நியூசிலாந்தின் அசராத போராட்டத்திற்கு கிடைத்த பரிசு இதுதானா? – ஐசிசி விதிக்கு எதிராக கிரிக்கெட் வீரர்களின் கண்டனக் குரல்கள்!

இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக கடைசி வரை உயிரை விட்டு போராடிய நியூசிலாந்து, குறைவாக பவுண்டரி அடித்ததால் தோற்றது என்ற ஐசிசி விதி, நியூசிலாந்தின் விதியை மாற்றி எழுதியிருக்கிறது

By: July 15, 2019, 4:22:08 PM

உலகக் கோப்பை 2019 தொடரின் இறுதிப் போட்டி இவ்வளவு பரபரப்புடனும், திருப்பங்களுடனும் முடிந்திருக்காது என எவரும் நினைத்திருக்கமாட்டார். ஆனால், பரபரப்புடன் சேர்ந்து அதிர்ச்சியும், ஆச்சர்யமும் நம்மை கிரிக்கெட் குறித்தும், கிரிக்கெட் விதிகள் குறித்தும் ரொம்பவே யோசிக்க வைத்துவிட்டது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. பிறகு களமிறங்கிய இங்கிலாந்து, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது.

இதனால் ஆட்டம் டிராவாக, சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இந்த சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 15 ரன்கள் எடுக்க, சேஸிங் செய்த நியூசிலாந்து 14 ரன்கள் எடுத்ததால், சூப்பர் ஓவரும் டிராவானது.

மேலும் படிக்க : இங்கிலாந்து உலககோப்பை சாம்பியன் ஆக காரணமான அந்த ஓவர் – டுவிட்டராட்டிகள் விவாதம்

இதனால், இறுதிப் போட்டியில் அதிகள் பவுண்டரிகள் அடித்ததன் அடிப்படையில் இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 17 பவுண்டரிகள் அடித்தது. இங்கிலாந்து 26 பவுண்டரிகள் அடித்தது. இதனால், இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றது!.

இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக கடைசி வரை உயிரை விட்டு போராடிய நியூசிலாந்து, குறைவாக பவுண்டரி அடித்ததால் தோற்றது என்ற ஐசிசி விதி, நியூசிலாந்தின் விதியை மாற்றி எழுதியிருக்கிறது.

இந்நிலையில், ஐசிசி-யின் இந்த விதி குறித்து சில முக்கிய கிரிக்கெட் வீரர்கள்அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட்டில் உள்ள சில விதிகளை மிக சீரியஸாக ஆய்வு செய்ய வேண்டும், இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

‘இந்த விதியை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், விதி என்றால் அது விதிதான்’ என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்திருக்கிறார்.

கிரிக்கெட் வார்ணனையாளர் ஹர்ஷா போக்ளே கூறுகையில், “இதுபோன்ற சூழலில் பவுண்டரிகளை கணக்கிடுவது என்பது ஒன்றும் புதிய முறை அல்ல. பல வருடங்களாக இந்த முறை அமலில் உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Cricket players slams icc boundary rule in eng vs nz world cup 2019 final

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X