Diclofenac was not the last threat for India’s vultures: டைக்ளோஃபெனாக் இந்த மருந்து குறித்து நாம் இதற்கு முன்பும் சில கட்டுரைகளில் படித்திருப்போம். கால்நடைகளுக்கு வழங்கப்படும் இத்தகைய மருந்துகள் மூலம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் வல்லூறுகளின் எண்ணிக்கை குறைய துவங்கியது. இதனை கருத்தில் கொண்டு 2006ம் ஆண்டு டைக்ளோஃபெனாக் மருந்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு மற்றாக ஏயிக்ளோஃபெனாக் (aeclofenac), கேட்டோப்ரோஃப்ன் (ketoprofen) மற்றும் நிமிஸூலைட் (nimesulide) போன்ற மருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அந்த மருந்துக்களும் வல்லூறுகளுக்கு பெரிய அளவில் தீங்கு விளைவிக்கின்றன. எனவே அவற்றின் பயன்பாட்டிற்கு உடனே தடை விதிக்க வேண்டும் என்று பாம்பே நேச்சுரல் சொசைட்டி மார்ச் 14ம் தேதி அன்று இந்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
2003ம் ஆண்டு இந்தியாவில் 8 விதமான வல்லூறுகளின் எண்ணிக்கை 40 ஆயிரமாக இருந்தது. ஆனால் 2015ம் ஆண்டு அதன் எண்ணிக்கை 18,645 ஆக குறைந்துள்ளது என்று பேர்ட் லைஃப் இண்டெர்நேஷனல் அமைப்பு நடத்திய கணக்கெடுப்பின் முடிவுகள் கூறுகிறது.
டைக்ளோஃபெனாக்(Diclofenac) தவிர ஃப்லுனிக்சின் (Flunixin), கார்ப்ரோஃபென் (Carprofen), பெனைல்பூடாஜோன் (Phenylbutazone) மற்றும் ஐபுப்ரோஃபென்(ibuprofen) போன்ற கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் தாக்கமும் பாறு கழுகளின் மறைவிற்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் மாநிலங்களில் பாறு கழுகுகள் உயிரிழக்க காரணம் என்ன?
என்னதான் மருந்துகள் அதிக அளவில் பாறு கழுகுகளின் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்தாலும் கூட ஜெய்சல்மர் மற்றும் பிகானெர் போன்ற பகுதிகளில் ரயில்களால் மோதி அதிக அளவு வல்லூறுகள் உயிரிழந்துள்ளனர். அந்த பகுதியில் சுற்றித் திரியும் காக்கைகள் அடிபட்டு உயிரிழக்க அதனை உணவாக உட்கொள்ள வரும் பாறு கழுகுகளும் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கின்றன. 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் மட்டுமே ஜெய்சல்மரில் 42 வல்லூறுகள் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தென்னிந்தியாவில் பாறு கழுகுகள் அழிந்து போக காரணமாக இருந்தது என்ன? விளக்குகிறது இந்த சிறப்புக் கட்டுரை
தமிழகத்தில் நிலைமை என்ன?
தமிழகத்தில் அழிவின் விளிம்பில் செந்தலைக் கழுகுகள். இந்திய பாறு கழுகுகள், வெண்முதுகு பாறு கழுகுகள், செங்கழுகு அல்லது செந்தலைக் கழுகுகள், மஞ்சள் முகப்பாறு கழுகுகள் என்று நான்கு வகையான கழுகுகள் உள்ளன. முன்பு ஒரு காலத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவி காணப்பட்ட இக்கழுகுகளின் கடைசி புகலிடமாக விளங்குகிறது மாயாறு பள்ளத்தாக்கும் சீகூர் பீடபூமியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 10 -20 என்ற எண்ணிக்கையில் இருந்த செந்தலைக் கழுகுகள் தற்போது மிக மிக அரிதாகவே அங்கே தென்படுகிறது என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
2015ம் ஆண்டு கேடோப்ரோஃபென் மருந்திற்கு முதலில் தடை விதித்த மாநிலம் தமிழகம் மட்டுமே. வல்லூறுகள் அதிகமாக வாழும் பகுதியான நீலகிரி, ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் முதல் கட்டமாக தடை விதிக்கப்பட்டது.
வல்லூறுகள் ஆண்டுக்கு ஒரே ஒரு முறை, தனக்கும் தன்னுடைய எதிர்கால சந்ததியினருக்கும் தேவையான உணவு இருப்பை அடிப்படையாக கொண்டு, முட்டையிடும் பழக்கம் கொண்டவை. எனவே இந்த தடையின் தாக்கம் மிக தாமதமாகவே தெரிய வரும் என்று கூறியுள்ளனர் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil