டுவைன் பிராவோவிற்கு என தமிழில் தனி ரசிகர் கூட்டமே உள்ளது
இந்தியாவில் விளையாட்டும், சினிமாவும் இல்லையெனில் பாதி பேருக்கு பைத்தியம் பிடித்துவிடும். இந்த லாக்டவுன் காலத்தில், கிட்டத்தட்ட நாம் பொறுமையிழக்கும் சூழல் வந்துவிட்டது. பெரிய படங்களின் ரிலீஸ் இல்லை, ரசிகர்கள் கொண்டாடும் கிரிக்கெட் தொடர்கள் இல்லை. எனினும், 2020 சீசனுக்கான ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்புள்ளது என்று பிசிசிஐ கிட்டத்தட்ட உறுதியாக தெரிவித்திருப்பது, ரசிகர்களுக்கு உற்சாக டானிக் என்றால் அது மிகையல்ல.
Advertisment
இவ்விரண்டு துறைகளும் விரைவில் ரீ ஸ்டார்ட்ஆக வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
சரி, இது ஒருபக்கம் இருக்கட்டும். விளையாட்டுத் துறையில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த பிரபலங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரனான நடிகர் விஷ்ணு விஷால், எஸ்ஆர்எம் கல்லூரியில் எம்.பி.ஏ முடித்த பிறகு, ஒரு கிரிக்கெட் வீரராக வாழ்க்கையைத் தொடங்கினார். TNCA லீக் போட்டிகளில் ஆடி வந்த விஷ்ணுவுக்கு போட்டியின் போது காலில் பலத்த காயம் ஏற்பட, அத்தோடு அவரது விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அதன் பிறகே, 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான விஷ்ணு, அதில் கபடி வீரராக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்றிருந்தார்.
பிறகு, 'ஜீவா' எனும் படத்தில் கிரிக்கெட் வீரராகவே நடித்த விஷ்ணு, தனது மனைவியை ரஜினியை விவாகரத்து செய்த பிறகு, இப்போது பிரபல தேசிய பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார்.
இவர் விளையாட்டை விட்டாலும், ஏதோ ஒரு வடிவத்தில், விளையாட்டு இவரை விடுவதாக இல்லை.
ஹர்பஜன் சிங்:
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஐபிஎல் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடத் தொடங்கியது முதல், தனது ட்விட்டரில் தமிழிலேயே ட்வீட் செய்து ரசிகர்களைக் கவர்ந்தார். சரி, ஏதோ ஜாலியாக செய்கிறார் என்று பார்த்தால், 'பிரெண்ட்ஷிப்' , 'டிக்கிலோனா' என்று வரிசையாக தமிழ்ப் படங்களிலேயே நடிக்கத் தொடங்கிவிட்டார்.
இந்திய முன்னாள் கால்பந்து வீரரும், அர்ஜுனா விருதும் வென்றவரான ஐ.எம்.விஜயன் தமிழ் சினிமாவில் வில்லன் ரோல்களில் நடித்து வருகிறார். விஷாலின் 'திமிரு' படத்தில் மெயின் வில்லனாக நடித்த விஜயன், சமீபத்தில் விஜய்யின் 'பிகில்' படத்திலும் பிளாஷ்பேக் வில்லனாக மிரட்டியிருப்பார்.
சடகோபன் ரமேஷ்:
இந்திய கிரிக்கெட் அணிக்காக 19 டெஸ்ட் மற்றும் 24 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள சடகோபன் ரமேஷ், 2008ம் ஆண்டே, தமிழ் சினிமாவுக்குள் நுழைந்துவிட்டார். ஜெயம் ரவியின் 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் அமைதியான அண்ணனாக நடித்திருந்த ரமேஷ், அதன் பிறகு 'போட்டா போட்டி' எனும் படத்தில் ஹீராவாகவே களமிறங்கினார்.
டுவைன் பிராவோ:
வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோவிற்கு என தமிழில் தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வரும் பிராவோவிற்கு, கிரிக்கெட் தவிர பாப் ஆல்பம் வெளியிடுவதில் அதிக நாட்டம் உண்டு. அதன் பயனாக, விதார்த்த நடித்த 'சித்திரம் பேசுதடி-2' படத்தில் 'ஏண்டா'எனும் பாடலை பாடி, நடனமும் ஆடி அசத்தியிருப்பார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil