்.
கி.மு. 800 முதல் கி.மு. 750 காலகட்டங்களில் ஃபொயேனிஷிய மக்கள் இந்த பகுதியில் குடியேற துவங்கியிருக்கலாம். கி.மு. 550 - கி.மு. 520க்கு இடைப்பட்ட பகுதியில் நடுவில் பால் என்ற தெய்வ சிலையுடன் கூடிய குளத்தை அவர்கள் கட்டியிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கிரேக்க, க்ரேட்ட, மற்றும் இதர மத்தியத்தரைக் கடல் பிராந்தியங்களில் வசித்த குழுக்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பகுதியில் வசிக்க துவங்கியிருந்தனர். புதிதாக வந்த ஃபொயேனிஷிய மக்கள் இந்த பகுதிக்கு வந்த பிறகு அங்குள்ள மக்களின் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை பின்பற்றி, அதே நேரத்தில் தனித்துவமான வாழ்க்கை முறையை இங்கே கடைபிடித்துள்ளனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.