மாணவர்கள் தேர்வுகளை உத்வேகத்துடன் எதிர்கொள்வதற்கான தன் உரையில் பிரதமர் மோடி, அனில் கும்ப்ளே தலையில் பேண்டேஜுடன் களத்தில் இறங்கி பந்து வீசிய தருணத்தைச் சுட்டிக்காட்டியதற்கு அனில் கும்ப்ளே தன் நன்றியைத் தெரிவித்தார்.
மோடி பேசுகையில், "நம் கிரிக்கெட் அணி பின்னடைவுகளைச் சந்தித்து கொண்டிருந்தது. அணியில் மூட் நன்றாக இல்லை. ஆனால் ராகுல் திராவிட், விவிஎஸ் லஷ்மண் ஆடிய அந்த ஆட்டத்தை (கொல்கத்தா 2001 பிரபல டெஸ்ட்) மறக்க முடியுமா? போட்டியையே மாற்றி விட்டனர்.
Advertisment
Advertisements
அதே போல் அனில் கும்ப்ளேயை மறக்க முடியுமா, தலையில் காயத்துடன் அவர் வீசினார். இதுதான் உத்வேகத்தின் சக்தி, தன்னம்பிக்கையின் உந்து சக்தி" என்று மோடி பேசினார்.
கொல்கத்தாவில் பாலோ ஆன் வாங்கி பிறகு லஷ்மண் 281 ரன்களையும் திராவிட் 180 ரன்களையும் எடுத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர். அதே போல் 2002 மே.இ.தீவுகள் தொடரில் தாவாங்கட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்ட போது தலையில் பேண்டேஜுடன் வந்து வீசி வெற்றிக்காகப் போராடினார் அனில் கும்ப்ளே. கிரிக்கெட் உலகில் அர்ப்பணிப்பின் குறியீடாகவே இது மாறிவிட்டது.
பேண்டேஜ் தலைமுதல் முகம் வரை சுற்றியிருக்க கும்ப்ளே 14 ஓவர்களை வீசியதோடு பிரையன் லாரா விக்கெட்டை 4 ரன்களில் வீழ்த்தியதை யாரும் மறக்க முடியாது. இந்த இரண்டு சம்பவத்தைத்தான் பிரதமர் மோடி குறிப்பிட்டு மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள உத்வேகமூட்டினார்.
இதனையடுத்து அனில் கும்ப்ளே தன் ட்விட்டர் பக்கத்தில், “என் பெயரைக் குறிப்பிட்டதை பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். நன்றி மாண்புமிகு பிரதமர் அவர்களே. தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களின் வெற்றிக்கும் என் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.