பெண்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. இதில், தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. இதில், இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
இன்று தொடங்கிய மகளிர் உலகக் கோப்பை டி20 தொடர், மார்ச் மாதம் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் 4 முறை சாம்பியான ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் அணிகளும்,‘பி’ பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்தியா vs நியூஸி : மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதிப்பு - இந்தியா 122/5
மொத்தம் 6 மைதானங்களில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. தொடக்க நாளான இன்று சிட்னியில் நடைபெற்று வரும் முதல் லீக் போட்டியில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் விளையாடின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் , பந்துவீச்சை தேர்வு செய்ய, ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பேட்டிங் செய்தது.
தொடக்க வீராங்கனை ஷஃபாலி வெர்மா 29 ரன்களில் வெளியேற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ம்ரிதி மந்தனா 10 ரன்களில் எல்பி டபிள்யூ ஆகி வெளியேறினார். கேப்டன் கவுர் வெறும் 2 ரன்களில் டாட்டா காட்ட, இந்திய அணி 100 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதிக் கட்டத்தில் தீப்தி ஷர்மா 49 ரன்கள் எடுக்க, இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய ஆஸி., அணியில் தொடக்க வீராங்கனை அலிசா ஹீலே 35 பந்துகளில் 51 ரன்கள் விளாசினாலும், மற்றவர்கள் ஏகத்துக்கும் சொதப்ப அடுத்தடுத்து விக்கெட் சரிந்து கொண்டே இருந்தது. இடையில், கார்ட்னர் மட்டும் 34 ரன்கள் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சிங்கிள் டிஜிட்டில் வெளியேறினர்.
முடிவில் அந்த அணி 19.5வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. இந்தியா தரப்பில் பூனம் பாண்டே 4 விக்கெட்டுகளும், ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
20 ஓவர் உலக கோப்பை போட்டி வரலாற்றில் இந்திய அணி அரைஇறுதியை தாண்டியதில்லை. அந்த மோசமான வரலாறு இந்தத் தொடரிலாவது ஆசிட் ஊற்றி அழிக்கப்படுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.